தோழியர் – 17. ஸுமைய்யா பின்த் ஃகையாத் سمية بنت خياط

Share this:

ஸுமைய்யா பின்த் ஃகையாத்

سمية بنت خياط

“என் அன்பு மகனே! என்னதான் சொல்கிறார் அவர்?”
 
“அம்மா! நம்மைப் படைத்தது ஒரே இறைவனாம். நாம் அந்த ஒருவனை மட்டுமே வணங்க வேண்டும் என்கிறார். சிலைகளை வணங்கக் கூடாது எனத் தடுக்கிறார். பொய் கூடாது, விபச்சாரம் கூடாது எனச் சொல்கிறார். முக்கியமாக, மனிதர்கள் அனைவரும் சமமானவர்கள்; அவர்களுள் எஜமான் – அடிமை எனும் பேதமில்லை என்றும் பெண் குழந்தைகள் பிறந்தால் அவர்களைக் கொல்வது பாவம் என்றும் தெரிவிக்கிறார்.”

அவற்றைக்கேட்டுத் தாயின் கண்கள் குளமாயின! “ஆம், பாவம்தான்; அது பெரும்பாவம்”

அடிமையாக வாழ்வைத் துவக்கியவர் அவர். அதனால் அடிமை வாழ்வின் அவலம் அவர் நன்றாக அறிந்திருந்த ஒன்று. தவிரவும் அவர் பெண்சிசு கொலைக்குத் தப்பிப் பிழைத்த பெண்மணி.

“மகனே! எனக்குமுன் பிறந்த பெண் மகவுகளை என் தந்தை உயிருடன் புதைத்தாராம்.  இறைவனின் அருள் மூலம் அதற்குப் பிறகு அவருடைய உள்ளத்தில் எங்கோ ஈரம் சுரந்திருக்க வேண்டும். என் மீது பாசமும் பரிவும் அவருக்கு ஏற்பட்டு, என்னைக் கொல்லாமல்விட்டுவிட்டார். இல்லையெனில், உன் தந்தை யாஸிருக்கு நான் மனைவியாகவும் ஆகியிருக்க முடியாது; இன்று நீ என்னை அம்மா என்றும் அழைத்திருக்க முடியாது”

ஏழாவது முஸ்லிமாக இஸ்லாத்தை ஏற்றார் ஸுமைய்யா பின்த் ஃகையாத், ரலியல்லாஹு அன்ஹா.

oOo

யாஸிர்  இப்னு ஆமிர் என்பவர் யமன் நாட்டைச் சேர்ந்தவர். இவருடைய சகோதரர்களுள் ஒருவர் ஒருநாள் காணாமல் போய்விட்டார். திருவிழா பார்க்கச் சென்றாரா, பாதை தவறி விட்டாரா எனத் தெரியவில்லை. ஆனால் தொலைந்துவிட்டார். தம் சகோதரர்மீது யாஸிருக்கு அலாதிப் பாசம்.

கவலையுடன் அவரைத் தேடிப் புறப்பட்டார் யாஸிர். கூடவே அவரின் இதர சகோதரர்களான ஹாரிஸ், மாலிக் இருவரும் ‘நாங்களும் வருகிறோம்’ என்று இணைந்து கொண்டனர்.

ஊர் ஊராய், குலம், கோத்திரமாய்த் தேடித் தேடித் திரிந்து மக்கா நகரை வந்தடைந்தனர் சகோதரர்கள். அது யாத்ரீகர்கள் வந்து போகும் ஊர்; அடிமைகள் ஏராளமாய் விற்பனையாகும் நகரம். அங்கும் தங்களுடைய சகோதரர் அகப்படவில்லை என்றதும், ‘அவ்வளவுதான். இனிமேல் நம் சகோதரர் கிடைக்கமாட்டார்’ என்று அவர்கள் முடிவுக்கு வந்தனர். பல ஊரைச் சுற்றி வந்திருந்த யாஸிருக்கு மக்கா நகரம் பிடித்துப்போய் விட்டது. அந்த நகரை விட்டுச் செல்ல அவருக்கு மனமில்லை. சரி இந்த ஊரிலேயே தங்கி விடுவோம் என்று முடிவெடுத்து மக்காவில் தங்கிவிட்டார். ஹாரிஸும் மாலிக்கும் மட்டும் யமனுக்குத் திரும்பிச் சென்றனர்.

