தாமிரா, ஏஆர் ரஹ்மான் – நமக்கான செய்தி..

அண்மையில் சினிமாத் துறையில் நிகழ்ந்த முரண்பட்ட இரு நிகழ்வுகள் இஸ்லாத்தை மீண்டும் பேசுபொருளாக ஆக்கிவிட்டுள்ளன. ஒன்று இஸ்லாத்தின் மேன்மை பற்றியது. அது, ஊடகங்களோடு ஓரளவு தொடர்புடைய முஸ்லிம்களை மகிழச் செய்தது. ஆனால் வழக்கம் போல் முஸ்லிம்களால் மட்டுமே மெச்சப்படுவதாக, பொதுவெளியில் அவ்வளவாக அறியப்படாமல் கடந்து செல்லப்பட்ட மெஹர்.

மற்றொன்று, இஸ்லாத்தின் பெயரால் அரங்கேறியுள்ள சிறுமை. நம்மை சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுவும் வழக்கம்போல் ஒட்டுமொத்த தேசத்தாலும் பெரும்பான்மை ஊடகங்களாலும் அறிவுஜீவிகளாலும் இஸ்லாத்திற்கு எதிரான ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டது. இஸ்லாத்திற்கு சாதகமான செய்தி என்றால் கள்ளமெளனத்தில் உறைந்துபோவதும், பாதகமான விசயம் என்றால் லவுட்ஸ்பீக்கராக மாறுவதும் மதச்சார்பற்ற, நடுவுநிலை சமுதாயத்தின் பொதுப்புத்தியில் பசுமரத்தாணியாகப் பொறிக்கப்பட்டுவிட்டது.

மெஹர், தாமிரா, நாம்
எழுத்தாளர் பிரபஞ்சன் கதைக்கு இயக்குனர் தாமிரா திரைக்கதை, வசனம் எழுதி, இயக்கியுள்ள மெஹர் என்ற சித்திரத்தை விஜய் தொலைக்காட்சி தயாரித்து ஒளிபரப்பியது. இஸ்லாமிய வாழ்வியலை, திருமணம் குறித்த இஸ்லாத்தின் பார்வையினை, பிற சமுதாய மக்களுடன் இணங்கி வாழும் மேன்மையினை அழகாகக் காட்சிப்படுத்தியுள்ளது இப்படம். வறுமை என்னும் நெருப்பின் கனலில் காலம் முழுவதும் கனன்றாலும் இறைவன் தடுத்துள்ள செயலில் ஈடுபடக்கூடாது என்ற கொள்கை உறுதி கொண்ட ஒரு தாய். திருமணம் மூலம் சமுதாயச் சுதந்திரம் பெறலாம் என்று ஏக்கமும் எதிர்பார்ப்பும் ஒருசேர கொண்டவாளாய் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் மகள். அவளது திருமணத்திற்காகத் திருட முற்படும் ஒரு சகோதரன். இவர்களைச் சுற்றிப் பின்னப்பட்டுள்ள திரைக்கதையில் முஸ்லிம்களின் வாழ்வியலும் சில சுய விமர்சனங்களும், தொப்புள்கொடி உறவுகளான பிற சமுதாய மக்கள் காட்டும் கரிசனையும் சேர்ந்து அழகுறக் காட்சிகள் செதுக்கப்பட்டுள்ளன. திருமண வயதை அடைந்தும் வரதட்சணை என்கிற சமூகத் தீமையால் முதிர்கன்னிகளாகவே காலம் கழிக்கும் இழிநிலை பெருகிவரும் சூழலில், இஸ்லாம் அதனைக் களைவதற்கான தீர்வை 1400 வருடங்களுக்கு முன்னரே சொல்லியுள்ளதைப் பொது சமுதாயத்திற்கு மட்டுமல்ல – முஸ்லிம் சமுதாயத்திற்கே எடுத்துச் சொல்லத் தவறியதன் விளைவு இன்று முஸ்லிம் சமுதாயத்திலும் முதிர்கன்னிகள் பெருக்கம். திருமணம் என்ற எளிய நிகழ்வை, சமுதாயம் தானாக வலிந்து எவ்வளவு கடினப்படுத்திக் கொண்டுள்ளது என்பதற்கு வீதிதோறும் உள்ள வீடுகள் உயிருள்ள சான்றுகளைக் கொண்டுள்ளன. இந்தச் சூழலில்தான் ‘மெஹர்’ திரைப்படம் ஒளிபரப்பப்பட்டு, பொது சமுதாயத்திலும்கூட ஒரு சலனத்தை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்களிலும் இந்தத் திரைப்படம் குறித்த விமர்சனங்கள், பகிர்வுகள், கலந்துரையாடல்கள் பெருமளவிற்கு அரங்கேறின. இயக்குனர் தாமிராவுக்கும் விஜய் தொலைக்காட்சிக்கும் திரைப்படக் குழுவினருக்கும் பாராட்டுகள் குவிந்தன.

