தோழியர் – 10 உம்மு குல்தூம் பின்த் உக்பா أم كلثوم بنت عقبة

Share this:

உம்மு குல்தூம் பின்த் உக்பா

أم كلثوم بنت عقبة

மக்கத்துக் குரைஷிகளுடன் ஹுதைபிய்யா உடன்படிக்கை ஏற்படுத்திக்கொண்டு முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் முஸ்லிம்களும் மதீனா திரும்பியிருந்த நேரம். ஒரு நாள் மக்காவிலிருந்து பெண்ணொருவர் மதீனா வந்து சேர்ந்தார். நிறைய அலைச்சல், உளைச்சலுடன் கடினமான, தன்னந்தனியான பயணம். அவ்வளவு இன்னலுக்கும் அவருக்கு இருந்த ஒரே காரணம் – அதற்குமேல் தடுத்து வைக்க இயலாமல் அவர் வெளிப்படுத்த விரும்பிய உண்மை.

 


நீண்ட காலத்திற்கு முன்னரே அவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டிருந்தார். திருமணம் ஆகாமல் குடும்பத்தினர் பாதுகாவலில் இருந்துவந்த அவரால் தம்மிச்சையாக ஏதும் செய்ய இயலாத நிலை. ‘எத்தனை காலம்தான் பொறுத்திருப்பது; பொங்கியெழு’ என்று ஒரு கட்டத்தில் தோன்றிவிட்டது. தடைகளை எல்லாம் கட்டுடைத்து நபியவர்களிடம் சென்றுவிட வேண்டும்; பகிரங்கமான முஸ்லிமாய் முஸ்லிமுக்குரிய அனைத்து உரிமைகளுடனும் வாழவேண்டும் என்று திட்டவட்டமான முடிவு மனதில் ஏற்பட்டுவிட, கிளம்பி மதீனாவுக்கு வந்து சேர்ந்து விட்டார்.

அந்தப் பெண்ணுக்கு இரு சகோதரர்கள். தங்களின் சகோதரி மதீனாவுக்குச் சென்றுவிட்டார்; முஹம்மதிடம் சென்றுவிட்டார் என்று தெரிந்ததும் ‘மெனக்கெட்டு நாம் வடிவமைத்த ஹுதைபிய்யா உடன்படிக்கையை மதிக்காமல் கெட்டுப்போய்விட்டது அவளது புத்தி; அதிலிருந்த அம்சங்கள் அவளுக்குப் புரியவில்லை போலும்; பெண் புத்தி பின்னே எப்படி இருக்கும்?’ என்று பொங்கி எழுந்தார்கள். உடன்படிக்கையில் இருந்த ஓர் அம்சம் அவர்களுக்கு நன்றாகத் தெரியும். இப்படியெல்லாம் நடக்கலாம் என்று யூகித்து, குரைஷிகள் அடாவடியாய்ச் செருகியிருந்தார்கள். அதைக்கொண்டு நம் தங்கையை முஸ்லிம்களே பத்திரமாக நம் கையில் ஒப்படைக்க வைப்போம் என்று பின்னாலேயே கிளம்பி அடுத்த ஒரு சில நாள்களில் அவர்களும் மதீனா வந்து சேர்ந்தார்கள்.

விஷயம் நபியவர்களிடம் வந்தது. “ஓ முஹம்மதே! உமது கடமையை நிறைவேற்றுவீராக!” என்றார்கள். என்ன ஏது என்று விசாரித்தால், ‘நினைவு இருக்கிறதா ஹுதைபிய்யா உடன்படிக்கை’ என்று அகங்காரப் பேச்சு.

அப்பொழுது இடைமறித்தார் அந்தப் பெண் – உம்மு குல்தூம் பின்த் உக்பா, ரலியல்லாஹு அன்ஹா.

“அல்லாஹ்வின் தூதரே! அவர்களது முறையீட்டில் குறை உள்ளது. விதி எதுவும் மீறப்படவில்லை; தாங்கள் என்னைத் திருப்பி அனுப்பவும் தேவையில்லை.”

புருவங்கள் உயர அனைவரும் வியப்புடன் நோக்கினர். உடன்படிக்கையில் கண்டிருந்த தனக்குப் பாதுகாப்பான அந்த முடிச்சைத் தங்கை அவிழ்த்துப்போட, அதிர்ந்து போனார்கள் அவருடைய சகோதரர்கள்!

oOo

நபியவர்களின் மருமகனான உதுமான் இப்னு அஃப்பான் ரலியல்லாஹு அன்ஹுவின் சகோதரிதான் உம்மு குல்தூம் பின்த் உக்பா. ஒரே தாய் வயிற்றில் – ஆனால் அந்தத் தாயின் இரு வேறு கணவர்களுக்குப் பிறந்த சகோதரன், சகோதரி. நபியவர்களுக்கு உதுமான் மருமகனாக அமைந்ததோ பின்னர் நிகழ்ந்தது; ஆனால், அதற்கு முன்பே குடும்ப உறவு அமைந்திருந்தது – நபியவர்களின் அத்தையின் பேரன் உதுமான் என்ற உறவு. பின்னர் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் கலீஃபா உதுமானின் வரலாற்றை நாம் அணுகும்போது தேவைப்படலாம் என்பதால் அந்த உறவு முறையை சுருக்கமாய் இங்குப் பார்த்து விடுவோம்.

