உதவி செய்பவன் அல்லாஹ் ஒருவனே!

சிறைப்பிடிக்கப்பட்ட பாலஸ்தீனச் சிறுவன்
Share this:

நித்தம் நித்தம் துப்பாக்கிகளின் சத்தம், தினம் தினம் மரண அறிவிப்புகள், இன்று இருக்கும் உறவுகள், உடைமைகள் அடுத்த வினாடியே கழுகு தேசத்தின் போர் வெறிக்கு இலக்காகிடுமோ என்ற அச்சம், பல மாதங்கள் சுமந்து பெற்றெடுத்த பாசக்குழந்தைகள் இவ்வுலகைக் காணும் முன்பே கழுகு கூட்டத்தின் இரத்தப்பசிக்கு உணவாகிடும் கொடூரம், கண்னியமிக்க தாய்மார்களின் கற்புகள் கழுகுக்கூட்டத்தினரால் சீரழிக்கப்படும் அக்கிரமம், நாட்டின் குடிமக்களுக்கு நாங்கள் பாதுகாப்பாக இருப்போம் என்று வாய்கிழிய பேசிவிட்டு குடியும் கையுமாக இரத்தவெறிப்பிடித்த ஆதிக்கவாதிகளுடன் கைக்கோர்த்து திரியும் நயவஞ்சகர்களின் துரோகங்கள். இவையெல்லாம் கற்பனைகளுமல்ல கவிதைகளுமல்ல. இன்று இஸ்லாமிய சமுதாயம், குறிப்பாக பாலஸ்தீனம், ஈராக், ஆப்கானிஸ்தான் மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளின் சில வரிகளே.

இரத்தவெறிபிடித்த அமெரிக்காவும் அதன் கள்ளக்குழந்தை இஸ்ரேலும் அதன் சகாக்களான ஐரோப்பிய நாடுகளும் செய்யும் அட்டூழியங்களுக்கு இணையாக முஸ்லிம் பெயர்தாங்கிய  நயவஞ்சகர்களும் இஸ்லாமியர்களை ஒடுக்குவதில் மும்முரம் காட்டுகிறார்கள். இஸ்லாத்தினையும் இஸ்லாமியர்களையும் ஒடுக்குவதற்கு நவீன நாகரிகவாதிகள்(?) பல வழிகளில் முயன்றும் முடியாது போகவே யூதர்களின் கைவந்த கலையான குழப்பம் மற்றும் பிரித்தாளும் சூழ்ச்சியினை அரங்கேற்றுகிறார்கள். அற்ப பதவிக்கு ஆசைப்பட்டு சில இஸ்லாமிய பெயர்தாங்கிகளும் அன்று முதல் இன்றுவரை அதற்கு துணைப்போவதையும் காணமுடிகிறது.


நூற்றாண்டு கால போராட்டமான பாலஸ்தீன போராட்டம் உலக வரலாற்றில் தனித்துவமிக்க ஒரு போராட்டம். வயோதிகர்கள், பெண்கள், குழ்ந்தைகள், ஊனமுற்றவர்கள் என பாகுபாடின்றி பல லட்சக்கணக்கான  உயிர்களை இஸ்ரேலின் இரத்தப்பசி இரையாக்கிய பொழுதும் வீரியம் குறையான மகத்தான ஒரு போராட்டம். தன்னலமற்ற பல தலைவர்கள் வழிநடத்திய போராட்டம், இன்றோ மஹ்மூத் அப்பாஸ் போன்ற அமெரிக்க-இஸ்ரேலிய கைகூலிகளிடம் சிக்குண்ட தவிக்கிறது. ஆதிக்கவாதிகளின் சூழ்ச்சியில் அகப்பட்டுச் சில சில்லறை பகட்டு தாங்களுக்காகத் தம் சொந்த நாட்டு மக்களான காஸா மக்கள் தினம் தினம் கொன்றொழிக்கப்படுவதைப் பொருட்படுத்தாமல் இஸ்ரேல் பிரதமருடனும் கழுகுதேசத்தின் அதிகாரபூர்வ பிரதிநிதி காண்டலிசா ரைஸுடனும் விருந்துண்டுக் கொண்டிருக்கிறார். அமெரிக்க-இஸ்ரேலிய தந்திரங்களில் அகப்பட்டுவிட்ட அப்பாஸினால் ஹமாஸுக்குக் கொடுக்கப்படும் நெருக்கடியில், விளைந்த பிரச்சனைகளால் பாலஸ்தீன மக்களின் உயிர்தியாகங்கள் அர்த்தமற்றதாகிப் போகின்றன. ஆக இங்கே வென்றது அப்பாஸும் அல்ல; ஹமாஸும் அல்ல. உண்மையில் வென்றது சியோனிஸ-அமெரிக்கக் கூட்டு சூழ்ச்சிகள்தான்.


