முதல் பட்டதாரி சலுகை – எட்டாக்கனியா?

சத்தியமார்க்கம்.காம்
Share this:

ண்ணா பல்கலைகழகத்தின் கீழ் செயல்படும் பொறியியல் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடைபெற்று வருவது நாம் யாவரும் அறிந்ததே. இந்த கலந்தாய்வு தொழில், விளையாட்டு, மாற்றுத் திறனாளிகள், பொது என பல பிரிவுகளில் பல கட்டங்களாக நடத்தப் படுகின்றது.

பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு எதிர்வரும் ஜுலை 13ஆம் தேதி தொடங்கி  அடுத்த மாதம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை நடைபெற இருக்கின்றது.

இந்த கலந்தாய்வில் கலந்து கொள்ளும் மாணவர்களுள் தகுதியானவர்களுக்கு கீழ்க்காணும் சலுகைகள் வழங்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டு இருக்கின்றது.

1)முதல் பட்டதாரி கல்விக்கட்டணச் சலுகை (First Graduate Concession)
2)பயிற்சிக் கட்டண விலக்கல் சலுகை. (Tuition Fees Waiver)

முதல் பட்டதாரி கல்விக்கட்டணச் சலுகை (First Graduate Concession):

அம்மா, அப்பா, மகன், மகள், அம்மா வழி தாத்தா பாட்டி, அப்பா வழி தாத்தா பாட்டி உள்ளிட்டோர் அடங்கிய குடும்பத்தில், பட்டதாரி ஆகும் முதல் நபருக்கு கல்விக் கட்டணத்தில் சலுகை அளிக்கப் பட வேண்டும் என்னும் தமிழக அரசின் உத்தரவின் பேரில், தகுதியுடைய மாணவ மாணவியருக்கு இந்த பொறியியல் கலந்தாய்வில் சலுகை வழங்கப்பட்டு வருகின்றது. இதற்கு மாணாக்கர்கள் செய்ய வேண்டியவை இவைதான் (கீழிருக்கும் வழிமுறைகளை படிக்க-படம்)

 

 

(*) கலந்தாய்வு விண்ணப்ப படிவத்தோடு இணைக்கப் பட்டிருக்கும் இந்த சலுகைக்கான படிவத்தைப் பூர்த்தி செய்து அந்த படிவத்தில் உதவி வட்டாட்சியரிடம் கைய்யொப்பம் பெற்று அதன் நகலை, விண்ணப்பத்தோடு இணைத்து அனுப்ப வேண்டும்.

(*) மேலும் அந்த படிவத்தின் பின்பக்கத்தில் இருக்கும் கூட்டு அறிவிப்பு படிவத்தில், மாணவரும் பெற்றோரும் கையொப்பமிட்டு அதன் நகலையும் இணைக்க வேண்டும்.

மிகவும் சுலபமாகப் படுகிறதல்லவா? இல்லை. இங்கு தான் ஆரம்பிக்கின்றது குழப்பம். அண்ணா பல்கலைக் கழகத்தின் விண்ணப்பத்தோடு இந்த முதல் பட்டதாரிக்கான படிவமும் வழங்கப் படுகின்றது.

“அந்த விண்ணப்ப படிவத்தில் தான் துணை வட்டாட்சியர் கையொப்பமிட வேண்டும்” என அண்ணா பல்கழைக் கழகமும், “அரசு வழங்கியிருக்கும் இந்த படிவத்தில் தான் கையொப்பமிட்டுத் தர முடியும், அண்ணா பல்கலைக்கழக படிவத்தில் கையொப்பமிட எங்களுக்கு அனுமதி இல்லை” என வட்டாட்சியர் அலுவலகமும் மாணவர்களை பந்தாடுகின்றனர்.