அப்துல் முத்தலிபுக்கு உம்மு ஹகீம் என்றொரு மகள் இருந்தார். இவரை அல்-பைதா என்று அழைப்பார்கள். ஸஃபிய்யா பின்த் அப்துல் முத்தலிப் ரலியல்லாஹு அன்ஹாவைப்போல் இவரும் நபியவர்களுக்கு அத்தை. ஆனால் மக்காவில் இஸ்லாம் மீளெழுச்சி பெறும் முன்னரே இவர் இறந்துவிட்டார்.

உம்மு ஹகீம் பின்த் அப்துல் முத்தலிப், குரைஸ் இப்னு ரபீஆ என்பவரைத் திருமணம் புரிந்துகொண்டார். இவர்களுக்கு ஆமிர், தல்ஹா என்று இரு மகன்களும் அர்வா, உம்மு தல்ஹா என்று இரு மகள்களும் பிறந்தனர். உம்மு ஹகீமின் மகள் அர்வாவுக்கு அஃப்பான் பின் அபூஆஸ் என்பவருடன் முதல் திருமணம் நிகழ்வுற்றது. இவர்களுக்குப் பிறந்தவரே உதுமான் இப்னு அஃப்பான். அஃப்பானுக்குப் பிறகு உக்பா இப்னு அபூமுயீத்து என்பவனை மறுமணம் புரிந்துகொண்டார் அர்வா. இந்த இருவருக்கும் பிறந்தவர்கள் அல்-வலீத், காலித் அம்மாரா, உம்மு குல்தூம் ஆகிய மூவரும்.

குரைஷிக் குலத்தின் முக்கியமான தலைவர்கள், இஸ்லாத்தின் பரம விரோதிகள் என்று உத்பா இப்னு ரபீஆ, அவன் சகோதரன் ஷைபா இப்னு ரபீஆ, அபூஜஹ்லு எனும் அம்ரு இப்னு ஹிஷாம், உமைய்யா இப்னு ஃகலஃப், அபூலஹப், உபை இப்னு ஃகலஃப், வலீத் இப்னு முகீராஹ் ஆகியோரை முன்பு அறிமுகம் செய்துகொண்டோமில்லையா – அந்தக் கூட்டத்தைச் சேர்ந்த மற்றொரு அயோக்கியன் உம்மு குல்தூமின் தகப்பன் உக்பா இப்னு அபூமுயீத்து. நபியவர்கள் தம் மனைவியின் தாய் மாமன் மகன் என்ற உறவுமுறை எல்லாம் உக்பாவின் மனத்தில் எந்தவிதமான பரிவையோ, கரிசனத்தையோ ஏற்படுத்தவில்லை. மாறாய், அவர்களை அதிகப்படியான தொந்தரவுக்கும் கொடுமைக்கும் உள்ளாக்க வரிந்துகட்டி நின்றதுதான் மிச்சம். இஸ்லாத்தின் மீதும் நபியவர்களின் மீதும் நெஞ்சம் முழுக்க அவனுக்கு அப்படியொரு வஞ்சம்.

மக்காவில் முஸ்லிம்கள்மீது குரைஷியர்கள் அக்கிரமங்களைக் கட்டவிழ்த்து விட்டிருந்த காலகட்டம். ஒருநாள் கஅபாவில் நபியவர்கள் தொழுது கொண்டிருந்தார்கள். அவர்கள் அங்கு வந்து, குரைஷியருக்குப் புரியாத புதிய முறைப்படித் தொழுதுவிட்டுச் செல்வதெல்லாம் அவர்கள் நன்கு அறிந்திருந்த விஷயம். ஆனால் அதை அவர்களால் நேரடியாகத் தடுத்து நிறுத்த முடியாத சூழ்நிலையும் நிலவி வந்தது. என்ன உபத்திரவம் செய்து அதைத் தடுக்கலாம் என்ற நினைப்பில் இருந்தவர்களுக்கு அன்று அபூஜஹ்லு ஒரு யோசனை சொன்னான்.

‘ஒட்டகத்தின் மலக்குடலை யாராவது எடுத்து வாருங்கள்’

கிடுகிடுவென்று ஓடிய உக்பா, துர்நாற்றம் வீசும் ஒட்டகத்தின் குடலை எங்கிருந்தோ எடுத்து வந்தான். தரையில் சிரம் பதித்து நபியவர்கள் தொழுகையின் ஸஜ்தா நிலையில் இருந்த நேரம். அவர்களது முதுகில் அவன் அதைப் பொத்தென்று போட்டான். தொழுகையில் இருந்த நபியவர்களுக்கு அது அதிர்ச்சியை அளிக்க, பகைவர்களோ பொத்துக்கொண்டு சிரித்தார்கள்.

தோராயமாய் 700 கிலோ எடையுள்ள ஒட்டகத்தின் குடல் கனிசமான எடை கொண்டது. குப்புற இருப்பவரின் முதுகில் அதைத் தூக்கிப்போட்டால் அவ்வளவு எளிதில் அதை உதறிவிட்டு எழுந்துவிட முடியாது. சொல்லி மாளாத வேதனை, அவமானம், அதிர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டு ஸஜ்தாவில் இருந்தார்கள் நபியவர்கள். அந்நேரம் யதேச்சையாக அவ்வழியே வந்தார் நபியவர்களின் மகள் ஃபாத்திமா ரலியல்லாஹு அன்ஹா. தம் தந்தையை அந்நிலையில் காணும் மகளுக்கு எப்படி இருக்கும்? அதிர்ந்துபோனவர் ஓடிவந்து அந்த நாற்றமெடுத்த பொருளை இறக்கிப்போட்டார். கருணை வடிவான அந்த உத்தம நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பொறுமையை உடைத்த செயல் அது. இறைவனின் சாபம் அந்த துஷ்டர்கள் மீது வந்து விடியப் பிரார்த்தித்துவிட்டார்கள் நபியவர்கள். அதில் அவர்கள் பெயரிட்டுக் குறிப்பிட்டது அபூஜஹ்லு, உத்பா இப்னு ரபீஆ, ஷைபா இப்னு ரபீஆ, அல் வலீத் இப்னு உத்பா, உமைய்யா இப்னு ஃகலஃப், உக்பா இப்னு முயீத்து. நிறைவேறியது! சற்றும் விலக்கில்லாமல் அந்தப் பிரார்த்தனை பின்னாளில் நிறைவேறியது. அவர்களுள் ஒருவர்கூட மீதியின்றி அனைவரும் கொல்லப்பட்டார்கள் – பத்ருப் போரில்.

