சிறந்த சமுதாயம்

நமது நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறியதாக முஆவியா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

“உலக மக்களில் நீங்கள் 70வது சமுதாயமாக இருக்கிறீர்கள். அந்த 70 சமுதாயங்களில் நீங்கள் தான் சிறந்த சமுதாயம் ஆவீர்கள். வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்விடம் மதிப்பு மிக்க சமுதாயம் ஆவீர்கள்.” (திர்மிதீ)

இத்தகைய நன்மைகளை இந்த சமுதாயம் பெற்று வெற்றி வாகை சூடியதற்கு காரணம் இந்த சமுதாயத்துடைய நபி முஹம்மது (ஸல்) அவர்களே. ஏனெனில்  அவர்கள் அல்லாஹ்வின் படைப்புகளில் மிகச் சிறந்தவர்கள். அல்லாஹ்விடம் மிகுதியான மதிப்பு மிக்க இறைத்தூதர். மகத்தான நிறைவான மார்க்கத்துடன் அல்லாஹ் அவர்களை அனுப்பி வைத்தான். அவர்களுக்கு முன் எந்த நபிக்கும், எந்த தூதருக்கும் இத்தகைய முழுமையான மார்க்கம் வழங்கப்படவில்லை. எனவே அவர்கள் காட்டிய வழிமுறையின் படி சிறிதளவு செயல்பட்டாலும், அது மற்ற சமுதாயத்தார் அதிகமாக செயல்பட்டதை விட சிறந்ததாக அமையும்.

அல்லாஹுதஆலா   தன் திருமறையில் கூறுகிறான்.

” மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தார்களிலெல்லாம்) மிக்க மேன்மையான சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள். (ஏனெனில்) நன்மையை ஏவுகிறீர்கள், தீமையை தடுக்கிறீர்கள்,  அல்லாஹ்வை நம்புகிறீர்கள். (அல் குர் ஆன் 3 : 110 )

இந்த சமுதாயத்தை சேர்ந்த மக்கள் முதலில் அல்லாஹ்வை ஈமான் கொள்ள வேண்டும்.

நபி (ஸல்) அவர்களிடத்தில் “அமல்களிலேயே சிறந்தது எது?” என்று வினவப்பட்ட போது “அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பிக்கை கொள்வது என்றார்கள்”, பின்னர் எது என்று வினவப்பட்டது, “அல்லாவின் பாதையில போர் புரிவது” என்றார்கள். “பின்னர் எது என்று கேட்கப்பட்டது, “ஏற்றுக் கொள்ளப்படும் ஹஜ் என்றார்கள்”. (அபூ ஹுரைரா (ரலி): புகாரீ)

ஈமான் இல்லாமல் செய்கின்ற எந்த அமலும் (செயலும்) பயன் தராது. ஈமான் (இறைநம்பிக்கை) கூடிய நல் அமலே மறுமையில் சிறந்த கூலியை பெற்றுத் தரும். அல்லாஹ்விடம் கிடைக்க இருக்கும் கூலியை எதிர்பார்த்தவர்களாக நல் அமலை செய்ய வேண்டும்.

நன்மையை ஏவி தீமையை தடுப்பது என்பது இரட்டை பிள்ளைகள். இரண்டும் சேர்ந்தே ஒருவரிடம் இருக்கவேண்டியது அவசியம். ஓரிடத்தில் ஹலாலை வலியுறுத்தும் போது ஹராமையும் தடுக்க வேண்டும்.

