ராஜ்யசபா தேர்தல் – துருப்புச் சீட்டை தவறவிட்ட மமக

அரசியல் பார்வை: தமிழகத்திலிருந்து ராஜ்ய சபைக்குத் தேர்ந்தெடுக்கப்படவுள்ள ஆறுபேரில் அதிமுக கூட்டணிக்கு ஐவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட  உள்ளனர். ஆறாவதாக ஒரு இடத்தைப் பெறுவதில் திமுக – தேமுதிக இடையே போட்டி நிலவுகிறது.

இந்நிலையில், கடந்த சட்டமன்ற தேர்தலின் அதிமுக கூட்டணியிலிருந்த மமக மற்றும் புதிய தமிழகம் கட்சிகள், திமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள கனிமொழிக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளன. இதனால், 23 எம் எல் ஏக்களை கொண்டிருக்கும் திமுகவின் பலம் 27 ஆக உயர்ந்துள்ளது. குறைந்தபட்சம் 30 எம் எல் ஏக்களின் ஓட்டுகளைப் பெறும் வேட்பாளருக்கே வெற்றி வாய்ப்பு தேமுதிகவுக்கும் வாய்ப்புள்ளது.
 
தமிழகச் சட்டசபையில் திமுகவைவிட கூடுதல் இடங்களைப் பெற்று 29 எம்.எல்.ஏக்களைக் கொண்டுள்ள தேமுதிகவில் ஏழு எம்.எல்.ஏக்கள் தலைமையுடன் அதிருப்தி கொண்டு,ஆளுங்கட்சியின் ஆதரவாளர்களாக மாறியுள்ளனர். இந்த ஏழு பேரின் வாக்குகள் அதிமுக கூட்டணிக்குக் கூடுதலாக கிடைக்குமென்றாலும், இவர்களின் தயவின்றியே அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது சாத்தியம் உள்ளது. இந்நிலையில், இவர்கள் தாய்கட்சியான தேமுதிக வேட்பாளருக்கு வாக்களிக்கும் பட்சத்தில் தேமுதிக வேட்பாளருக்கு 29 பேரின் வாக்குகள் கிடைக்கும் என்றாலும் 30 பேரின் வாக்குகளைப் பெற்றால்தான் தேர்வு பெறமுடியும் என்பதால் தேமுதிகவுக்கு பிற கட்சிகளின் ஆதரவும் அவசியம்.
 
மமக, புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் திமுக கூட்டணியில் இணைந்து விட்டன. பாமகவும் எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என்று அறிவித்துள்ளது. அப்படியே தேர்தலில் வாக்களித்தாலும் தேமுதிகவுக்கு வாக்களிக்கப் போவதில்லை. ஆக, திமுக-தேமுதிக இடையேயான போட்டியில் ஆறாவது உறுப்பினரைத் முடிவு செய்யும் வெற்றித் துருப்புச் சீட்டு ஐந்து உறுப்பினர்களைக் கொண்டுள்ள காங்கிரஸ் கட்சியிடம் உள்ளது. மத்திய காங்கிரஸ் கூட்டணியிலிருந்து திமுக வெளியேறியுள்ள நிலையில் திமுகவுக்கு காங்கிரஸிடம் ஆதரவு கேட்பதில் சங்கடம் இருந்தாலும், வேறுவழியின்றி காங்கிரஸின் ஆதரவை கோரியுள்ளது.
 
எதிர்வரும் மக்களவை தேர்தல் கூட்டணி மற்றும் அடுத்த ஆண்டு காலியாகும் காங்கிரஸ் வேட்பாளர்களான வாசன், ஜெயந்தி நடராஜன் ஆகியோரின் பதவி காலியாக உள்ள நிலையில் திமுகவுக்கு இந்த முறை ஆதரவளித்து, பதிலுக்கு திமுகவின் ஆதரவைப் பெறுவதற்காக காங்கிரஸ் திமுக வேட்பாளரை ஆதரிப்பதற்கே அதிக வாய்ப்புள்ளது. இதில், மமக, புதிய தமிழகம் இரு கட்சிகளும் காங்கிரஸின் முடிவு வரும்வரை காத்திருந்திருக்காமல் அவசரப்பட்டு திமுகவுக்கு ஆதரவளித்தன் மூலம் காங்கிரஸிடம் தற்போதுள்ள துருப்புச் சீட்டை இக்கட்சிகள் தவற விட்டுள்ளன.
 
திமுகவிடமுள்ள 22 பேருடன் காங்கிரஸின் 5 பேரின் ஆதரவையும் சேர்த்தால் 27 வாக்குகள் கிடைக்கும். தேமுதிக வேட்பாளருக்கு அதிருப்தி உறுப்பினர்களின்றி 22 வாக்குகளும்,அதிருப்தியாளர்களும் வாக்களிக்கும் பட்சத்தில் 29 வாக்குகளும் கிடைக்கும். தேமுதிக அதிருப்தியாளர்கள் அதிமுக தலைமையின் கண்ணசைவுக்கு ஏற்பவே வாக்களிக்கும் சாத்தியமுள்ளதால் காங்கிரஸ் எந்தக் கட்சியை ஆதரித்தாலும் கூட அதிருப்தி எம்.எல்.ஏக்களின் வாக்குகளோ அல்லது மமக, புதிய தமிழகம் கட்சியோ ஆதரிக்கும் வேட்பாளருக்கு வெற்றிவாய்ப்பு. ஆனால், அவ்விரண்டு கட்சிகளும் அவசரப்பட்டு திமுகவுக்கு ஆதரவளித்துள்ளனர். இந்நிலையில், காங்கிரஸ் தேமுதிகவை ஆதரிக்கும் பட்சத்தில் இந்த இருகட்சிகளும் அணிமாறியும் பயனில்லை.
 
எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுக தனித்து போட்டியிடும் என்று அறிவித்துள்ள நிலையில் புதிய தமிழகம் மற்றும் மமகவுக்கு அணிமாறுவது அவசியம் என்பதோடு, திமுக கூட்டணியில் மட்டுமே வாய்ப்புண்டு. இந்நிலையில் சற்று நிதானம் காட்டியிருந்தால் இவர்களின் ஆதரவைப் பெறுவதற்காக திமுக-காங்கிரஸ் கூட்டணி கெஞ்சவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும். இதைச் சாக்காக வைத்து மக்களவைத் தேர்தலில் அதிக இடங்களையோ அல்லது இடஒதுக்கீடு, அப்பாவி சிறைக் கைதிகள் விடுதலை போன்றவற்றை வலியுறுத்தி குறைந்தபட்ச உத்திரவாதங்களைப் பெற்றிருக்கலாம்.

ஆனால், இவர்களின் அவசரம் காரணமாக இதற்கான வாய்ப்பு நழுவியதோடு, மீண்டும் காங்கிரஸ்-திமுக கூட்டணி ஏற்படவும் காரணமாகி விட்டது.

– N. ஜமாலுத்தீன்