இராக். அதிகாலை விழிப்பில் ஃபஜ்ர் பாங்கோசை கேட்கும் முன்னே குண்டுவெடிப்பின் ஓசையும், கண்ணியமிக்க தாய்மார்களின் அழுகுரல்களும் கேட்க துவங்கிவிடுகின்றன. ஈராக் மக்களைக் கொடூரப்பிடியிலிருந்து விடிவிக்கிறோம், அவர்களுக்குச் சுதந்திரம் வாங்கிக் கொடுக்கப்போகிறோம் என்று கூறிக்கொண்டு இன்று ஒட்டுமொத்த நாட்டையே கல்லறைகளாக மாற்றிக்கொண்டிருக்கும் பெருமை அமெரிக்காவிற்கும் அதற்குக் காவடி தூக்கிய நாடுகளூக்குமே சொந்தம். அமெரிக்காவின் ஆக்கிரமிப்பிலிருந்து தன் சொந்த நாட்டை காக்க தன் இன்னுயிரை தியாகம் செய்து போராடிக் கொண்டிருக்கும் ஈராக் போராளிகளை அடக்கி ஒடுக்க இயலாத அமெரிக்கா இங்கேயும் தனது நயவஞ்சக சித்து விளையாட்டை வெற்றிகரமாக அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது.


அதற்கு ஜலால் தலபானி, நூரி அல் மாலிகி போன்ற ஆப்கானிஸ்தானின் கர்ஸாயி போன்ற பொம்மை முஸ்லிம் பெயர்தாங்கிகள் துணைபோகிறார்கள். ஆப்கானிஸ்தானின் மீது நிகழ்த்திய அநியாய ஆக்ரமிப்பினால் வீழத்துவங்கிய அமெரிக்கப் பொருளாதாரத்தைச் சீர் செய்யும் நோக்கில் ஈராக்கில் கிடைக்கும் எண்ணைக்காகத் துவங்கிய அநியாய ஈராக் ஆக்ரமிப்பு இலட்சக்கணக்கான முஸ்லிகளின் இரத்தத்தினைக் குடித்த அதேவேளையில், பல ஆயிரம் அமெரிக்க இராணுவத்தினரின் உயிரையும் பலி கொண்டிருக்கிறது. ஈராக் போராளிகளின் ஆக்ரோஷமான தாக்குதலை எதிர்க்க இயலாத அமெரிக்கா வழக்கம்போல ஷியா, ஸுன்னி, குர்து என முஸ்லிம்களைப் பிரித்தாள்கிறது. சி.ஐ.ஏ. மற்றும் மொஸாத் ஆகியவற்றின் உதவியுடன் பல குண்டுவெடிப்புகளை அரங்கேற்றி அவற்றின் மூலம் ஆயிரக்கணக்கான முஸ்லிம் உயிர்களின் இரத்தத்தினை குடிப்பதோடு நிறுத்திக்கொள்ளாது, அந்தப் பலியினை இஸ்லாமியர்களின் மீதே சுமத்தி பிரிவினைகளுக்கு உரம்  போட்டுக்கொண்டிருக்கிறது. பல லட்சம் கோடிகளை செலவிட்டு ஈராக் போரை நிகழ்த்திக்கொண்டிருப்பதைப் பெரிதாக பேசும் ஊடகங்கள், அமெரிக்கா தலபானிகளின், மாலிக்கிகளின் ஆதரவுடன் எண்ணெய் வளத்தில் அடிக்கும் கொள்ளைகள்பற்றி ஏனோ வாயே திறப்பதில்லை. தனக்கு பதவி கிடைத்தால் போதும் என்று தலபானிகளும் மாலிக்கிகளும் தன்மக்கள் கொல்லப்படுவதையும் தன் நாட்டு செல்வம் கொள்ளையடிக்கப்படுவதையும் பற்றி சிறிதும் வெட்கப்படாமல் இருக்கின்றனர்.


ஆப்கானிஸ்தான்! நேட்டோ என்ற அமெரிக்காவின் அதிகாரத்திலுள்ள ஐநா கைக்கூலி நாடு பிடிக்கும் கூட்டம் தினம் தினம் ஆப்கானியர்களின் உயிரை காவு வாங்கிக்கொண்டிருக்கிறது. மதிப்புமிக்க மனித இரத்தத்தில் ஆனந்தக் குளியலிட்டுக் கொண்டிருக்கிறார்கள் இந்த இரத்தவெறி பிடித்த நேட்டோ படையிலுள்ள அமெரிக்க வல்லூறுகள். தன்னால் இயன்ற அளவு தன் நாட்டு மக்களின் உயிரை தலைமையேற்று காவு கொடுத்துக்கொண்டிருப்பது ஹமீத் கர்சாய் என்ற மற்றொரு பெயர்தாங்கி முஸ்லிம். தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் எனக்கூறி தன்நாட்டு அப்பாவி மக்களை கழுகு கூட்டத்திற்கு இரையாக்கிக் கொண்டிருப்பதன் மூலம் தான் ஒரு உண்மையான அமெரிக்காவின் கைகூலி என நிரூபித்துகொண்டிருக்கிறது இந்த பொம்மை கைக்கூலி.


