தேச விரோத விளையாட்டு!

Share this:

ங்கிலாந்து அறிஞர் பெர்னார்ட் ஷாவிடம் கிரிக்கெட் விளையாட்டு குறித்து கருத்து கேட்டபோது “11 முட்டாள்கள் விளையாடுவதை 11,000 முட்டாள்கள் வேடிக்கை பார்க்கும் விளையாட்டு” என்று சொன்னார்.

அறுபதாண்டுகளுக்கு முந்தைய நிலவரப்படி 11,000 முட்டாள்கள் என்ற எண்ணிக்கை இங்கிலாந்திலிருந்த ரசிகர்களை மட்டும் கணக்கில் கொண்டு சொல்லியிருக்கவே வாய்ப்புண்டு. தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் மட்டுமே கிரிக்கெட் ரசிகர்களின் எண்ணிக்கை 10 கோடியைத் தாண்டியிருக்கக் கூடும்.  பெர்னாட்ஷா இந்நேரம் உயிரோடு இருந்திருந்தால் 11,000 முட்டாள்கள் என்றதை “11 மில்லியன் முட்டாள்கள்” என்று மாற்றி சொல்லியிருப்பார்.
 
குளிர்பிரதேச நாடுகளில் ஒன்றான இங்கிலாந்தில், ஓய்வுக் காலங்களில் வீடுகளில் முடங்கியிருக்காமல் நாள் முழுவதும் உடலை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும் பொழுதுபோக்காகவே கிரிக்கெட் விளையாட்டு அறிமுகமாகியது. தொடர்ந்து, பிரிட்டிஷ் காலனி ஆதிக்க நாடுகளுக்கும் கிரிக்கெட் ஏற்றுமதியாகியது. அவ் வகையில்தான் இந்தியாவுக்கும் கிரிக்கெட் அறிமுகமானது.
 

இன்று அனைத்து ஊடகங்களையும் தனது ஆக்டோபஸ் கரங்களால் ஆட்கொண்டு, இந்தியாவின் தகவல் வளங்களையும் மக்களுடைய வளமான சிந்தனையை சீரழித்து, பயனுள்ள பல கோடி மணி நேரங்களை வீணடித்து துவேஷம் வளர்க்கிறது கிரிக்கெட்.

ஆரம்பத்தில் ஐந்து நாட்கள் விளையாடப்பட்டு வந்த கிரிக்கெட் ஒருநாளாகக் குறைக்கப்பட்டு, தற்போது 20 ஓவர்களைக் கொண்ட போட்டிகளாகச் சுருங்கியதன் பின்னணியில், குறுகிய நேரத்தில் கொள்ளை லாபம் ஈட்டும் முதலாளித்துவ சுரண்டல் உள்ளது. அதனால்தான் உலகக் கோப்பை போட்டிகளை ரிலையன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் போட்டி போட்டு ஸ்பான்ஸர் செய்கின்றன.
 
ஆங்கிலேயர்களின் பொழுதுபோக்காக அறிமுகமான கிரிக்கெட், முதலாளிகளால் வணிகமயமாகி, இந்திய அரசியல்வாதிகளால் தேசப் பற்றின் அளவுகோலாகவும் திரிக்கப்பட்டது. இத்தனைக்கும் கிரிக்கெட் ஒன்றும் இந்தியாவின் தேசிய விளையாட்டல்ல!  நாளிதழ், ரேடியோ, தொலைக்காட்சி, இணையம், செல்பேசி என இன்று அனைத்து ஊடகங்களையும் தனது ஆக்டோபஸ் கரங்களால் ஆட்கொண்டு, இந்தியாவின் தகவல் வளங்களையும் மக்களுடைய வளமான சிந்தனையை சீரழித்து, பயனுள்ள பல கோடி மணி நேரங்களை வீணடித்து துவேஷம் வளர்க்கிறது கிரிக்கெட்.
 
இந்திய சினிமா நட்சத்திரங்களின் கருப்புப் பணத்தை முதலீடு செய்யும் கள்ளச் சந்தையாக உருவெடுத்து, சூதாடிகள் மற்றும் சமூக விரோதிகளிடம் கைமாறியுள்ள பிறகும் ஆட்சியாளர்களும் அதிகார வர்க்கமும் கிரிக்கெட் தொடர்பான சமூகச் சீரழிவுகளைக் கண்டுகொள்ளாமல் பூசி மெழுகி வருகின்றனர்.
 
தேசங்களுக்கு இடையிலான நட்புறவை வளர்க்கும் கருவியாகக் கருதப்பட்ட கிரிக்கெட், எதிரி நாட்டின் பெயரில் சமூகத்தில் வெறுப்பை விதைத்து பிரிவினையை வளர்க்கும் மதவெறியர்களின் பகடைக் காயாகவும் மாறியுள்ளது. இலங்கை, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளின் வீரர்களைக் குத்தகைக்கு வாங்கி விளையாடப்படும் IPL போட்டிகளில் பாகிஸ்தான் வீரர்களை விலை கொடுத்து வாங்க எந்த அணியும் முன்வரவில்லை என்பதிலிருந்து கிரிக்கெட்டை விளையாட்டாகப் பார்க்கும் போக்கு காலாவதியாகி, அதில் மதவெறியும் மிகைத்துள்ளது உறுதியாகியுள்ளது.
 
