ஆன்லைன் ப்பெட்டிஷன்களுக்குப் பின்னால் …

சென்ஸிட்டிவ் விஷயங்களில் மனதைப் பறிகொடுத்தே பழகிவிட்ட இன்றைய தலைமுறையினர், நெகிழ்ச்சியோ – அழுகையோ – ஆத்திரமோ – உணர்ச்சி வசப்படும்படியான எச்செய்தி என்றாலும் உடனடியாக அதை அடுத்தவருக்கு ஃபார்வார்டு செய்துவிட்டு நிமிர்ந்தால்தான், உள்ளிழுத்த மூச்சை வெளியே விடும் மனோபாவத்திற்கு ஆளாகியுள்ளர்.

ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன்னால், மின்னஞ்சல்கள் மட்டுமே புழக்கத்தில் இருந்த காலம் மலையேறிப் போய், விரல் நுனியில் கண்முன் காணும் காட்சியைப் படம் பிடித்து, அக்காட்சி விலகும் முன்னரே உலகம் முழுவதும் பரப்பிவிட வசதியாக Facebook / Twitter போன்ற சமூக வலைத்தளங்கள், Whatsapp, Skype  போன்ற மென்பொருட்களும் துணை நிற்கின்றன. “அறிவியல் முன்னேற்றம் சார்.. இது நல்லது தானே? இதிலென்ன பிரச்சினை?” என்பவர்கள் அடுத்த பாராவுக்குப் போகலாம்.

“கேள்விப்பட்டதை எல்லாம் ஆராயாமல் அப்படியே பரப்புபவன் பொய்யன்” என்ற நபிமொழியை பலருக்கு உபதேசம் செய்துவிட்டு, சொந்த விஷயத்தில் அதைக் காற்றில் பறக்க விடும் நிலையை நம்மில் பலரிடம் பார்க்க முடிகிறது. இன்றைய இணைய வெளியில், நம்மிடம் வந்து சேரும் ஒரு செய்தியின் உண்மை நிலை என்ன? செய்தியின் பின்னணி என்ன? என்பதை ஆய்ந்தறிவது இன்றைய இணைய வெளியில் மிகவும் எளிய ஒன்று தான்.

உண்மைத் தன்மையையும், செய்தியின் பின்னணியையும் எளிதாகத் தெரிந்து கொள்ள இயலும் என்ற சூழலிலும் துரிதமாகப் பிறருக்குப் பரப்பி விடும் அலட்சிய மனநிலையை என்னவென்பது? “ஒரு சிறுவன் தொலைந்து விட்டான் கண்டுபிடிக்க உதவுங்கள்” என்று Facebook இல் வரும் Statusஐ உடனடியாக Share / Like செய்துவிட்டுக் கடமை ஆற்றும் ஒருவர், அந்தப் பதிவை முதன் முதலில் இட்டவர் காவல் நிலையத்தில் ஏன் புகார் செய்யவில்லை? என்று தனக்குள் கேட்டுக்கொள்வதில்லை.(இப்படி வரும் பதிவுகளில் 90% பொய்யானவை என்பதும், விளையாட்டிற்காகத் தன் நண்பனின் / தோழியின் புகைப்படத்தைப் பதித்து, “காணவில்லை” என்று தலைப்பிட்டுப் பரப்பி விடும் குறும்புக்காரர்கள் நம்மைச் சுற்றி உள்ளனர் என்பதும் நிரூபணமான விஷயங்கள்).

இந்த நிலையில், இணைய தளங்கள் நடத்தும் ஆன்லைன் பெட்டிஷன்கள் இப்போது சக்கைப் போடு போடுகின்றன. தமது தளத்திற்கு அதிக வாசகர்களை வரவழைப்பதற்கென்றே தற்போது அதிக அளவில் இணைய தளங்கள் இத்தகைய பெட்டிஷன்களை உருவாக்கிப் பரப்பி விடுகின்றன. ஆ.பெ. தளங்களுள் அதிக நம்பகத்தன்மை கொண்டதாக அறியப்படும் Change.org பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.

