மீண்டும் ஒரு ரமளான்: பிறை 12
நோயாளிகள்/பயணிகள்:
பயணம் செய்பவர்களுக்கு நோன்பை விட்டுவிட அனுமதியுள்ளது. பயணம் முடிவுக்கு வந்த பின்னர் விடுபட்ட நோன்புகளை நோற்க வேண்டும்.
“… فَمَن شَهِدَ مِنكُمُ الشَّهْرَ فَلْيَصُمْهُ وَمَن كَانَ مَرِيضًا أَوْ عَلَى سَفَرٍ فَعِدَّةٌ مِّنْ أَيَّامٍ أُخَرَ يُرِيدُ اللّهُ بِكُمُ الْيُسْرَ وَلاَ يُرِيدُ بِكُمُ الْعُسْرَ وَلِتُكْمِلُواْ الْعِدَّةَ وَلِتُكَبِّرُواْ اللّهَ عَلَى مَا هَدَاكُمْ وَلَعَلَّكُمْ تَشْكُرُون
“… உங்களில் அம்மாதத்தை அடைபவர், அம்மாதம் முழுதும் நோன்பு நோற்க வேண்டும். எவரேனும் நோயாளியாகவோ பயணத்திலோ இருந்தால் (நோய்/பயணம் முடிவுக்கு) வரும் பின்னாட்களில்(விடுபட்ட நோன்பை) நோற்க வேண்டும். அல்லாஹ் உங்களுக்கு எளிதான முறையை விரும்புகின்றானேயன்றி, உங்களுக்கு இடரளிக்கும் முறையையன்று. இச்சலுகை, (ரமளானில் விடுபட்ட) நாட்களை நிறைவு செய்ய வாய்ப்பளித்ததற்கும் உங்களுக்கு நேர்வழி காட்டியதற்கும் அல்லாஹ்வின் மேன்மையை நீங்கள் போற்றி, நன்றி செலுத்த வேண்டும் என்பதற்காகத்தான் (அல்குர்ஆன் 2:185).
நபி (ஸல்) அவர்கள் ரமளானில் மக்காவை நோக்கிப் பயணம் புறப்பட்டார்கள். அப்போது அவர்கள் நோன்பு வைத்திருந்தார்கள். ‘கதீத’ என்னும் இடத்தை அடைந்ததும் நோன்பை விட்டு விட்டார்கள். அவர்களுடன் பயணித்தவர்களும் நோன்பை விட்டுவிட்டனர். (அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி); நூல்: புகாரி 1944).
சில நாட்களில் நீங்கிவிடும் என்று எதிர்பார்க்கப்படும் நோயாக இருந்தால் அந்த நோயின் காரணமாகவும் நோன்பை விட்டுவிட அனுமதியுள்ளது. நோய் நீங்கிய பின் விடுபட்ட நோன்புகளை நோற்க வேண்டும்.
“… فَمَن كَانَ مِنكُم مَّرِيضًا أَوْ عَلَى سَفَرٍ فَعِدَّةٌ مِّنْ أَيَّامٍ أُخَرَ وَعَلَى الَّذِينَ يُطِيقُونَهُ فِدْيَةٌ طَعَامُ مِسْكِينٍ فَمَن تَطَوَّعَ خَيْرًا فَهُوَ خَيْرٌ لَّهُ وَأَن تَصُومُواْ خَيْرٌ لَّكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ
“… உங்களில் எவரேனும் நோயாளியாகவோ, பயணத்திலோ இருந்தால் (நோய்/பயணம் முடிவுக்கு) வரும் பின்னாட்களில் (விடுபட்ட நோன்பை) நோற்க வேண்டும். எனினும் நோன்பு நோற்பதற்கு வலுவிருந்து/வலுவிழந்து நோன்பை விட்டவர்கள் ஒரு நோன்பிற்கு ஈடாக ஓர் ஏழைக்கு உணவளிக்க வேண்டும். மனமுவந்து அதிகமாகக் கொடுப்பவருக்கு நன்மையும் அதிகமாகும். எத்துணை அதிகம் கொடுத்தாலும் – (ரமளான்) நோன்பின் சிறப்பை நீங்கள் அறிவீர்களாயின் – நோன்பு நோற்பதே உங்களுக்குப் பெருநன்மை பயக்கும் செயலாகும் (அல்குர்ஆன் 2:184).