பாலஸ்தீனத்திலும் ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் இதர இஸ்லாமிய தேசங்களிலும் தன்னுடைய ஆதிக்கம் நிலைப்பெற ஐரோப்பா போன்ற ஏனைய நாடுகளின் உதவிகள் அமெரிக்காவிற்குத் தேவைப்படுவதில்லை. அதனை அது நம்புவதுமில்லை. ஏனெனில் அது நம்புவதெல்லாம் நயவஞ்கமே வாழ்வாய் கொண்ட யூதர்களின் சூழ்ச்சியையும் அதில் சிக்கும் மஹ்மூத் அப்பாஸ், தலபானி, மாலிகி, கர்சாய் போன்ற முஸ்லிம் பெயர்தாங்கிகளையுமே. இது போன்றவர்கள் எப்படியும் கிடைத்துவிடுவார்கள் என்ற தீவிர நம்பிக்கையுடன் துணிச்சலாக அமெரிக்கா ஒவ்வொரு நாடுகளின் மீதும் படையெடுக்கிறது, அங்குள்ள அப்பாவி மக்களைக் கொல்கிறது, பெண்களை மானபங்கம் செய்கிறது, சொத்துகளைக் கொள்ளையடிக்கிறது.


இவற்றையெல்லாம் கனகச்சிதமாக செய்யும் அமெரிக்கா வரலாற்றுப் பூர்வமான ஓர் உண்மையை  மறைக்கிறது; உணர மறுக்கிறது. அன்று முதல் இன்று வரை எவ்வளவோ கொடுங்கோல் ஆட்சியாளர்களையும் அவர்களின் சதித்திட்டங்களையும் துச்சமெனக் கருதி காப்பாளன் அல்லாஹ்வின் உதவியுடன் வெற்றி நடைப்போட்டுக்கொண்டிருக்கும் தூய இஸ்லாமும் இஸ்லாமியர்களும் என்றுமே நயவஞ்கக் கூட்டத்தினை நம்பினதில்லை; நம்பபோவதுமில்லை. அல்லாஹ்வை மட்டுமே நம்பும் இஸ்லாமியர்களை அப்பாஸ், மாலிகி, கர்சாய்  போன்றவர்களை வைத்து வென்றுவிடலாம் என கழுகு தேசமும் அதற்குத் துணை போகும் கையாலாகத ஐநாவின் நேட்டோவும் இரத்தம் குடிக்கும் இஸ்ரேலும் பகல் கனவு காண்பார்களேயானால் அது நிறைவேறாத கனவாகவே இருக்க முடியும். ஏனெனில் இஸ்லாத்தின் அடித்தளமும் அடிப்படையும் அவ்வளவு வலுவானது; உறுதியானது.


சதியாளர்களின் கூட்டுச் சதிகளை வென்று இஸ்லாமும் இஸ்லாமியர்களும் இவ்வுலகை ஒருநாள் ஆளவே போகின்றனர். அந்த நாளில் ஒன்று, இந்த இரத்த வெறியர்களும் அதற்குத் துணை நிற்கும் சதி கூட்டமும் நயவஞ்சகக் கூட்டமும் மனம் திருந்தி மனப்பூர்வமாக இஸ்லாத்தை ஏற்றே ஆக வேண்டும். இல்லையேல் தாம் செய்யும் கொடூரங்களுக்கான விலையாக உலகில் அமைதி தழைக்க அழிந்தே தீர வேண்டும். அந்த ஒருநாளுக்காக முஸ்லிம்கள் மட்டுமல்ல அமைதியை விரும்பும் இவ்வுலகமே பொறுமையுடன் காத்துள்ளது.


தம் வாய்களைக் கொண்டே அல்லாஹ்வின் ஒளியை (ஊதி) அணைத்துவிட அவர்கள் விரும்புகின்றார்கள் – ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான். (அல்குர்ஆன் 9:32)

நிச்சயமாக வானங்கள் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ்வையன்றி உங்களுக்கு பாதுகாவலனோ, உதவி செய்பவனோ இல்லை என்பதை நீர் அறியவில்லையா? (அல்குர்ஆன் 2:107)


ஆக்கம்: சகோ. ஃபைஸுர் ஹாதி.


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.