தோழர்கள் – 53 ஸைத் பின் ஹாரிதா زيد بن حارثة (இறுதிப் பகுதி)

Share this:

ங்களின் மகனா? யாரைக் குறிப்பிடுகின்றீர்கள்?” என்று கேட்டார்கள் முஹம்மது அவர்கள்.

“தங்களுக்குச் சேவகம் புரிகிறாரே ஸைது இப்னு ஹாரிதா, அவர்தாம்.”

“அவரது விடுதலையைத் தாங்கள் விலைகொடுத்து வாங்குவதைவிடச் சிறந்த ஒன்றைச் சொல்லவா?” அன்புடன் கேட்டார்கள் முஹம்மது அவர்கள்.

“என்ன அது?” ஆச்சரியத்துடன் கேட்டார்கள் ஹாரிதாவும் சகோதரரும்.

“நான் ஸைதை அழைக்கிறேன். அவருக்குத் தங்களுடன் செல்ல விருப்பமா, அல்லது என்னிடமே தங்க விருப்பமா என்று கேட்போம். தேர்ந்தெடுக்கும் உரிமை அவருடையது. அவர் தங்களுடன் செல்வது என்று முடிவெடுத்தால் தாங்கள் அவரை அழைத்துச் செல்லுங்கள்; எனக்கு தாங்கள் கிரயம் எதுவுமே அளிக்கத் தேவையில்லை. ஆனால் அவர் என்னிடம் தங்கிவிட விரும்பினால் நான் அவரை என்னை விட்டுத் தள்ளமாட்டேன்.”

வந்தவர்களுக்குத் தாங்க இயலாத ஆச்சரியம். அடிமை தம் சுயவிருப்பமாய்த் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு அளிக்கப்படுவதெல்லாம் நடைமுறையில் இல்லாத அதிசயம். ‘நாம் செவிமடுத்தது கனவா நனவா’ என்பதைப்போன்ற வியப்பு.

“ஆஹா! எவரும் நினைத்தே பார்க்கமுடியாத தயாள குணம் அமைந்தவராய்த் தாங்கள் இருக்கிறீர்கள்” என்று அந்த ஆச்சரியம் அவர்களது பதிலில் வெளிப்பட்டது.

ஆனால் அடுத்து நிகழ்ந்தவைதாம் பேராச்சரியம். ஸைதை அழைத்த நபியவர்கள், “இவர்கள் யார் என்று தெரியுமா?” என்று விசாரித்தார்கள்.

“இவர் என் தந்தை ஹாரிதா பின் ஷுராஹில். அவர் என் தந்தையின் உடன்பிறந்தவர் கஅப்.”

“உன்னை அழைத்துச் செல்ல வந்திருக்கிறார்கள். நீ விரும்பினால் அவர்களுடன் செல்லலாம். அல்லது என்னுடனேயே தங்கி விடலாம். தேர்ந்தெடுப்பது உன் விருப்பம்.”

ஸைது சற்றும் யோசிக்கவில்லை. “நான் தங்களுடன் இருந்துவிடுவதையே விரும்புகிறேன்”

எந்த அடிமையாவது தம் பெற்றோருக்குப் பகரமாய் எசமானரைத் தேர்ந்தெடுக்க முடியுமா? அந்த விசித்திரம் நடந்தது. நபித்துவத்துக்கு முன்னரே அம்மாமனிதரின் குணாதிசயம் எவ்வாறு அமைந்திருந்தது என்பதை அழுத்தந்திருத்தமாய் உணர்த்திய வரலாற்றுப் பதிவு அது.

“உனக்கு என்ன கேடு ஸைது!” என்று சப்தமிட்டார் ஹாரிதா. “உன் பெற்றோருக்குப் பகரமாய் அடிமை வாழ்வையா தேர்ந்தெடுக்கிறாய்?”