ஊழல் செய்யும் ஓர் அரசியல்வாதிக்கு அழுத்தம் கொடுக்கணுமா? கார்ப்பரேட் நிறுவனங்களில் உள்ள தகிடுதித்தங்கள், மனித உரிமை மீறல் பற்றிக் குரல் எழுப்பணுமா? டிராஃபிக் ராமசாமி மாதிரி உச்சி வெயிலில் நடு ரோட்டில் தனியாளாக அல்லாடாமல் பொதுநல வழக்கு தொடுக்க ஏகப்பட்ட ஆட்களைச் சேர்க்க வேண்டுமா? மனித மந்தைகளின் உணர்வுகளைத் தூண்டி விட்டுப் பிரச்சாரங்களைச் செய்யணுமா? ‘அந்நியனுக்குப் போடு ஒரு பெட்டிஷன்’ என்ற அளவிற்குப் பிரபலமாகியிருக்கிறது ஒரு தளம். அது Change.org

“மாற்றம் ஒன்றே மாறாதது!” என்ற தாரக மந்திரத்தை மிகச் சரியான கோணத்தில் புரிந்து கொண்டு துவங்கிய தான் மாற்றம்.org

ஒரு விபத்து போன்று தான் அது நடந்தது. நியூயார்க்கிலுள்ள பள்ளிக்கூடத்தில் மாணவராக படித்துக் கொண்டிருநதார் பென் ராட்ரே. அச்சமயத்தில் ஓரினச் சேர்க்கையாளரான ராட்ரேயின் சகோதரர், தம்மைப் போன்றவர்களின் ‘மனித உரிமை’ பற்றித் துணிச்சலாகப் பேசவோ, ஆதரவாளர்களைத் திரட்டவோ ஓர் இயங்குதளம் இல்லையே என்று வெதும்பியிருக்கிறார்.  சகோதரர் மீது அதிக பாசம் கொண்ட ராட்ரேயின் மனத்தில் இது சலனத்தை ஏற்படுத்த, 2007இல் விளையாட்டாய் துவங்கியது தான் சேஞ்ச் தளம்.

FREE! என்றால் இலவசம் என்று அர்த்தமில்லை!

சரி. விளையாட்டாய் உருவாக்கிவிட்ட தளத்தை லாபம் தரும் வியாபார நிறுவனமாக்கப் போராடிய ராட்ரே ஓரிரு ஆண்டுகள் செய்த முயற்சிகளில் தோற்றுப் போனார். ஆழமாக மூச்சை உள்ளிழுத்துக் கொண்டு நீண்டு நிதானித்து யோசித்து இறுதியாக அவர் ஒரு முடிவுக்கு வந்தார். அந்த யுக்தி பலித்தது. பெரும் லாபத்தைப் பெற்றுத் தந்தது.  அது “உங்கள் புகாரை இலவசமாக உருவாக்கி உலகெங்கும் பரப்புங்கள்” என்ற கவர்ச்சி வாசகம் இது அனைத்துத் தரப்பினரையும் சுண்டி இழுத்தது. இது ஒரு லாப நோக்கற்ற அமைப்பு என்ற பொய்த் தோற்றத்தையும் ஏற்படுத்தித் தந்தது.

ஒத்த கருத்துடையோரை ஒரு குடையின் கீழ் இணைக்க, அதுநாள் வரை அப்படியொரு இயங்கு தளம் ஏதுமில்லை. எனவே, அதற்கு ஆதரவு பெருக ஆரம்பித்தது. ஏகப்பட்ட உறுப்பினர்கள் இணைந்து தம் மனத்தில் உள்ள புகார்களைக் கொட்ட ஆரம்பிக்க, முதலாளியான ராட்ரேயின் காட்டில் கொள்ளை மழை! ஒழுங்காகப் பள்ளிக்கூடம் போகாத பென் ராட்ரே இன்று உலகின் மிகப் பெரிய இணைய தளத்தின் 33 வயது முதலாளி.

லாப நோக்கற்ற சமூக தளம் என்ற பெயரில், குறிப்பிட்ட சில பிரச்சாரங்களுக்கு மட்டும் துவங்கப்பட்ட சேஞ்ச் இணைய தளத்திற்கு நிதியளிக்க, கடந்த 2009இல் ஸ்பான்ஸர் நிறுவனங்களை இணைத்தார்.  கூட்டிக் கழித்துப் பார்த்த கணக்கு ‘சரியாக’ வரவே, 2010இன் இறுதியில் ஆன்லைன் பெட்டிஷன் வசதியை பொதுமக்கள் பயனுக்குத் திறந்தார் ராட்ரே.  எவர் வேண்டுமானாலும் ஆன்லைன் பெட்டிஷனை இலவசமாக உருவாக்கி உலகெங்கும் பரப்பி விடலாம் என்ற நிலையை அடைந்த போது Change.org, மெகா ஹிட் தளமானது.

