தள நோக்கம் (Intention)

நோக்கம்: (ஒற்றுமை, சகோதரத்துவம், சமுதாய பிரச்னைகளுக்குச் சரியான தீர்வு)

சத்திய மார்க்கம்

இது இறைவனால் மனித சமுதாயத்திற்கு வழங்கப்பட்ட அருட்கொடைகளில் மிகவும் சிறந்த அருட்கொடையாகும். இந்த அரிய அருட்கொடைக்கு தமது இறைவனுக்கு என்றென்றும் நன்றி செலுத்த வேண்டிய நம் சமுதாயம், பிறப்பால், இனத்தால், நிறத்தால், மத-குல, மொழி-பணி, கட்சி, கழகம், சங்கம், குழு, இயக்கம் போன்ற இன்னபிற வேறுபாடுகளால் பிரிந்து சின்னாபின்னமாகிக் கிடக்கிறது.

இதன் பலன்?

மனித சமுதாயத்திற்கே வழிகாட்ட வேண்டிய நம் சமுதாயம், விழி இருந்தும் அசத்திய இருளில் சிக்கியுள்ளது. வழிகேடல் ஆழ்கடல் அலைகளில் மூழ்கியுள்ளது.

மனித சமுதாயம் இப்புவியில் தோன்றிய காலம் முதல், ஒவ்வொரு காலக்கட்டத்திலும் இம்மனித சமுதாயம் நேர்வழியில் சமத்துவமாக, இன/நிற, மத/குல, மொழி/பணி,மேலும் இன்னபிற வேறுபாடுகளின்றி சுமுகமாக, சாந்தியாக, நிம்மதியாக, ஒழுக்கமாக, ஒற்றுமையாக வாழ வழிகாட்டும் “சத்திய மார்க்க” வேதங்களும், அதை தமது வாழ்க்கையில் செயல் வடிவமாக விளக்கிக் காட்ட இலட்சக்கணக்கில் இறைத்தூதர்களும் இறைவனால் அனுப்பப்பட்டனர். அவர்கள் அனைவரும் மக்களை இந்த ஒரே சத்திய மார்க்கத்தின் பால் தான் அழைத்தனர்.

சத்திய மார்க்கம்

இது மிகவும் அவசியமானது, சீரானது, தூய்மையானது, உறுதியானது, நிலையானது, முழுமையானது, நடுநிலையானது, சாந்திமயமானது, இன்பமானது. இது அனைவருக்கும் ஏக இறைவனால் அருளப்பட்டது ஆதலால், சார்பற்றது, நிகரற்றது, குறையற்றது, கலப்படமற்றது, வேறுபாடுகளும் ஏற்றத் தாழ்வுகளற்றது, இதுதான் ஈடேற்றம் அளிக்க வல்லது என்ற சத்தியத்தை மறந்த சமுதாயமாக நம் சமுதாயம் மாறியும் (தன்னை) மாற்றியும் வருகிறது.

இந்த நிலைக்கு மறு பெயர் தான் முன்னேற்றமாம்!?

சத்திய மார்க்கமாம் இஸ்லாத்தை உணர்ந்து, ஏற்று வாழ்ந்து, ஈடேற்றம் பெற்றவர்களையும் மறந்து, மறுத்து, புறக்கணித்தவர்களையும், இறைவன் அவரவர் வழியில் விட்டு கண்காணித்து வருகிறான் என்பது ஒரு மறுக்க முடியாத சத்தியம். ஆம்!

இதற்கு வரலாறு என்றென்றும் சான்று பகர்ந்து வருகின்றது. இவற்றின் மூலம் படிப்பனை பெற்று நேர் வழிக்கு வந்தவர்கள் சத்திய மார்க்கத்தில் இருந்தவர்கள், சத்திய மார்க்கத்தில் இருப்பவர்கள், சத்திய மார்க்கத்திற்குச் சொந்தக்காரர்கள்.

சத்திய மார்க்கம்

இது, தனி நபருக்கோ, குழுவுக்கோ, குலத்திற்கோ, இனத்திற்கோ சொந்தமானதன்று.

இது பிறப்பால் பெறக் கூடிய, குலச் சொத்தும் அன்று. முழு மனித சமுதாயத்தின் பொதுச் சொத்தாகும். இதை யார் விரும்பி உணர்ந்து அணுகி வருகின்றாரோ அவருக்கு இதில் பங்கு உண்டு. பலன் என்றென்றும் உண்டு.