“இந்த மனிதரை அறிந்தபின், வேறு தேர்வுக்கு இடமில்லை. என்னுடைய வாழ்நாளை இவருடன் கழிக்கவே விரும்புகிறேன்” என்று உறுதியாய்ச் சொல்லிவிட்டார் ஸைது.

தம்முடன் ஸைதுக்கு எந்தளவு பிடிமானம் ஏற்பட்டுள்ளது என்பதைக்கண்ட நபியவர்கள் உடனே ஒரு காரியம் செய்தார்கள். ஸைதின் கையைப்பிடித்து கஅபாவிற்கு அழைத்துச் சென்றார்கள். அங்குக் குழுமியிருந்த குரைஷிகள் மத்தியில் சென்று,

“குரைஷி மக்களே! இவர் என்னுடைய வளர்ப்பு மகன்; வாரிசுதாரர். இதற்கு நீங்களே சாட்சி” என்று உரக்க அறிவித்துவிட்டார்கள். அக்காலத்தில் அதுவே அவர்களது தத்தெடுப்பு முறை.

நிகழ்ந்தவற்றைப் பார்த்து அசந்துபோனார்கள் ஹாரிதாவும் கஅபும். நபியவர்களுக்கு ஸைதின் மீதிருந்த அபரிமிதமான அன்பையும் பாசத்தையும் கண்டு ஸைது நபியவர்களுடன் தங்கிவிடுவது அந்தப் பாலகருக்குச் சிறப்பானதுதான் என்ற நம்பிக்கை அவர்களுக்கு ஏற்பட்டு விட்டது. மிகச் சிறந்த ஒருவரின் அரவணைப்பில் ஸைதை ஒப்படைத்த திருப்தியுடன் தங்கள் ஊருக்குத் திரும்பினார்கள் அவர்கள்.

ஸைது நபியவர்களின் வளர்ப்பு மகன் என்று அறிவிக்கப்பட்டுவிட்டதால், அக்கால நடைமுறைப்படி ஸைது இப்னு ஹாரிதா, ஸைது இப்னு முஹம்மது ஆகிப்போனார். பிற்காலத்தில் வெளியான இறை அறிவிப்பு, தத்தெடுப்பு முறையைத் தடைசெய்யும்வரை அனைவரும் அவரை அப்படித்தான் அழைத்து வந்தார்கள்.

“உங்களால் வளர்க்கப்படும் பிள்ளைகளை உங்கள் பிள்ளைகளாக அல்லாஹ் ஆக்கவில்லை. இது உங்கள் வாய்களால் கூறும் (வெற்று) வார்த்தை…. அவர்களை அவர்களின் தந்தைய(யரின் பெய)ருடனே சேர்த்து அழையுங்கள்! அதுவே அல்லாஹ்விடம் நீதியானது. அவர்களின் தந்தையரை நீங்கள் அறியாவிட்டால் அவர்கள் உங்களின் கொள்கைச் சகோதரர்களும் உங்கள் உற்றோருமாவர் …” எனும் அவ்வறிவிப்பு சூரா அல் அஹ்ஸாபின் நான்காம் ஐந்தாம் வசனங்கள். மகனைப்போலத்தானேயன்றி, மகனல்லன் எனத் திட்டவட்டமான இறை அறிவிப்பு வந்தபின் அவர் மீண்டும் ஸைது இப்னு ஹாரிதாவாக அவரது இயற்பெயருக்கு மாறியது பல ஆண்டுகளுக்குப் பின்னர்தான்.