இன்று, ஐம்பது மில்லியன் பயனர்களைக் கையில் வைத்திருக்கும் Change.org, தினந்தோறும் ஆயிரக்கணக்கில் புதிய பெட்டிஷன்களை உருவாக்குகின்றது. பேசுபொருளின் தன்மையை வைத்து, ஒரு பெட்டிஷன் ஒரு கோடி பேருக்கு நிமிடங்களில் பரவுகிறது. அனுப்பிய நண்பர், அனுப்பி விட்டாரே நண்பர் என்பதற்காக நண்பருக்கு நண்பர், அவருடைய நண்பர் என்று சங்கதி மின்னலெனப் பரவுகிறது. மின் அஞ்சல்கள் போதாதென்று, சமூக வலைத் தளங்களும் பெட்டிஷன்களைப் பரப்புவதில் கை கோத்து உதவுகின்றன.

சேஞ்ச் தளம் எவ்வகையில் லாபம் ஈட்டுகிறது?

சேஞ்ச் தளம் இயங்கும் விதம் பற்றித் தெரிந்து கொண்டால் இதற்கு விடை கிடைக்கும். இத்தளத்தில் உறுப்பினராகப் பதிவு செய்யும் பயனர்களின் மின்னஞ்சல்களை உள் வாங்கிப் பத்திரப்படுத்திக் கொள்வதோடு, தனிநபர் விருப்பங்களைத் தெரிந்து கொண்டு தனது டேட்டாபேஸில் அவற்றைச் சேகரித்து வைத்துக் கொள்கிறது. விருப்பங்களை அறிந்து தகுந்த நேரத்தில், தகுந்த பெட்டிஷன்களை தானியங்கி முறையில் பலருக்கும் அனுப்பி வைக்கிறது.

பலருக்கு Change.org தளம் மிகப் பெரும் லாப நோக்கில் நடத்தப்படும் வணிக நிறுவனம் என்றோ இது ஒரு B சான்றிதழ் பெற்ற அமெரிக்காவின் மிகப் பெரிய கார்ப்பொரேஷன் என்றோ தெரிந்திருக்கவில்லை.

அத்தோடு நில்லாமல், ஸ்பான்ஸரிங் பெட்டிஷன் என்ற பெயரில் ஒரு பெரும் தொகையை நிறுவனங்களிடமிருந்து பெற்றுக் கொள்கிறது. அதன்படி ஒப்பந்தமாகும் நிறுவனங்களுக்குத் தகவல்களை அனுப்பித் தருகிறது.  உதாரணமாக, கல்வி தொடர்புடைய பெட்டிஷனுக்கு ஆதரவாக கையெழுத்திடும் பயனர் Submit எனும் பட்டனைக் க்ளிக் செய்யும்போது, தொடர்புடைய ஐந்து ஸ்பான்ஸர் நிறுவனங்களுக்கு ஆதரவு அளிக்குமாறு ஒரு pop-up தோன்றும். அது மட்டுமின்றி, “இது போன்ற பிரச்சாரங்கள் பற்றிய தகவல்களை எனக்கு அனுப்புக” என்று டிஃபால்ட்டாக அடித்து வைக்கப்பட்ட டிக் மார்க்கை கவனிக்காவிட்டால்,  பயனர்களின் இமெயில் சிந்தாமல் சிதறாமல் பல்வேறு நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டு விடும்.

மில்லியன் டாலர்களில் கொழிக்கும் சேஞ்ச் தளத்திற்கு அம்னஸ்ட்டி இண்டர்நேஷனல், க்ரெடோ வயர்லெஸ், ஸியாரா க்ளப் போன்ற பல கார்ப்பொரேட்கள் க்ளையண்டுகள்.

பெட்டிஷன்களை உருவாக்கிய பயனர்கள் பலரை ஃபோர்ப்ஸ் இணைய தளம் பேட்டி கண்டது. அவர்களுள் பலருக்கு சேஞ்ச் தளம் மிகப் பெரும் லாப நோக்கில் நடத்தப்படும் வணிக நிறுவனம் என்றோ இது ஒரு B சான்றிதழ் பெற்ற அமெரிக்காவின் மிகப் பெரிய கார்ப்பொரேஷன் என்றோ தெரிந்திருக்கவில்லை.

Change.org தள முகப்பில் எந்தப் பெட்டிஷனைக் காண்பிக்க வேண்டும்; இமெயில்கள் மூலம் கோடிக்கணக்கானோருக்கு அனுப்பி எந்தப் பெட்டிஷனை மெகா ஹிட் ஆக்க வேண்டும் என்பனவற்றைக் கவனித்துக்கொள்ள மட்டும் 170 ஊழியர்கள் ‘கடமை’ ஆற்றுகின்றனர்.

