பிரபலங்களின் அந்தரங்கத்தை அவர்களுக்கே தெரியாமல் இவ்வாறு புகைப்படம் பிடித்து ஊடகங்களுக்கு விற்பது புகைப்படத் துறையில் பணம் கொழிக்கும் தொழிலாக உள்ளது. இத்தகைய புகைப்படம் எடுப்பவர்களையே பேபரஸி (Paparazzi) என்று குறிப்பிடுவர்.
இங்கிலாந்து இளவரசர் சார்லஸின் மனைவி டயானா, தனது காதலன் டோடி பயதுடன் சென்றபோது, அவ்விருவரையும் புகைப்படம் எடுத்துவிட வேண்டும் என்ற வேட்கையுடன் சிலர் பின்தொடர்ந்தபோது, கேமராக் கண்களிலிருந்து தப்பித்துவிடும் பதைபதைப்பில் காரை அதிவேகமாக ஓட்டியதில் விபத்து ஏற்பட்டு இருவரும் உயிரிழந்தனர். டோடி – டயானா கள்ளக்காதல் விவகாரம் இங்கிலாந்து அரச குடும்பத்தில் வாரிசு சிக்கலை ஏற்படுத்தும் என்பதற்காக அவர்கள் கொல்லப் பட்டிருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.
கடந்த 15-20ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் ஜேம்ஸ்பாண்ட் படங்களில் மிகச் சிறிய ரகசிய கேமராக்களை உபயோகித்து எதிரிகளின் திட்டங்களை முறியடிக்கும் காட்சிகள் அனைவரையும் மலைக்க வைத்தன. ஆனால், தற்போது விலை மலிவான, மிகச் சாதாரண செல்பேசியிலேயே நவீன கேமராக்களும் வந்துவிட்டன. விஞ்ஞானம் வியக்க வைக்கிறது.
ஊடகத்துறையின் இந்த அசுர வளர்ச்சிக்குப் புகைப்படத் துறையின் பங்களிப்பு கணிசமாக உண்டு என்பதை எவரும் மறுக்க முடியாது. பாஜகவின் முன்னாள் தலைவர் பங்காரு லட்சுமணன் லஞ்சம் வாங்கியதை, கையும் களவுமாக விடியோ கேமராவில் பதிவு செய்த ஆதாரத்தைத் தெஹல்கா தளம் வெளியிட்டது நினைவிருக்கலாம். இதைத் தொடர்ந்து பங்காரு லட்சுமனன் பதவி இழந்ததும், பாஜக ஊழலுக்கு அப்பாற்பட்ட கட்சியல்ல என்பதை மக்கள் அறிந்து கொள்ளவும் இது உதவியது. இதே போன்று “மோடியின் உத்தரவின் பேரில் குஜராத் முஸ்லிம்களைக் கொன்றழித்தோம்!” என்று புன் சிரிப்புடன் பேசும் கயவர்களின் வீடியோக்களையும் ரகசியமாகப் பதிவு செய்து டெஹல்கா வெளியிட்டிருந்தது. இதனை ஊடகத் துறையில் sting operation என்பர்.
இவ்வாறாக, தொழில்நுட்ப வளர்ச்சியடைந்த புகைப்படத்துறை பல்வேறு வழிகளிலும் பிரபலமாகி, சர்வதேச அளவில் சிறந்த புகைப் படங்களுக்கு விருது வழங்குவதும், அவ்வாறு எடுக்கப்படும் புகைப்படங்களுக்குப் பின்னணியில் – உண்மையோ, பொய்யோ – ஒரு சிலகதைகளைப் பரப்பி சர்வதேசக் கவனத்தை ஈர்க்கும் யுக்திகளும் புகுத்தப்பட்டன.
1993 மார்ச் மாதம் சூடானில் பசி பட்டினியால் தவித்த ஒரு குழந்தையையும், அதன் அருகில் பிணம் திண்ணிக் கழுகு கொத்தித் தின்பதற்காகக் காத்திருப்பதையும் இணைத்து படம் எடுத்தார் புகைப்படக் கலைஞர் Kevin Carter – அவர் வந்த பணி “முடிந்து” விட்டதால் அத்துடன் வந்த வழி திரும்பி விட்டார். அப்படத்தை நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு நல்ல விலைக்கு விற்ற கையோடு அதை மறந்தும் போனார்.
ஆனால் 26 மார்ச் 1993 இல் முதன் முதலாக நியூயார்க் டைம்ஸில் வெளியான அப்புகைப்படம், சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 1994 இல் பிரபலமான Pulitzer Prize விருது பெற்றது. ஒரே புகைப்படத்தின் மூலம் புகழின் உச்சிக்குச் சென்றார் புகைப்பட நிபுணர் கெவின். ஆயினும், “பிணம் தின்னிக் கழுகு அருகில் இருக்க, நீங்கள் படம் பிடித்து முடித்த பின்னர் அக்குழந்தையின் கதி என்னவானது?” என்று உலகம் முழுவதும் மக்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல இயலாமல், மன உளைச்சலும் கழிவிரக்கமும் அதிகரித்து விரக்தியின் உச்சத்திற்குச் சென்ற கெவின் கார்ட்டர் 27 ஜூலை 1994 அன்று தற்கொலை செய்து கொண்டார்.