தம் பெற்றோரையும் மீறி முஹம்மது நபியவர்களைத் தேர்ந்தெடுத்த ஸைது, அச்சமயம் தமது தேர்வின் மாபெரும் சிறப்பை அறிந்திருக்கவில்லை. தம் மக்களை மீறித் தாம் தேர்ந்தெடுத்த தம் உரிமையாளர் உலக மக்களுக்கே அல்லாஹ்வின் தூதராக அறிவிக்கப்படப்போகிறவர் என்றெல்லாம் அவருக்கு எந்த யோசனையும் இல்லை. தாம் வாழ்ந்து வரும் இல்லத்திலிருந்து உலகளாவிய இறை மார்க்கமொன்று மீளெழுச்சியுற்று,  புவியின் அனைத்துத் திசைகளிலும் பரவி விரியப் போகிறது; தாம் அந்த அரசாங்கத்தின் முதல் முக்கிய சேவகர்களுள் ஒருவராகப் போகிறோம் என்றெல்லாம் அவருக்குத் தெரியாது. இறைவன் நிர்ணயித்திருந்த விதி தக்க தருணத்திற்காகக் காத்திருந்தது. சில ஆண்டுகளில் அது வந்தடைந்தது.

தமக்கு நபித்துவம் அருளப்பட்டுள்ளதாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அறிவித்ததும் அதை ஏற்றுக்கொண்ட முதல் ஆண் ஸைது இப்னு ஹாரிதா. அத்தனைக் காலம் அவர்களின் அரவணைப்பில் வளர்ந்து வந்த அவருக்கு நபியவர்களின் அறிவிப்பில் எவ்வித சந்தேகமோ, தயக்கமோ இல்லை. ஒரு சிறிதும் இல்லை. அத்தனை அருகிலிருந்து நபியவர்களைக் கவனித்து வந்தவருக்கு அது எப்படி ஏற்படும்? இஸ்லாத்தினுள் நுழைந்தார் ஸைது இப்னு ஹாரிதா, ரலியல்லாஹு அன்ஹு.

தட்டையான தடித்த மூக்கு, பொது நிறம், சராசரிக்கும் குறைவான உயரம் என்ற உருவ அமைப்பு கொண்ட ஸைது வரலாற்றில் அடைந்த உயரம், உச்சபட்சம். மக்காவில் இஸ்லாம் மீளெழுச்சி அடைந்த புதிதில் தோழர் அர்கமின் இல்லத்தில் நபியவர்களின் தலைமையில் முஸ்லிம்கள் கூடுவதும், குர்ஆன் கற்றுக்கொள்வதும், தொழுவதும் இரகசியமாக நடைபெற்றுக் கொண்டிருந்தன. இதை மோப்பமிட்ட குரைஷிகள், ஒருநாள் அர்கமின் இல்லத்திற்குச் செல்லும் பாதையில் தடை ஏற்படுத்திவிட்டார்கள். அப்பொழுது நபியவர்களைச் சந்தித்து அன்னை கதீஜா சொல்லியனுப்பிய முக்கியச் செய்தியொன்றைத் தெரிவிக்கச் சென்றார் உம்மு அய்மன் ரலியல்லாஹு அன்ஹா. முஸ்லிம்களின்மீது சினமும் சீற்றமும் கொண்டிருந்த குரைஷிகளின் கண்களில் படாமல் தப்பி, உயிரைப் பணயம் வைத்து அவ்வீட்டை அடைந்து தகவலைச் சமர்ப்பித்தார் உம்மு அய்மன். அவரை நோக்கிப் புன்னகைத்த நபியவர்கள் நற்செய்தி ஒன்று சொன்னார்கள். “நீங்கள் இறையருளைப் பெற்றவர்! சொர்க்கத்தில் நிச்சயமாய் உங்களுக்கு இடமுண்டு உம்மு அய்மன்”

நபியவர்கள் அறிவித்தால் அது தீர்க்கமானது என்பது முஸ்லிம்களின் திடநம்பிக்கை. மகிழ்வுடன் உம்மு அய்மன் கிளம்பிச் சென்றதும் அங்கு அமர்ந்திருந்த தம் தோழர்களிடம், “சொர்க்கவாசிப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள நீங்கள் விரும்பினால் உங்களில் ஒருவர் உம்மு அய்மனை மணம் புரிந்து கொள்ளட்டும்” என்று தெரிவித்தார்கள்.