இஸ்லாம் குறித்தும் முஸ்லிம்கள் குறித்தும் திரைத்துறையில் பின்னப்படும் பிம்பங்கள் நம்மைக் காயப்படுத்துகின்றன என்பதில் எள்ளளவும் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் இந்த பிம்பங்களைக் களைவதற்கு, இஸ்லாம் குறித்த சரியான மாற்றுப் புரிதலை ஏற்படுத்த நம் சமுதாயத்தினர் செய்த முயற்சிகள் யாவை? ஒரு துறையில் கால் பதிக்காமலே, அந்தத் துறை குறித்த அரிச்சுவடிகூட தெரியாமலேயே அதன் மூலம் வரும் தாக்குதல்களை எதிர்த்துப் போரிடுவது என்பது சாத்தியமில்லாத ஒன்று. அது அறிவீனமும் கூட. சினிமா குறித்து நமக்கு சொல்லப்பட்டுள்ளதெல்லாம் சினிமா ஹராம்; அந்தத் தொழில் செய்தால் நேர்மையாக, கற்புடன் (ஆண்களைத்தான் சொல்கிறேன்) வாழ முடியாது; இஸ்லாத்தைப் பின்பற்ற முடியாது போன்ற எதிர்மறை செய்திகள்தாம். விளைவு, சினிமாத் துறையில் முஸ்லிம் அறிவுஜீவிகளின் பங்களிப்பு குறைந்து நமக்கு எதிரான விஷ(ம)யங்கள் பரப்பப்படும் இடமாக அது மாறிவிட்டது. இருக்கும் கொஞ்சம் பேரும் தங்கள் அடையாளத்தை மறைத்து காலப்போக்கில் தம் நோக்கத்தை மறந்தும் போய்விட்டனர். ஒவ்வொரு முறை இஸ்லாம் குறித்த தவறான படங்கள் வரும்போதும் ஆர்பாட்டம், போராட்டம் என்று ஆவேசத்துடன் நாம் இறங்கிவிட்டு அதே வேகத்துடன் மறந்தும் விடுகின்றோம். அந்தப் படங்களுக்கு செலவில்லாத விளம்பரம் நம்மால். கூடவே, “இந்த பாய்ங்களே இப்படித்தான்” என்ற வசைமொழி நமக்கு போனஸாகக் கிடைத்தன!

நாம் அடிக்கடிக் கேட்டிருப்போம். எதிரி பீரங்கியுடன் வரும்போது நாம் வாட்களை வைத்திருப்பதால் பலன் ஒன்றும் நேரப்போவதில்லை என்று. திரைத்துறையைப் பொருத்தவரையில் அது நூற்றுக்கு இருநூறு சதம் உண்மை. எதிராளிக்குப் புரிகின்ற, அவன் மொழியிலேயே பதிலளித்தால்தான் புரியவைக்க முடியும். இங்குதான் இயக்குனர் தாமிராவின் மெஹர் போன்ற படைப்புகள் முக்கியத்துவம் பெறுகின்றன. அவரது அடுத்த படைப்பையும் இஸ்லாமிய வாழ்வியல் குறித்து எடுக்கவிருப்பதாகக் கூறியுள்ளார். அதுவும் மிகப்பெரிய வெற்றிப் படைப்பாக, இஸ்லாம் குறித்த சரியான புரிதலை பொது சமுதாயத்தினரிடையே இன்னும் அதிகமாக ஏற்படுத்த வேண்டும் என்று வாழ்த்துவோம். இத்தகைய ஆரோக்கியமான மாற்று முயற்சிகள் நம்மிடமிருந்து வெளிப்படும்போது இன்றில்லை என்றாலும் நம் எதிர்காலச் சந்ததியாவது இஸ்லாம் குறித்த சரியான புரிதல் உள்ள சமுதாயத்தில் நிம்மதியாக வாழமுடியும்.