வருடங்கள் உருண்டோட, விஞ்ஞான நுட்பங்கள் உச்ச நிலைக்குச் சென்று கொண்டே இருப்பதால், உண்மையா பொய்யா என்று பிரித்தறிந்து கொள்ள முடியாதளவுக்கு கணினி வரைகலையும் சேர்ந்து கொண்டது. சாதாரண புகைப்படத்தை ஃபோட்டோஷாஃப் மென்பொருள் உதவியால் அற்புத புகைப்படமாக மாற்றி மக்களை ஏமாற்ற முடியும். அவ்வாறுதான் இணையதளங்களில் வலம்வரும் பல அரிய புகைப்படங்களின் பின்னணியில் கணினி வரைகலை உத்திகள் மறைந்துள்ளதை அறியாமல் FaceBook போன்ற சமூக வலைத் தளங்களில் ஒருவருகொருவர் பரப்பியும் பகிர்ந்தும் சிலர் பூரிப்பு அடைகின்றனர்.
சமீபத்தில், பெயர் தெரியாத விஷமி ஒருவர் வடிவமைத்து அனுப்பிய மூன்று தலைகள் கொண்ட நாகத்தை, ஐந்து தலைகள் கொண்ட அற்புத நாகமாக உருமாற்றி வேறொருவர் அனுப்ப, (எவரின் படமாக இருந்தாலும் Water mark சேர்த்து அதை தன் படமாக ஆக்கிக் கொள்ளும் வழக்கம் கொண்ட) தினமலர் நாளிதழ் அதைப் பிடித்து, பக்திப் பரவசம் பொங்க மஹா விஷ்ணுவின் ஆதிசேஷனுக்கு ஐந்து தலைகள் உண்டு என்று புராணக் கதைகளை கட்டியடித்து ஆன்மீகச் செய்தியாக வெளியிட்டிருந்தது. வாசகர்களின் வசவுகள் எழுந்தவுடன் காதும் காதும் வைத்தது போல், செய்தியை சத்தமில்லாமல் தூக்கியது.
மூட நம்பிக்கைகள் என்பவை இந்து மதம் லேபிள்கள் ஒட்டி மட்டும் வெளியாவதில்லை. இதே புனைவுகளில் இஸ்லாமிய, கிறிஸ்தவ மின்மடல் குழுமங்களிலும் அவரவர் மதம் சார்ந்த புனிதப் படங்கள் வந்து, அந்தந்த மதங்களின் மகிமைகளைப் பறை சாற்றும் வகையில் அவ்வப்போது பரப்பப்படுகின்றன. டிசைனரின் கற்பனைக்கு ஏற்றவாறு மீனின் வயிற்றில், மரத்தில், வானத்தில் இறைவனின் பெயர் தூள் பறக்கும். இது உண்மையென்று நம்பி, சுபஹானல்லாஹ் , மாஷா அல்லாஹ் என்று பின்னூட்டங்கள் குவியும் போது, கிளப்பி விட்டவர், அப்பாவி முட்டாள்களின் நம்பிக்கையின் மீது ஏறி நின்றி வெற்றிக் களிப்பில் சிரிப்பார்.
அதே போன்று சமீபத்தில் நெஞ்சை பதைபதைக்கச் செய்யும் ஒரு புகைப்படம் மின்மடலில் சுற்றி வந்து கொண்டிருக்கிறது. ஒரு ஆப்பிரிக்க கறுப்பினச் சிறுமியை மலைப்பாம்பு ஒன்று காலைச் சுற்றிக் கொண்டிருப்பது போன்றும், அச் சிறுமி மரண பயத்தில் அலறுவது போன்றும் எடுக்கப்பட்டுள்ள படம். மற்றொரு புகைப்படத்தில் அச்சிறுமியை புகைப்படம் எடுத்தவர் காப்பாற்ற முயன்றபோது, மலைப் பாம்பு காப்பாற்ற முயன்றவரை சுற்றிக் கொண்டிருப்பது போன்று வெளியாகியிருந்தது.
முதல் படத்தில் புகைப்படம் எடுப்பவரின் கேமராவும் சேர்த்தே பதிவாகியுள்ளதால், மூன்றாவது நபர் ஒருவரால்தான் அந்தப் படம் எடுக்கப்பட்டு இருப்பது தெளிவாகிறது. அதுபோல், பாம்பு சுற்றி வளைத்திருக்கும் படமும் அவரால் எடுக்கப்பட்டிருக்க வாய்ப்பில்லை என்பதிலிருந்து இவை அனைத்தும் ஒரு குழுவினரால் எடுக்கப்பட்டுள்ளன என அறியலாம்.