அப்பொழுது உம்மு அய்மனின் வயது ஐம்பதுக்கும் மேல். பொலிவான புற அழகும் அவரிடம் அமைந்திருக்கவில்லை. நபியவர்களின் முன்னறிவிப்பையும் உம்மு அய்மனின் அகத்தையும் கருத்தில்கொண்டு முன்வந்தார் ஸைது இப்னு ஹாரிதா, ரலியல்லாஹு அன்ஹு.

“அல்லாஹ்வின் தூதரே! நான் உம்மு அய்மனை மணந்துகொள்கிறேன். அல்லாஹ்வின் மீது ஆணையாகக் கூறுகிறேன், வனப்பும் கவர்ச்சியும் அமையப்பெற்ற பெண்களைவிடச் சிறந்தவர் இவர்.” இந்தத் தம்பதியருக்குப் பிறந்தவர் பிற்காலத்தில் இஸ்லாமிய வரலாற்றில் முக்கியப் பங்கு வகித்த உஸாமா இப்னு ஸைது, ரலியல்லாஹு அன்ஹு.

நபியவர்களின் இரகசியங்களைப் பாதுகாப்பவராக அமைந்துபோனார் ஸைது இப்னு ஹாரிதா. போர்களில் முக்கியத் தலைமைப் பொறுப்பும் அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. ஒருமுறை ஸலமா இப்னுல் அக்வ ரலியல்லாஹு அன்ஹு, “நான் அல்லாஹ்வின் தூதருடன் இணைந்து போரிட்டிருக்கிறேன். அதைப்போல் ஸைது இப்னு ஹாரிதாவுடனும். எங்களுக்கு அவர் தலைவராக நியமிக்கப்படுவது வழக்கம்” என்று தெரிவித்திருக்கிறார். “ஸைதை ஒரு படையில் அனுப்பிவைத்தால் அதில் அவருக்குத் தலைமைப் பொறுப்பு வழங்காமல் நபியவர்கள் அவரை அனுப்பி வைத்ததில்லை,” என்று அறிவித்துள்ளார்கள் அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா. பத்ரு, உஹது, அகழி, ஃகைபர் யுத்தங்கள், ஹுதைபிய்யா உடன்படிக்கை ஆகியவற்றில் ஸைது பெரும் பங்காற்றியிருக்கிறார். அது மட்டுமல்லாது நபியவர்கள் வெளியூர்களுக்குப் பயணம் செல்லும்போது மதீனாவில் தம்முடைய பிரதிநிதியாக ஸைதை நியமித்துச் சென்ற நிகழ்வுகளும் உண்டு.

இஸ்லாமிய வாழ்க்கை முறையில் ஆண்டான், அடிமை; உயர்ந்தோன், தாழ்ந்தோன்; நிற வேற்றுமை போன்றவை தகுதியை, தலைமையை நிர்ணயிப்பதில்லை. அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் கட்டுப்பட்டு செயல்படும் அர்ப்பணிப்பு, இறை பக்தி இதுதான் அளவுகோல். அதற்குச் சிறந்த உதாரணமயாக அமைந்த தோழர்கள்  ஸைது இப்னு ஹாரிதா, பிலால், ஸுஹைப், அம்மார், கப்பாப் போன்றோர் – ரலியல்லாஹு அன்ஹும்.

தம் குடும்ப உறுப்பினருள் ஒருவராகவே நபியவர்கள் ஸைதைக் கருதினார்கள். அவர்கள் ஸைது இப்னு ஹாரிதாவிடம், “ஓ ஸைது! நீர் எனக்கு முக்கியமான தலைவர். நீர் என்னுள் ஒருவர். அனைத்து மக்களுள் நீர் எனக்கு மிகவும் நேசத்திற்குரியவர்” என்று தெரிவித்ததாக ஸைதின் பேரர் முஹம்மது இப்னு உஸாமா தம் தந்தையிடம் கேட்டதை அறிவித்திருக்கிறார்.

