பாலையில் வருமா சோலை? (இறுதி பகுதி)

Share this:

மாமாவின் வீட்டில் கிடைத்த அனுபவம், அதன் பிறகு ஒரு நிமிடம் கூட என்னை ஊரில் இருக்கவிடவில்லை. அன்று இரவே ஊரை விட்டுப் புறப்பட்ட எனக்கு, இந்த அரபுமண்ணை மிதிக்கும்வரை ஏற்பட்ட அல்லல்கள் …! ஹ்ம்… இன்று நான் எங்கள் ஊரைப் பொருத்த மட்டில் ஒரு பணக்காரனாகி விட்டேன் ! இன்னும் குடிபுகாமல் என் வரவுக்காகக் காத்திருக்கும் புதுவீடு, வயல், பழுது பார்த்தமைக்கப் பட்ட பழைய வீடு – இத்தனையும் எனக்கு இப்போது சொந்தம். ஆனால் …? எனக்குச் சொந்தமாக வேண்டியவள் அன்னியமாகி விட்டாள்!

‘அடுத்தவேளை சோற்றுக்கில்லாதவன்’ என்று என்னைக் கேலி பேசிய மாமா, ஆறு மாதங்களுக்கு முன்னர் ஒரு கடிதம் எழுதி இருந்தார். இளையவள் சாபிராவை நான் திருமணம் செய்து கொள்ள வேண்டுமாம். உம்மாவுக்கும் சம்மதம்தானாம்.

‘மாப்பிள்ளை தேடி, பெண்ணைப் பெற்றவர்கள் அலையாய் அலையும் இந்தக் காலத்தில், பெண் கேட்டு வந்து உங்களிடம் நான் பட்ட அவமானம் என் உயிர் உள்ளளவும் போதும். இனி எனக்குத் தபால் எழுத வேண்டாம்’ என்று முகத்திலடித்தாற்போல் பதில் எழுதினேன். உம்மாவுக்கும் சம்மதமாமே! எப்படி சம்மதித்தார்கள்? உம்மாவின் விருப்பத்தை என்னால் மீற முடியாதே! என்ன செய்வது ?

இன்ஷாஅல்லாஹ் ஊருக்குப் போய் பார்த்துக் கொள்ளலாம். மனதை சமாதானப்படுத்திக் கொண்டேன்.

()()()

காலமரத்திலிருந்து நாளிலைகள் பழுத்து விழுந்து கொண்டேயிருக்கின்றன.

நான் ஊருக்கு வந்து சேர்ந்து ஒரு வாரம் நெருங்குகிறது. அன்னையின் அண்மை தந்த ஆனந்தத்தில் நாட்கள் நழுவுவது கூடத் தெரியவில்லை! மாமாவும் மாமியும் வந்து போனார்கள். மாமி மட்டும் தனியாக ஒருமுறை வந்து உம்மாவிடம் ரகசியமாகப் பேசிக் கொண்டிருந்ததையும் கவனித்தேன்.

கல்யாண விஷயமோ? கல்யாணப் பேச்செடுத்தால், சாபிராவுக்கு வேறு மாப்பிள்ளை பார்த்துக் கொள்ளச் சொல்லும்படி உம்மாவிடம் உறுதியாகக் கூறிவிட வேண்டும் .

இஷா தொழுது விட்டு வந்து ஓய்வாக அமர்ந்து படித்துக் கொண்டிருக்கும்போது உம்மா என் அருகில் வந்தமர்ந்தார்கள்.

“ஒரு முக்கியமான சேதி பேசனும்னு வந்தேம்ப்பா”.

“சொல்லுங்கம்மா” புத்தகத்தை மூடிவைத்து விட்டு, “புதுவீடு குடி போறதா?” எனக் கேட்டேன்.

“அதில்லப்பா … எங்கண்ணுள்ளப்பவே ஒனக்குக் கல்யாணம் செஞ்சி பாத்திடம்னு ஆசையாயிருக்கு”

மவுனம் சாதித்தேன்.

“நீ ஊருக்கு வரமுந்தியே பலபேரு ஒன்ன மாப்பிள்ள கேட்டு வந்தாங்க!. நீ ஊருக்கு வந்து ஒன்னோட பிரியத்தக் கேட்டுட்டுத்தான் முடிவு செய்யனும்னு சொல்லிட்டேன்”.

உம்மா சொல்லி முடிக்கட்டும் என பேசாமல் இருந்தேன்.

“மாமா ஒனக்கு தபால் எழுதுனதாச் சொன்னான்”.

‘ஆமாம்’ என்பதுபோல் தலையாட்டி வைத்தேன்.

“ஒன்ன அவமானப் படுத்துற மாதிரி என்னாதான் பேசி இருந்தாலும் அதயெல்லாம் மனசில வச்சுக்காம நீ சாபிராவக் கல்யாணம் செஞ்சிக்கிட்டா குடும்பம் குலயாம இருக்கும்”.