அப்படியெனில் இதில் அம்புட்டும் உடான்ஸா? என்றால் … இல்லை! “சவூதியில் பெண்கள் கார் ஓட்டும் உரிமைக்கு குரல் கொடுக்கும் ஹிலாரி கிளிண்டன்  முதல் மலாலாவுக்கு நோபல் பரிசு வரை நாங்க தான் வாங்கிக் கொடுத்தோம்” என ‘வெற்றி’ பெற்ற விஷயங்களையும் பட்டியலிட்டு மார் தட்டுகிறது சேஞ்ச் தளம். உண்மையில் சாதித்து தான் பெறப்பட்டதா இந்த வெற்றிகள்? தொடர்ந்து வாசியுங்கள்.

கூட்டுக் களவாணித்தனம்

இதனிடையே இல்லாததை இருப்பதாகவும், இருப்பதை இல்லாததாகவும் ஆக்க உதவும் IT நிறுவனங்களின் கூட்டுக் களவாணித்துவம் பற்றியும் கொஞ்சம் தெரிந்துகொள்வோம். எலக்ட்ரானிக் மீடியாக்களில் மூழ்கிக் காலத்தைக் கழிக்கும் இன்றைய இளைய தலைமுறைக்கு “மெஜாரிட்டி சொல்வது தான் உண்மை” என்ற தத்துவம் பதிய வைக்கப்படுகிறது. சமூக வலைத் தளங்களில் ஒரு கோடி லைக்ஸ்களை ஒரே நாளில் பெற்றுத் தர IT நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்யப்படுவதை நம்மில் பெரும்பாலானோர் அறிவதில்லை. மோடியை முன்னிருத்தும் பிஜேபிக்கும் அமெரிக்க லாபியிங் நிறுவனமாக ஆப்கோவுடனான ஒப்பந்தத்தில் இவை அனைத்தும் அடக்கம்.

{youtube}ZIwhwvvNflg{/youtube}

“இந்தியாவின் தலைசிறந்த வழிகாட்டி மோடியா?” என்ற பெட்டிஷனுக்கு கோடிப் பேர் ஆதரவு அளித்தால் அதை நம்பும் இளந்தலைமுறை, இதற்குப் பின்னால் உள்ள மிகப்பெரிய பிராண்டிங் அரசியலைப் புரிந்து கொள்ளத் தவறி விடுகிறனர். ‘மோடிக்கு எதிரான பெட்டிஷன்கள், ஆதரவு தர ஆட்கள் இன்றி தோல்வி அடைகின்றன’ என்று நம்ப வைப்பதும் அரசியல் தான். தேர்தல் பிரச்சாரத்திற்காகப் பல மாநிலங்களுக்கு செல்லாமலேயே 3டி மஸ்தான் வித்தைகள் காட்ட இது போன்ற தளங்கள் பெரிதும் உதவுகின்றன.  பிராண்ட் பப்ளிஸிட்டிக்கு எல்லாம் யார் நிதியுதவி செய்வது? பணபலம் எங்கிருந்து வருகிறது என்பதெல்லாம் நெடியதும் இக்கட்டுரையைத் திசை திருப்பிவிடுகின்ற தனித் தலைப்பும் என்பதால் அதைத் தவிர்ப்போம்.

நுண்ணரசியல்

மாற்றம் எந்தத் துறையில் ஏற்படவுள்ளது என்பதை முன்கூட்டியே அறிந்து அதில் பெட்டிஷன்களை சாமார்த்தியமாக இறக்கிவிட்டு வெற்றிக்கொடி நாட்டுவதும் சேஞ்ச் தளத்தின் நுண்ணரசியலுள் ஒன்று. “மக்களின் உணர்வுகளைத் தூண்டி, இமெயில் மார்க்கெட்டிங் செய்து லாபம் பார்ப்பதையே குறிக்கோளாகக் கொண்டிருக்கிறதே ஒழிய பிரச்னைகளின் ஆணி வேர்களில் சேஞ்ச் எப்போதும் கை வைப்பதில்லை” என்று விஷயமறிந்தவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். “அதிக அளவிலான ஆதரவுக் கையெழுத்துக்களைப் பெற்ற பிறகு, அதை அப்படியே தூக்கி விடுவதற்காக, குற்றம் சுமத்தப்படும் நபரிடம் நேரிடையாக பேரம் பேசவும், அரசுக்கு நெருக்கடி தரும்படியான பெட்டிஷன்களை சேஞ்ச் தளம் சப்தமில்லாமல் தூக்கி விடவும் செய்கிறது” என்பதும் இன்னொரு குற்றச்சாட்டு. [ Abby Goldberg என்ற பெண் Governor Quinn: Don’t Let Big Plastic Bully Me! என்ற பெயரில் மாநில அரசுக்கு எதிராகத் துவக்கிய பெட்டிஷன் ஒன்று பல இலட்சம் ஆதரவு பெற்ற பிறகு ‘ஏதோ’ காரணத்தால் பெட்டிஷன் துவக்கிய பெண்ணே திடீர் என்று முன்வந்து வாபஸ் வாங்கிக் கொண்டது போன்ற சம்பவங்கள் ஏராளம். ]