மற்றொரு நாள். நபியவர்கள் மக்களிடம் எப்பொழுதும்போல் இஸ்லாமியப் பிரச்சார உரையாற்றிக் கொண்டிருந்தார்கள். அங்கு வந்தான் உக்பா. என்ன தோன்றியதோ, தானும் நின்று அதைக் கேட்டான். பிறகு ஏதும் பேசாமல் வந்துவிட்டான். இது அவனுடைய உற்ற நண்பன் உபை இப்னு ஃகலஃபுக்குத் தெரிய வந்துவிட்டது. ‘ஜென்ம விரோதி முஹம்மது. அவர் பேசுவாராம். இவன் அங்கு நின்று கதை கேட்டு வருவானாம்’ என்று ஆத்திரப்பட்டவன், உக்பாவை அழைத்தான். ‘அறிவு இருக்கிறதா உனக்கு?’ என்பதுபோல் ஆரம்பித்துக் கன்னாபின்னாவென்று திட்டு விழுந்தது. ரோஷம் பொங்கிவிட்டது உக்பாவுக்கு.

‘சரி இப்பொழுது நான் என்ன செய்ய?’ என்றான் உக்பா.

‘அப்படிக் கேள்’ என்ற உபை, யோசனை ஒன்று சொன்னான். கெட்ட யோசனை. அதைக் கேட்டு நபியவர்களைத் தேடிக்கொண்டு வந்தான் உக்பா. எவ்விதக் கூச்சமோ, தயக்கமோ இல்லாமல் நபியவர்களின் முகத்தில் காறி உமிழ்ந்தான். உத்தம நபியின் திருமுகத்தில் அயோக்கியனின் எச்சில்.

அடுத்து ஒருமுறை கஅபாவின் ஹஜருல் அஸ்வத் கல்லின் அருகில் நபியவர்கள் தொழுது கொண்டிருந்தார்கள். அங்கு வந்த உக்பா தோள் துண்டு ஒன்றை எடுத்து நபியவர்களின் கழுத்தை பலம் கொண்ட மட்டும் இறுக்கியிருக்கிறான். அந்நேரம் அவ்வழியே வந்திருக்கிறார் நபியவர்களின் அணுக்கத் தோழர் அபூபக்ரு ரலியல்லாஹு அன்ஹு. உக்பாவின் தோளைப் பிடித்து இழுத்துத் தள்ளி, “ஒரு மனிதர் தம் இறைவன் அல்லாஹ் ஒருவனே என்று சொல்வதற்காக அவரைக் கொலையே செய்துவிடுவாயோ?” என்று அவனை எதிர்த்துப் பேசி, அல்லாஹ்வின் தூதரை அவனுடைய பிடியிலிருந்து மீட்டெடுத்தார்.

இப்படியெல்லாம் நபியவர்களைச் சித்திரவதை செய்வதே பொழுது போக்கு என்று திரிந்துகொண்டிருந்த உக்பாவின் மகள் உம்மு குல்தூம்தாம் மக்காவில் இஸ்லாம் மீளெழுச்சி பெற்ற ஆரம்பத் தருணங்களிலேயே உண்மை உணர்ந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு முஸ்லிமாகிவிட்டார். எவ்வித வலியுறுத்தலும் இன்றித் தம் சுயசிந்தனையில் தேர்ந்து எடுத்த முடிவு அது. இஸ்லாத்தை அழிக்க உறுதிபூண்டு அலைந்து திரிந்து கொண்டிருந்தவனின் வீட்டிலேயே இஸ்லாமிய விதையைத் தூவிய இறைவனின் மாபெரும் விசித்திரத் தீர்ப்பு அது.

‘இஸ்லாம் விரிவடைந்துகொண்டே போகிறது; எவ்வளவு அடித்தாலும் உதைத்தாலும் சூடு போட்டாலும் கொன்று போட்டாலும் இந்த முஸ்லிம்கள் தங்களது மதத்தை விடுவதாய் இல்லை; முஹம்மதும் தமது பிரச்சாரத்தை நிறுத்துவதாய் இல்லை. ஏக இறைவன், பண்டைய வேதம் என்று ஏதேதோ சொல்கிறார். இதைப் பற்றிய ஞானம் யூதர்களுக்கும் கிறித்தவர்களுக்கும்தா்தாம் உண்டு. ஒன்று செய்வோம். யத்ரிபில் யூதர்கள் இருக்கிறார்கள். அங்கு ஆளனுப்பி ஏதாவது யோசனை கேட்போம். இவரது பேச்சில் உண்மை இருக்கிறதா, மனம்போன போக்கில் கற்பித்துப் பேசுகிறாரா என்பது தெரிந்துவிடும்,’ என்று முடிவெடுத்தார்கள் குரைஷிகள். அதற்கு இருவர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