நடுவில் பாதிப்பிற்குள்ளாகியிருப்பது மாணவர்கள். அரசு சார்ந்த இரு அமைப்புகளுக்கு இடையே இருக்க வேண்டிய ஒத்தக் கருத்தும் உடன்பாடும் இல்லாதிருப்பது ஆச்சரியமும் அதிர்ச்சியும் அளிக்கின்றது. இந்த சலுகைக்கு தகுதி உடையவராக இருக்கும் மாணவர்கள்  உரிய சலுகையைப் பெற முடியாது அல்லலுக்கு ஆளாகின்றனர். இதை, உரிய அதிகாரிகளான பட்டுக்கோட்டை வட்டாட்சியருக்கு நேரிலும், அண்ணா பல்கழைக்கழக துணைவேந்தருக்கு மின்னஞ்சல் மூலமும் அவர்களின் பார்வைகளுக்கு எடுத்துச் செல்ல முயன்றும் இதுவரையிலும் பயனில்லை. பட்டுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் விரட்டாத குறை. சலுகைகளை அறிவித்து, அதனை அடையும் வாசல்களை அடைத்து விட்டதைப் போன்று மாணவர்கள் உணர்கின்றனர். இதில் குறிப்பிடப் பட வேண்டிய ஒன்று, சென்னையிலிருக்கும் வட்டாட்சியர் அலுவலகத்தில் அண்ணா பல்கலைக் கழக படிவத்தில் துணை வட்டாட்சியர் கையொப்பமிட்டு சான்று வழங்குகின்றார் என்பது.

பயிற்சிக் கட்டண விலக்கல் சலுகை (Tuition Fees Waiver):

பெற்றோரின் ஆண்டு வருமானம் 4.5 லட்சம் ரூபாய்க்கும் கீழாக இருக்கும் மாணவர்கள் இந்த சலுகையைப் பெற தகுதியானவர்கள் ஆவர். ஒரே மாணவர் மேலே குறிப்பிடப் பட்டிருக்கும் இரண்டு சலுகைகளுக்கும் தகுதியானவராக இருப்பின், இரண்டில் ஒன்றைக் கல்லூரி சேர்க்கையின் போது தேர்ந்தெடுத்துக் கொள்ள பணிக்கப்படுவார். இதற்கு செய்ய வேண்டியது இது தான்:

(*) கலந்தாய்வு விண்ணப்ப படிவத்தோடு இணைக்கப் பட்டிருக்கும் இந்த சலுகைக்கான படிவத்தை(வருமானச் சான்றை)ப் பூர்த்தி செய்து அந்த படிவத்தில் கண்டிப்பாக வட்டாட்சியரிடம் மட்டும் கையொப்பம் பெற்று அதன் நகலை, விண்ணப்பத்தோடு இணைத்து அனுப்ப வேண்டும். வட்டாட்சியரை விட கீழ்நிலையில் இருக்கும் எவரிடமும் கையொப்பம் பெற்றிருந்தால் அது செல்லாது.

இதுவும் சுலபமாக படுகின்றதா? இல்லை. இது முன்னர் குறிப்பிட்ட கையொப்பம் பெறும் முயற்சியை விட மிகவும் கடினமானது.

“வருமானச் சான்றில் வாட்டாட்சியர் அல்லது அவரை விட உயர்பதிவியில் இருப்பவர் மட்டும் தான் கையொப்பமிட வேண்டும்” என அண்ணா பல்கலைக் கழகமும் “வருமானச் சான்றில் அதிக பட்சமாக துணை வட்டாட்சியர் தான் கையொப்பமிட முடியும்” என தாலுக்கா அலுவலகத்திலும் சொல்ல, மாணவர்களின் நிலையைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

அலுவலர்களின் பிடிவாதப் போக்கால் அறிவிக்கப்பட்ட சலுகைகளை மாணவர்கள் அடைந்துகொள்ள முடியாமல் இருக்கின்றது. அரசின் நலத்திட்டங்கள் உரியவர்களைச் சென்று அடைவதில்லை என்பதற்கு உரிய வடிவத்தில் வழங்கப்படாத இந்த சான்றுகளே சான்று.

உரிய நேரத்தில் உரிய முறையில் நடவடிக்கை எடுத்து உரிய சலுகைகளை மாணவர்கள் அடைந்து கொள்ள வழியேதும் இருக்கின்றதா? ஆலோசனைகளை பகிர்ந்து கொள்ளுங்கள், இந்த கட்டுரையைத் தெரிந்தவர்களுக்கு பகிருங்கள்.

நன்றி: அதிரை என்.ஷஃபாத்
ஈமெயில் : emailsafath@gmail.com


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.