அமெரிக்காவின் கஸ்டர் பகுதியைச் சேர்ந்த ஜான் லார் என்பவர் ஒரு தீயணைப்பு வீரர்.  ஒபாமாவுக்கு தன் மனதில் உள்ள கோரிக்கையை எழுதி, Change.org தளத்தில் ஒரு பெட்டிஷனை உருவாக்கினார். அதாவது, அமெரிக்க அரசு அளித்துக் கொண்டிருக்கும் மருத்துவக் காப்பீடு திட்டத்தில் தற்காலிக பணியில் உள்ள தீயணைப்புப் படை வீரர்களையும் இணைக்க வேண்டும் என்பது அவருடைய கோரிக்கை. அவர் பெட்டிஷன் எழுதி சரியாக ஆறு வாரங்களில் Change.org தளத்தில் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில், ஜான் லார் உருவாக்கிய பெட்டிஷனை ப்ரொமோட் செய்வதாகவும் அவர் சற்று ஒதுங்கிக் கொள்ளுமாறும் கோரப்பட்டது. போன் வந்த நேரத்தில் அவருக்கு இருந்த ஆதரவு கையெழுத்துக்கள் (signatures) வெறும் ஆயிரம் மட்டுமே! ஆனால், அவர் ஒப்புக் கொண்டு விலகிய அடுத்த ஓரிரு நாட்களில் ஆதரவளிப்போர் எண்ணிக்கை 126,000 ஆக உயர்ந்தது.  அதற்கு அடுத்து வந்த ஜுலை 2012 மாதத்தில், ஒபாமா அரசு, இதற்குரிய ஒப்பந்தம் கையெழுத்தானதாக அறிவிப்பு வெளியானது.  மாற்றம் எங்கே நடக்கவிருக்கிறது என அறிந்து மாறுதலைக் கோருவதும், பதில் எங்கே உள்ளது என்பதை முதலில் தெரிந்து பின் கேள்வியை தயாரிப்பது சேஞ்ச் தளத்தின் நுண்ணரசியல்.

பலருடைய குற்றச்சாட்டுகளையும் அறிந்து வைத்துள்ள சேஞ்ச் தள முதலாளி அவற்றையெல்லாம் மறுப்பதில்லை. இவர் ஹாயாகச் சொல்வதெல்லாம் “பெரிசா ஆச்சரியப்படும்படி எல்லாம் நான் ஒன்னும் செய்துவிடவில்லை. மக்கள் மனப்போக்கைக் கண்டுபிடித்து அதற்கேற்றவாறு முதலீடு செய்துள்ளேன்.”

நாம் செய்ய வேண்டியது என்ன?

சேஞ்ச் இணைய தளம் ஒரு எடுத்துக்காட்டிற்கு மட்டுமே இங்கே கையாளப் பட்டிருக்கிறது. புற்றீசல் போன்று கிளம்பியுள்ள இது போன்ற தளங்கள் மூலம் பரப்பி விடப்படும் பல்வேறு பெட்டிஷன்களின் பின்னணியை ஓரளவிற்கு அறிந்து கொண்ட நிலையில் இவ்வாறு நம் கண்களுக்கு முன் வந்து சேரும் எந்த ஒரு பெட்டிஷனையும் “பெட்டிஷன் பெட்டியை மூடுவதற்கு இன்னும் 28 வினாடிகளே உள்ளன. விரைந்து செயல்படுங்கள்; உங்களுக்குத் தெரிந்தவர்கள் அனைவருக்கும் அனுப்புங்கள்” என்று உணர்ச்சி வசப்பட்டு நுனிப்புல் மேய்வதை இனிமேல் நிறுத்தி, தகவலின் உண்மை நிலையை ஆராய்ந்து உறுதியான பின் பிறருக்கு அனுப்பப் பழக வேண்டும்; பக்குவப்பட வேண்டும்.

– அபூ ஸாலிஹா