ஒருவன் அந்-நத்ரு இப்னுல் ஹாரித். கலப்படமற்ற தீய குணம் அவனது சிறப்புத் தகுதி. அல்லாஹ்வின் தூதருக்கு எதிராகவும், குர்ஆன் வசனங்கள் மீது அவதூறு சொல்லியும் பிரச்சாரம் புரிவது அவனுக்கு முழுநேரத் தொழிலாகவே இருந்துள்ளது. “முஹம்மது சொல்வதையெல்லாம் நீங்கள் யாரும் கேட்கவேண்டாம். இறைவேதம் என்று அவர் அறிவிப்பதெல்லாம் பண்டைய புராணக் கதைகளே. வேண்டுமானால் அதைவிடச் சிறப்பான புத்தகங்கள் கதைகள் எல்லாம் என்னிடம் இருக்கின்றன” என்று எதிர்ப்பிரச்சாரம். குர்ஆனுக்கு எதிரான அவனது துர்ச்செயல்களைக் கண்டித்து இறைவன் குர்ஆனிலேயே எட்டு இடங்களில் குறிப்பிட்டு வசனம் இறக்கியுள்ளான். மற்றொருவன் உக்பா இப்னு அபூமுயீத்து.

இவர்கள் இருவருக்கும் குரைஷிப் பெருசுகள் அறிவுரை சொல்லி வழி அனுப்பிவைத்தனர். மருத்துவரிடமும் வழக்கறிஞரிடமும் பொய் சொல்லக்கூடாது என்பது அந்தக் காலத்திலேயே இருந்திருக்கும் போலிருக்கிறது. “யூத மத அறிஞர்களைச் சந்தித்துப் பேசுங்கள். முஹம்மதைப் பற்றித் தெளிவாய் அவர்களுக்கு விவரியுங்கள். அவர் நமக்கு என்னென்ன சொல்கிறாரோ அவற்றையெல்லாம் எதுவும் மறைக்காமல் உள்ளது உள்ளபடியே அவர்களிடம் சொல்லுங்கள். பண்டைய இறைத் தூதர்கள், வேதங்கள் பற்றிய ஆழ்ந்த ஞானம் அவர்களுக்கு உண்டு. ஆலோசனை கேட்டு வாருங்கள்.”

யத்ரிப் சென்ற இருவரும் யூத அறிஞர்களைச் சந்தித்தார்கள். விலாவாரியாக விவரித்தார்கள். அந்த யூத அறிஞர்களும் தாடியை நீவிவிட்டுக் கொண்டே, ‘நன்றாக நறுக்கென்று கேளுங்கள்’ என்று நபியவர்களிடம் கேட்கும்படி மூன்று கேள்விகள் தெரிவித்தார்கள்.

“இந்த மூன்று கேள்விகளுக்கும் அவர் மட்டும் நம்பகமான பதிலைச் சொல்லிவிட்டால் அவர் அல்லாஹ்வின் தூதர்தாம். இதற்கு அவரிடம் பதில் இல்லை என்றால் அவர் சொல்வதெல்லாம் பம்மாத்து. நீங்கள் அவரை என்னவேண்டுமானாலும் செய்து கொள்ளலாம்.”

“அந்த மூன்று கேள்விகள்?”

“பண்டைய காலத்தைச் சேர்ந்த இளைஞர்களைப் பற்றிய விசித்தரமான நிகழ்வு என்ன? உலகின் அனைத்துப் பகுதிகளுக்கும் கிழக்கு மூலைக்கும் மேற்கு மூலைக்கும் பயணம் புரிந்தவரைப் பற்றிய செய்தி என்ன? ஆன்மாவைப் பற்றிய ரகசியம் என்ன?”

‘பலே! சூட்சமமான கேள்விகள்தாம்’ என்று ஓலையில் எழுதிக் கக்கத்தில் வைத்துக்கொண்டு மக்காவுக்குத் திரும்பியவர்கள் செய்தியைக் குரைஷிகளிடம் சொல்ல, நபியவர்களிடம் கேள்விகள் முன்வைக்கப்பட்டன. சிலநாள் கழித்து விரிவான பதில் அளித்து, குர்ஆனின் பதினெட்டாம் அத்தியாயமான அல்-கஹ்ப் வெளியானது. யூதர்கள் கேட்கச் சொன்ன கேள்விகளுக்குச் சரியான விளக்கம் அளித்திருந்தான் இறைவன்.

நபியவர்களின் திருப்திகரமான பதிலைக் கேட்டதும், அந்தக் குரைஷிகள் யோக்கியர்களாய் இருந்தால் என்ன செய்திருக்க வேண்டும்? ஏக இறைவனின் மீதும் நபியவர்களின் மீதும் நன்னம்பிக்கை ஏற்பட்டு இஸ்லாத்தில் நுழைந்திருக்க வேண்டும். ஆனால் வேதாளங்கள் ஈச்ச மரம் ஏறின!

பிறகு வரலாற்றுப் பக்கங்கள் உருண்டு, முஸ்லிம்கள் மதீனாவுக்குப் புலம்பெயர்ந்து அடுத்த இரண்டாம் ஆண்டு பத்ருப் போர் முஸ்லிம்கள் மீது திணிக்கப்பட்டது. முஸ்லிம்களின்மீது சேர்த்து வைத்திருந்த ஆத்திரத்தை ஒன்று சேர்த்துத் ‘தாம் தூம்’ என்று கிளம்பியது குரைஷிகளின் படை. இத்துடன் தீர்ந்தது இந்த முஸ்லிம்களின் பிரச்சினை. அனைவரையும் ஒழித்துக் கட்டிவிட்டுத் திரும்புவோம் என்று ஏக ஆரவாரம், பரபரப்பு. களத்தில் சண்டை போடும் தகுதியுள்ள ஒவ்வொரு ஆணும் குரைஷிப் பெருந்தலைகளும் படையில் சேர்ந்துவிட்டனர். உமைய்யா இப்னு ஃகலஃப் என்றவன் மட்டும் வரவில்லை. வயது முதிர்ச்சியுற்றவன் அவன். தவிர கொழுத்த தடித்த சரீரம். உள்ளூரில் கஅபா அருகில் அமர்ந்துகொண்டு துஷ்டத்தனம் புரிவது எளிது. போரில் என்றால் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க ஓடவேண்டும், அதுவும் மதீனாவரை பயணமாம். இதெல்லாம் நம் உடம்புக்கு சரிப்படாது என்று தங்கிவிட்டான்.