‘ஃபித்யா’ (பரிகாரம்):
முதுமை மற்றும் நீங்காத நோயின் காரணத்தினால் நோன்பு நோற்க முடியாதவர்கள் நோன்பை விட்டுவிட்டு ‘ஃபித்யா’ (பரிகாரம்) கொடுக்க வேண்டும். ஒவ்வொரு நோன்பிற்கும் பகரமாக ஓர் ஏழைக்கு உணவளிக்க வேண்டும் என்பது மேற்காணும் வசனத்தின் மூலம் தெளிவாக்கப் பட்டுள்ளது.
மாதவிடாய்ப் பெண்கள்:
மாதவிடாய் அல்லது பிரசவ இரத்தம் வந்துவிட்டால் நோன்பை விட்டுவிட பெண்களுக்கு அனுமதி உள்ளது. இரத்தம் நின்ற பிறகு விடுபட்ட நோன்புகளை நோற்க வேண்டும்.
“…ஒரு பெண்ணிற்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டால் அவள் தொழுகையையும் நோன்பையும் விட்டு விடுவதில்லையா?” என நபி (ஸல்) கேட்டார்கள். (அறிவிப்பவர்: அபூஸயீதுல் குத்ரீ (ரலி), புகாரி 304).
“நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் இருக்கும் போது எங்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டு, தூய்மையடைவோம். அப்போது விடுபட்ட நோன்பைக் களாச் செய்யுமாறு நபி (ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிடுவார்கள். விடுபட்ட தொழுகைகளைக் களாச் செய்யுமாறு கட்டளையிட மாட்டார்கள்” (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா(ரலி); நூல்:புகாரி).
கர்ப்பிணிகளும் பாலூட்டும் தாய்களும்:
ரமளான் மாதத்தின் நோன்பை, கர்ப்பிணிகளும் பாலூட்டும் தாய்களும் தற்காலிகமாக விட்டுவிட சலுகை அளிக்கப்பட்டு உள்ளார்கள். விடுபட்ட நாட்களை அவர்கள் களாச் செய்ய வேண்டும்.
‘கர்ப்பிணிகளுக்கும் பாலூட்டுவோருக்கும் நோன்பிலிருந்து நபி (ஸல்) சலுகையளித்தனர்” (அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி); நூல்கள்: திர்மிதி, அபூதாவூத், நஸயீ, அஹ்மத், இப்னுமாஜா)
ரமளானில் நாம் பெற்ற நோன்பு எனும் பயிற்சியை நமது இறுதி மூச்சுவரை செயல்படுத்தி இம்மையிலும் மறுமையிலும் வெற்றி பெற்றவர்களாக ஆகவும் நாமும் நாம் நேசிக்கும் நம் குடும்பத்தினரும், நம் உறவினர்கள், நண்பர்கள் என்று அனைவரும் நேர்வழியில் உண்மை முஸ்லிம்களாக வாழ்ந்து உண்மை முஸ்லிம்களாகவே மரணித்து ஜன்னதுல் பிர்தவ்ஸ் எனும் உயர்ந்த சுவனத்தில் நுழையும் பாக்கியத்தைப் பெறுவதற்கும் அல்லாஹ்விடம் பிராத்திப்போமாக.
நமது எல்லாப் பிழைகளையும் மன்னித்து நமது அமல்களையும் துவாக்களையும் அந்த வல்ல நாயன் ஏற்றுக் கொள்வானாக! ஆமீன்!
oOo
(மீள் பதிவு)
-தொடரும், இன்ஷா அல்லாஹ் …