ஒரு சிறிய ஆய்விலேயே, இவை அனைத்தும் டிஸ்கவரி சானலின் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக புணைவாக காட்சியமைக்கப்பட்டு (Dramatically) எடுக்கப்பட்ட படங்கள் என்பவை வெளிச்சத்துக்கு வருகின்றன. அதை மறைத்து கறுப்பினச் சிறுமியை வெள்ளையர் ஒருவர் உயிரைக் கொடுத்து காப்பாற்றுவது போன்ற கருத்தை விதைப்பதற்காகவே அத்தகைய படங்கள் நேஷனல் ஜியோகரஃபி டிவியின் லோகோவை இணைத்து பொய்யாக மின் மடல்களில், சமூக வலைத் தளங்களில் பரப்பப்படுகின்றன என்பதை ஓர் Opera.com இணையதளம் தெளிவான ஆதாரத்துடன் வெளியிட்டிருந்தது.
இதே போல், ஒஸாமா பின் லேடனைக் கொன்று விட்டோம் என்று அமெரிக்க படைவீரர்களின் அறிக்கையுடன் கீழ்க்கண்ட படம் வெளியாகி இருந்தது. அமெரிக்க அரசு ஒன்றைச் சொல்லி விட்டால் மறு கேள்வியுண்டா? எனவே, Reuters’ மற்றும் the British Press உட்பட உலகம் முழுவதும் உள்ள அனைத்து மீடியாக்களும் அதே படத்தை முதல் பக்கத்தில் பெரிய அளவில் பிரசுரித்து பின் லேடனை அமெரிக்க வீரர்கள் கொன்ற “ஆதாரத்தை” வெளியிட்டிருந்தன. இரு நாட்கள் இடைவெளியில், அமெரிக்கா வெளியிட்ட அந்த புகைப்படம் கிராஃபிக்ஸ் செய்யபட்டது எனும் உண்மை வெளியானவுடன் திருடனுக்கு தேள் கொட்டிய கதையாய் விழித்த சர்வதேச ஊடகங்கள், மக்களின் மறதியை முதலீடாகக் கொண்டு, அடுத்தடுத்த சூடான செய்திகளைக் கவர் செய்யச் சென்று விட்டன. (கண்டிப்பாக காண வேண்டிய சுட்டி: http://whatreallyhappened.com/WRHARTICLES/galleryoffakebinladens.php) ஆக, பின் லேடன் கொல்லப்பட்ட புகைப்படமோ, திட்டமிட்டு நடத்தப்பட்ட 9/11 சம்பவமோ, அல்லது சமீப போஸ்டன் குண்டு வெடிப்பு திறமையான சினிமா நடிகர்களைக் கொண்டு தயாரிக்கப் பட்ட ஒரு ஒட்டு மொத்த அரசியம் நாடகம் எனும் உண்மைகள் வெளி வந்தாலும், அவை அதிகார வர்க்கத்தின் வலிமையான பூட்ஸ் காலின் கீழ் நசுங்கி, நாளடைவில் செத்துப் போய் விடுவது என்னவோ உண்மை.
பக்கம் பக்கமாக கட்டுரைகள் எழுதி ஒரு செய்தியை விவரிப்பதைவிட, ஒரேயொரு வீடியோ அல்லது புகைப்படத்தின் மூலம் சொல்லவரும் கருத்தைச் சூசகமாகச் சொல்லி கருத்துருவாக்கம் செய்ய முடியும் என்பதற்கு இவை சான்றாகும். எனவே, ஊடகங்களில் வலம் வரும் இது போன்ற படங்களின் பின்னணியில் பொதிந்துள்ள மோசடிகளை உணர்ந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும். நம்மால் இயலாத பட்சத்தில் கிராஃபிக்ஸ் / கணினியில் தேர்ச்சி பெற்ற நண்பர்களுக்கு அனுப்பி தெளிவு பெற்ற பின்பு அனுப்பலாம். [தெளிவு கிடைக்க எவரிடம் கேட்பது? என்று குழப்பமடையும் வாசகர்கள் சத்தியமார்க்கம்.காம் நுட்பக் குழுவினரைத் தாரளமாகத் தொடர்பு கொண்டு தெளிவடையலாம்]
“கண்டதையும் / கேட்டதையும் தீரஆராயாது அப்படியே பரப்புபவன் பொய்யன்” என்ற நபிமொழிக்கும் ஏற்பவும் “எப்பொருள் யார்வாய் கேட்பினும்..” என்ற குறளுக்கு ஏற்பவும் சமூகத்தில் இவை விளைவிக்கும் கேடுகளைத் தவிர்க்கவாவது பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டும் என்பதே நம் விருப்பம்.
– N. ஜமாலுத்தீன்