விக்கிபீடியாவில் CIA, FBI செய்த தகவல் குளறுபடி அம்பலம்!

கட்டற்ற கலைக்களஞ்சியம் என்ற பெருமையைக் கொண்டுள்ள விக்கிபீடியாவின் பெருமையே அதற்கு எவர் வேண்டுமானாலும் தகவல் அளிக்கலாம்; ஏற்கனவே இருக்கும் தகவல்களைத் திருத்தி அமைக்கலாம். இவ்வகையான தகவல் அளிப்பதற்கு விக்கிபீடியாவில் பயனர் கணக்குப் பதிந்திருப்பவர்களும் அவ்வாறு கணக்கு இல்லாதவர்கள் அனாமதேயமாகவும் இத்தகவல்களை விக்கிபீடியாவுக்கு அளிக்கலாம்.

இந்த கட்டுப்பாடற்ற சுதந்திரத்தைப் பலர் பொறுப்புணர்ந்து பயன்படுத்தினாலும் சிலர் தவறான தகவல்கள், தனிநபர் தாக்குதல்கள், துவேஷ எழுத்துக்கள் எழுதவும் விக்கிபீடியாவைப் பயன்படுத்தி வந்தனர். விக்கிபீடியா பயனர் கணக்கு கொண்டிருப்பவர்கள் இவ்வாறு செய்வது அரிதாக இருப்பினும் அனாமதேயமாகச் சிலர் இந்தத் தீய வழிக்கு விக்கிபீடியாவைத் துஷ்பிரயோகம் செய்து வந்திருந்தனர்.

அனாமதயேமாக இவ்வாறு போக்கிரித்தனம் செய்பவர்களை வர்ஜில் கிரிஃபித் என்பவர் எழுதிய விக்கிவருடி (WikiScanner) என்ற செயலி கையும் களவுமாகக் கண்டுபிடித்துவிடுகிறது. இதில் குவாண்டனாமோ சிறை பற்றிய குறிப்புகள் மற்றும் இராக் மீதான அமெரிக்கப்போர் குறித்த விளக்கப்பக்கங்களில் சில முக்கிய தகவல்களையும் சில நிழற்படங்களையும் திரிக்கப்படுவதற்கு அமெரிக்க உளவுத்துறைக்குச் சொந்தமான கணினிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது அம்பலமாகியுள்ளது.

இதேபோல ஈரானின் அதிபர் மஹ்மூத் அஹ்மதிநிஜாத் குறித்த விவரணப்பக்கத்திலும் CIA-வின் கணினிகளிலிருந்து அவதூறு கற்பிக்கும் சொற்கள் செருகப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ராய்ட்டர்சிடம் கருத்துத் தெரிவித்த CIA செய்தித் தொடர்பாளர், “CIA தனது அலுவலகக் கணினிகள் பொறுப்பாகப் பயன்படுத்துவதையே எதிர்பார்க்கிறது” என்று தெரிவித்தார். ஆனால் FBI தரப்பில் இருந்து எந்த விளக்கமும் தரப்படவில்லை.

இதற்கு முன் ஐரிஷ் குடியரசுப்படை (Irish Republican Army) என்ற பயங்கரவாத அமைப்பின் அரசியல் பிரிவான ஐரிஷ் குடியரசுக் கட்சியின் (Irish Republican Party – Sinn Fein) தலைவர் ஜெர்ரி ஆடம்சின் பக்கத்திலிருந்த அவர் மீது சுமத்தப்பட்டிருந்த இரட்டைக் கொலைவழக்கிற்கான செய்தித்தாள் சுட்டிகள் நீக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவற்றைச் செய்தவர்கள் வாட்டிகனின் அலுவலகக் கணினியில் இருந்து செய்தது தனித் தகவல்.