முஸ்லிம்களைத் தீர்த்துக்கட்டி விடுவோம் என்று தீவிர நம்பிக்கையிலும் மமதையிலும் இருந்த குரைஷிகளுக்கு இது பொறுக்கவில்லை. ‘நல்லதொரு வாய்ப்பை நழுவ விடுகிறானே மடையன்’ என்று உக்பாவும் அபூஜஹ்லும் உமைய்யாவின் வீட்டிற்கு வந்தனர். உக்பாவின் கையில், நறுமணப் புகை போட உதவும் சாம்பிராணிச் சட்டி இருந்தது. அபூஜஹ்லிடம் பெண்களின் அழகு சாதனப் பொருட்கள்.

உமைய்யாவின் கைகளில் அந்தச் சட்டியைக் கொடுத்த உக்பா, “ஏ அபூஅலீ! இந்தா உனது அறையில் இதைக்கொண்டு தூபம் போட்டுக் கொள். பெண்களின் அறைக்கு அதுதான் அழகு,” என்றான்.

பெண்களின் அலங்காரப் பொருட்களை உமைய்யாவிடம் கொடுத்தான் அபூஜஹ்லு. “ஏ அபூஅலீ! இதைக்கொண்டு நன்றாக அலங்காரம் செய்து கொள்.”

ஒருவனை உசுப்பேற்ற இதைவிட வேறென்ன வேண்டும்? அவர்கள் இருவரையும் தன் கைகளில் அவர்கள் தந்தவற்றையும் மாறி மாறிப் பார்த்தான். வேகமாய்த் தூக்கி எறிந்துவிட்டு, “மக்காவிலேயே சிறந்த பலமான ஒட்டகத்தைக் கொண்டுவாருங்கள்” என்று எழுந்து நின்றான் உமைய்யா. என்ன செய்வது? இறைவன் நிர்ணயித்திருந்த அவனது விதி அவனுக்காக பத்ரில் காத்திருந்தது.

இப்படியாக ஓயாது உறங்காது அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எதிராக ஓடியாடி உழைத்தானே உக்பா இப்னு அபூமுயீத்து, பத்ருப் போரில் குரைஷிகள் மோசமான தோல்வியைத் தழுவ, இவன் முஸ்லிம்களால் சிறைபிடிக்கப்பட்டான். பெருந்தலைகள் பலர் கொல்லப்பட்டிருந்தனர். 70 பேர் போர்க் கைதிகளாகக் கைப்பற்றப்பட்டிருந்தனர். அந்த எழுபது பேரில் இருவரான உக்பாவுக்கும் அந்-நத்ரு இப்னுல் ஹாரிதுக்கு மட்டும் சிறப்புப் பரிசு காத்திருந்தது. ‘சிரச் சேதம்’ என்று தீர்ப்பளித்தார்கள் நபியவர்கள். இர்க் அல்-ஸுப்யாஹ் எனும் பகுதியை முஸ்லிம் படைகள் வந்தடைந்தபோது உக்பாவின் தலையைக் கொய்ய நபியவர்கள் ஆணையிட்டார்கள்.

மமதையும் அகங்காரமும் தலைக்கேறி, நபியவர்கள் தொழுகையில் இருக்கும்போதெல்லாம் மாறி மாறி அக்கிரமம் புரிந்தவன், அவர்களது கழுத்தை நெரித்தவன், மிதித்தவன் இப்பொழுது தன் கழுத்தருகே வாள் வரப்போகிறது என்றதும் அனைத்தும் மறந்தான். தற்பெருமை, இறுமாப்பு எல்லாம் ஓடி மறைந்தன. “ஓ முஹம்மதே! என் பிள்ளைகளின் கதி?” என்று கதறினான். தனக்காகக் கருணை கிட்டப்போவதில்லை. பிள்ளைகளைக் காட்டியாவது இரக்கம் ஈட்டலாம் என்ற கட்டக் கடைசி முயற்சி அது.

“நெருப்பு” என்று பதில் அளித்தார்கள் நபியவர்கள். உனக்கும் உன்னைப் போலவே உன் பிள்ளைகள் இருந்தால் அவர்களுக்கும் இறுதி இடம் நரக நெருப்புதான் என்பதாக அந்தப் பதிலுக்கு விளக்கமளித்துள்ளார்கள் அறிஞர்கள்.

அலீ ரலியல்லாஹு அன்ஹுவின் வாள் உக்பாவின் தலையைக் கொய்தது. மற்றொரு அறிவிப்பில் அந்தத் தண்டனையை நிறைவேற்றியவர் ஆஸிம் இப்னு தாபித் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தண்டனையை நிறைவேற்றியது அலீயோ, ஆஸிமோ தரையில் உருண்டு விழுந்தது உக்பாவின் தலை என்பது சர்வ நிச்சயம்.