கடவுச் சீட்டு, விசா போன்ற சம்பிரதாயமற்ற காலம். ஆனால் அதற்குப் பதிலாய் வேறொரு பிரச்சினை அப்பொழுது அந்த அரபுப் பிரதேசத்தில் நடைமுறையில் இருந்தது. மக்காவில் உள்ள ஏதேனும் குலத்தைச்  சேர்ந்தவர் அபயம் அளித்து, உடன்படிக்கை ஏற்படுத்திக்கொண்டால் மட்டுமே வெளியூரைச் சேர்ந்தவர் அங்கு வாழ்ந்து, குப்பை கொட்ட முடியும். இல்லையென்றால் ‘நீ ஏன் வழியில் எச்சில் துப்பினாய்?’ என்று ஏதாவது உப்புச் சப்பில்லாத விஷயமும் பெரும் பிரச்சினையாகி, அது கொலையிலும் முடியலாம். யாஸிர் இப்னு ஆமிருக்கு பனூ மக்ஸும் குலத்தைச் சேர்ந்த பெரும்புள்ளி அபூஹுதைஃபா இப்னுல் முகீராஹ் நட்பு உடன்படிக்கை அளிக்க முன்வர, மக்காவில் குடியமர்ந்தார் அவர்.

நாளாவட்டத்தில் யாஸிர் மீது அபூஹுதைஃபாவுக்கு நல்ல அபிப்ராயமும் நட்பும் ஏற்பட்டுவிட்டது. தம்மிடமிருந்த அடிமை ஸுமைய்யா பின்த் ஃகையாத்தை யாஸிருக்கு மணமுடித்து வைத்தார் அபூஹுதைஃபா. சிறப்பான இல்லறம் அமைந்து, அவர்களுக்கு மகன் பிறந்தார். அம்மார் என்று பெயரிட்டனர். அம்மாரும் வளர்ந்து, பெரியவராகி, வாலிபம் கடந்து 35 வயதை நெருங்கியபோதுதான் மக்காவில் அது நிகழ்ந்தது. முஹம்மது அவர்களுக்கு நபித்துவம் அளிக்கப்பட்டு இஸ்லாம் மீளெழுச்சியுற்றது.

இஸ்லாமிய ஏகத்துவச் செய்தியால் முதலில் கவரப்பட்ட சிலருள் அம்மாரும் ஒருவர். தோழர் அர்கமின் இல்லத்தினுள் நபியவர்களைச் சந்தித்து செய்தி கேட்டு அறிந்த அம்மாருக்கு அந்த இறைச் செய்தியும் உண்மையும் ஏகத்துவமும் தெளிவாகப் புரிந்துபோய், இஸ்லாத்தை ஏற்றார். அத்துடன் நிற்கவில்லை. தம் பெற்றோர் யாஸிர், ஸுமைய்யா இருவரையும் இஸ்லாத்திற்கு அழைத்தார்.

“என் அன்பு மகனே! என்னதான் சொல்கிறார் அவர்?” என்ற விபரம் கேட்டார் ஸுமைய்யா.

