இணையும் புதுக் கரங்கள்!

இணையும் புதுக் கரங்கள்!

முஸ்லிம்களும் மவோயிஸ்ட்டுகளும் அடிப்படையில் எதிரெதிர்க் கொள்கைகளை உடையவர்கள். இவ்விரு சாராரும் இணைந்து செயல்பட முடியாத இருவேறு துருவங்கள் என்று கருதப் படுபவர்கள். ஆனால், முரண்பட்ட கொள்கைகளையும் அரசியல் கருத்துகளையும் உடைய இவ்விரு சாராரும் தற்போது ஒன்றிணைந்து மத்திய-மாநில அரசுகளினால் கட்டவிழ்த்து விடப்படும் 'அரசு பயங்கரவாத'த்தை எதிர்கொள்ள தேசிய அளவில் ஒன்றிணையும் ஓர் அமைப்பை ஏற்படுத்த முன் வந்துள்ளனர். "அரசு பயங்கரவாதத்தினால் பாதிக்கப் பட்டவர்கள்" என்று தங்களை அழைத்துக் கொள்ளும் இவ்விரு சாராரும் முதல் முறையாக ஓர் அமர்வில் கூடிப் பேசி, "மத்தியமாநில அரசுகளினால் மாவோக்கள் மீதும் முஸ்லிம்கள் மீதும் கட்டவிழ்த்து விடப்படும் எல்லாவித பயங்கரவாதங்களையும் முறையாக எதிர்கொண்டு, தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்" என்று தீர்மானித்துள்ளனர். இந்த அமர்வு கேரளாவில் சென்ற மாதம் நடைபெற்றது
 
தென்னிந்தியாவினைக் களமாகக் கொண்டியங்கும் 'போராட்டம்' எனும் மாவோக்கள் பிரிவைச் சார்ந்த குழுவும் 'மைனாரிட்டி வாட்ச்' எனும் சிறுபான்மை மனிதவுரிமை அமைப்பும் தேசிய ஜனநாயக முன்னணி எனும் முஸ்லிம்களின் அமைப்பும் ந்த முயற்சியின் பின்னணியில் செயல் பட்டவர்களாவர்.
 
"
மாவோக்களும் முஸ்லிம்களும் அரசு பயங்கரவாதக் கட்டவிழ்ப்பின் விளைவினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசின் செயற்பாடுகளுக்கு எதிராக எவரேனும் குரல் கொடுத்து விட்டால், அவரை 'அகற்ற'க் கையாளப்படும் சிறந்த சூழ்ச்சி யாதெனில், அவர் ஒரு நக்ஸலைட் தீவிரவாதி என்று முத்திரை குத்தி விட்டால் போதும். அதேபோன்ற நிலையில்தான் முஸ்லிம் சகோதரர்களும் உள்ளனர்.
 
எப்போதாவது எங்காவது ஒரு தீவிரவாதத் தாக்குதலை ஒரு முஸ்லிம் செய்ததாகச் செய்தி வந்தால், அச்செய்தி உண்மையா பொய்யா? முஸ்லிகளைப் பலிகடாவாக்கும் சதியா? என்றெல்லாம் விசாரிக்காமல் முழு முஸ்லிம் சமுதாயத்தின் மீதும் அரசுகளின் ஐயப் பார்வை விழுகிறது. தனிபட்ட அப்பாவிகளும் தீவிரவாதம் என்றால் என்னவென்றே தெரியாதவர்களும் முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்துக்காக, 'தீவிரவாதி' அல்லது 'எதிர்காலத் தீவிரவாதி' என்ற அடிப்படையில்தான் நடத்தப்படுகிறார்கள். அரசுகளின் காமாலைப் பார்வையைச் சரிசெய்யும் முயற்சியாகவே நாங்கள் இரு சாராரும் இணைந்து, அரசு பயங்கரவாதத்தை எதிர்க்க முடிவெடுத்துள்ளோம்" என்று 'போராட்டம்' அமைப்பின் அமைப்பாளர் தெரிவித்தார்.
 
