நோய்க் கிருமிகளும் வெறி நாய்களும்!

டந்த 15-04-2013 அன்று, ஐந்து வயதுப் பிஞ்சு ஒன்றைக் காமுகன் ஒருவன் கற்பழித்த டெல்லி சம்பவத்தினைக் கண்டித்துள்ள குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, துணை குடியரசு தலைவர் ஹமீத் அன்சாரி ஆகியோர், “குற்றவாளிக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்!” என்று கருத்துத் தெரிவித்துள்ளனர். பிரதமர் மன்மோகன்சிங்-கும் இச்செய்தியைக் கேட்டு கடுமையான கோபமடைந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

பாதிக்கப்பட்ட டெல்லி சிறுமிக்காக ஒரு நாட்டின் உயர்மட்டத் தலைவர்கள் அனைவரும் ஒருமித்துக் கருத்து தெரிவித்திருப்பது இதுவே முதல்முறை.

குஜராத்தில் கர்ப்பிணியின் வயிற்றைக் கீறி கருவிலிருந்த சிசுவை வெளியில் எடுத்து தீயில் வீசிப் பொசுக்கியதற்கும், டெல்லியில் ஐந்து வயதுப் பிஞ்சு ஒன்றினை வன்புணர்ந்ததற்கும் எந்த வித்தியாசமில்லை. குஜராத் சம்பவத்திற்கு அப்போதைய பிரதமர் வாஜ்பாய், “இனிமேல் எந்த முகத்துடன் பிறநாட்டுத் தலைவர்களைச் சந்திப்பேன்?” என்று விசும்பியதுபோல் இந்தச் சம்பவத்திற்கும் குடியரசு தலைவர், துணைத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் தங்கள் அதிருப்தியை தெரிவித்துள்ளனர். உலக அளவில் இந்தியர்களை வெட்கப்பட்டுத் தலை குனிய வைத்துக் கொண்டிருக்கும் தினசரி நிகழ்வுகள் இவை.

கேவலம்! அனைத்து அதிகாரங்களையும் கையில் வைததுக் கொண்டு “மக்கள் பிரதிநிதிகள்” என்று சொல்லிக் கொள்ளும் இவர்களாலேயே, இத்தகைய வெறியர்களின் மயிரைக்கூட பிடுங்க முடியவில்லையெனில் – சட்டமும் நீதிமன்றங்களும் மக்களின் பிரச்சினைக்கு உதவாத அரசியல் சாசனங்களும் வெறும் குப்பைகள் என்று எண்ணத் தோன்றுகிறது.

கடந்த நான்கு மாதங்களுக்கு முன், இதே தலைநகர் டெல்லியில்தான் துணை மருத்துவக் கல்லூரி மாணவியை, வெறி நாய்கள் ஆறு பேர் சேர்ந்து கொண்டு சீரழித்த நிகழ்வு நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டதாகச் சொன்ன அரசியல்வாதிகள், பெண்களைப் பாதுகாக்கும் வகையில் வன்புணர்வுகளுக்கு கடுமையான தண்டனைகளைப் பரிந்துரைக்கும்படி சட்டத்திருத்தம் செய்யப்படும் என்று உறுதியளித்து, ஓய்வுபெற்ற நீதிபதி வர்மா தலைமையில் குழு அமைத்து சமீபத்தில் உப்புச் சப்பில்லாத சட்டத் திருத்தமும் நிறைவேறியது.

இருந்தபோதிலும், பெண்களுக்கு எதிரான அத்துமீறல்கள் இந்தியா முழுவதும் குறைந்தபாடில்லை. ஊடகங்களில் “இன்றைய வன்புணர்வுச் செய்திகள்” என்று தனிப்பக்கங்கள் ஒதுக்குமளவுக்கு நிலைமை மோசமடைந்துள்ளது. மனிதத் தன்மை என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும்படி மிருகக் குணம் கொண்ட இத்தகைய வெறியர்களை சாதாரண மனிதக் கரங்களால் எழுதி உருவாக்கப்பட்ட சட்டங்களின் கீழ் தண்டிக்க முடியாது. அதிலும் ஆயிரம் ஓட்டைகளைக் கொண்டுள்ள நம் நாட்டு சட்டங்களால் ஒருபோதும் இத்தகைய கொடூரங்களை தடுத்து நிறுத்தவே முடியாது என்பதை எப்போது ஆட்சியாளர்கள் உணரப்போகிறார்கள்?

மிருகக் குணம் கொண்ட இத்தகைய வெறியர்களை சாதாரண மனிதக் கரங்களால் எழுதி உருவாக்கப்பட்ட சட்டங்களின் கீழ் தண்டிக்க முடியாது.

ஒருவேளை, டெல்லியில் மருத்துவக் கல்லூரி மாணவியை வன்புணர்ந்த குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகளை உடனடியாக நிறைவேற்றி இருந்தால், அத்தகைய குற்றச்செயல் புரிவோருக்கு துளியளவாவது பயம் ஏற்பட்டிருக்கும். நாடே கொந்தளித்தாலும் கூட பாதிக்கப்பட்டவர்களுக்கு துரிதமான நீதியோ அல்லது பாதிப்பை ஏற்படுத்தியவர்களுக்கு கடும் தண்டனையோ கிடைக்காது என்ற சூழலை ஆட்சியாளர்களே உருவாக்கி விட்டு, குற்றவாளிகள்மீது கோபப்படுவதும் ஆதங்கப்படுவதும் வெறும் கண்துடைப்பு என்றே கருத நேரிடுகிறது.

காவல்துறை, சட்டம், நீதிமன்றங்கள் இருந்தபோதும் சாமான்ய மக்களுக்குப் பாதுகாப்பில்லை எனும்போது கையாலாகாத இவைகளால் இனிமேலும் பயனில்லை என்ற அவநம்பிக்கை மக்களிடையே தினம் ஏற்பட்ட வண்ணம் இருக்கிறது.

ஒரு ஊரில் ஆட்கொல்லி நோயைப் பரப்பும் கிருமிகளை அடியோடு ஒழிக்கவும், தெருவில் வருவோர் போவோரைக் கடித்துக் குதறும் கொடிய மிருகங்களை அடித்துக் கொல்லவும் யாருடைய அனுமதியையும் கோரவேண்டியதில்லை. அதுபோல், சமூகத்தைச் சீரழிக்கும் இத்தகைய காமுகர்களைக் களையெடுக்க மக்களே சட்டத்தைக் கையிலெடுத்து தண்டிக்கும் நிலை ஏற்படுவதற்கு முன், குற்றவாளிகளுக்கு அச்சமூட்டி எச்சரிக்கும்படியான கடுமையான தண்டனை வழங்கும் அவசரச் சட்டத்தை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டியது காலத்தின் கட்டாயம்.

–  N. ஜமாலுத்தீன்