ஏஆர் ரஹ்மானும் ரசா அகாடமியின் ஃபத்வாவும்
இரண்டாவது நிகழ்வு மேலே உள்ளதற்கு நேர் எதிரானது. ஈரானின் உலகப் புகழ்பெற்ற இயக்குனர் மஜித் மஜீதி இயக்கியுள்ள ‘Mohamed – Messenger of God’ என்ற திரைப்படத்திற்கு இசையமைத்ததற்காக ஏஆர் ரஹ்மானுக்கு எதிராக ஃபத்வா வழங்கியுள்ளது மும்பையிலுள்ள ரசா அகாடமி என்ற முகவரியில்லாத அமைப்பு. இப்போதெல்லாம் ஏதேனும் ஒரு பெயரில் ஓர் அமைப்பைத் தொடங்கியதும் தம்மை உலக முஸ்லிம்களின் தலைமையாக மனப்பால் குடித்துக் கொண்டு, எடுத்ததெற்கெல்லாம் ஃபத்வா கொடுப்பது சொறி சிரங்குபோல் சமுதாயத்தில் பரவி வருகிறது. ஏஆர் ரஹ்மானை இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றி, அவரது திருமணத்தையும் ரத்து செய்து தன்னிச்சையாக அறிவித்துள்ளது ரசா அகாடமி. பாவனை கலாச்சாரக் காவலர்களுக்கு இதைவிடவும் வேறு ஆயுதம் வேண்டுமா? களமிறங்கிவிட்டனர் இஸ்லாத்திற்கு எதிராக வரிந்து கட்டிக்கொண்டு. ஒரு சிலரைத் தவிர இது குறித்து இஸ்லாத்தை விமர்சிக்கும் பலரும் மறந்துவிட்ட ஒரு செய்தி, முஸ்லிம்களில் பெரும்பாலானவர்கள் இந்த ஃபத்வாவை கடுமையாக எதிர்ப்பதுடன் ஏஆர் ரஹ்மானுக்கு ஆதரவாக நிற்கின்றனர் என்பது. ஆர்எஸ்எஸ், விஎச்பி, பஜ்ரங்தள் எப்படி ஒட்டுமொத்த இந்துக்களின் பிரதிநிதி அல்லவோ அதுபோலவே ரசா அகாடமி ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயத்தின் பிரதிநிதி அல்ல! பரிவாரங்களின் செயல்கள் எவ்வாறு வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டுமோ அதுபோலவே இதுபோன்ற ‘ஃபத்வா’ரங்களின் செயல்களும் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியவை என்பதில் முஸ்லிம்கள் ஏகோபித்து நிற்கின்றனர்.

கலிமாவை மொழிந்து இஸ்லாத்திற்குள் நுழைந்துவிட்ட ஒருவர் வெளிப்படையான இணைவைப்பில் ஈடுபட்டாலே ஒழிய அவரை இஸ்லாமிய வட்டத்திலிருந்து வெளியேற்றும் உரிமையினை இஸ்லாம் எந்த முஃப்திக் கொம்பனுக்கும் வழங்கவில்லை. நபியவர்களின் வாழ்விலும் இதற்கான முன்மாதிரி எங்கும் காணக் கிடைக்கவில்லை. இறைத்தூதரின் வாயிலிருந்து ஒருநாளும் ”இன்ன மனிதர் காஃபிர் ஆகிவிட்டார்; அவருடைய திருமணம் செல்லாது” போன்ற வார்த்தை வந்தது கிடையாது. மாறாக, “இன்ன செயல் செய்தால் இஸ்லாத்தை விட்டு வெளியேறிவிடுவார்” என்றுதான் நபியவர்கள் கூறியுள்ளார்கள். அவையும் வெளிப்படையாக இறைவனை மறக்கும், மறுக்கும் செயல்கள் பற்றியது. நபியவர்கள் அறியாத இஸ்லாத்தையா ரசா அகாடமி அறிந்து வைத்துள்ளது? இங்கே ரசா அகாடமிக்கு அழகிய முறையில், கண்ணியமாக பதிலளித்து, “நான் இஸ்லாத்தில் தான் உள்ளேன், என்னை யாரும் வெளியேற்ற முடியாது” என்று பதிலளித்துள்ள ஏஆர் ரஹ்மான் அவர்களைப் பாராட்டியே ஆகவேண்டும்.

சந்தடிச் சாக்கில் விஸ்வ ஹிந்து பரிஷத் ஏஆர் ரஹ்மானை ‘கர்வாப்ஸி’க்கு அழைப்பு விடுத்து, சந்து முனையில் சிந்து பாடியுள்ளதைக் குறித்து ஃபத்வா விதித்தவர்கள் ஆழ்ந்து சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளனர். நம் தலைகளைச் சுற்றிக் கழுகுகளும் பருந்துகளும் இரை தேடி வட்டமிட்டுக் கொண்டிருக்கையில் வலுவில் சென்று அவற்றின் வாய்களுக்குள் சம்மணமிட்டு அமர்வது அறிவுடைய சமுதாயத்திற்கு அழகல்ல. இந்த வார்த்தைகள் சமூக வலைத்தளங்களில் களமாடும் அனைத்து முஸ்லிம்களுக்கும் பொருந்தக்கூடியவை.

இன்னும் பல தாமிராக்களை உருவாக்குவதும், இரண்டாவது ரசா அகாடமி உருவாகாமல் தடுப்பதும் இன்று நம் முன் உள்ள தலையாய பணியாகும். இந்தப் பணியினைச் செய்வதன் மூலம் நாம் வாழும் காலத்திலேயே இஸ்லாம் குறித்த தவறான புரிதல்கள் களையப்படுவதுடன், நம்முடைய சந்ததிகள் நிம்மதியான, அமைதியான வாழ்வினை அனைவருடனும் சேர்ந்து வாழ நாம் விட்டுச்செல்லும் சொத்தாக அமையும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

சிந்திப்பவர்களுக்கு நற்சான்று வழங்கும் மார்க்கம் இஸ்லாம். சிந்தனைகளைத் தொலைத்துவிட்டால் முஸ்லிம்கள் என்று சொல்லிக்கொள்வதில் அர்த்தம் இருக்க முடியாது.

அபுல் ஹசன் R
   9245703300