தோழர்கள் – 65 அபூதர் அல் கிஃபாரி – ابو ذر الغفاري

Share this:

அபூதர் அல்கிஃபாரி – أبو ذر الغفاري

ரணத்திற்குத் தயாராகிக் கொண்டிருந்தார் அந்த முதியவர். மனைவியை அழைத்துச் சொன்னார் “யாராவது பயணிகள் வருகிறார்களா என்று பார். அவர்களிடம் என் மரணத்தைத் தெரிவி. என்னை நல்லடக்கம் செய்யச் சொல்”

நகருக்கு வெளியே மக்கள் அரவமற்ற ஒரு பாலைவனப் பகுதி அது. மேய்வதற்காக நடமாடும் ஒட்டகங்களைத் தவிர எப்பொழுதாவது கடந்து செல்லும் வணிகர் குழு, பயணிகளின் கூட்டம் போன்றவை மட்டுமே அந்தப் பாலைப் பெருவெளியின் நிசப்தத்தைக் கலைத்தன. அந்தப் பகுதியில் மனித நடமாட்டம் என்பதே, அது ஈராக்கிலிருந்து மக்கா செல்லும் பாதையில் அமைந்திருந்ததால்தான்.

மரணப் படுக்கையில் கணவர். இறந்தால் தூக்கிச் சுமந்து நல்லடக்கம் புரிய நாலு பேராவது வேண்டாமோ? அப்படியான அவசர உதவிக்குக்கூட ஆளற்ற வனாந்தரத்தில் தம் கணவரின் ஈமச்சடங்கிற்கு உதவ யாராவது கிடைக்க மாட்டார்களா என்று பயணிகள் கடந்து செல்லும் பாதையை நோக்கி ஓடினார் மனைவி. குன்று ஒன்றின் மீது ஏறி நின்று பார்ப்பதும் வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில் கிடக்கும் கணவரைக் கவனிப்பதற்காக ஓடி வருவதும் என்று அவர் மூச்சிரைத்துக் கொண்டிருக்க… கணவரின் மூச்சு அடங்கியது. இறந்தவரின் மனைவியும் அடிமையும் சடலத்தைத் துணியால் சுற்றி மூடினார்கள். தூக்கிச் சென்று சாலையின் ஓரத்தில் கிடத்திவிட்டு யாரேனும் வருகிறார்களா என்று கன்னத்தில் கைவைத்து அமர்ந்து, கண்ணீருடன் காத்திருந்தார்கள்.

சற்று நேரம் கழித்துப் பயணிகளின் கூட்டம் ஒன்று அவ்வழியே வந்து கொண்டிருந்தது. வெகு தொலைவில் யாரோ சைகை புரிந்து தங்களது பயணக் குழுவின் கவனத்தைக் கவர முயல்வதைக் கவனித்தவர்கள் அங்கு விரைந்தார்கள். நெருங்கியவர்கள் “என்ன? ஏது?” என்று விசாரிக்க,

“என் கணவர். இறந்துவிட்டார். நீங்கள் வருவீர்கள்; அவரை நல்லடக்கம் செய்ய உதவி புரிவீர்கள் என்று கூறினார். தயவுசெய்து உதவுங்கள்” என்றார் இறந்தவரின் மனைவி.

நாம் இவ்வழியே வரப்போவது இவருக்கு எப்படித் தெரியும்? “யார் இவர்?” என்று விசாரித்தார்கள். அந்தப் பெண்மணி சொன்ன பெயரைக் கேட்டதும் பயணிகளின் கூட்டம் வியந்தது! பிரபல்யமான தோழர் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரலியல்லாஹு அன்ஹு அந்தக் குழுவினருள் இருந்தார். இறந்தவரின் பெயரைக் கேட்டதும் அவருக்குப் பெரும் துக்கம் ஏற்பட்டு, அழுதார் அவர்.

அங்கிருந்தவர்களிடம், “அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். ‘அல்லாஹ் அபூதர்ரின்மீது கருணை புரிவானாக. அவர் தனியாளாய் நடப்பார், தனியாளாய் இறப்பார், தனியாளாய் எழுப்பப்படுவார்’ என்று அன்றே அவர்கள் முன்னறிவித்தார்கள்” என்றார் (இபுனு ஹிஷாம் 2/524).

சாலையோரத்தில் சடலமாகக் கிடந்த அபூதர் அல்கிஃபாரி ரலியல்லாஹு அன்ஹுவின் இறுதிச் சடங்கிற்கான வேலைகள் துவங்கின.

oOo

தபூக் படையெடுப்பு! கஅப் இப்னு மாலிக் ரலியல்லாஹு அன்ஹுவின் வரலாற்றில் விரிவாய்ப் பார்த்தோம். நினைவிருக்கிறதா? ஹிஜ்ரீ ஒன்பதாம் ஆண்டு. சுட்டெரிக்கும் கோடையில், கடுமையான சூழ்நிலையில் பல நூறு மைல்கள் நடந்தும், ஒட்டகத்திலும் நபியவர்கள் தலைமையில் பெரும் படையொன்று ரோமர்களை நோக்கிச் சென்றது என்பது அப்பெரு நிகழ்வின் சுருக்கம்.

சுட்டெரிக்கும் வெயில்; நெருப்பாய்த் தகிக்கும் அனல்; கடந்து செல்ல வேண்டிய தூரமும் அதிகம்; அளவிலும் பெரியதாக இருந்த முஸ்லிம்களின் படை நகர்ந்து சென்று கொண்டிருந்தது. அந்நிலையில், படை அணியில் யாரேனும் சிலர் ஏதேனும் காரணங்களுக்காகப் பின்தங்கிவிட நேரும்போது அவர்களுக்காகக் காத்திருப்பது மற்ற அனைவருக்கும் கால தாமதமும் இன்னலும் ஏற்படுத்தும் என்பதால், காத்திருக்காமல் பயணத்தைத் தொடர்ந்தது படை.

நயவஞ்சகர்களின் முகத்தை முஸ்லிம்களுக்கு அடையாளம் காட்டிய முக்கியமான போர் நிகழ்வு அது. அதனால் இயற்கையான காரணத்தினால் தோழர்களுள் சிலர் பின்தங்கிவிட நேர்ந்தாலும்கூட அவர்களுடைய நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் மனத்தில் சஞ்சலம் எழும். நபியவர்களிடம் சென்று, “அல்லாஹ்வின் தூதரே! இன்னார் பின்தங்கி விட்டார்” என்று தெரிவிப்பார்கள்.

அதற்கு நபியவர்கள், “அவரைப் பற்றிப் பேசுவதை விட்டுவிடுங்கள். அவரிடம் நன்மை இருக்குமேயானால் அவர் நம்மிடம் வந்து இணைந்துகொள்ள அல்லாஹ் உதவி புரிவான். இல்லையெனில் அவருடைய தீமையிலிருந்து அல்லாஹ் உங்களை விடுவித்துவிட்டான்” என்று நபியவர்கள் பதில் அளித்து வந்தார்கள்.

அந்தப் படை அணியில் அபூதர் அல்கிஃபாரியும் முக்கியமான ஒரு தோழர். அவரிடம் படு நோஞ்சானாக ஓர் ஒட்டகம். அதைத் தவிர அவரிடம் வேறு வசதி இல்லாததால் அதன்மீது ஏறி வந்திருந்தார். ஆடி, அசைந்து அவரைச் சுமந்து வந்த அது ஒருநாள் “அவ்வளவு தூரம் என்னால் ஆகாது” என்பதுபோல் சுணங்கி நின்று விட்டது. அபூதர் அதைக் குத்திப் பார்த்தார், விரட்டிப் பார்த்தார். அதுவோ ‘அசைவேனா பேர்வழி’ என்றது. அவ்வளவுதான், இது சரிப்படாது என்று உணர்ந்துகொண்டார் அபூதர்.

அதற்குள் படையணி வெகுதூரம் கடந்துபோய், அதன் கடைசி வரிசையில் இருப்பவர்களுடன்கூட அவரால் இணைய முடியவில்லை. இவரது நிழலைக்கூடக் காண முடியாத தொலைவிற்குப் படை முன்னேறிச் சென்றுவிட்டது. தனித்து நின்ற அவருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அவருக்கு முன்னிருந்த இரு வழிகளுள் ஒன்று மதீனாவிற்குத் திரும்பிச் செல்ல வேண்டும்; அல்லது ஒட்டகத்தை இளைப்பாறவிட்டு மேற்கொண்டு ஓட்டிப் படையைப் பிடிக்கவேண்டும். அது உள்ள நிலையில் போய்ச் சேர்வதற்குள் தபூக்கில் போரே முடிந்திருக்கும். மூன்றாவதாக ஓர் எண்ணம் தோன்றி அதுதான் உசிதமாக இருந்தது. அது மிகவும் சிரமமான ஒன்றுதான். ஆனால் அதைத்தான் செய்தார் அபூதர். ஒட்டகத்தை அங்கேயே விட்டுவிட்டு, மூட்டை முடிச்சுகளைத் தமது முதுகில் சுமந்துகொண்டு பாலை வெயிலில் நடக்க ஆரம்பித்து விட்டார். நினைத்துப் பார்த்தாலே உடல் வியர்க்கும் அனலில் நடைப்பயணம்.

அங்கு, படையில் அபூதர் இல்லாததை அறியவந்த தோழர்கள் நபியவர்களிடம் அதைத் தெரிவித்தார்கள். அபூதர் அல்கிஃபாரி நபியவர்களுக்குப் பிரியமான தோழர்களுள் ஒருவர். ஆயினும் மற்றவர்களுக்கு அளித்த அதே பதிலையே நபியவர்கள் உரைத்தார்கள். “அவரைப் பற்றிப் பேசுவதை விட்டுவிடுங்கள். அவரிடம் நன்மை இருக்குமேயானால் அவர் நம்மிடம் வந்து இணைந்துகொள்ள அல்லாஹ் உதவி புரிவான். இல்லையெனில் அவருடைய தீமையிலிருந்து அல்லாஹ் உங்களை விடுவித்துவிட்டான்”.