வாய் திறவாமல் உம்மாவின் முகத்தையே பார்த்தவாறிருந்தேன்.

“ஒன் மாமனும் மாமியும் கால்ல விழாத கொறயா கெஞ்சிறாங்க, எல்லாத்தயும் மறந்துட்டு நீ சாபிராவக் கட்டிக்கிடணும்னு”.

மவுனம் கலைந்தேன். “இப்ப எல்லாஞ் சொல்லுவாங்கம்மா. அன்னக்கிப் பேசினப்போ இதயெல்லாம் யோசிச்சிருக்கணும். குடும்பம் குலையக் கூடாதுன்னு நீங்க சொல்றது நியாயந்தான். ஆனா, ‘ஸாஜிதாவத் தவிர வேற பொண்ணக் கல்யாணஞ் செய்ய மாட்டேன்’னு வாப்பாவுக்கு நான் வாக்குக் கொடுத்தேம்மா”.

“அது எனக்குந் தெரிஞ்ச சேதிதானே … என்ன செய்யிறது? நாம நெனச்சபடி எல்லாம் நடக்கிறதில்லயே! ஆண்டவன் வேற மாதிரி நாடிட்டான். பாவம்! அந்தப் பொண்ணுக்குக் கல்யாணம் ஆனதிலேர்ந்து ஆறு மாசங்கூட ஒழுங்கா வாழல. மாப்பிள்ளக்காரனுக்கு எல்லாக் கெட்ட சேர்க்கையும் இருந்திருக்கு . ஸாஜிதா கண்டிச்சிதாம்; வீட்ட விட்டே தொரத்தி அனுப்பிட்டான் பாவி! திரும்பப் போயிப் பாத்தப்ப ஆளே ஊர்ல இல்ல. மதறாசுப் பக்கம் போயிட்டதா சொன்னாங்க; மய்யத்துதான் திரும்பிச்சி …! அதெல்லாம் பழங்கத . இப்ப நீ என்னதான் முடிவு சொல்றே? கல்யாணமே செஞ்சிக்காம இருந்திடப் போறியா?”

“இல்லம்மா; செஞ்சிக்கிறேன். ஆனா சாபிராவயல்ல”

“வேற யார? நீயாவே வேற எங்கினயாச்சிம் பொண்ணு பாத்திருக்கியா?”

“என்னம்மா இப்படிக் கேக்குறீங்க! நான் உங்க மகனில்லயா? அப்படியெல்லாஞ் செய்வேனா? வாப்பாவுக்கு நான் குடுத்த வாக்குப்படி … ஸாஜிதாவயே செஞ்சிக்கிறேனம்மா …”

உம்மாவுக்குப் பெருந் திகைப்பு! மகன் , ‘ஒரு விதவையைத் திருமணம் செய்து கொள்கிறேன்’ என்றதும் மகிழ்ச்சியா பொங்கும்?

“ஏம்ப்பா? சாபிராக்கென்ன? இப்போ எவ்வளவு பதுவுசா இருக்கா தெரியுமா?”

“இருக்கட்டும்! கல்யாணம் செய்யிறதுன்னா ஸாஜிதா ஒருத்தியத்தான் செய்துக்குவேன்; அவ கைம்பெண்ணா இருந்தாலும் எனக்குக் கவலை இல்ல”.

என் உறுதியில் இறுதியாக உம்மாவும் ஒப்புக் கொண்டார்கள் .

()()()

“ஸாஜிதா!”

“ம் …”

“என்ன ஒரே யோசனைலே மூழ்கிப் போயிட்டே?”

எனக்கும் ஸாஜிதாவுக்கும் திருமணமாகி ஐந்து நாட்களாகி விட்டன.

“ஒங்கள ஒன்னு கேக்கணும்னு நெனச்சிக்கிட்டே இருக்கேன் “

“கேளேன்!”

“எத்தனயோ பேரு ஒங்களுக்குப் பெண் தர முன்வந்ததயும் மறுத்திட்டு, சாபிராவயும் வேணாம்னு சொல்லிட்டு என்னயே கட்டிக்கிட ஒரே பிடிவாதமா நின்னீங்களே, அது ஏன்னுதான் தெரியல”

“இதத்தான் இத்தன நேரமா யோசிச்சிட்டிருந்தியா? எல்லாம் அல்லாஹ்வுடைய கட்டளைதான் காரணம். எனக்கு நீதான்னு எழுதிட்டானே, அதை மாத்த முடியுமா? என்னுடைய முடிவுக்கு இன்னொரு காரணமும் இருக்கு”

‘என்ன அது?’ என்பதுபோல் என்னைப் பார்த்தாள் என் இனியவள்.

அதோ, அந்த அலமாரி மேல் தட்டிலே அடுக்கி இருக்கிற டேப்கள்லேர்ந்து மூணாவதான ‘அண்ணலாரின் வாழ்க்கை’ டேப்பை எடுத்து வாயேன்”.