தேசிய ஜனநாயக முன்னணியைச் சார்ந்த நஜருத்தீன் அல்மரோம் என்பாரும் இதே கருத்தை எதிரொலித்தார். "மாவோக்களும் முஸ்லிம்களும் அரசு பயங்கரவாதத்தினால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். நாங்கள் அரசு பயங்கரவாதத் தாக்குதலுக்கு மிகவும் விருப்பமான செல்லப் பிள்ளைகள் போன்றவர்கள். ஏனென்றால் நாங்கள் இரு சாராருமே தேசவிரோதமானவர்கள் என்ற பட்டியலில் சேர்க்கப் பட்டுள்ளோம். இதுவே எங்கள் இரு சாராரையும் ஒன்றிணைக்கும் இழையாக இன்று உருவாகி உள்ளது" என்றும் அவர் கூறினார்.
 
இந்திய வரலாற்றில் முதன் முறையாக நக்ஸலைட்டுகளும் முஸ்லிம்களும் 'சுயப் பாதுகாப்பு' என்ற ஒரு சமமான நேர்க்கோட்டில் ஒன்றிணைந்திருப்பதாகக் கருத்துத் தெரிவித்த நஜருத்தீன், "அரசுத் தீவிரவாதத்துக்கு எதிரான எங்களது எதிர்கால நடவடிக்கைகள், ஆளும் வர்க்கஉயர் ஜாதியைச் சேர்ந்தவர்களால், 'இந்துத்துவ கொள்கை' என்னும் பெயரில் மாவோக்களையும் முஸ்லிம்களையும் காழ்ப்புணர்ச்சியோடு வேட்டையாட நினைப்பவர்களுக்கு எதிரானதாகமனித உரிமைகளைப் பாதுகாப்பதாகஅதற்கெதிரானவர்களின் வெறித்தனமான செயல்பாடுகளைத் தடுக்கக்கூடிய தற்காற்புப் போராக அமையும்" என்றும் அவர் தொடர்ந்து கூறினார்.
 
ஒன்றிணைந்த மாவோமுஸ்லிம்களின் இவ்வமைப்பின் முக்கிய நோக்கங்களுள், இந்திய இஸ்லாமிய மாணவர்கள் இயக்கம் (SIMI) மீதுள்ள தடையை அகற்றப் போராடுவது, காவல் துறை அதிகாரிகளால் நடத்தப் படும் போலி என்கவுண்டர் கொலைகளை ஒரு முடிவுக்குக் கொண்டு வருவது, கைது செய்யப் படும் நக்ஸலைட்டுகளுக்குப் போர்கைதிகள் அந்தஸ்து வழங்கக் கோருவது ஆகியவை அடங்கும்.
 
"
நாடு தழுவிய அளவில் இயங்கும் பல்வேறு மாவோமுஸ்லிம் குழுக்களைத் தொடர்பு கொண்டு வருகிறோம். எங்கள் அடுத்த அமர்வுகளை பெங்களூருவிலும் கொல்கத்தாவிலும் நடத்த உள்ளோம். அந்த அமர்வுகளில் இந்த அமைப்பின் குழு வடிவமைப்பு, செயலாக்கம் போன்றவை நம் நாட்டின் அரசியலமைப்பை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப் படும். இந்த அமர்வு பாதிக்கப்பட்ட இரண்டு சாராரையும் இணைத்துள்ளது. இனி எதிர்காலத்தில் எல்லாவித எதிர்போராட்ட நடவடிக்கைகளையும் இணைந்தே தொடருவோம்" என்று ஒருங்கிணைப்புத் தலைவர்களுள் ஒருவரான ராவுன்னி கூறினார்.
 
"
இந்தக் கூட்டணி எதிர்பாராத ஒன்று" என்பதை ஒப்புக் கொண்ட ராவுன்னி, "இக்கூட்டணியில் பல்வேறு கருத்து சிக்கல்கள் இருப்பதை நாம் அறிவோம்; ஆயினும் கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி வைத்து விட்டுப் பொதுவான எதிரியை எதிர்த்து ஒன்றாக இணைந்து போராடுவோம்" என்றும் கருத்துத் தெரிவித்தார்.
 
இவ்வமர்வில், போலி என்கவுண்டர் எனும் அரசு பயங்கரவாதத்தை எதிர்க்கும் Confederation of Human Rights Organisation (CHRO) மற்றும் People's Union Civil Liberty (PUCL) சமூக அமைப்புகளும் கலந்து கொண்டன.