களைப்படைந்த படை ஓய்வெடுப்பதற்காக ஓரிடத்தில் தங்கிக் கூடாரமிட்டது. அப்பொழுது தூரத்தில் ஒரு புள்ளி. அது மெல்ல மெல்ல நகர்ந்து வருவதை ஒருவர் கவனித்துவிட்டார். சற்று நேரத்தில் வருவது ஒரு மனிதர் என்பதை அடையாளம் கண்ட அவர் நபியவர்களிடம் விரைந்து சென்று, “அல்லாஹ்வின் தூதரே! ஒருவர் தன்னந்தனியாக நடந்து வந்து கொண்டிருக்கிறார்” என்று தெரிவித்தார்.

“அவர் அபூதர்ராக இருக்கட்டும்” என்றார்கள் நபியவர்கள்.

அருகே நெருங்க நெருங்க அடையாளம் தெரிந்து, “அல்லாஹ்வின் தூதரே! அவர் அபூதர்ரேதாம்” என்றார்கள் தோழர்கள். மணலில் காலைப் பொதித்து இழுத்து, முதுகில் சுமையுடன் பெரும் களைப்புடன் வந்து சேர்ந்தார் அபூதர். நபியவர்களையும் தோழர்களையும் எட்டிப் பிடித்ததில் அந்த அத்துணைக் களைப்பும் உடல் வலியும் அசதியும் போயேபோய் அவரது முகமெல்லாம் மகிழ்வும் புன்னகையும். அல்லாஹ்வின் தூதரைச் சந்தித்து முகமன் கூறினார்.

நபியவர்களின் முகத்திலும் அழகிய புன்னகை. முகமனுக்குப் பதில் அளித்துவிட்டு, “அபூதர்ரின்மீது அல்லாஹ் கருணை புரிவானாக! அவர் தனியாளாய் நடப்பார், தனியாளாய் இறப்பார், தனியாளாய் எழுப்பப்படுவார்” என்று அறிவித்தார்கள். வருவது அபூதர் அல்கிஃபாரி என்று அறிந்து, மகிழ்ந்து, இறைவனிடம் இறைஞ்சியது ஒருபுறமிருக்கட்டும். அன்று அவர்கள் அறிவித்த அந்தச் செய்தி தெளிவான ஒரு முன்னறிவிப்பு. இருபத்தி இரண்டு ஆண்டுகளுக்குப்பின் அச்சுப் பிசகாமல் அப்படியே அது நிகழ்ந்ததைத்தான் தெரிவித்தார் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரலியல்லாஹு அன்ஹு.

“அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உண்மையுரைத்தார்கள்”

அது மட்டுமின்றி அபூதர்ரின் மரணம் குறித்து நபியவர்கள் அறிவித்திருந்த மற்றோர் அறிவிப்பை அபூதர் அல்கிஃபாரியே அறிந்து வைத்திருந்ததும் அதில் ஒரு துணுக்களவும் சந்தேகமின்றி அதை அவர் உள்வாங்கி, தம் குடும்பத்தினருக்குச் சில கட்டளைகளை இட்டுச் சென்றதும் அடுத்த ஆச்சரியம்! அதை இறுதியில் பார்ப்போம். அதற்குமுன் –

oOo

மக்காவிலிருந்து சிரியா செல்லும் பாதையில் ‘வத்தான் பள்ளத்தாக்கு’ அமைந்திருந்தது. அங்கு கிஃபார் என்றொரு கோத்திரம். வர்த்தகர்கள் கடந்து செல்லும் பாதையில் இவர்களது ஊர் அமைந்திருந்ததால் வருமானத்திற்கு எளிதான ஒரு வழியை இவர்கள் கையாண்டனர். அவர்களைக் கடந்து செல்லும் வணிகர்கள், கப்பம் கட்டுவதுபோல் இவர்களுக்கு ஒரு தொகையைக் கட்டிவிட வேண்டும். கொடுக்கவில்லை என்றால் கொள்ளை அடித்து எடுத்துக் கொள்வார்கள். ‘கொடுங்கள் பெறப்படும்; இல்லையேல் பிடுங்கப்படும்’ என்ற எளிய தத்துவம்.

இந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவர் ஜுன்துப் இப்னு ஜுனாதா. பரீர் இப்னு ஜுனாதா என்றொரு பெயரும் இவருக்கு இருந்தாக ஓர் அறிவிப்பு உள்ளது. அவர், நமக்கெல்லாம் வரலாற்றில் பிரபலமடைந்த அபூதர் அல்கிஃபாரி. அந்தக் குலத்து மக்களுக்கே உரிய இயல்பான துணிவு அவரிடம் இருந்தபோதும் அவர்களது குணத்திற்குச் சற்று மாற்றமான சில குணங்களும் இயற்கையாகவே அவரிடம் அமைந்து போயிருந்தன. கேலித்தனமற்ற அக்கறையான மனோபாவம், தொலைநோக்கு போன்றவை தவிர, அக்கால அரபியர்கள் மத்தியில் வேரூன்றியிருந்த சிலை வணக்கத்தின் மீது அவருக்கு இயல்பாகவே ஒரு வெறுப்பு. அவர்களது மூடநம்பிக்கைகளையும் வழிபாட்டுமுறைகளையும் பார்த்து வெறுத்துப்போய், “என்ன இது காரிருள் வாழ்க்கை? வெளிச்சம் தோன்றாதா?” என்று இனந்தெரியா எதிர்பார்ப்புடன் அவரது வாழ்க்கை நகர்ந்து கொண்டிருந்தது.

இந்நிலையில் மக்காவில் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு நபித்துவம் அருளப்பட்டுள்ள செய்தி ஒருநாள் பயணிகளின் கூட்டத்துடன் அவரது ஊரையும் கடந்து சென்றது. அரசல் புரசலாக விழுந்ததே தவிர என்ன ஏது என்று சரியான விபரங்கள் தெரியாமல் அது அவரது ஆர்வத்தை அதிகரித்தது. அபூதர்ருக்கு அனீஸ் (அல்லது  உனைஸ்) என்றொரு சகோதரர். அவரை அழைத்து, “உடனே கிளம்பி மக்காவுக்குச் செல். அங்கு நபியொருவர் தோன்றியிருக்கின்றாராம். விண்ணிலிருந்து செய்தி வருகிறது என்கின்றாராம். அவர் என்ன சொல்கின்றார் என்பதை விசாரித்து வந்து என்னிடம் சொல்” என்று அனுப்பி வைத்தார் அபூதர்.

சகோதரர் சொல்லைத் தட்டாத அனீஸ் மக்காவுக்கு வந்தார். நபியவர்களைச் சந்தித்து அவர்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டார். ஊருக்குத் திரும்பி வந்து தம் சகோதரரிடம் செய்தியைச் சொன்னார். “அல்லாஹ்வின்மீது ஆணையாக! நான் அந்த மனிதரைச் சந்தித்தேன். அவர் மக்களுக்கு நல்லொழுக்கம் போதிக்கின்றார். இறை வசனங்கள் எனச் சிலவற்றை உரைக்கின்றார். அவை நிச்சயமாகப் நாட்டுப்புறப் பாடலோ கவிதையோ அல்ல.”

“மக்கள் அவரைப்பற்றி என்ன சொல்கின்றனர்?”

“அவர் ஒரு மந்திரவாதி என்கின்றனர். இல்லையில்லை குறிசொல்பவர் என்கின்றனர் சிலர். அவர் கவிதை சொல்கின்றார் என்கின்றனர் மற்றவர்கள்.”

அந்தத் தகவல்கள் அபூதர்ருக்கு திருப்தி அளிக்கவில்லை. “நீ சொன்ன செய்திகளில் எனக்குத் திருப்தி இல்லை. என்னுடைய கேள்விகளுக்கு விடையும் கிடைக்கவில்லை. ஒன்று செய். என்னுடைய குடும்பத்தினரின் தேவைகளை நீ கவனித்துக்கொள். நானே ஓர் எட்டு மக்கா சென்று என்ன, ஏது என்று பார்த்து விசாரித்துவிட்டு வருகிறேன்.”

சரி என்றார் அனீஸ். “ஆனால் ஒன்று. மக்க நகர மக்களிடம் கவனமாக இருக்கவும்” என்று எச்சரித்து அனுப்பினார். இஸ்லாமிய மீளெழுச்சி குரைஷிகளிடம் ஏற்படுத்தியிருந்த தாக்கத்தையும் வெறுப்பையும் விரோதத்தையும் கண்ணால் கண்டு வந்திருந்ததால் எழுந்த கவலை அது.

பயணத்திற்குத் தேவையான உணவு, தோல் துருத்தியில் தண்ணீர், இதர ஏற்பாடுகள் செய்துகொண்டு மக்காவுக்குப் பயணமானார் அபூதர். வந்து சேர்ந்தார். ஆனால் யாரிடம் கேட்பது, எவரிடம் விசாரிப்பது என்று தெரியவில்லை. நபியவர்களின் ஏகத்துவ அழைப்பு குரைஷிகளிடம் ஏற்படுத்தியிருந்த ஆத்திரத்தை அனீஸ் மூலமாக அறிந்திருந்ததால் ‘தாம் சென்று விசாரிக்கும் மனிதர் நபியவர்களின் ஆதரவாளராக இருந்தால் ‘நல்லதாப் போச்சு’ என்று மகிழலாம். இல்லையென்றால் ‘எல்லாம் போச்சு என்றாகி விடுமே. வம்பை விலைகொடுத்து வாங்கியதாக ஆகி விடுமே’ என்ற யோசனையுடன், ஜம்ஜம் தண்ணீரைக் குடித்துக்கொண்டு கஅபாவின் அருகிலேயே அமர்ந்து விட்டார்.