எடுத்து வந்தாள்.

டேப் பாதி ஓடி நிறுத்தப் பட்டிருந்தது; பரவாயில்லை! ஸாஜிதாவின் கேள்விக்கான பதில் இனிமேல்தான் வரும்.

ஒருமுறை பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு அரபுநாட்டில் நாங்கள் ஒருநாள் இஜ்திமா நடத்தியபோது, அமர்வில் அண்ணலாரின் வாழ்வைக் குறித்து சிறப்புரை ஆற்றிய மவ்லவி ஒருவரின் பேச்சு. டேப் ரிக்கார்டரில் டேப்பை நுழைத்து ஓடவிட்டேன்.

“…இப்போது நமது சமுதாயத்தில் நிலவி வரும் வரதட்சணை கொடுமை சொல்லத் தரமற்றதாக இருக்கிறது! வாழ்க்கையை அனுபவிக்க வேண்டிய வயதில் இந்தக் கொடுமையினால் வாடிக் கிடக்கும் ஏழைக் குமர்கள் எத்தனையோ பேர்! வரதட்சணை என்பது இஸ்லாத்தில் இல்லாத, வெறுக்கப் படவேண்டிய ஒன்று. வெறுக்கப் படவேண்டியதை நாம் பின்பற்றலாமா? இதற்குக் காரணம் என்ன? எளிமையை வற்புறுத்திய இறைத்தூதர்(ஸல்) அவர்களின் உம்மத்துகள் என்று சொல்லிக் கொள்ளும் நாம், எல்லா விஷயத்திலும் ஆடம்பரத்தை விரும்பத் தலைப்பட்டதுதான்!
குறிப்பாக, ஒரு முஸ்லிமுடைய இல்லத்தில் திருமணமென்றால் பல ஆயிரக் கணக்கில் பணம் செலவழிக்கப் படுகின்றது. இதனால் பொருளாதாரச் சீரழிவு ஏற்பட, அதைச் சரிக்கட்டுவதற்கான ‘அட்வான்ஸ்’ ஆகத்தான் வரதட்சணையாம்! அதே திருமணத்தை எளிமையாக நடத்தி, வரதட்சணையை விலக்கக் கூடாதா?

அல்லாஹ் உங்கள் கரங்களில் பொருள் வளத்தைக் கொடுத்து, தன் பொருத்தத்தைத் தேடுபவர்கள் யார் யாரென்று கணக்கெடுத்துக் கொண்டிருக்கிறான். இங்கே கூடியுள்ள திருமணமாகாத வாலிபச் சகோதரர்கள், வரதட்சணை இல்லாமல் கல்யாணம் செய்து கொள்வோமென உறுதி பூண்டு, வளரும் சமுதாயத்துக்கு வழிகாட்டிகளாக வருதல் வேண்டும்.

ஆரம்பத்தில் நான் ஓதிக் காட்டிய இறைவசனத்தில் ‘அல்லாஹ்வையும் இறுதிநாளையும் உறுதியாக நம்புகிறவர்களுக்குரிய அழகிய முன்மாதிரி, நிச்சயமாக அல்லாஹ்வுடைய தூதரிடமே இருக்கிறது’ என்பதற்கு உதாரணமாக, திருமணம் செய்வதிலும் நம் பெருமானார் அவர்கள் ஒரு நேர்மைப் புரட்சியையே கையாண்டார்கள், முதலாவதாக விதவையான கதீஜாப் பிராட்டியாரை மணந்து கொண்டதன் மூலம் ! அண்ணல் நபியின் அழகிய முன்மாதிரிகளில் இதுவும் ஒன்று !

அல்லாஹ், தன் மறையில் குறிப்பிடுகின்றான்: ‘ மங்கையரில் உங்கள் மனதுக்கிசைந்தவரை மனைவியாக்கிக் கொள்ளுங்கள்’ என்று.

எனது சொந்தக் கருத்தில் உதித்த கேள்வி: உங்களில் யாருக்காவது மனதுக்கிசைந்தவளாய் ஒரு விதவை ஏன் இருக்கக் கூடாது? அப்படி யாரேனும் இருந்தால், பெருமானாரின் முன்மாதிரியைப் பின்பற்றுகின்றோம் என்ற ஒரே எண்ணத்தில் அவ்விதவைக்கு வாழ்வளிக்க முன்வர வேண்டும் …!”

டேப்பை நிறுத்தி விட்டு ஸாஜிதாவை அர்த்தத்துடன் நோக்கினேன்.

குளிர்கால ரோஜா மலரில் படிந்த பனித்துளிகள்போல் அவளுடைய அழகிய கன்னங்களில் ஆனந்தக் கண்ணீர்!

ஒரேநேரத்தில் இருவரும் “அல்ஹம்து லில்லாஹ்” என்று சொல்லிக் கொண்டோம்.

ஆக்கம்: ‘மதி நா’ ஜமீல்


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.