“அம்மா! அவர், நம்மைப் படைத்த இறைவனை மட்டும் வணங்கச் சொல்கிறார்; சிலைகளை வணங்கக் கூடாது எனத் தடுக்கிறார். பொய் பேசக் கூடாது என்றும் விபச்சாரம் செய்யக் கூடாது என்றும் சொல்கிறார். முக்கியமாக, மனிதர்கள் அனைவரும் சமமானவர்கள்; அவர்களுள் எஜமான் – அடிமை எனும் பேதமில்லை என்றும் பெண் குழந்தைகள் பிறந்தால் அவர்களைக் கொல்வது பாவம் என்றும் தெரிவிக்கிறார்”

கேட்டுக்கொண்டிருந்த தாயின் கண்கள் குளமாயின! “ஆம், பாவம்தான்; அது பெரும்பாவம். எனக்குமுன் பிறந்த பெண் மகவுகளை என் தந்தை உயிருடன் புதைத்தாராம். இறைவனின் அருள் அவருடைய உள்ளத்தில் ஈரம் சுரக்க வைத்து, என் மீது பாசமும் பரிவும் அவருக்கு ஏற்பட்டு, என்னைக் கொல்லாமல்விட்டார். இல்லையெனில், உன் தந்தை யாஸிருக்கு நான் மனைவியாகவும் ஆகியிருக்க முடியாது; இன்று நீ என்னை அம்மா என்றும் அழைத்திருக்க முடியாது”

ஸுமைய்யாவும் அவருடைய கணவர் யாஸிர்  இப்னு ஆமிரும் இஸ்லாத்தை ஏற்றனர். அக்குடும்பம் முஸ்லிம் குடும்பமானது. அவ்வளவுதான்! அத்துடன் அவர்களுக்கு மக்காவில் குரைஷிகளிடம் இருந்த பாதுகாப்பு தொலைந்து போனது.

குரைஷிக் குலத்தில் பிறந்த வில்லன்கள் பலர் இருந்தனர். அதில் குறிப்பிடத்தக்க மிக முக்கிய வில்லன் அபூஜஹ்லு. யாஸிருக்கு அடைக்கலம் அளித்தாரே அபூஹுதைஃபா இப்னுல் முகீராஹ் அவருடைய பனூ மக்ஸும் குலத்தைச் சேர்ந்தவன். எந்தக் குலத்தின் நட்பு உடன்படிக்கை ஒருகாலத்தில் யாஸிருக்கு அபயம் அளித்ததோ அதே உரிமை இப்பொழுது பன்மடங்கான சித்திரவதையாய் அவருக்கும் அவர் குடும்பத்திற்கும் வந்து வாய்த்தது.

இஸ்லாமாம்! புது மார்க்கமாம்! இனி யாரும் அதை நினைத்துக்கூடப் பார்க்கக்கூடாது என்று கங்கணம் கட்டிய அபூஜஹ்லு, யாஸிர் குடும்பத்தினர்மீது கொடுமையைக் கட்டவிழ்க்க உத்தரவிட்டான். பாலையின் கொடும் வெயிலில் மணலில் அவர்களைக் கிடத்தி கடலையைப்போல் வறுத்தெடுத்தார்கள். படிப்படியாய் சித்திரவதையை அதிகரித்துப் பார்த்தார்கள். அவை எவற்றுக்கும் அம்மூவரும் தளர்ந்துவிடவில்லை. மாறாக உறுதிதான் நாளுக்குநாள் அம்மூவருள் வலுப்பெற்று வந்தது. அந்த உறுதியை மேலும் அதிகரித்தது ஒரு சுபச் செய்தி.

மக்காவின் சுட்டெரிக்கும் பாலை வெயில். ஒருநாள் அந்த எளிய, வறிய குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை, மகன் மூவரையும் கொதிக்கும் மணலில் போட்டு வதைத்து, கொடும் அக்கிரமம் புரிந்துகொண்டிருந்தனர் குரைஷிகள். கொடுமை தாளாமல் அம்மூவரும் கதறுவதைப் பார்த்து ரசித்து மகிழ்ந்து கொண்டிருந்தது அக்கூட்டம். ஒருநாள், இரண்டு நாள் என்று அல்லாமல், அந்தக் கொடியவர்களுக்கு அது ஒரு தினசரி கலை நிகழ்ச்சி.