பொழுது சாய்ந்தது. இரவானது. எந்த வழியும் தென்படவில்லை. ‘சரி. இப்பொழுது உறங்குவோம். காலையில் எழுந்து யோசிப்போம்’ என்று கஅபாவின் அருகே படுத்துக்கொண்டார். அச்சமயம் அவ்வழியே வந்தார் அலீ ரலியல்லாஹு அன்ஹு. படுத்திருப்பவரைப் பார்த்ததுமே அண்ணன் ஊருக்குப் புதுசு என்று தெரிந்தது. அவரை அணுகி, “என்னுடன் வந்து தங்கிக்கொள்ளுங்கள்” என்று அழைத்துச் சென்றார்.

பயணக் களைப்பு தீர நன்றாக உறங்கி ஓய்வெடுத்தார் அபூதர். பொழுது விடிந்தது. தமது பொருள்களை எடுத்துக்கொண்டு, “உங்கள் உதவிக்கு மிக்க நன்றி” என்று அலீயிடம் தெரிவித்துவிட்டு கஅபாவிற்கு நடையைக் கட்டினார்.

“நீங்கள் யார்? எங்கிருந்து வருகிறீர்கள்? எதற்காக வந்திருக்கிறீர்கள்?” என்று அலீயும் அவரிடம் கேட்கவில்லை. அவரும் அலீயிடம் தாம் தேடிவந்தவரைப் பற்றி விசாரிக்கவில்லை. அடுத்த நாள் பொழுதும் அபூதர்ருக்கு அப்படியே கழிந்தது. இரவானது. அங்கேயே படுத்துக் கொண்டார். அன்றைய இரவும் அலீ அவ்வழியே சென்றவர், முந்தைய நாளைப் போலவே அபூதர்ரைத் தம்முடன் அழைத்துச் சென்றார், தங்க வைத்துக்கொண்டார்.

மூன்றாவது நாள் இரவும் கஅபாவின் அருகே அபூதர்ரைச் சந்தித்த அலீ, “தாங்கள் இன்னும் தங்களுக்குரிய குடியிருப்பைக் கண்டுகொள்ளவில்லையா?” என்று விசாரித்தார். ‘வந்த வேலை முடியவில்லையா?’ என்று நாம் விசாரிப்போமே அப்படி அது அவர்களின் பழக்கம் போலும்.

“இல்லை” என்றார் அபூதர்.

“வாருங்கள்” என்று தம்முடன் அவரை அழைத்துச் சென்றார். இம்முறைதான் விசாரித்தார். “நீர் எதற்காக மக்காவுக்கு வந்தீர்?”

“நான் என்ன தேடி வந்திருக்கிறேனோ அதை நான் கண்டுகொள்ள உதவுவதாக நீர் வாக்குறுதி அளித்தால்தான் நான் சொல்வேன்” என்றார் அபூதர்.

“உதவுகிறேன்” என்று வாக்குறுதி அளித்தார் அலீ.

“தொலை தூரத்திலுள்ள ஊரிலிருந்து நான் வந்துள்ளேன். இங்குப் புதிதாக நபி ஒருவர் தோன்றியிருக்கிறார் என்று கேள்விப்பட்டு, விசாரித்து வரும்படி என்னுடைய சகோதரரை அனுப்பியிருந்தேன். அவர் திரும்பி வந்து அளித்த பதில் எனக்குத் திருப்திகரமாக இல்லை. எனவே அந்த நபியை நானே சந்திக்க வேண்டும்; அவர் என்ன சொல்கிறார் என்று கேட்டறிய வேண்டும் என்று கிளம்பி வந்துவிட்டேன்”

‘ஆஹா’ என்று மகிழ்ச்சியில் ஒளிர்ந்தது அலீயின் முகம்! “அல்லாஹ்வின்மீது ஆணையாகச் சொல்கிறேன். அவர் மெய்யாகவே அல்லாஹ்வின் தூதர்…” என்று ஆரம்பித்து விரிவாக விளக்க ஆரம்பித்துவிட்டார். அடடா! வெண்ணெய்க் கடையில் படுத்துக்கொண்டா நெய்யைத் தேடியிருந்திருக்கிறேன் என்று அபூதர்ருக்கும் உற்சாகமாகிவிட்டது.

“பொழுது விடிந்ததும் என்னைப் பின்தொடர்ந்து வாருங்கள். வழியில் ஏதேனும் ஆபத்து ஏற்படும் என்று எனக்குத் தெரிந்தால் காலணியைச் சரிசெய்வதுபோல் நின்று விடுவேன். நான் தொடரும்போது யாரும் அறியாமல் என்னைத் தொடருங்கள். நான் நுழையும் இல்லத்தினுள் நீங்களும் நுழைந்து விடுங்கள்” என்று மறுநாள் நபியவர்களைச் சந்திக்கத் திட்டம் சொன்னார் அலீ.

மகிழ்ச்சியில் அன்றிரவு அபூதர்ருக்குத் தூக்கமே வரவில்லை. தேடிவந்த நபியைக் காணப் போகிறோம்; வேத அறிவிப்பைச் செவியுறப் போகிறோம் என்று பேராவல். பொழுது விடிந்தது. நபியவர்களைச் சந்திப்பதற்குக் கிளம்பினார்கள். யாருடைய கவனத்தையும் கவராமல் அலீயைப் பின்தொடர்ந்தார் அபூதர். ஒரு வீட்டினுள் அலீ நுழைய, அபூதர்ரும் நுழைந்தார். நபியவர்களுடன் முதல் சந்திப்பு நிகழ்ந்தது.

“உங்கள்மீது சாந்தி உண்டாவதாக அல்லாஹ்வின் தூதரே!” என்றார் அபூதர்.

“உங்கள் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் அருளும் வளமும் உண்டாகட்டும்!” என்று பதில் அளித்தார்கள் நபியவர்கள்.

தம்மைப் பற்றியும் தாம் கிளம்பி வந்ததன் நோக்கம் பற்றியும் அபூதர் நபியவர்களிடம் விவரித்தார். அவருக்கு இஸ்லாத்தைப் பற்றி விவரித்து, குர்ஆன் வசனங்களை ஓதிக் காண்பித்து விளக்கமளித்தார்கள் நபியவர்கள். அழைப்பு விடுத்தார்கள். இதற்குத்தானே ஆசைப்பட்டு வந்திருந்தார் அபூதர். ஏற்றுக் கொண்டார். இஸ்லாத்தை ஏற்ற முதன்மையானவர்களுள் நான்காவதோ ஐந்தாவதோ என்று வரலாற்றுக் குறிப்புகள் குறிக்கும் அளவிற்கு, ‘முந்திக்கொண்ட’ வெகு சிலருள் ஒருவரானார் அபூதர் ரலியல்லாஹு அன்ஹு.

நபியவர்களைச் சூழ்ந்து அமர்ந்திருந்தவர்களுக்கு ஏக மகிழ்ச்சி! அங்கிருந்த அபூபக்ரு ரலியல்லாஹு அன்ஹு நபியவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! இவருக்கு இன்றிரவு நான் உணவளிக்க அனுமதியுங்கள்” என்று அனுமதி பெற்று தாயிஃப் நகரின் உயர் ரக உலர்ந்த திராட்சையை அவருக்கு அளித்து உபசாரம் நிகழ்ந்தது. அந்தளவு அவர்களுக்கெல்லாம் உற்சாகம்.

உடனே ஊருக்குத் திரும்பாமல் நபியவர்களிடம் மேலும் இஸ்லாத்தைப் பயில அடுத்துச் சில நாட்களுக்கு மக்காவிலேயே தங்கிவிட்டார் அபூதர். நபியவர்கள் ஏகத்துவத்தை அறிவிக்கத் துவங்கியதிலிருந்து இதென்ன புது மார்க்கம்? என்று குரைஷிகளின் கோபம் ‘புஸ் புஸ்’ என்று மூக்கில் அனல் வீசிக் கொண்டிருந்த தொடக்க காலம். இச்சமயத்தில் வெளியூர்க்காரரான அவர், தாம் இஸ்லாத்தை ஏற்றதை வெளிப்படையாகச் சொன்னால் அவர் முழுதாக ஊர் திரும்பிச் செல்ல முடியாது என்பதை அறிந்த நபியவர்கள், அக்கறையுடன், “அபூதர்! நீர் இஸ்லாத்தை ஏற்றதை இப்போதைக்கு யாரிடமும் சொல்ல வேண்டாம்; கொன்று விடுவார்கள்” என்று அறிவுறுத்தினார்கள்.

கிஃபார் குலத்தினரைப் பற்றியும் அவர்களுடைய தொழிலைப் பற்றியும் பார்த்தோமில்லையா? கொள்ளையைக் குலத் தொழிலாகக் கொண்டவர்களின் குலத்திலிருந்து வந்தவர் எப்படி இருப்பார்? சாதுவாகவா? “எவன் வசம் என் உயிர் இருக்கிறதோ, அவன்மீது ஆணையாக! நான் இஸ்லாத்தை ஏற்றதை கஅபாவுக்குச் சென்று குரைஷிகளுக்குச் சொல்லாமலும் அவர்களை இஸ்லாத்திற்கு அழைக்காமலும் மக்காவை விட்டுக் கிளம்ப மாட்டேன்” என்றார். நபியவர்கள் அதற்குப் பதில் அளிக்கவில்லை.

தாம் சொன்னைதைப் போலவே கஅபாவுக்குச் சென்றார் அபூதர். குரைஷியர் சிலர் அங்கு அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். தொண்டை கிழியக் கத்தினார். “குரைஷி மக்களே! அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை; முஹம்மது அல்லாஹ்வினுடைய தூதர் என்று நான் சாட்சி பகர்கிறேன்”

விசையை நிறுத்தியதைப்போல் குரைஷியரின் பேச்சு அப்படியே தடைபட்டுச் சில நொடிகள் அமைதி நிலவியது. ஆச்சரியமும் அதிர்ச்சியும் கலந்து அவரையே பார்த்தார்கள். செவியில் விழுந்த வார்த்தைகளின் தாக்கம் புத்தியில் பட்டு மெதுவே உறைத்தது. பிறகுதான் துள்ளி எழுந்து, “பிடி அவனை! மதத் துரோகி” என்று ஆட்டின்மீது பாயும் வேட்டை நாய்கள் போல் பாய்ந்தார்கள்.