தமிழக மீனவர்களின் வாழ்வாதாரங்களை சீரழித்தும், அவர்களைச் சிறைபிடித்து கொன்றதோடு மட்டுமின்றி ஈழத் தமிழர்களை கொன்றொழித்த இலங்கை நாட்டின் அணியுடன் இந்திய நாட்டு அணி மோதும் போட்டிகளைவிட, இந்திய-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிகள் ஊடக முக்கியத்துவம் பெறுகின்றன. தமிழர்களைக் கொன்று குவித்த இலங்கை நாட்டின் அணிக்கும், இந்தியர்களை தினந்தோறும் அடித்து விரட்டிக் கொண்டிருக்கும் ஆஸ்திரேலிய நாட்டின் அணிக்கும் ஆதரவளித்தால் ஒரு நிலையும், பாகிஸ்தான் அணிக்கு ஆதரவளித்தால் இன்னொரு நிலையும் என விளையாட்டு ரசிப்பையும் கூட தேசப்பற்றின் அடையாளமாகத் திரிக்கும் வெவ்வேறு அளவுகோலைக் கொண்டது கிரிக்கெட்.
 
நாட்டுப்பற்றையும், நாடுகளிடையேயான அரசியல் நட்புறவையும் வளர்க்கும் என்று முன்னிறுத்தப்பட்ட கிரிக்கெட், IPL போட்டிகளுக்குப்பிறகு மாநிலங்களுக்கிடையிலான போட்டிகளால் நாட்டில் பிரிவினையை வளர்க்கும் வகையில் மாறிவிட்டது. இந்திய அணிக்காக ஆடிய டோனியும், டெண்டுல்கரும் தங்கள் மாநில அணிக்கு எதிராக விளையாடும்போது தோற்க வேண்டும் என்ற பிராந்திய வெறி வளர்க்கும் விளையாட்டாக கிரிக்கெட் தரமிழந்தது. இந்தியாவுக்காக ஒரே அணியில் ஆடிய ஹர்பஜன் சிங்கும் ஸ்ரீசாந்தும் தாம் ஆடும் மாநில அணிக்காக ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட கேவலம் நாடே அறிந்தது!
 
கோடிக்கணக்கில் கிடைக்கும் விளம்பர வருவாய்க்காகவும், புகழுக்காகவும் வீரர்கள் களமிறங்குகிறார்கள் என்றாலும் அரைநிர்வாண நங்கைகளின் குலுக்கல் நடனங்கள் ஏனென்று புரியவில்லை! ஆபாச அசைவுகள் கொண்ட திரைப்பட காட்சிகளுக்குத் தணிக்கை செய்யும் அரசுகள், அரைகுறை ஆடையுடன் விளையாட்டு மைதானத்தில் நேரலை ஒளிபரப்பில், காமக் களியாட்டம் போடுவதற்கோ அவற்றைக் காட்டும் தொலைக்காட்சிகளுக்கோ தடைபோடவில்லை.
 
ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள கேரளாவைச் சேர்ந்த ஸ்ரீசாந்தைக் குற்றவாளி போன்று நடத்தக் கூடாது என்றும், அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் வரை குற்றமற்றவராகவே நடத்த வேண்டுமென்றும் மத்திய அமைச்சர் சசி தரூர் கோரிக்கை விடுத்துள்ளார். குற்றம் சுமத்தப்பட்டவர்கள் எல்லாம் குற்றவாளிகள் அல்லர் எனினும் ஸ்ரீசாந்த் மீதான குற்றச்சாட்டுகளுக்கு எதிராக வலிமையான ஆதாரங்கள் இருக்கும் நிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஒரு மத்திய அமைச்சரே இப்படி சொல்வதை எவ்வகையில் எடுத்துக் கொள்வது?
 
தாடி வைத்திருந்தார்கள்; தொப்பி அணிந்திருந்தார்கள் என்பதற்காக குண்டுவெடிப்பு வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள ஆயிரக் கணக்கான முஸ்லிம்களுக்கும் இதே அளவுகோல் பொருந்தும் என்றாலும் கேடுகெட்ட எந்தவொரு அரசியல்வாதியும் வாதத்திற்காகக் கூட முஸ்லிம்களுக்காக வாய் திறக்கவில்லை என்பதிலிருந்து, கிரிக்கெட் (சூது) மோகம் அரசியல் வியாதிகளின் மூளையை எந்த அளவு மழுங்கடித்துள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது.
 
இந்த லட்சணத்தில் கிரிக்கெட் சூதாட்டத்தைத் தடுப்பதற்குச் சிறப்பு சட்டம் இயற்றப்படும் என்று வேறு அறிவித்துள்ளனர். பிராந்திய வெறி, மதவெறி, இனவெறி, சூதாட்டம், விபச்சாரம், கருப்புப் பணம், சமூக விரோதிகளின் கொலைக்களம் என்ற அனைத்து தீமைகளையும் உள்ளடக்கியுள்ள கிரிக்கெட், தேசவிரோத விளையாட்டு என்று அறிவித்துத் தடை செய்யப்பட வேண்டியது இன்றைய தேதிக்கு அவசியமான ஒன்றாகும்!

– N. ஜமாலுத்தீன்


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.