“உங்களில் நல்லதின் பக்கம் அழைக்கின்ற நல்லதை ஏவுகின்ற , தீயதைவிட்டும் தடுக்கின்றவர்கள் இருக்கட்டும் , இவர்கள்தாம் வெற்றியாளர்கள்”. ( அல் குர் ஆன் 3 : 104 )

ஒரு இறை நம்பிக்கையாளன், மற்றவர்கள் செய்கின்ற தவறை கண்டும் காணாமல் செல்லக் கூடாது. அதை தவறு என்று எடுத்துச் சொல்லவேண்டும். அழகிய முறையில் அறிவுறுத்தவேண்டும். அத்துடன் நன்மை செய்ய தூண்ட வேண்டும். நல்லதின் பக்கம் அழைக்க வேண்டும். உதாரணத்திற்கு வரதட்சனை வாங்கி திருமணம் முடிக்கும் ஒருவரிடம் , அந்த தவறை சுட்டிக் காட்ட வேண்டும். மஹர் கொடுத்து திருமணம் முடிப்பதே நபிவழி , என்பதை அறிவுறுத்த வேண்டும். எனக்கென்ன வந்தது என்று இருக்கக் கூடாது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், “உங்களில் ஒருவர் ஒரு தீமையை கண்டால் தன் கையால் அதைத் தடுக்கட்டும், அதற்கு இயலாவிட்டால் தன் நாவால் தடுக்கட்டும்.அதற்கும் இயலாவிட்டால் தன் இதயத்தால் (வெறுக்கட்டும்) இது இறைநம்பிக்கையில் மிக பலவீனமானதாகும்”. ( அபூஸயீத் அல் குத்ரீ (ரலி) : முஸ்லீம்)

மேலும் அல்லாஹ்வின் தூதரிடம் வினவப்பட்டது,

“மக்களில் சிறந்தவர் யார் ?”  என்று , அதற்கு நபி(ஸல்) அவர்கள் “மக்களில் குர் ஆனை நன்கு கற்றறிந்தவரும் , அல்லாஹ்வை அதிகம் அஞ்சுபவரும் , அதிகமாக நன்மையை ஏவி, தீமையைத் தடுப்பவரும், அதிகமாக உறவை பேணி வாழ்பவருமே சிறந்தவர் ஆவார் என்றார்கள். (கன்ரா பின் அபீலஹப்(ரலி) : முஸ்னத் அஹ்மத்.)

ஆக சிறந்த சமுதாயம் என்பதற்கும் , மக்களில் சிறந்தவர் என்பதற்கும் இலக்கணமாக திகழ நம் ஒவ்வொருவரிடமும் நன்மையை ஏவி , தீமையை தடுக்கும் பண்பு அமையவேண்டும்.

சனிக்கிழமை மீன் பிடிக்கக் கூடாது என்ற அல்லாஹ்வின் கட்டளையை மீறி மீன் பிடித்த பனூ இஸ்ரவேலர்களை அல்லாஹுத்தஆலா பன்றிகளாகவும் , குறங்குகளாகவும் மாற்றினான். அதை பற்றி அல்லாஹுத்தஆலா தன் திருமறையில் குறிப்பிடும் போது…..

“கூறப்பட்ட அறிவுறையை அவர்கள் மறந்த போது தீமையை தடுத்தோரை (மட்டும்) காப்பாற்றினோம். அநீதி இழைத்தோரை அவர்கள் குற்றம் புரிந்து வந்ததால் கடுமையாக தண்டித்தோம்”” என்று கூறுகின்றான்.               (அல் குர் ஆன் 7 : 165)

ஆக நன்மையை ஏவுவதுடன் நம் முன் நடக்கும் தீமைகளை தடுக்க வேண்டியது நம் ஒவ்வொருவர் மீதும் கடமை. தீமையை செய்ததற்காக அல்லாஹ்வின் தண்டனை இறங்கும்போது , தீமையை தடுத்தவர்களின் மீது அல்லாஹ்வின் அருள் நிச்சயம்.

அல்லாஹுத்தஆலாவால் சிறந்த சமுதாயம் என்று புகழப்படுவதை மெய்பிக்க கூடியவர்களாக நம் ஒவ்வொருவரையும் வல்ல ரஹ்மான் ஆக்கி அருள் புரிவானாக
ஆக்கம் : உம்மு ஹிபா