சூழ்ந்து நின்று, தொம் தொம் என்று அவர்மீது சரமாரியான தாக்குதல். கொன்று விட்டுத்தான் ஓய்வோம் என்பதுபோல் அடி, உதை, குத்து. அந்நேரம் பார்த்து அங்கு வந்த நபியவர்களின் சிறிய தந்தை அப்பாஸ், என்ன களேபரம் என்று எட்டிப் பார்த்தவர், அபூதர் அல்கிஃபாரியின் மீது பாய்ந்து படர்ந்தார். தாக்குதலிலிருந்து அவரைப் பாதுகாத்து, குரைஷிகளிடம் கத்தினார்.

“நாசமாப் போச்சு! கிஃபார் குலத்தவரைக் கொன்றுவிட்டு உங்களுடைய வணிகக் கூட்டம் பத்திரமாக சிரியாவிற்குச் சென்று திரும்ப முடியுமா?”

அதுதான் குரைஷியரை நிதானப்படுத்தியது. கிஃபார் குலத்தைச் சேர்ந்தவரைக் கொன்றுவிட்டால், தங்களது வணிக மூட்டைகளைச் சுற்றிக்கட்டும் முடிச்சுத் துணிகூட மிஞ்சாது என்று புரிந்து தாக்குதலை நிறுத்தினர். அதற்குள் மூர்ச்சையடைந்திருந்தார் அபூதர். ஒருவழியாக நினைவு திரும்பி, கந்தலாகி வந்தவரிடம் நபியவர்கள் அணுசரனையாகக் கூறினார்கள், “நீர் இஸ்லாத்தை ஏற்ற விஷயத்தை அவர்களிடம் அறிவிக்க வேண்டாம் என்று நான்தான் எச்சரித்தேனே.”

“அல்லாஹ்வின் தூதரே! இந்தச் செய்தியை மக்களிடம் நான் அறிவிக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றியது.”

தேடி வந்து இஸ்லாத்தை ஏற்ற மாத்திரத்தில் அதன் சத்தியத்தின்மீது அந்தளவு அவருக்கு அர்ப்பணிப்பு ஏற்பட்டுப் போயிருந்தது. செத்தாலும் சரி, சத்தியத்தை எடுத்துச் சொல்லாமல் இருக்கப் போவதில்லை என்பதை உணர்ந்தே அதைச் செய்திருந்தார் அபூதர்.

“நீர் உம் மக்களிடம் திரும்பிச் சென்று இங்கு எம்மிடம் கண்டதையும் பயின்றதையும் அவர்களுக்குத் தெரிவிக்கவும். அவர்களை அல்லாஹ்வின்பால் அழைக்கவும். உமது வாயிலாக அவர்களுக்கு அல்லாஹ் நலம் நல்குவான் என்று எனக்கு நம்பிக்கை உள்ளது. அதற்கான வெகுமதியை அவன் உமக்கு அருள்வான். நம் சமூகத்தின் மீ்தான குரைஷிகளுடைய தாக்குதல்களும் தொல்லைகளும் முடிவுக்கு வந்துவிட்டன என்ற செய்தியை அறிய நேரிடும்போது வந்து எங்களுடன் இணைந்து கொள்ளவும்.”

வழி அனுப்பிவைத்தார்கள் நபியவர்கள். ஊர் திரும்பினார் அபூதர் அல்கிஃபாரி. அவருடைய சகோதரர் அனீஸ்தாம் அவரை முதலில் வந்து சந்தித்தார். “சென்ற காரியம் என்னாச்சு சகோதரரே?” என்று விசாரித்தார்.

“கண்டேன், செவியுற்றேன். அது சத்தியம். நான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன்” என்று சொல்லிவிட்டு அபூதர் தமது விரிவான பணியை ஆரம்பித்தார். வேற்று ஊரில் வேற்று மக்களான குரைஷிகளிடம் மல்லுக்கட்ட அஞ்சாதவர், தம் குல மக்களிடம் அமைதியாகவா இருந்து விடுவார்? தாம் பயின்று வந்ததை முதலில் தம் சகோதரருக்கு எடுத்துச் சொல்ல ஆரம்பித்தார்.

“உமது மதத்தில் எனக்கு எந்தத் தவறும் தெரியவில்லை. அது சத்தியம் என்று நம்புகிறேன். நானும் இஸ்லாத்தை ஏற்கிறேன்” என்று இஸ்லாத்தினுள் நுழைந்தார் அனீஸ். அடுத்து இருவரும் தம் தாயாரிடம் சென்றார்கள். பேசினார்கள், விவரித்தார்கள், அழைப்பு விடுத்தார்கள். “ஏதும் தவறு இருப்பதாகத் தெரியவில்லையே” என்று அவரும் இஸ்லாத்தினுள் நுழைந்தார்.

இஸ்லாமியக் குடும்பமாக மாறிய அபூதர்ரின் குடும்பம் தம் குல மக்களிடம் ஏகத்துவச் செய்தியை விவரிக்க ஆரம்பித்தது. முரடர்கள், கொள்ளைக் கூட்டத்தினர் என்று கரடு முரடான அந்த மக்களின் மனம் என்னவோ தெளிவான சிந்தனைக்குத் தயாராகத்தான் இருந்திருக்கிறது. அபூதர்ரின் அயராத பிரச்சாரம் அவர்களிடம் மாற்றத்தை விளைவித்தது. எந்தளவென்றால் தினந்தோறும் ஒன்றாகச் சேர்ந்து கூட்டுத் தொழுகை நிறைவேற்றும் அளவிற்கு அவர்களது எண்ணிக்கை பெருகியிருந்தது. வெகு சிலர் மட்டும், “இப்போதைக்கு வேண்டாம். நபியவர்கள் மதீனாவுக்குப் புலம்பெயரட்டும். அப்பொழுது இணைந்து கொள்கிறோம்” என்று தாமதித்தார்கள். கிஃபார் குலம் மட்டுமன்றித் தமது அண்டைக் குலமான அஸ்லமைச் சார்ந்தவர்களிடமும் பிரச்சாரம் புரிந்து அவர்களுள் பலரையும் இஸ்லாம் மார்க்கத்திற்கு அழைத்து வந்தார் அபூதர்.

அதற்குள் இங்கு மக்காவில் நபியவர்கள் பதின்மூன்று ஆண்டுக் காலம் பிரச்சினைகளுடன் போராடி, பின்னர் மதீனாவிற்குப் புலம்பெயர்ந்து, அங்கு பத்ரு, உஹது, அகழி யுத்தங்கள் என்று வரலாற்றுப் பெருநிகழ்வுகள் நிகழ்ந்து முடிந்திருந்தன. பிறகுதான் ஒருநாள் –

மதீனாவில் நபியவர்கள் தம் தோழர்களுடன் அமர்ந்திருந்தபோது, நூற்றுக்கணக்கான மக்கள் மதீனாவை நோக்கி ஒரு படைபோல் திரண்டு வந்து கொண்டிருந்தனர். மக்களும் அவர்களுடைய ஒட்டகங்களும் கால்நடைகளும் பாலைவெளியில் கிளப்பிய தூசு பெரும் படலமாய் நகர்ந்து வந்தது. அதை முந்திக் கொண்டு வந்தது அவர்கள் உரத்தக் குரலில் அல்லாஹ்வைப் போற்றியும் புகழ்ந்தும் உரைத்த குரலொலி. அதுமட்டும் கேட்காதிருந்தால் எதிரிகள்தாம் மதீனாவின்மீது படையெடுத்து வருகிறார்கள் போலும் என்று மதீனாவில் உள்ளோர் கருதியிருப்பர். கிஃபார், அஸ்லம் குலத்தினரை அழைத்துக்கொண்டு பெருமகிழ்வுடன் மதீனாவினுள் நுழைந்தார் அபூதர் அல்கிஃபாரி ரலியல்லாஹு அன்ஹு.

அன்று ஒற்றை ஆளாக வந்து இஸ்லாத்தை ஏற்றுச் சென்றவர் அஞ்ஞானத்தில் மூழ்கிக் கிடந்த தம் மக்களை ஒழுக்கச் சீலர்களாய் மாற்றியிருந்தார். நான் ஒருத்தன்தானே! என்ன செய்ய முடியும் என்ற பச்சாதாபத்திற்கே இடமில்லாமல் அப்படியோர் உழைப்பு. ஒரு கையும் ஓசை இடும்.

“அல்லாஹ் கிஃபார் குல மக்களை மன்னித்து அருள்வானாக. இஸ்லாத்தை ஏற்றவர்களுக்கு சாந்தி அளிப்பானாக” என்று நபியவர்கள் இறைஞ்சினார்கள்.

oOo

‘நான் உங்களுக்கு சேவகம் புரிகின்றேனே’ என்று நபியவர்களிடம் அண்மிக்கொண்டார் அபூதர். அவர்மீது நபியவர்களுக்கும் தனி வாஞ்சை உருவாகியிருந்தது. சந்திக்கும் போதெல்லாம் முகம் மலர அவரது கையைப் பற்றிக் கொள்வார்கள். சேவை என்று தமது பணியை அபூதர் குறுக்கிக் கொள்ளவில்லை. தாம் மதீனாவுக்குப் புலம்பெயரும் முன் நிகழ்ந்த யுத்தங்களைத் தவறவிட்டு விட்டதால், பிறகு நிகழ்ந்த யுத்தங்களில் நபியவர்களுடன் தவறாமல் கலந்து கொண்டார். ஹுனைன் யுத்தத்தின்போது கிஃபார் குலத்தினரின் கொடியை உயர்த்திப்பிடித்து அவரது அணிக்குத் தலைமை வகித்துச் செல்லும் வாய்ப்பு அவருக்குத்தான் அமைந்தது. அல்லாஹ்வுக்காகவும் நபியவர்களுக்காகவும் என்று கிடந்த அர்ப்பணிப்பின் உச்சம்தான் தபூக் போரில் அவரது நடைப் பயணம். பிறகு உமர் (ரலி) கலீஃபாவாக இருந்த காலத்தில் குத்ஸு (ஜெருசலம்) கைப்பற்றப்பட்டபோது உமருடன் அபூதரும் இருந்திருக்கிறார்.