தம் தந்தையின் கொடிய செயல்களையும் அட்டூழியங்களையும் இறுதியாக அவனுக்கு வந்து வாய்த்த விதியையும் சகித்துக்கொண்டு திடமான மன உறுதியுடன் இஸ்லாத்தில் நிலைத்திருந்தார் உம்மு குல்தூம். குலப்பெருமையும் குருடாகிப் போன இதயமும் எந்த அளவிற்கு உண்மையை உணர மறுக்கிறதோ அதைவிடப் பன்மடங்கு அதிகமான வலிமை தெளிவான உள்ளங்களுக்கு ஏற்பட்டுவிடுகிறது. ஏக இறைவனை ஏற்ற நொடி முதல் அனைத்துச் சோதனைகளுக்கும் அவை தயாராகி விடுகின்றன. இதற்கு வரலாற்றில் ஒளிந்திருக்கும் சான்றுகள் எக்கச்சக்கம். நமக்கு நிறைய பாடங்கள் அதில் பொதிந்துள்ளன.

oOo

ஹுதைபிய்யா உடன்படிக்கை! இஸ்லாமிய வரலாற்றில் மிக முக்கியமான ஓர் அத்தியாயம். அதைக் குறித்துப் பக்கம் பக்கமாய் அறிஞர்கள், வரலாற்று ஆசிரியர்களின் வியப்பும் விளக்கமும் ஆராய்ச்சிக் கட்டுரைகளும் குவிந்துள்ளன. விஷயம் என்ன? வெகு சுருக்கமாய்ப் பார்த்துவிடுவோம்.

மக்காவிலிருந்து புலம்பெயர்ந்து மதீனா வந்துவிட்டார்கள் முஸ்லிம்கள். மதீனாவில் இஸ்லாமிய மீளெழுச்சி ஆழப்பதிந்து பரவி இஸ்லாமிய ஆட்சியும் நிலைப்படுத்தப்பட்டுவிட்டது. ஆனால் மக்கத்துக் குரைஷிகள் அளித்துவந்த தொந்தரவும், நிலவி வந்த பகையும் முற்றுப்பெறவில்லை. அந்த வேதனை ஒருபுறமென்றால் மக்காவில் அமைந்திருந்த கஅபாவுக்குச் சென்று புனிதக் கடமைகளை நிறைவேற்ற முடியாத சோகம் பெரும் சோகமாய் இருந்து வந்தது முஸ்லிம்களுக்கு. குரைஷிகளுக்கோ தாங்கள் தொடர்ந்து போரில் தோற்ற அவமானமும் அதனால் ஏற்பட்டுப் போயிருந்த இழப்பும் பொருளாதார நெருக்கடிகளும் என்று முஸ்லிம்கள்மீது சொல்லி மாளாத வெறுப்பு.

இந்நிலையில் ஒருநாள் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 1,400 முஸ்லிம்களுடன் யாத்ரீகர்களுக்கான இஹ்ராம் உடை அணிந்துகொண்டு, பலிப் பிராணிகளை இழுத்துக்கொண்டு உம்ரா கடமையை நிறைவேற்ற அமைதிப் பயணம் கிளம்பினார்கள். அவர்கள் அனைவருக்கும் உள்ளர்த்தம் எதுவும் இல்லாத ஒரே நோக்கம் – அமைதியான முறையில் மக்கா சென்று கஅபாவில் உம்ரா நிறைவேற்றித் திரும்புவது. வெகு எளிய நோக்கம்.

மக்காவுக்குச் செய்தி வந்து சேர்ந்தது. வெகுண்டெழுந்த குரைஷிகள் ‘உம்ராவோ, உல்லாசப் பயணமோ. அதெல்லாம் முடியாது. மக்காவுக்குள் நுழைய அவர்களுக்கு அனுமதி கிடையாது’ என்று சொல்லிவிட்டனர். மதீனாவிலிருந்து மக்கா நகருக்கு அருகே வந்துவிட்டனர் முஸ்லிம்கள். அங்கேயே தங்கிக்கொண்டு மக்காவுக்குத் தூதுவரை அனுப்பினார்கள். இரு தரப்பிலும் மாறி மாறிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. எதுவும் சரிவரவில்லை. முஸ்லிம்களுக்கு அந்த ஆண்டு அனுமதியில்லை என்று உறுதியாக நின்றார்கள் குரைஷிகள். இறுதியில் உடன்படிக்கை உருவானது.

அப்படி அமைதி ஒப்பந்தம் உருவாக்குவதிலும் ஏகப்பட்ட அடாவடித்தனம் செய்தார்கள் குரைஷியர்கள். பார்த்துப் பார்த்துத் தங்களுக்குச் சாதகமாக விதிகளை அமைத்துக் கொண்டார்கள்.  அவற்றுள் இங்கு நமக்கு முக்கியமானது அந்த உடன்படிக்கையில் அமைந்திருந்த ஒரு விதி. “குறைஷிகளில் யாராவது தமது பாதுகாவலரான நெருங்கிய உறவினன் அனுமதியின்றி, தப்பித்து முஹம்மதிடம் வந்து சேர்ந்தால் முஹம்மது அவரைக் குறைஷிகளிடம் திருப்பி அனுப்பி விடவேண்டும். ஆனால், முஹம்மதிடம் உள்ளவர்களில் யாராவது தப்பித்துக் குறைஷிகளிடம் வந்துவிட்டால் அவர் முஹம்மதிடம் திருப்பி அனுப்பப்பட மாட்டார்.” சுருக்கமாய்ச் சொன்னால், ‘எனக்கு அவல்; உனக்கு உமி!’

