முத்தான அறிவுரைகள் மூன்று!

Share this:

தோழர் ஒருவர் வந்திருந்து
…தூதர் நபியைக் கண்டிருந்து
ஆழம் மிகுந்த செய்தியொன்றை
..ஆவற் றதும்பக் கேட்கையிலே
வாழும் மனிதர் யாவருக்கும்
…வாய்ப்பாய் அமையும் அச்செய்தி
பேழை மனத்தில் கொள்வதற்குப்
…பெரியோன் தூதர் சொன்னதென்ன?:

தொழுகை செய்யும் பொழுதுகளில்
..தொடரா வாழ்க்கை நினைத்திடுக
பழுதுச் சொற்கள் உரைக்காமல்
…பிந்தை வருத்தம் தவிர்த்திடுக
அழிவே ஆகும் பிறருடைமை
.. அடைய நினைத்தல் பெருந்தவறே
மொழிந்த மூன்றும் அறவுரைகள்
…மனிதர் யாரும் சிறப்புறவே!

தூதர் மொழிந்த சொற்களிலே
…தூய வழிகள் உள்ளதுவே
ஆதி முதல்வன் தாள்பணிந்து
…ஆற்றும் வணக்கம் ஆக்கமுற
யாதும் பிறிதின் எண்ணமற
…ஒன்றும் உளமே உயர்வடையும்
சேதி இதனைக் கொள்ளுபவர்
…செல்லும் வழியில் வெற்றிகளே!

இரண்டாம் செய்தி உரைப்பதுவும்
…இனிய சொற்கள் மொழிந்திடுக
திரண்டப் பேச்சில் திளைக்காமல்
…திரு-வாய்(ச்) சொற்கள் செலவிடுக
முரண்டு கோபம் அடையாமல்
…முடிவில் துன்பம் வாராமல்
அரணாய் நாவை அமைத்துவிடின்
…அதுவே ஓங்கும் அருங்குணமே!

வேண்டாம் ஆசை மற்றவர்தம்
…உடைமை ஆகும் எப்பொருளும்
சீண்டும் இச்சை சீரழிவே
…சிந்தை நச்சாய் மாறிவிடும்
நீண்ட வாழ்வில் நிம்மதிக்கு
…நீத மான இச்செய்தி
மூன்றாம் செய்தி என்றிருந்தும்
…’முதலா’ய்க் கொள்ளத் தக்கதுவே!

சந்தை போலும் இவ்வுலகம்
….சற்றே சுற்ற வந்துவிட்டோம்
இந்தச் செய்தி மூன்றினையும்
…என்றும் எண்ணி வாழ்ந்துவரின்
எந்தக் கேடும் சேராதே
…எளிய வெற்றி நம்வசமே
விந்தை என்ப ஏதுமிலை
…ஒழுங்கில் செல்லும் வாழ்வொன்றே

oOo

தொடர்பான திருக்குறள்கள் சில:

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.

சொல்லுக சொல்லின் பயனுடைய சொல்லற்க
சொல்லின் பயனிலாச் சொல்.

உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல்

oOo

Comprehensive Prophetic advice:

A man came to the Prophet ﷺ and asked, “Can you give me some short and concise advice?”
He ﷺ replied, “When you stand up to pray, then pray as if you are about to depart from this world. And never say anything that you will have to apologize for tomorrow. And stop desiring what is in other people’s possessions” [Reported by Aḥmad in his Musnad].

May Allah guide us to perfection in all of these areas!

.


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.