அன்று மக்காவில் இஸ்லாத்தை ஏற்ற உடனேயே குரைஷிகளிடம் சென்று உண்மையைக் கூறி உதைபட்டுப் பாதிப்புக்கு உள்ளான அபூதர்ருக்கு எத்தருணத்திலும் தமது கருத்தை முன்வைப்பதில் அச்சமோ, தயக்கமோ இருந்ததே இல்லை. அதை நன்கு கவனித்திருந்த நபியவர்கள் ஒருமுறை அவரிடம், “ஆட்சியாளர்கள் அல்-ஃபயீயை பகிர்ந்தளிக்காமல் தம்மிடம் வைத்துக் கொண்டால் என்ன செய்வீர்?” என்று கேட்டார்கள்.

ஃபயீ என்பது முஸ்லிம்களின் ஆளுமைக்கு உட்படும் நிலங்களில் கைப்பற்றப்படும் செல்வத்தில் ஏழைகளுக்குப் பகிர்ந்தளிக்க வேண்டிய பங்காகும். அச்செல்வம் ஐந்து பங்காகப் பிரிக்கப்பட்டு விநியோகிக்கப்பட வேண்டும் என்று குர்ஆனின் 59ஆவது சூராவான அல்-ஹஷ்ரின் 7ஆவது வசனம் தெரிவிக்கிறது.

தயக்கமே இன்றி அபூதர் பதில் அளித்தார். “அல்லாஹ்வின்மீது ஆணையாக! எனது வாள்கொண்டு அந்த ஆட்சியாளர்களிடம் சண்டையிடுவேன்.”

“அதைவிட மேலான ஒன்றைச் சொல்லட்டுமா? என்னை மறுமையில் சந்திக்கும்வரை பொறுமை காப்பீராக!” என்றார்கள் நபியவர்கள்.

அந்த வார்த்தை, அந்த அறிவுரைதான் பிற்காலத்தில் அவரை முழுக்க முழுக்கப் பொறுமை காக்க வைத்தது. துவக்கத்தில் பார்த்தோமே, அர்-ரப்தா, வனாந்தரத்தில் தனி வாழ்க்கை என்று. அந்தளவு தனிமைக்கு அவரை இட்டுச் சென்றது.

நபியவர்களின் மறைவிற்குப்பின் அபூதர் அல்கிஃபாரிக்கு மதீனாவில் தங்குவது சரிப்பட்டு வரவில்லை. எங்குத் திரும்பினாலும் எதைப் பார்த்தாலும் நபியவர்களின் நினைவு. அல்லாஹ்வின் தூதரை இவ்வுலகில் நிரந்தரமாகப் பிரிந்துவிட்டோம் என்பது சோகமாகி, கவலையாகி சிரியாவிற்குக் கிளம்பிச் சென்று புறநகர் பகுதியொன்றில் தங்கிவிட்டார். முதல் இரண்டு கலீஃபாக்களின் ஆட்சியின்போது அவரது காலம் பெரும்பாலும் அங்குதான் கழிந்தது.

சிறிய வீடு. எளிய வாழ்க்கை. எளிமை என்றால் அப்படி ஓர் எளிமை. ஒருமுறை அவரது வீட்டிற்கு வந்திருந்த விருந்தினர், பொருள் என்று ஏதொன்றுமே அங்கு இல்லாததைக் கண்டு, “எங்கே உங்களது உடைமைகள்?” என்றார்.

“எங்களது வீடு வேறோர் இடத்தில் உள்ளது. நல்ல பொருள்களை நாங்கள் அங்கே அனுப்பிவிட்டோம்” என்றார் அபூதர்.

அவர் குறிப்பிடுவது மறுமை வாழ்க்கை என்பது கேள்வி கேட்டவருக்குப் புரிந்தது. “ஆயினும் இந்த வீட்டில் வாழும் காலத்திற்குத் தேவையான பொருள்கள் உங்களுக்கு வேண்டாமா?”

“வீட்டின் உரிமையாளர், நாங்கள் இங்கே நிரந்தரமாக வாழ அனுமதிக்கப் போவதில்லையே!”

ஒருமுறை டமாஸ்கஸ் ஆளுநர் அபூதர் அல்கிஃபாரிக்கு 300 தீனார் அனுப்பிவைத்தார். அவர் தம்முடைய தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளட்டுமே என்று மெய்யான கரிசனத்துடன்தான் அனுப்பியிருந்தார். “என்னைவிடத் தேவைகள் நிரம்பியவர்கள் இருப்பார்கள். அவர்களுக்கு அளித்துவிடச் சொல்லவும்” என்று அதைத் திருப்பி அனுப்பிவிட்டார் அபூதர். மறுமையின் இலக்கில் கண்ணைப் பதித்தவர்களுக்கு வேறு எதுவுமே தங்களின் கவனத்தைக் கலைப்பதை அவர்கள் விரும்பவே இல்லை. வேறென்ன சொல்வது?

பின்னர் உதுமான் ரலியல்லாஹு அன்ஹு கலீஃபாவாகப் பொறுப்பேற்றதும் டமாஸ்கஸ் நகருக்குக் குடிபெயர்ந்தார் அபூதர். அங்கு அவர் கண்டது பெரும் அதிர்ச்சியாக அவரைத் தாக்கியது! அங்கிருந்த வளம் முஸ்லிம்களுக்குச் செல்வச் செழிப்பை அறிமுகப்படுத்தியதால் உலக வாழ்க்கையிலும் அதன் ஆடம்பரத்திலும் முஸ்லிம்கள் மூழ்கிக் கிடந்தனர். அவை இறை பக்தியைப் பாழ்படுத்தி மக்களை நிரந்தர நஷ்டத்தில் ஆழ்த்திவிடுமே என்று மாய்ந்துபோனது அவரது மனம். நபியவர்களிடம் நேரடியாகப் பாடம் பயின்று, எளிய வாழ்க்கையை அடிப்படையாக அமைத்துக் கொண்டிருந்த அவரால் மக்களின் அந்த நிலையைக் காணச் சகிக்கவில்லை. அபூதர்தா ரலியல்லாஹு அன்ஹுவின் வாழ்க்கையைப் பார்க்கும்போது அவர் டமாஸ்கஸ் நகர மக்களைப் பள்ளிவாசலுக்கு அழைத்தார்; உணர்ச்சிகரமான உரை நிகழ்த்தினார் என்று படித்தது நினைவிருக்கிறதா?

அதைப்போல் இவர் மக்களிடம் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்துவிட்டார்.

“… பொன்னையும் வெள்ளியையும் சேமித்து வைத்துக் கொண்டு அவற்றை அல்லாஹ்வின் பாதையில் செலவிடாதிருப்பவர்களுக்கும் நோவினை செய்யும் வேதனை உண்டு என்று (நபியே!) நன்மாராயம் கூறுவீராக!. அந்த நாளில் (அவர்கள் சேமித்து வைத்த செல்வத்தை) நரக நெருப்பிலிட்டுக் காய்ச்சி, அதைக் கொண்டு அவர்களுடைய நெற்றிகளிலும் விலாப்புறங்களிலும் முதுகுகளிலும் சூடு போடப்பட்டு, “இதுதான் நீங்கள் உங்களுக்காகச் சேமித்து வைத்தது. ஆகவே நீங்கள் சேமித்துவைத்ததைச் சுவைத்துப் பாருங்கள்” (என்று கூறப்படும் அந்த நாளை நினைவூட்டுவீராக!)

என்ற குர்ஆன் வசனத்தை அனைவரிடமும் தெரிவித்து எச்சரிப்பது அவரது முழுநேரப் பணியாகிவிட்டது. குர்ஆனின் 9ஆவது அத்தியாயமான சூரா அத்தவ்பா 34, 35ஆம் வசனங்கள் அவை.

இப்படி அவர் மக்களை எச்சரித்ததைப் பற்றி அஹ்னஃப் இப்னு கைஸ் விவரித்த நிகழ்வு ஒன்றும் பதிவாகியுள்ளது. ஒருமுறை அஹ்னஃப் குரைஷிகளுடன் அமர்ந்திருந்தார். அப்போது பரட்டை முடியுள்ள, சொரசொரப்பான ஆடையணிந்த, முரட்டுத் தோற்றமுள்ள ஒருவர் வந்து ஸலாம் கூறிவிட்டு, “பொருளைப் பதுக்கி வைப்பவர்களுக்காக, நரக நெருப்பில் சூடாக்கப்பட்ட ஒரு கல் உண்டு. அக்கல் அவர்களின் மார்புக் காம்பில் வைக்கப்படும். அக்கல் அவர்களது புஜத்தின் மேற்பகுதி எலும்பின் வழியாக வெளியாகும். பிறகு அது புஜத்தின் மேற்பகுதி எலும்பில் வைக்கப்படும். அது அவர்களது மார்புக் காம்பின் வழியாக வெளியாகி உருண்டோடும்” என்று கூறினார்.

அவ்வளவுதான். சொல்லிவிட்டு அவர் ஒரு தூணுக்கருகில் போய் உட்கார்ந்து விட்டார். அஹ்னஃப் மட்டும்அவரைப் பின்தொடர்ந்து சென்று அவருக்கருகில் அமர்ந்தார். அந்த மனிதர்தாம் அபூதர் என்று அப்போது அவருக்குத் தெரியாது.

அவரிடம் “தாங்கள் கூறியதை மக்கள் வெறுக்கிறார்களே!” என்று கேட்டார் அஹ்னஃப்.

அதற்கு அவர், “அவர்கள் விவரமற்றவர்கள்” என்றார்.

மேலும் தொடர்ந்து “தோழர் என்னிடம் சொன்னார்…” என்று அவர் கூற ஆரம்பிக்க அஹ்னஃப் குறுக்கிட்டு “உம்முடைய தோழர் யார்?” என்றார்.

“நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்தாம்” எனக் கூறிவிட்டு, “நபியவர்கள், ‘அபூதர்ரே! உஹது மலையை நீர் பார்த்திருக்கிறீரா?’ எனக் கேட்டார்கள். ஒரு வேலைக்காக நபியவர்கள் என்னை அங்கு அனுப்பப் போகிறார்கள் என எண்ணி, பகல் முடிய இன்னம் எவ்வளவு நேரம் உள்ளது என அறிந்து கொள்வதற்காகச் சூரியனைப் பார்த்துவிட்டு. ‘ஆம்’ என்றேன். ‘உஹது மலையளவுக்குத் தங்கம் என்னிடம் இருந்து அதில் மூன்று தீனார்களைத் தவிர வேறு எதையும் செலவிடாமலிருப்பதை நான் விரும்பவில்லை’ என்று நபியவர்கள் சொன்னார்கள். இவர்களோ இதை அறியாதவர்களாய் இருக்கிறார்கள். இவர்கள் உலக ஆதாயங்களையே சேகரிக்கிறார்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் அல்லாஹ்வைச் சந்திக்கும்வரை இவ்வுலகப் பொருட்களை இவர்களிடம் கேட்க மாட்டேன். மார்க்க விஷயங்களைப் பற்றியும் இவர்களிடம் தீர்ப்புக் கேட்க மாட்டேன்” என்றார்.

இப்படியான அபூதர்ரின் செயல்பாடு ஒரு கட்டத்தில் என்ன ஆயிற்று என்றால் சிரியாவின் நிர்வாகத்திற்குத் தலைமை ஏற்றுக்கொண்டிருந்த முஆவியாவுக்கும் அபூதர்ருக்கும் இடையே பெரும் கருத்து மோதலை உருவாக்கிவிட்டது. ‘இந்தக் குறிப்பிட்ட இறை வசனம் யூதர்களையும் கிறித்தவர்களையும் குறித்து இறங்கியது; முஸ்லிம்கள் தங்களது சொத்துக்குச் செலுத்த வேண்டிய ஸகாத் தொகையைச் செலுத்திவிட்டால் அவர்களது செல்வத்தை அனுபவிப்பதைத் தடுக்கவியலாது’ என்பது முஆவியா ரலியல்லாஹு அன்ஹுவின் நிலைப்பாடு.

ஆனால் அபூதர்ரோ “இது நம்மையும் அவர்களையும் குறித்தே இறங்கியுள்ளது. ஸகாத் அளிப்பது ஒருபுறமிருக்க, தங்களது தேவைக்கு அதிகமாகச் செல்வத்தைச் சேகரித்து வைத்துள்ள முஸ்லிம்களுக்கும் இது பொருந்தும்” என்ற கருத்தில் இருந்தார். இது முஆவியாவின் நிர்வாகத்திற்குப் பெரும் இடைஞ்சலாக அமைந்துபோய் மதீனாவில் உள்ள கலீஃபா உதுமான் ரலியல்லாஹு அன்ஹுவுக்குக் கடிதம் எழுதி அனுப்பிவிட்டார். பிரச்சினை மேலும் வளராமல் இருக்க அபூதர் ரலியல்லாஹு அன்ஹுவை மதீனாவிற்கு வரும்படி கலீ்ஃபா கடிதம் எழுதினார்.

இங்கு ஓர் உபரிச் செய்தி. இருவர் மத்தியில் கருத்து வேறுபாடு இருந்திருந்தாலும் முஆவியா சைப்ரஸ் தீவின்மீது படையெடுத்துச் செல்லும்முன் ஆலோசனை நிகழ்த்திய முக்கியமான தோழர்களுள் அபூதர்ரும் ஒருவர். கருத்து வேறுபாடு என்றாலே வெட்டுப்பழி, குத்துப்பழி என்றாகிப்போன இன்றைய நம் மனோநிலைக்கு இதில் படிப்பினை உள்ளது.

கலீஃபாவின் கடிதம் கிடைத்ததும் அபூதர் அல்கிஃபாரி மதீனாவிற்குப் பயணமானார். அவர் மதீனா சென்று அடைவதற்குள் வேறு சில சந்தர்ப்பங்களில் அவர் மக்களுக்கு நிகழ்த்திய உரைகளைச் சற்றுப் பார்த்துவிடுவோம். முஸ்லிம் உம்மத்துக்கு – குறிப்பாக நம் சமகால உம்மத்துக்கு – பல பாடங்கள் அவற்றுள் அடங்கியுள்ளன.

oOo

கஅபாவின் அருகில் நின்று மக்களுக்கு உரையாற்றினார் அபூதர். “மக்களே! நான் ஜுன்துப் அல்ஃகிபாரி. உங்களுடைய சகோதரன், இரக்கமுள்ள ஆலோசகனாகிய என்னிடம் வாருங்கள்” என்று உரத்து அழைத்தார். மக்கள் அவரைச் சுற்றிக் குழுமினர். “உங்களுள் ஒருவர் பயணம் செல்ல வேண்டியிருந்தால் அதற்குரிய மூட்டை, முடிச்சு, ஆகாரங்களைத் தயார்படுத்திக் கொள்வதை நீங்கள் கண்டிருக்கிறீர்களா?” என்றார்.

“ஆம்” என்றனர்.

“வெகு நிச்சயமாக! மறுமைக்கான பயணம் நீங்கள் எண்ணிப் பார்க்க இயலும் எந்தப் பயணத்தையும்விடத் தொலைவானது. எனவே அதற்குரிய சரியானவற்றைத் தயார் செய்து கொள்ளுங்கள்.”

“சரியானவை யாவை?” என்று கேட்டார்கள் மக்கள்.

“ஹஜ்ஜுக்குரிய விவகாரங்கள் கடுமையானவை. எனவே ஹஜ்ஜை நிறைவேற்றுங்கள். நீங்கள் எழுப்பப்படும் நாளின் பகுதி வெகு நீளமானது. எனவே கடுமையான வெப்பம் தகிக்கும் நாள் ஒன்றில் நோன்பிருங்கள். மரணக்குழியானது கும்மிருட்டு, தனிமை. எனவே இரவின் கும்மிருட்டில் இரண்டு ரக்அத் தொழுகையை நிறைவேற்றுங்கள். மறுமை நாள் அச்சத்திற்குரியது. எனவே நற்சொல் சொல்லுங்கள்; அல்லது தீய சொற்களைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். உங்களது செல்வத்திலிருந்து தானமளியுங்கள், நீங்கள் சோதனைகளிலிருந்து தப்பிக்க அவை உதவலாம்.

நீங்கள் சேரும் கூட்டத்தை இரண்டு விதமாகப் பிரித்துக் கொள்ளுங்கள் – ஒன்று இறைவன் அனுமதித்த வகையில் உங்களது தேவைகளுக்காகப் பொருள் ஈட்டுவது, மற்றொன்று மறுமையைத் தேடுவதற்கானது. இவையன்றி மூன்றாவதானது உங்களுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடியது, பயன் தராதது. ஆகவே அப்படியான கூட்டத்தைத் தேடாதீர்கள்.

உங்களது செல்வத்தை இரண்டே இரண்டு திர்ஹமாகப் பிரித்துக் கொள்ளுங்கள். ஒன்று உங்களது குடும்பத்திற்காக, மற்றொன்று மறுமைக்காக. மூன்றாவது தீமை விளைவிக்கக் கூடியது, ஆகவே அதைத் தேடாதீர்கள். மக்களே! இறைவனை அடைவதற்கான தேடல் வேட்கையை அதை நீங்கள் திரும்பிப்பெற இயலாதவாறு கொன்றுவிட்டீர்களே”

மற்றோர் உரையில் மக்களிடம் தெரிவித்தார். “ஏழு விஷயங்களைச் செய்யும்படி நபியவர்கள் என்னை அறிவுறுத்தியுள்ளார்கள். வறியவர்களிடம் நேசம் செலுத்துங்கள்; உங்களைவிட உயர்ந்த நிலையில் இருப்பவர்களைவிடத் தாழ்ந்த நிலையில் இருப்பவர்களுடன் உங்களோடு ஒப்பிட்டுக் கொள்ளுங்கள்; எவரிடமும் உங்களுடைய தேவைகளைக் கேட்க வேண்டாம். உற்றார், உறவினருடன் நல்லுறவு கொள்ளுங்கள். எவ்வளவுதான் கசப்பாக இருந்தாலும் உண்மை உரையுங்கள். பழி சொல்பவரின் பழியை அல்லாஹ்வின் பொருட்டு அச்சமின்றி எதிர்கொள்ளுங்கள். அதிகமதிகம் லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ் – தீமைகளை விளங்கி விலகிக் கொள்ளும் அறிவும் நன்மைகளை விளங்கி விரைந்து செய்யும் ஆற்றலும் அல்லாஹ்விடமிருந்தே – எனக் கூறி வாருங்கள்”

தாம் நபியவர்களிடம் கேட்டு அறிந்ததை அட்சரம் பிசகாமல் வாழ்ந்திருக்கிறார் அபூதர். பழி சுமத்துபவரின் பழியை எதிர்கொண்டதில் அபூதர் அல்கிஃபாரியைப்போல் ஒருவரைக் கண்டதில்லை என்று தெரிவித்துள்ளார் அலீ. சத்தியம் என்று தாம் உணர்ந்ததை உரத்துச் சொல்வதில் அவருக்குத் தயக்கமே இருந்ததில்லை. தம்மைத் தடுப்பவர்களிடம், “எவன் வசம் என் உயிர் உள்ளதோ அவன் மீது ஆணையாக! என் கழுத்தில் நீங்கள் வாளையே வைத்தபோதினும் என் கழுத்தை வெட்டும்முன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதில் ஒரேயொரு வார்த்தையை என்னால் வெளிப்படுத்த முடியுமெனில் வெளிப்படுத்திவிடுவேன்.”