சத்தியத்தின் மகிமையை மனிதச் சமுதாயம் முறையாக உணர வேண்டும். அதன் மூலம் இந்த மனிதச் சமுதாயம் மூட நம்பிக்கைகள், ஏற்றத் தாழ்வுகள், வீண் விரயங்கள், போலியான சடங்குகள், வழிகேடில் மூழ்கடிக்கும் கலாச்சாரச் சீரழிவுகள், சுரண்டல்கள் ஆகிய அனைத்து வகைத் தீமைகளிலும் இருந்து விடுபட்டு இறைவன் வழங்கியப் பகுத்தறிவு எனும் அருட்கொடையை முறையாகப் பயன்படுத்தக்கூடிய, அதன் மூலம் சத்தியத்தைப் பகுத்தறிந்துப் பயன் பெறக் கூடிய சத்திய மார்க்கத்திற்குச் சொந்தக்காரர்கள் எனும் ஒப்பற்றப் பெயர் கொண்ட சமுதாயமாகத் திகழ வேண்டும்”.

நாம் சொல்வதுதான் சத்தியம் என்பதை விட்டு சத்தியத்தையே நாம் சொல்வோம் என்ற உன்னத நிலைக்கு இந்த மனிதச் சமுதாயம் மாற வேண்டும்.

இந்த நிலைக்கு மனிதச் சமுதாயம் மாறுவது காலத்தின் கட்டாயம், இறைவன் நமக்கு விதித்த இந்தக் கடமையை, இந்தச் செய்தியை நம்மால் இயன்றவரை இயன்ற வழியில் ஒவ்வொருவரும் மற்றவருக்கு எத்தி வைக்கக் கடமைப் பட்டுள்ளோம்.

இந்நோக்கத்தில் பிறந்ததே சத்தியமார்க்கம்.காம்(satyamargam.com) எனும் இணையதளம்.

சத்தியமார்க்கம்.காம் (satyamargam.com)

இது நம் அனைவரின் மார்க்க நிலையினை ஆராய்ந்து மறுபரிசீலனை செய்துக் கொள்ள இறைவனால் அளிக்கப்பெற்றுள்ள ஒரு நல்வாய்ப்பு என்றால் மிகையாகாது.

நாம் இருப்பதே சத்தியமார்க்கம் என்ற நிலை மாறி நாம் சத்திய மார்க்கத்திலே தான் நாம் இருப்போம் என்ற நிலைக்கு மனிதச் சமுதாயத்தை மாற்ற வழி வகுக்கும் ஒரு சிறிய (சீரிய) முயற்சியே இது.

இனி ஒருபோதும் “அசத்தியத்தில் மூழ்கியுள்ளோர்” எனும் இழி நிலையில் இருக்க மாட்டோம்; மேலும் அசத்தியத்தில் இருந்து மனித சமுதாயத்தைக் காக்கக் கடமை உணர்வுடன் ஆவனச் செய்வோம். (இன்ஷா அல்லாஹ்)

இது தான் மனிதச் சமுதாயம் படைக்கப்பட்ட நோக்கம் என்பதை நாம் உணர்ந்தது போல் முழு மனிதச் சமுதாயமும் உணர வேண்டும் என்ற நோக்கத்தின் வெளிப்பாடே இதுவன்றி வேறில்லை.

இவ்வழியில் எவ்வித இவ்வுலக இலாப நோக்கமும் இன்றிச் சத்திய மார்க்கத்தைக் கலப்பற்றத் தூய்மையான நிலையில் முழு மனிதச் சமுதாயத்திற்கும் படைத்தவன் உதவியால் எடுத்துரைப்போம். அதை எத்தி வைப்போர்களின் ஆக்கங்களை, உரைகளைச், சான்றுகளை இயன்ற வழியில் நமது இந்தச் சத்திய மார்க்கம் இணையதளம்(satyamargam.com) மூலம் முறையாக அறிமுகப்படுத்துவோம்.

“சத்தியத்தைச் சொல்பவர் யார் என்று பார்க்காமல் ஆதரவு அளிப்போம்; சொல்பவரை வைத்துச் சத்தியம் என்று கண் மூடிச் செயல்பட மாட்டோம்” என்று முழங்க மட்டும் செய்யாமல் அதை முறையாகச் செயல் படுத்தக்கூடிய உன்னதமான, நடுநிலையான, காழ்ப்புணர்ச்சியற்ற, நீதமான சமுதாயமாக மாறி ஒரு முன்னுதாரணமாகத் திகழ நாம் இன்ஷா அல்லாஹ் முயல்வோம்.