நபியவர்களுக்கு அவர்மீது அளவற்ற அன்பு. ஏதேனும் அலுவல் நிமித்தமாக ஸைதை வெளியூருக்கு அனுப்பியிருந்தால், நபியவர்களை ஸைதின் எண்ணம் ஆக்கிரமித்திருக்கும்; அவர் நலமே திரும்பிவந்ததும் உள்ளார்ந்த மகிழ்ச்சி வெளிப்படும். ஒருமுறை ஸைது பயணத்திலிருந்து மதீனா திரும்பியிருக்கிறார். நபியவர்கள் அச்சமயம் அன்னை ஆயிஷாவின் இல்லத்தில் இருந்தார்கள். ஸைது வந்து கதவைத் தட்டி, அனுமதி கோரியிருக்கிறார். மேலாடை இன்றி, இடுப்பு வேட்டி மட்டுமே அணிந்திருந்த நபியவர்கள் அதைச் சரிசெய்துகொண்டே, துள்ளி எழுந்துச்சென்று கதவைத் திறந்திருக்கிறார்கள். இந்நிகழ்வை விவரித்த அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா, “அல்லாஹ்வின்மீது ஆணையாக! நபியவர்கள் அவ்விதம் மேலாடை இன்றி விரைந்துசென்று ஒருவரை வரவேற்றதை நான் அப்பொழுது ஒருமுறை மட்டும்தான் கண்டுள்ளேன்” என்று கூறியுள்ளார்.

ஸைது மீது நபியவர்களுக்கு உள்ள அபரிமிதமான பாசத்தை அறிந்திருந்த மக்கள் “ஸைதுல் ஹுப் – பாசக்கார ஸைத்“ என்று செல்லமாக அவரை அழைப்பது வழக்கம்.

oOo

தம் அத்தை உமைமா பின்த் அப்துல் முத்தலிபின் மகள் ஸைனப் பின்த் ஜஹ்ஷ் ரலியல்லாஹு அன்ஹாவை,  ஸைது இப்னுல் ஹாரிதாவுக்கு மணமுடித்து வைத்தார்கள் நபியவர்கள். நிற, குல ஏற்றத் தாழ்வுகள், ஆண்டான், அடிமை என்பதெல்லாம் இஸ்லாத்தில் இல்லை என்பதை உறுதிப்படுத்தும் விதமாய் அமைந்த திருமணம் அது.

ஆரம்பத்தில் ஸைதுடன் திருமணம் புரிந்துகொள்ள ஸைனப் ரலியல்லாஹு அன்ஹா ஒப்புக்கொள்ளவில்லை. குரைஷியரின் உயர்குலத்தவரான தாம், அடிமையாய் இருந்த ஸைதை மணந்து கொள்வதா? என்று அவருக்கு அதிகமான தயக்கம் இருந்தது. அப்பொழுது முக்கியமான இறைவசனம் ஒன்று வந்து இறங்கியது.

“மேலும், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப்பற்றிக் கட்டளையிட்டு விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை…” சூரா அல் அஹ்ஸாபின் 36ஆவது வசனம் இது. அதைக் கேட்ட ஸைனப் (ரலி) தம் சுய விருப்பு, வெறுப்புகளை ஓரமாய் ஒதுக்கிவிட்டு உடனே அத்திருமணத்திற்கு உடன்பட்டார்கள். ஆனால் கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு, நாளாக நாளாக அதிகரித்து வந்தது. பலமுறை அதைப்பற்றி ஸைது வந்து நபியவர்களிடம் முறையிட்டுக் கொண்டிருந்தார். மனைவியை விவாகரத்து செய்துவிடும் அளவிற்கு நிலைமை சென்றது. ஆனால் நபியவர்கள் அளித்துவந்த சமாதானத்தாலும் அவர்களது வார்த்தைக்குக் கட்டுப்பட்டும் நாட்கள் கடினமாய் நகர்ந்து கொண்டிருந்தன.