அச்சமயம் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவ்வழியே சென்றவர்கள் இந்தக் கொடூரத்தைக் கண்டார்கள். இஸ்லாம் மீளெழுச்சி பெற்றிருந்த ஆரம்பக் காலம் அது. நபியவர்களேகூட பலவித இன்னல்களுக்கு ஆட்பட்டிருந்த தருணம். தலையிட்டு எவ்வித உதவியும் புரிய இயலாத கையறு நிலையில், அக்குடும்பத்தினரை விளித்து, “பொறுமையுடன் இருங்கள். உங்களது இறுதி இலக்கு சொர்க்கம்” என்று அறிவித்தார்கள். கொளுத்தும் வெயிலில், உயிர் துடிக்கும் ரண வலியில் கிடந்தவர்களுக்கு, குளிர்நீராய் இதமளித்து அந்தச் சுபச் செய்தி. அந்தக் குடும்பத்தினர் அனைவரும் மறுமையில் சென்று அடையப் போகும் இலக்கு எது என்பதை அழுத்தந்திருத்தமாய் தெரிவித்தது அந்த முன்னறிவிப்பு.

ஒருநாள் அத்தனை சித்திரவதையையும் மீறி, வலி, வேதனை அத்தனையும் தாண்டி, ‘சரிதான் போ’ என்பதுபோல் குரைஷியரை உதாசீனமாகப் பேசி விட்டார் ஸுமைய்யா. அது அபூஜஹ்லை நிலைகுலையச் செய்தது. ஆத்திரம் தலைக்கேற, தன் கையில் இருந்த ஈட்டியை, ஸுமைய்யாவின் பிறப்புறுப்பில் பாய்ச்சி, கொன்றான். கொதிக்கும் மணலில் கிடந்த அவரின் கணவர் யாஸிரை நெஞ்சில் உதைத்து மிதித்தே கொன்றான். அவ்வளவு வெறி.

பெற்றோரை ஒரே நேரத்தில் பறிகொடுப்பது கொடுமை. அதுவும் அவர்கள் இத்தகைய மிருக வெறிக்குப் பலியாவது அவர்களுடைய மகன் அம்மாருக்கு எத்தகு இழப்பு, சோகம்? ஏறத்தாழ பதினைந்து ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெற்ற பத்ருப் போரில் அபூஜஹ்லு கொல்லப்பட்டான். அல்லாஹ்வின் தூதர், அம்மாரிடம் கூறினார்கள் : “உம் தாயைக் கொன்றவனை அல்லாஹ் கொன்றொழித்தான்”

இஸ்லாத்தை ஏற்றார்கள். கொடுமையை அனுபவித்தார்கள் என்று எழுதிவிடுகிறோம்; படித்துவிடுகிறோம். அதற்கு ஆட்பட்டு வாழ்வதும் மடிவதும் எழுத்திற்கு அப்பாற்பட்ட கொடூர வலி. அதைத்தாங்க, எதிர்கொள்ள அவர்கள் மனத்தில் வீற்றிருந்தது ஈமான் மட்டுமே. அந்த ஈமானின் வலு எந்தளவு நெஞ்சில் உரமேறியிருந்தால் அத்தனை கொடுமைகளையும் அத்தனை நாளும் அவர்கள் தாக்குப் பிடித்திருப்பார்கள்? சிந்திக்க இதில் நிறைய சங்கதிகள் உண்டு.

இஸ்லாத்தின் மீளெழுச்சியின் முதல் இரு உயிர் தியாகிகளின் பெயர்கள் மக்கத்துச் சுடுமணலில் அன்று எழுதப்பட்டது – பின்னர் வரலாற்றிலும்.

முதல் பெண் உயிர் தியாகியாகப் பதிவானார் ஸுமைய்யா பின்த் ஃகையாத்.

ரலியல்லாஹு அன்ஹா!


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.