நபித் தோழர்களுக்கு அவற்றையெல்லாம் பார்த்துச் சகிக்கமுடியாத வேதனை; குரைஷிகளின்மீது தாங்க இயலாத கோபம். ஆனால் அனைத்தையும் பொறுத்துக் கொண்டு அந்த உடன்படிக்கையை ஏற்றுக்கொண்டார்கள் நபியவர்கள். வேடிக்கை என்னவென்றால், எவைவெல்லாம் தங்களுக்குச் சாதகம் என்று நினைத்துக் குரைஷிகள் விதி அமைத்தார்களோ அவையெல்லாம் வெகு சில மாதங்களிலேயே அவர்களுக்கு நேர் எதிராய் அமைந்து போனது இறைவனின் விதி.

நாம் உம்மு குல்தூமின் நிகழ்வுக்கு வருவோம். இந்த உடன்படிக்கைக்குப் பிறகு மதீனா புலம்பெயர்ந்த முதலாமவர் உம்மு குல்தூம். அல்லாஹ்வுக்காகவும் அவனுடைய தூதருக்காகவும் பெற்றோரின் இல்லத்தைவிட்டுத் தனியாளாகப் புலம்பெயர்ந்தார் அவர். தனியாகவே மதீனாவுக்குப் பயணப்பட்டிருக்கிறார். வழியில் பனூ குஸாஆ குலத்தைச் சேர்ந்தவர் ஒருவர் அவரைப் பார்த்து வழித்துணையாக, பத்திரமாக மதீனாவரை கொண்டுவந்து சேர்த்திருக்கிறார்.

உம்மு குல்தூமுக்கு அம்மாரா, அல்-வலீத் என்று இரு சகோதரர்கள் என்று கட்டுரையின் துவக்கத்தில் பார்த்தோமே, அவர்கள் தங்களின் சகோதரி மதீனாவுக்குச் சென்றுவிட்டார் என்று தெரிந்ததுமே பொங்கி எழுந்தார்கள். உடன்படிக்கையில் இருந்த அம்சம் அவர்களுக்கு நன்றாகத் தெரியும். எனவே அதைக்கொண்டு நபியவர்களை மடக்கி அவர்களே நம் தங்கையைப் பத்திரமாகத் நம் கையில் ஒப்படைக்க வைப்போம் என்று பின்னாலேயே கிளம்பி அடுத்த ஒரு சில நாட்களில் அவர்களும் மதீனா வந்து சேர்ந்தார்கள்.

நபியவர்களைச் சந்தித்து, “ஓ முஹம்மதே! உமது கடமையை நிறைவேற்றுவீராக!” என்றார்கள்.

உம்மு குல்தூம் சுட்டிக் காட்டினார். “அல்லாஹ்வின் தூதரே! விதி எதுவும் மீறப்படவில்லை. அந்த உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதோ ஆண்களைப் பற்றி மட்டுமே. நானோ பெண். எனவே அது என்னைக் கட்டுப்படுத்தாது. தாங்கள் என்னைத் திருப்பி அனுப்பத் தேவையில்லை. என்னைத் தாங்கள் திருப்பி அனுப்பிவிட்டால் அவர்கள் என்னை இஸ்லாத்தின் காரணமாய்த் துன்புறுத்துவார்கள் என அஞ்சுகிறேன்.”

அரபு மொழியில் எழுதப்பட்டிருந்த அந்த உடன்படிக்கை ‘எங்களைச் சேர்ந்த ஒருவர், உங்களைச் சேர்ந்த ஒருவர்’ என்று குறிப்பிட்டிருந்தது எல்லாம் ஆண் பாலில். ஒரு பெண் சுயேச்சையாய் இத்தகைய காரியம் புரிவாள் என்பது குரைஷிகள் சற்றும் எதிர்பாராதது. எனவே பெண்களையும் கருத்தில் கொண்டு அவர்கள் உடன்படிக்கை வரையவில்லை. இப்பொழுது அதுவே அவர்களுக்கு எதிர்வினை புரிந்தது.

தீர்ப்பளித்தார்கள் நபியவர்கள். ‘நமது உடன்படிக்கை மீறப்படவில்லை. உம்மு குல்தூம் திருப்பி அனுப்பப்படமாட்டார்.’

அல்லாஹ் அதை வலியுறுத்தி வசனம் இறக்கினான். ஆனால் அதற்குமுன் சுயேச்சையாய்ப் புலம்பெயர்ந்து வரும் பெண்களின் மனத்திலுள்ள மெய்யான எண்ணத்தைப் பரிசோதிக்கும்படி ஒரு கட்டளையும் இட்டான். குர்ஆனின் 60ஆவது அத்தியாயமான சூரா மும்தஹினாவின் 10ஆவது வசனம் அது.

ஈமான் கொண்டவர்களே! முஃமினான பெண்கள் ஹிஜ்ரத் செய்து (நாடு துறந்தவர்களாக) உங்களிடம் வந்தால், அவர்களை நீங்கள் பரிசோதித்துக் கொள்ளுங்கள். அல்லாஹ் அவர்கள் ஈமானை நன்கறிந்தவன். எனவே அப்பெண்கள் முஃமினானவர்கள் என நீங்கள் அறிந்தால், காஃபிர்களிடம் அவர்களைத் திருப்பியனுப்பிவிடாதீர்கள். ஏனெனில், அந்தப் பெண்கள் அந்த ஆண்களுக்கு அனுமதிக்கப்பட்டவர்களல்லர். அந்த ஆண்கள் இந்தப் பெண்களுக்கு அனுமதிக்கப்பட்டவர்களல்லர்.