ஒருகட்டத்தில் ஸைது-ஸைனபு விவாகத்தை ரத்தாக்கவும் ஸைனபின் இத்தா காலம் முடிவுற்றதும் அவரை நபியவர்களை மணந்து கொள்ளும்படியும் இறைவன் நபியவர்களுக்கு வஹீ அறிவித்தான். வளர்ப்பு மகனை , பெற்ற மகனைப் போலவே பாவித்து வந்த அந்த காலகட்டத்தில் இந்த இறை அறிவிப்பை வெளியிட நபியவர்கள் தயங்கினார்கள்; தாமதித்தார்கள். பின்னர், இறைவனின் வசனங்கள் தெள்ளத்தெளிவாய் இறங்கின. வளர்ப்பு மகன் பெற்ற மகனுக்கு இணையில்லை என்று அறிவித்த இறைவன் வளர்ப்பு மகனாய்ப் பாவித்தவர்களின் முன்னாள் மனைவியரும், வளர்ப்பு மகன்கள் தங்கள் தந்தையைப் போல் என்று கருதியவர்களை மறுமணம் புரியத் தடையில்லை என்ற சட்டம் ஏற்படுத்தினான். அதற்கு நபியவர்களையே சிறந்த முன்னுதாரனமாக்கினான்.

(நபியே!) எவருக்கு அல்லாஹ்வும் அருள் புரிந்து, நீரும் அவர் மீது அருள் புரிந்தீரோ, அவரிடத்தில் நீர்; “அல்லாஹ்வுக்குப் பயந்து நீர் உம் மனைவியை (விவாக விலக்குச் செய்து விடாமல்) உம்மிடமே நிறுத்தி வைத்துக் கொள்ளும்” என்று சொன்ன போது அல்லாஹ் வெளியாக்க இருந்ததை, மனிதர்களுக்குப் பயந்து நீர் உம்முடைய மனத்தில் மறைத்து வைத்திருந்தீர்; ஆனால் அல்லாஹ் அவன் தான், நீர் பயப்படுவதற்குத் தகுதியுடையவன்; ஆகவே ஸைது அவளை விவாக விலக்கு செய்துவிட்ட பின்னர் நாம் அவளை உமக்கு மணம் செய்வித்தோம்; ஏனென்றால் முஃமின்களால் (சுவீகரித்து) வளர்க்கப்பட்டவர்கள், தம் மனைவிமார்களை விவாகரத்துச் செய்து விட்டால், அ(வர்களை வளர்த்த)வர்கள் அப்பெண்களை மணந்து கொள்வதில் யாதொரு தடையுமிருக்கக் கூடாது என்பதற்காக (இது) நடைபெற்றே தீர வேண்டிய அல்லாஹ்வின் கட்டளையாகும்.  சூரா அல் அஹ்ஸாபின் 37ஆவது வசனம் இது. நபியவர்களின் தோழர்களிலேயே, இறைவன் தன்னுடைய குர்ஆனில் பெயர் குறிப்பிட்டுள்ள ஒரே தோழர் ஸைது இப்னு ஹாரிதா ரலியல்லாஹு அன்ஹு.

ஹுதைபிய்யா உடன்படிக்கைக்குப்பின் மதீனா புலம்பெயர்ந்த உம்மு குல்தூம் பின்த் உக்பாவுக்கு அதுநாள்வரை மணம் ஆகாதிருந்தது. அவரை ஸைது இப்னு ஹாரிதா மணந்துகொண்டார். பனூ உமைய்யா எனும் குரைஷிகளின் உயர்குலத்தில் பிறந்த உம்மு குல்தூம் குலப்பெருமை எதுவுமின்றி அடிமையாக இருந்து விடுவிக்கப்பெற்ற ஸைதுக்கு மன மகிழ்வுடன் மனைவியானார்.

oOo

ஹிஜ்ரீ எட்டாம் ஆண்டு துவங்கியது. கூடவே ரோமர்களுடனான முதல் போரும். பிற்காலத்தில் ரோமர்களை கதிகலங்க அடிக்கப்போகும் புயலுக்கான முன்னுரை எழுதப்பட்டது அந்த முதல் முஅத்தாப் போரில்தான்.

