“தீவிரவாதத்துக்கு எதிரான போர்” எனும் பெயரில் ‘நேட்டோ’வின் போர்வையில் அமெரிக்க இராணுவம் கொன்று குவித்த அப்பாவிப் பொதுமக்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காது. இராக், ஆஃப்கன் ஆகிய நாடுகளைத் தொடர்ந்து பாகிஸ்தான் பொதுமக்களையும் கொன்று குவிக்கக்கூடிய ஏவுகணை ஆளில்லா விமானம் ட்ரோன் பற்றியும் ஜூன் 2008இல் பாகிஸ்தான் இராணுவத்தினர் மீது நடத்தப்பட்ட ‘நேட்டோ’ தாக்குதலைப் பற்றியும் ஏற்கனவே நாம் “பாம்புக்கு வார்த்த பால்” எனும் தலையங்கம் எழுதியிருந்தது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். அந்தத் தாக்குதலில் 11 பாகிஸ்தான் இராணுவத்தினரும் 10 பழங்குடி அப்பாவிப் பொதுமக்களும் கொல்லப்பட்டதை, “கூட்டுப்படையினருக்கு எதிராகத் தாக்குதல் நடத்தும் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை” என வழக்கம்போல் பெண்டகன் அறிக்கை வெளியிட்டது.
கடந்த 2008இல் தொடங்கிய இந்தவகை அழித்தொழிப்பை ஆஃப்கனிலும் பாகிஸ்தான் எல்லையிலும் அவ்வப்போது அமெரிக்க இராணுவம் நடத்தி வந்தது. இப்போது, பாகிஸ்தான் இராணுவத்தினருக்கு எதிராக ‘நேட்டோ’வின் பெயரால் வெளிப்படையாகவே அமெரிக்கா அழித்தொழிப்பில் இறங்கியுள்ளது.
{youtube}RALCYLp–K8{/youtube} |
கடந்த 26.11.2011 சனிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் அமெரிக்க இராணுத்தின் இரண்டு ஹெலிகாப்டர்கள் பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து, சலலா சோதனைச் சாவடிகள் இரண்டிமீது திடீரென குண்டு மழை பொழிந்தன. தாழ்வாகப் பறந்த ஹெலிகாப்டர்களில் இருந்து சோதனைச் சாவடியை நோக்கி நேட்டோ வீரர்கள் சரமாரியாகத் துப்பாக்கிச் சூடும் நடத்தினர். இரண்டு மணி நேரம் நீடித்த அந்தத் தாக்குதலில் 28 பாகிஸ்தான் இராணுவத்தினர் பலியாயினர். பதின்மூவர் மிக மோசமான படுகாயத்துக்கு உள்ளாயினர். படுகாயம் அடைந்தவர்கள் பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. எனவே, பலியானவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் எனத் தெரிகிறது.
இத்தனைக்கும், “கோல்டன்”, “வால்கனோ” எனும் பெயரிடப்பட்ட இரு சோதனைச் சாவடிகளைப் பற்றிய அனைத்து விபரங்களும் நேட்டோ பனையினருக்குத் தெரிவிக்கப்பட்டிருந்தது என்று பாகிஸ்தான் இராணுவத்துக்கான செய்தித் தொடர்பாளர், மேஜர் ஜென்ரல் ஆஸர் அப்பாஸ் தெரிவித்துள்ளார்.
தூங்கிக் கொண்டிருந்த பாகிஸ்தான் இராணுவ வீரர்களைக் குண்டுவீசித் தாக்கிக் கொன்றுவிட்டு, “அது தற்காப்புத் தாக்குதல்” என நேட்டோ படையின் செய்தித் தொடர்பாளர் கூறியிருக்கிறார்.
நேட்டோ படையினரின் இந்தத் தாக்குதலால் பாகிஸ்தானில் கொந்தளிப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் வீரர்கள் 28பேர் பலியானதை அறிந்ததும், எல்லை வழியாக ஆப்கனில் நேட்டோ படையினருக்கு அனுப்பப்படும் உணவு, மருந்து போக்குவரத்தை உடனடியாக நிறுத்துவதற்கும் அவசரக் கலந்தாலோசனைக்கு அமைச்சரவையைக் கூட்டவும் பாகிஸ்தான் பிரதமர் கிலானி உத்தரவிட்டார்.
இந்த இழப்பு, பாம்புக்கு வார்த்த பாலுக்கான கூலியில் ஒரு பகுதி மட்டுமே என்பதை பாகிஸ்தானும் அமெரிக்க-நேட்டோ படைகளுக்குத் தளம் அமைத்துக் கொடுத்திருக்கும் நாடுகளும் உணர்ந்து கொண்டால் சரி!