வேட்டைக்காடாய் ஒரு தொட்டில்

Share this:

நதிக்கரைகள் தாலாட்டிய
நாகரீகத் தொட்டிலில்
மனித உரிமைக்களுக்கான
மயானக்கொல்லை!

ஆலிவ் கிளையொன்றை
அலகில் ஏந்திவந்து
புறா வேடமிடும்
புராதனக் கழுகு.

எண்ணெயைத் தேடி.. .
எரிக்கப்படும் பூமி!
மனிதர்கள் விறகுகள்.

உலோகக்கிரீடம் இது
உடையாது என்றவர்கள்
தலைவலிகளின் காரணமென்று
தா(மத)மாகச் சொன்னார்கள்!

பலவந்தமாக அகற்றியப்பின்னர்
இப்போது நடக்கிறது
புறா வேட்டை…
புதிய மகுடத்தின் சிறகுகளுக்காக..!

அடர் கானக மன விலங்குகள்
வக்கிர கூச்சலோடு
வனம் விட்டு வந்து …
சமவெளிகளில் சல்லாபங்கள்
குருதிப்புனலில் குளியல்கள்!

ஆயுத வியாபாரிகளின்
அதிரடி விற்பனையில்
பூக்களும் இலவசமாக..!
பரிசளிக்க
மரணங்களுக்குப்பின்
மலர் வளையங்கள்!

முடைநாற்ற மவுனச் சேற்றில்
மூழ்கி விட்ட மனசாட்சிகள்
தேம்பி அழுவதற்கேனும்
தீர்ப்பு நாளுக்காக காத்திருக்கும்..!

ஆக்கம்: இப்னு ஹம்துன்


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.