இதன் விபரங்களை ஜஅஃபர் இப்னு அபூதாலிப், அப்துல்லாஹ் இப்னு ரவாஹா வரலாற்றிலேயே விரிவாய்ப் பார்த்தோம். “ஸைது கொல்லப்பட்டாலோ, காயமடைந்தாலோ ஜஅஃபர் இப்னு அபூதாலிப் தலைமை தாங்கட்டும். ஜஅஃபர் கொல்லப்பட்டாலோ, காயமடைந்தாலோ அப்துல்லாஹ் இப்னு ரவாஹா தலைமை தாங்கட்டும். அப்படி அவரும் கொல்லப்பட்டாலோ, காயமடைந்தாலோ முஸ்லிம்கள் தங்களுக்குள் ஒரு தலைவரை தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டும்” என்று மூன்று படைத் தளபதிகளை வரிசைக்கிரமமாய் நியமித்து வழி அனுப்பிவைத்தார்கள்.  கிளம்பியது படை.

முஸ்லிம்கள் முஅத்தாவை வந்தடைந்தால், கடலெனத் திரண்டிருந்தது எதிரிகளின் படை! பைஸாந்தியர்கள் ஓரிலட்சம் வீரர்களை அனுப்பியிருந்தனர்; அவர்களுக்குத் துணையாய் லக்ஹம், ஜுத்ஆம், குதாஆ எனும் கோத்திரத்தைச் சேர்ந்த இலட்சம் கிறித்தவ அரபுப் படையினர் திரண்டிருந்தனர். ஏறத்தாழ இரண்டு இலட்சம் வீரர்கள் அணிவகுத்து நிற்க, முஸ்லிம்களின் படை மூவாயிரம் வீரர்களுடன் வந்து சேர்ந்தது.

முஅத்தாவை நோக்கி நகர்ந்து வந்த முஸ்லிம்களின் படையினர் மஆன் என்ற பகுதியை அடைந்திருந்தார்கள். இன்றைய ஜோர்டான் நாட்டுக்குத் தென்பகுதியில் அமைந்துள்ளது அது. அப்பொழுது அவர்களுக்கு ரோமர்களின் பிரம்மாண்ட படையைப் பற்றிய தகவல் கிடைத்தது. நிச்சயமாய் முஸ்லிம்களுக்குப் பெரும் கிலேசத்தை ஏற்படுத்தியது அந்தச் செய்தி. இரண்டு இரவுகள் மஆனில் தங்கி, ஸைது இப்னு ஹாரிதா (ரலி) முஸ்லிம் படையினருடன் ஆலோசனை நடத்தினார். சிலர் “எதிரிகளின் எண்ணிக்கையைப்பற்றி நபியவர்களுக்குத் தகவல் சொல்லி அனுப்புவோம். அவர்கள் மேற்கொண்டு நமக்குப் படையினரை அனுப்பிவைத்தால் நல்லது. இல்லையென்றால் அவர்கள் என்ன கட்டளை அனுப்புகிறார்கள் என்று பார்ப்போம். அதன்படிச் செயல்படுவோம்.” என்று ஆலோசனை கூறினார்கள். இறுதியில் அவர்கள் மத்தியில் எழுந்து நின்றார் இப்னு ரவாஹா.