புலம்பெயர்ந்து வரும் பெண்கள் கணவனிடம் கோபித்துக்கொண்டோ அல்லது வேறு ஏதேனும் உலகம் சார்ந்த விஷயத்திற்காகவோ கிளம்பி வந்துவிட்டு, இறைவனுக்காகத்தான் வந்தேன் என்று அவர்கள் சொல்லக்கூடாது என்பது நிபந்தனை.

பரீட்சித்துப் பார்ப்பது எப்படி நிகழ்ந்தது என்பதை அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் விவரித்திருக்கிறார்:
நபியவர்கள் பெண்களிடம் கேட்டிருக்கிறார்கள். “அல்லாஹ்வின் மீது ஆணையாகச் சொல்லுங்கள் – உங்களின் கணவரைப் பிடிக்கவில்லையென்று புலம்பெயர்ந்தீர்களா? ஓர் ஊரை விட்டு மற்றோர் ஊருக்குக் குடிபுகவேண்டுமென்ற நோக்கத்தில் வந்தீர்களா? உலக ஆதாயம் எதையாவது மனதில்கொண்டு வந்தீர்களா? இல்லையெனில், அல்லாஹ்வுக்காகவும் அவனுடைய தூதருக்காகவுமே நீங்கள் புலம்பெயர்ந்தீர்கள் என்பதை அல்லாஹ்வின்மீது ஆணையிட்டுச் சொல்லுங்கள்.” நபியவர்களின் கட்டளையின்படி பெண்களிடம் சத்தியம் அறிவது உமர் கத்தாபின் பணியாக இருந்திருக்கிறது. இதன்படித் தம் நோக்கத்தை உறுதிப்படுத்தினார் உம்மு குல்தூம்.

பின்னர் என்ன? குர்ஆன், நபியவர்களின் அறிவுரைகளைப் பயில்வது என்று மூழ்கி மகிழ்வது வேலையாகிப்போனது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து உம்மு குல்தூம் அறிவித்த, “பிணக்கம் கொண்ட இரு தரப்பினரிடையே இணக்கம் ஏற்படுவதற்கு நல்லவற்றை(ப் புனைந்து) கூறுபவர் பொய்யர் அல்லர்” எனும் ஹதீஸ் பிரபலமானது.

அதுநாள்வரை மணம் ஆகாதிருந்த அவருக்கு மதீனாவில் திருமணம் நடைபெற்றது. ஸைது இப்னு ஹாரிதா அவரை மணந்துகொண்டார். பனூ உமைய்யா எனும் குரைஷிகளின் உயர்குலத்தில் பிறந்த உம்மு குல்தூம் குலப்பெருமை எதுவுமின்றி அடிமையாக இருந்து விடுவிக்கப்பெற்ற ஸைதுக்கு மன மகிழ்வுடன் மனைவியானார். ஆனால் பிறகு முத்ஆ போரில் ஸைது உயிர் தியாகி ஆனதும் விதவையானார் உம்மு குல்தூம்.

ஸுபைர் இப்னுல் அவ்வாம் உம்மு குல்தூமை மறுமணம் புரிந்துகொண்டார். இவர்கள் இருவருக்கும் ஸைனப் என்றொரு மகள் பிறந்தார். பின்னர் அந்தத் திருமணம் ஏதோ காரணத்தால் முடிவுற்றுப்போக, அதன் பின்னர் அப்துர் ரஹ்மான் இப்னுல் அவ்ஃபை உம்மு குல்தூம் மூன்றாவதாக மணம் புரிந்து கொண்டார். அப்துர் ரஹ்மான் இப்னுல் அவ்ஃபை உம்மு குல்தூம் மணந்து கொள்ளவேண்டும் என்று நபியவர்கள் கூறியிருந்ததாக ஒரு குறிப்பு தெரிவிக்கிறது. உமர் கத்தாபும் இது பற்றி உம்மு குல்தூமிடம் கேட்டிருக்கிறார் – “அல்லாஹ்வின் தூதர் தாங்கள் முஸ்லிம்களின் தலைவர்களுள் ஒருவரான அப்துர் ரஹ்மான் இப்னுல் அவ்ஃபை மணந்து கொள்ளும்படி கூறியிருந்தார்களா?”

“ஆம்” என்று பதில் அளித்தார் உம்மு குல்தூம்.

அவர்கள் இருவருக்கும் ஹுமைத், இப்ராஹீம் என்று இரு மகன்கள். பிறகு அப்துர் ரஹ்மான் இப்னுல் அவ்ஃப் இறந்ததும் அம்ரு இப்னுல் ஆஸ் உம்மு குல்தூமை மணந்து கொண்டார்.

ஸைதின் மரணத்திற்குப் பிறகு முக்கியமான தோழர்கள் ஒருவர்பின் ஒருவராக இவரை மணந்து கொள்ள முனைந்ததற்கு முக்கியக் காரணம் – உம்மு குல்தூமின் இஸ்லாமியப் பற்றும் நல்லொழுக்கமும்தாம். மிகையில்லை. குலம், கோத்திரம், பணம், வரதட்சனை போன்றவை கருத்தில் கொள்ளாத ஈமானை அடிப்படையாகக் கொண்ட இல்லறம் அமைத்து வாழ்ந்த சமுதாயம் அது.

அம்ரு இப்னுல் ஆஸுடன் திருமணம் நிகழ்ந்த ஒரு மாதத்திலேயே இறந்து போனார் உம்மு குல்தூம் பின்த் உக்பா.

ரலியல்லாஹு அன்ஹா!

oOo

இன்னும் வருவர், இன்ஷா அல்லாஹ்!

<தோழியர் 7 | தோழியர் 8>


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.