ஆட்சியில் அமர்த்தப்படுபவர்கள் உலக இச்சையில் மூழ்கிவிடுகிறார்கள், அதில் தொலைந்து விடுகிறார்கள் என்பதால் ஆட்சிப் பொறுப்பில் அமர்த்தப்பட்ட மேன்மையான தோழர்களிடமிருந்தேகூட அபூதர் விலகி இருக்க ஆரம்பித்தார். ஒருநாள் அபூமூஸா அல்-அஷ்அரீ அபூதர்ரைச் சந்தித்தவர் மிகவும் மகிழ்வுடன் தம் இரு கரங்களையும் விரித்து, “வாருங்கள் அபூதர்! வாருங்கள் அபூதர்!” என்று அரவணைக்க முனைய அவரை விலக்கி, “நான் உன் சகோதரன் என்பதெல்லாம் நீ ஆட்சிப் பொறுப்பில் அமர்த்தப்படும்முன்” என்று சொல்லிவிட்டார்.

அதைப்போல் மற்றொரு நாள் அபூஹுரைராவும் அவரை அரவணைக்க, அபூதர் விலக்கித் தள்ளினார். “என்னை விட்டுத் தூரப் போய்விடும்! நீரும் ஆட்சிப் பொறுப்பில் அமர்த்தப்பட்டவர்தாமே? மற்றவர்களுடன் போட்டியிட்டு உயரமாய்க் கட்டடம் கட்டிக் கொண்டு ஆடு, மாடு, ஒட்டகம், பண்ணை என்று சாதாரண மக்களோடு போட்டி போட்டுச் சேர்த்தீரா இல்லையா?”

அபூஹுரைரா அத்தகைய உலக இச்சைகளுக்கு அப்பாற்பட்டவராயிற்றே!. ‘இதென்ன அபாண்டம்?’ என்று அதிர்ந்தவர் அபூதர் கேள்விப்பட்டதெல்லாம் வதந்தி என்று வாதாடி விளக்கம் அளிக்க வேண்டியதாயிற்று. அந்தளவு தமக்குத்தாமே கடுமையான ஓர் ஆன்மீக வட்டத்திற்குள் தம்மை நுழைத்துக் கொண்டார் அபூதர் அல்கிஃபாரி.

ஈராக் நாட்டின் ஒரு நகரை ஆட்சி செய்யும் பொறுப்பு அவருக்கு அளிக்கப்பட்டபோது “அல்லாஹ்வின்மீது ஆணையாக! உங்களைப்போல் இந்த உலகுடன் நான் ஒட்டிக்கொள்ள முடியாது” என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டார். அப்படி மறுத்துவிட்டு அவர் வாழ்ந்த வாழ்க்கை எளிமையிலும் எளிமை. அவர் மிகப் பழைய ஆடை ஒன்று அணிந்திருப்பதைக் கண்ட தோழர் ஒருவர், “உங்களிடம் இதைத் தவிர வேறு ஆடை இல்லையா? சில நாள்களுக்குமுன் உங்களிடம் இரண்டு புதிய ஆடைகள் உள்ளதைக் கண்டேனே?” என்று கேட்டார்.

“என் சகோதரரின் மகனே! என்னைவிட அதிகமான தேவை உள்ள ஒருவருக்கு அவற்றை நான் கொடுத்துவிட்டேன்”

“அல்லாஹ்வே! உங்களுக்கே அதற்கான தேவை உள்ளதே”

கரிசனத்துடன் விசாரித்த அந்தத் தோழரின்மீது அபூதர்ருக்குக் கரிசனம் ஏற்பட்டு, “யா அல்லாஹ்! எங்களை மன்னித்துவிடு” என்று இறைஞ்சினார். பிறகு அவரிடம், “நீர் இந்த உலகத்தை விரும்புபவராக இருக்கின்றீர். என்னிடம் நான் அனிந்துள்ள இந்த ஆடை உள்ளது. வெள்ளிக்கிழமை அன்று அணிய மற்றோர் ஆடை உள்ளது. பால் சுரக்கும் ஆடு, பயணிக்க கழுதை உள்ளன. இவற்றைவிட வேறெந்த அருட்கொடை சிறப்பாக இருக்கமுடியும்?”

இன்னும், இன்னும் என்ற பேராசையுடன் எதைத் தேடி நாம் ஓடி, ஓடி நிம்மதியைத் தொலைத்துக் கொண்டிருக்கிறோம்?

oOo

மதீனா வந்தடைந்தார் அபூதர் அல்கிஃபாரி. அங்கு வந்தால் மக்கள் இதற்கு முன் அவரைப் பார்க்காதவர்கள் போல் அவரைச் சூழ்ந்துகொண்டு அவர் மதீனாவிற்கு அழைக்கப்பட்ட காரணத்தை விசாரிக்க ஆரம்பித்துவிட்டார்கள். மக்கள் தம்மிடம் இப்படி விசாரிப்பது அபூதர்ருக்குப் பிடிக்கவில்லை. கலீஃபா உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹுவிடம் முறையிட்டார்.

அதற்குக் கலீஃபா, ‘நீர் விரும்பினால் தனியாக மதீனாவுக்கு அருகில் எங்கேனும் இருந்து கொள்ளும்’ என்று அனுமதி வழங்கினார். அதைக் கேட்டு அபூதர் தேர்ந்தெடுத்த இடம்தான் அர்-ரப்தா. அபூதர் தம் குடும்பத்தினருடன் அங்குத் தனிமை தேடிக் குடிபெயர்ந்தார். மற்றொரு வரலாற்றுக் குறிப்பில் அவர் அர்ரப்தாவைத் தேர்ந்தெடுத்ததை அப்துல்லாஹ் பின் ஸாமித் விவரித்துள்ளார்.

மதீனாவில் கலீஃபாவுக்கு எதிரான கலகக்காரர்களின் குழப்பம் அதிகரிக்க ஆரம்பித்தது. அது சற்றும் பிடிக்காமல் அபூதர் தம்மை அதிலிருந்து தனிமைப்படுத்திக் கொண்டார். ஒருநாள் கலீஃபா உதுமான் ரலியல்லாஹு அன்ஹுவும் அப்துல்லாஹ் பின் ஸாமித்தும் அவரைச் சந்திக்க அவரது இல்லத்திற்குச் சென்றனர். உதுமான் நுழைந்ததும் தமது தலையை மூடியிருந்த துணியை நீக்கினார் அபூதர். “அமீருல் மூஃமினீன். அல்லாஹ்வின்மீது ஆணையாக! நான் அவர்களுள் ஒருவனல்லன்” என்றார்.

உதுமான், “தெரியும் அபூதர். உம் கூற்று சரியே. நீர் எம்முடன் மதீனாவில் வந்து வாழ வேண்டும் என்றே நான் அழைப்பு விடுக்கவே நான் வந்தேன்.”

“எனக்கு அது தேவையில்லை. என்னை அனுமதியுங்கள். நான் அர்-ரப்தாவிற்குச் சென்றுவிடுகிறேன்.”

அபூதர்ரின் குணநலன்களை நன்கு அறிந்திருந்த கலீஃபா “நல்லது” என்று அனுமதியளித்தார். கூடுதலாக “நாம் உமது தேவைகளுக்கான உதவித் தொகையினை வழங்க ஆணையிடுவோம்.”

“எனக்கு அதற்கான தேவையே இல்லை. என்னிடம் உள்ளவை எனக்குப் போதுமானவை” என்று எப்பொழுதும்போல் அதை நிராகரித்துவிட்டார் அபூதர்.

அர்-ரப்தா என்பது பாலைவனத்தில் ஒரு தரிசு நிலம். ஈராக்கிலிருந்து மக்கா செல்லும் பாதையில் அது அமைந்திருந்தது. அரசின் கருவூலத்திற்குச் சொந்தமான ஸகாத் ஒட்டகங்கள் அங்கு மேயும். எப்பொழுதாவது கடந்து செல்லும் யாத்ரீகர்கள் தவிர மக்கள் நடமாட்டம் அற்ற பகுதி. அங்கு எவ்வித வசதியும் அமைத்துக் கொள்ளாமல் எளிய வாழ்க்கை, அல்லாஹ்வை வழிபடுவது மட்டுமே குறிக்கோள் என்று அபூதர் வாழ ஆரம்பித்தார்.

அப்படி அபூதர் அர்-ரப்தாவிற்குச் சென்று தம்மைத் தனிமைப்படுத்திக் கொண்டாலும் கலகக்காரர்கள் அவரை விடுவதாக இல்லை. கலீஃபாவுக்கு எதிராகத் துவங்கியிருந்த குழப்பத்திற்கு நபியவர்களின் முக்கியத் தோழரான அபூதர் அல்கிஃபாரியை பகடைக் காயாகப் பயன்படுத்திக் கொள்ளும் தீய எண்ணம் அவர்களுக்கு இருந்தது. தம் விருப்பப்படித் தனிமை வாழ்வுக்கு நகர்ந்திருந்த அவரை கலீஃபா உதுமான்தாம் வேண்டுமென்றே ஊரைவிட்டு விலக்கி விட்டார் என்று திரித்துப் பேசி அதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வது அவர்களது திட்டம். இதை அபூதர் நன்றாகவே அறிந்திருந்தார். தவிரவும் கலீஃபாவிற்கு எதிரான அவர்களது கலகத்தை அவர் எவ்விதத்திலும் அங்கீகரிக்கத் தயாராக இல்லை.

ஈராக் நாட்டிலிருந்து ஒரு குழு வந்து அர்-ரப்தாவில் அபூதர்ரைச் சந்தித்தது. “அபூதர்! இந்த மனிதர் உதுமான் உம்மை இப்படிச் செய்துவிட்டாரே. நீங்கள் போர்க் கொடியை உயர்த்துங்கள். உங்களது விருப்பப்படி போதுமான மக்களை நாங்கள் உங்களுக்கு அளித்து உதவுகிறோம்.”

திட்டவட்டமான வார்த்தைகளால் அதை நிராகரித்து அவர்களைத் திருப்பி அனுப்பினார் அபூதர். “மக்களே! நீங்கள் என்னெதிரில் வராதீர்கள். ஆட்சியாளரை இழிவுபடுத்தாதீர்கள். ஆட்சியாளரை இழிவுபடுத்துகின்றவருக்குப் பாவ மன்னிப்பே இல்லை.”