“உங்களது தயக்கம் எனக்குப் புரிகிறது! ஆனால், இந்தப் பரிசிற்காகத்தான் நீங்கள் கிளம்பி வந்துள்ளீர்கள் – ‘ஷஹாதத்’ வீர மரணம் எனும் பரிசு. நமது எதிரிகளின் எண்ணிக்கையின் அடிப்படையிலோ, ஆயுத வலிமையின் அடிப்படையிலோ, குதிரைகளின் எண்ணிக்கையின் அடிப்படையிலோ நாம் போரிடுவதில்லை. நமக்கு அல்லாஹ் அருளியுள்ள இந்த மார்க்கத்தை மேலோங்கச் செய்வதற்காக மட்டுமே போரிடுவோம். நாம் முன்னேறிச் செல்வோம்”

முன்னேறியது முஸ்லிம்களின் படை. அடுத்த இரண்டு இரவுகளில் மஷாரிஃப் என்ற இடத்தை அடைந்தது. எதிரிகளின் படை நெருங்கி வர ஆரம்பித்தது. முஸ்லிம்கள் முஃத்தா பகுதிக்கு நகர்ந்து சென்று தங்களை நிலைநிறுத்திக் கொண்டனர். துவங்கியது யுத்தம். மும்முரமான போர் என்று ஒற்றை வார்த்தையில் சொல்லிவிடலாம். ஆனால் அதன் தீவிரம் சொல்லிமாளாத உக்கிரம்.

வெறும் மூவாயிரம் முஸ்லிம் வீரர்கள் தங்களின் பெரும் படையை மூர்க்கமாய்த் தாக்கி எதிர்கொள்வதைத் திகைத்துப்போய்ப் பார்த்தனர் பைஸாந்தியர்கள். நபியவர்களின் கொடியை ஏந்தி, படைக்குத் தலைமை ஏற்று அன்று ஸைது புரிந்த போர் வரலாற்றின் பக்கங்களில் ஈரம் உலரா வீரம். இறுதியில் அவர் உயிர்த் தியாகியாய்க் களத்தில் வீழ்ந்தபோது சல்லடையாய் அவர் உடலில் துளையிட்டிருந்தன எதிரிகளின் ஈட்டிகள். அதன் பின்னர் ஜஅஃபர் பின் அபீதாலீப், அப்துல்லாஹ் பின் ரவாஹா ஆகியோர் ஒருவருக்குப்பின் ஒருவராய்த் தலைமையேற்று உயிர்த் தியாகிகள் ஆனது நாம் முன்னரே பார்த்த வரலாறு.

தம் அன்பிற்குரிய மூன்று தோழர்களும் மரணமடைந்த செய்தி நபியவர்களுக்கு அளவற்ற வேதனையை அளித்தது. அவர்களை வலுவாய்த் தாக்கிய பெரும் சோகம் அது. அம் மூவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லச் சென்றார்கள் நபியவர்கள். ஸைதின் இல்லத்தை அடைந்தபோது, ஸைதின் சிறுவயது மகள் நபியவர்கள் கைகளுக்குள் பாய்ந்து விம்மியழ, அவளைத் தாங்கிப் பிடித்து, நபியவர்கள் சோகத்தில் விம்மியழுதது தோழர்களுக்கேகூட ஆச்சரியம்.

ஸஅத் பின் உபாதா கேட்டார், “அல்லாஹ்வின் தூதரே! தாங்களே இவ்விதம் அழுகிறீர்களே?”

“தம் பாசத்திற்குரிய ஒருவர் பிரியும்போது ஏற்படும் கண்ணீரும் அழுகையும் இயற்கையானதே” என்றார்கள் நபியவர்கள்.

பாலகராய்ப் பெற்றோரைப் பிரிந்து, அடிமையாய் வாழ்க்கையைத் துவங்கி, தம்முடைய 55ஆவது வயதில் உயிரை இறைவனின் பாதையில் இறக்கி வைத்துவிட்டு, சுவர்க்கத்தின் உயர்நிலையை அடைந்தார் ஸைது இப்னு ஹாரிதா.

ரலியல்லாஹு அன்ஹு!

oOo

இன்னும் வருவர், இன்ஷா அல்லாஹ்.


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.