“அல்லாஹ்வின்மீது ஆணையாகச் சொல்கிறேன்! அபிஸீனியாவைச் சேர்ந்தவரை எனக்குத் தலைவராக நியமித்திருந்தாலும் நான் அவர் சொல்லுக்குச் செவிமடுப்பேன்; அவருக்குக் கட்டுப்படுவேன். உதுமான் என்னைச் சிலுவையில் அறைவேன் என்றால் நான் அதை ஏற்பேன், அடிபணிவேன். பொறுமை காப்பேன், அதற்கான வெகுமதியை அல்லாஹ்விடம் எதிர்பார்ப்பேன். அதுவே எனக்குச் சிறந்தது.”

“பூமியின் ஒரு மூலையிலிருந்து மறு மூலைக்கு என்னை நடந்து செல்லும்படி அவர் கட்டளையிட்டால் நான் அதை ஏற்பேன், அடிபணிவேன். பொறுமை காப்பேன், அதற்கான வெகுமதியை அல்லாஹ்விடம் எதிர்பார்ப்பேன். அதுவே எனக்குச் சிறந்தது.”

“என்னை வீட்டிற்குத் திருப்பி அனுப்பினால் நான் அதை ஏற்பேன், அடிபணிவேன். பொறுமை காப்பேன், அதற்கான வெகுமதியை அல்லாஹ்விடம் எதிர்பார்ப்பேன். அதுவே எனக்குச் சிறந்தது.”

oOo

ஹிஜ்ரீ 32ஆம் ஆண்டு.

உடல் நலமின்றி வாழ்வின் இறுதிக் கட்டத்தை அடைந்தார் அபூதர். அருகில் அவருடைய மனைவி விம்மியவாறு அமர்ந்திருந்தார்.

“மரணம் அனைவருக்கும் வந்தே தீரும். பிறகு எதற்கு அழுகிறாய்?” என்றார் அபூதர்.

“தனிமையில் யாருமற்ற பாலைவனத்தில் மரணத்தைத் தழுவ இருக்கின்றீர்கள்; உங்களுடைய இறுதிச் சடங்கை நிறைவேற்ற எந்தத் துணையும் உதவியும் இல்லை; உங்களது பிரேதத்தை மூடும் அளவிற்குக்கூட நம்மிடம் துணியில்லை. நான் எப்படி அழாமல் இருக்க முடியும்?”

அதைக் கேட்டு அபூதர் புன்னகைத்தார். “உறுதிகொள். நானும் தோழர்களும் அமர்ந்திருந்தபோது அல்லாஹ்வின் தூதர் எங்களிடம் ‘உங்களுள் ஒருவர் பாலையில் தனிமையில் மரணமடைவார். அவரது இறுதிச் சடங்கு இறை நம்பிக்கையாளர்களின் குழு ஒன்றினால் நடத்தப்படும்’ என்று கூறியதை நான் செவியுற்றேன். அன்று அங்கு என்னுடன் அமர்ந்திருந்த அனைவரும் நகரிலோ, பெரும்பாலான மக்கள் வசிக்கும் பகுதியிலோ மரணமடைந்துவிட்டார்கள், என்னைத் தவிர. இதோ இங்கு நான் அரவமற்ற பாலையில். அல்லாஹ்வின்மீது ஆணையாக! நான் பொய் உரைத்ததே இல்லை. சென்று பாதையைக் கவனி. அத்தகைய இறை நம்பிக்கையாளர் குழு ஒன்று நிச்சயம் வரும்” (முஸ்னது அஹ்மத் 21373).

நபியவர்களின் முன்னறிவிப்பை எவ்விதச் சந்தேகமும் இன்றி வெகு நிச்சயமாக நம்பும் மனம் அமைந்திருந்தது சரி. ஆனால் அந்த மரணத் தறுவாயிலும் அத்தகைய கடின சூழலிலும் தமக்கு அதைப் பொருத்தி உவகை கொள்வதற்கு எத்தகைய ஈமானிய உறுதி இருந்திருக்க வேண்டும்?

“எத்தனையோ பாதைகள் கிடக்கின்றன. எதில் என்று நான் சென்று காத்திருப்பேன்?”

அதெல்லாம் தெரியாது. “போ! போய்ப் பார்” என்று மட்டும் வற்புறுத்தினார் அபூதர்.

சிறு மலை முகட்டில் ஏறி நின்று பாதைகள் அனைத்திலும் யாரேனும் வருகிறார்களா என்று பார்த்தார் உம்மு தர். அங்குச் சிறிது நேரம் காத்திருந்து பார்ப்பது, வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில் கிடக்கும் கணவரை கவனிப்பதற்காக வீட்டிற்கு ஓடி வருவது என்று அவருக்குக் கடினமான சோதனை.

தம் மனைவிக்கும் அடிமைக்கும் அபூதர் கட்டளைகள் இட்டார். “நான் இறந்ததும் என்னைக் கழுவுங்கள், துணியால் சுற்றுங்கள், சாலையின் ஓரத்திற்குத் தூக்கிச்சென்று கிடத்துங்கள். கடந்து செல்லும் பயணிகளிடம் ‘இவர் அபூதர்’ என்று தெரிவியுங்கள். அவர்கள் என்னை நல்லடக்கம் புரிவார்கள்.”

அபூதர்ரின் உயிர் பிரிந்தது. அவரைக் கழுவித் துணியால் சுற்றி மூடி, சாலையின் ஓரத்தில் கிடத்திவிட்டு யாரேனும் வருகிறார்களா என்று கன்னத்தில் கைவைத்து அமர்ந்து, கண்ணீருடன் காத்திருந்தார்கள். சற்று நேரம் கழித்துப் பயணிகளின் கூட்டம் ஒன்று எகிப்திய கழுகுகளைப்போல் தூரத்தில் ஒட்டகங்களில் வருவது தெரிந்தது.

அந்தக் குழுவினர் வெகுதொலைவில் யாரோ சைகை புரிந்து தங்களது பயணக் குழுவின் கவனத்தைக் கவர முயல்வதைக் கவனித்தார்கள். யாருக்கோ அவசர உதவி தேவை என்பது புரிந்து அங்கு விரைந்தது குழு. ஒட்டகச் சவுக்கு அவர்களது கழுத்தில் தொங்க விரைந்து நெருங்கியவர்கள் “அல்லாஹ்வின் பெண் அடிமையே! என்ன விஷயம்?” என்று விசாரிக்க,

“என் கணவர். இறந்துவிட்டார். நீங்கள் வருவீர்கள். அவரை நல்லடக்கம் செய்ய உதவி புரிவீர்கள் என்று கூறினார். தயவுசெய்து உதவுங்கள்” என்றார் அபூதர்ரின் மனைவி.

“யார் அவர்?”

“அபூதர்.”

“அல்லாஹ்வின் தூதரின் தோழரா?”

“ஆம்.”

அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரலியல்லாஹு அன்ஹு அந்தக் குழுவில் இருந்தார். விஷயத்தைக் கேட்டதும் கண்களிலிருந்து கண்ணீர் பெருகி ஓடியது. “அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்லக் கேட்டிருக்கிறேன். ‘அல்லாஹ் அபூதர்ரின்மீது கருணை புரிவானாக. அவர் தனியாளாய் நடப்பார், தனியாளாய் இறப்பார், தனியாளாய் எழுப்பப்படுவார்’ என்று அன்றே அவர்கள் முன்னறிவித்தார்கள்”.

வனாந்தரத்தில் தனிமையில் கிடந்த அபூதர் முஸ்லிம்களின் குழுவினால் சிறப்பாக நல்லடக்கம் செய்யப்பட்டார். எல்லாம் முடிந்து கிளம்பிச் செல்ல இருந்த குழுவை அபூதர்ரின் மகள் தடுத்தார். “என் தந்தை தங்களுக்கு ஸலாம் பகர்ந்தார். அவருக்கு இறுதிச் சடங்கு புரிந்த தங்களுக்கு ஓர் ஆட்டை அறுத்துச் சமைத்துத் தரச் சொல்லி எங்களுக்குக் கட்டளையிட்டுள்ளார். உணவு உண்டு செல்லுங்கள்.” அந்தக் குழுவுக்கு உணவு பரிமாறியது அபூதர்ரின் குடும்பம்.

பிறகு அபூதர்ரின் குடும்பத்தினரை அக்குழு தம்முடன் மக்காவிற்கு அழைத்து வந்தது. அப்பொழுது உதுமான் மக்காவில் இருந்தார். அவரிடம் செய்தியைத் தெரிவித்தனர். அபூதர்ரின் குடும்பத்தினரைத் தம்முடைய பாதுகாவலில் ஏற்றுக்கொண்டார் உதுமான். மற்றொரு அறிவிப்பில் மக்காவிலிருந்த உதுமானுக்குச் செய்தி தெரிவிக்கப்பட்டது. அந்தப் பயணிகள் திரும்பும்போது அவர் தாமும் உடன் திரும்பி அர்-ரப்தாவை அடைந்து, அபூதர்ரின் குடும்பத்தினரை அழைத்துக்கொண்டு மதீனாவுக்குச் சென்றார் என்று உள்ளது. அபூதர்ரின் குடும்பம் அனாதரவாகிவிடாமல் அவர்களது பராமரிப்பை கலீஃபா உதுமான் ரலியல்லாஹு அன்ஹு பொறுப்பேற்றுக் கொண்டார் என்பது மட்டும் பொதுவான குறிப்பு.

வத்தான் பள்ளத்தாக்கிலிருந்து தனியாய்க் கிளம்பி வந்து, இஸ்லாத்தை ஏற்று, வரலாறு ஒன்றைப் படைத்து, தனியாளாய் நடந்து, தனியாளாய் இறந்து போனார் அபூதர் அல்கிஃபாரி,

ரலியல்லாஹு அன்ஹு.

oOo

இன்னும் வருவர், இன்ஷா அல்லாஹ்!


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.