அமெரிக்காவின் அடுத்த இலக்கு ஈரான் – ஐநா ஆயுதப் பரிசோதகர் தகவல்

{mosimage}ஈராக்கிற்கு பிறகு மத்திய ஆசியாவில் தங்களுக்கு மிகப்பெரிய சவாலாக விளங்கும் சக்தியைத் தகர்ப்பதற்கு அமெரிக்கா தயாராகி வருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் ஆயுதப் பரிசோதகராக பணியாற்றிய ஸ்காட் ரிட்டர் (Scott Ritter) அதிர்ச்சிகரமான தகவலை வெளிப்படுத்தியுள்ளார். சமீபத்தில் இவர் எழுதி வெளியிட்டுள்ள "Target Iran, The Truth About the White House Plans" என்ற புத்தகத்தில் இதைப்பற்றி குறிப்பிட்டுள்ளார்.

 

(இராக்கின் மீதான அமெரிக்காவின் ஆக்ரமிப்புக்கு, அமெரிக்கா தரப்பில் கூறப்பட்ட அனைத்துக் காரணங்களையும் கேள்விக்குட்படுத்தி அவை அனைத்தும் பொய்யாக புனைந்துரைக்கப்பட்டது என்று ஆதாரத்துடன் வெளிப்படுத்தியவர் ஸ்காட் ரிட்டர்)

 

ஈரானில் தங்களுக்கு சாதகமான ஓர் ஆட்சி அமைப்பதையும் அங்குள்ள அணு ஆயுத பரிசோதனைக் கூடங்களையும் ஆயுதங்களையும் அழிப்பதும் தான் அமெரிக்காவின் இலட்சியம் என்றும் அப்புத்தகத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

அணுஆயுத பரிசோதனைக் கூடங்களை கண்டுபிடிக்க அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய உளவுத்துறைகள் ஈராக்கில் குர்துக்களையும், அஜர்பைஜானில் யூதர்களையும் பயன்படுத்தினர். ஈரானில் உளவு வேலைகளுக்கும் ஆட்சி கவிழ்ப்பிற்கும் அங்குள்ள எதிர்கட்சிகளையும், "முஜாஹிதீனே கல்ப்" என்ற தீவிரவாத இயக்கத்தையும் பயன்படுத்துகின்றனர். இவை எல்லாவற்றிற்கும் மேலாக பிரத்யேக பயிற்சி பெற்ற இராணுவ கமண்டோக்கள் பாமரர்கள் வேடத்தில் ஈரானினுள் நுழைந்திருக்கின்றார்கள் என ரிட்டர் அப்புத்தகத்தில் வெளிப்படுத்துகிறார். அதிர்ச்சிக்குள்ளாக்கும் இவ்விவரங்கள் அனைத்தையும் அமெரிக்காவின் உளவுத்துறையான சி.ஐ.ஏ வின் ஒரு தகவல் சேகரிப்புக் குழுவிடமிருந்து அவரே பெற்றதாகவும் அவர் கூறினார்.

 

{mosimage}இவ்வளவு ஏற்பாடுகள் செய்த பிறகும் ஈரான் அணு ஆயுத பரிசீலனை செய்வதற்கான ஒரு ஆதாரத்தைக் கூட இதுவரை அவர்களால் கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் அவர் கூறுகிறார். அத்துடன் தன்னை மிகவும் ஆச்சரியப்பட வைத்த மற்றொரு விஷயத்தை அவர் குறிப்பிடுகிறார்.

 

இப்புத்தகம் எழுதி வெளியிட்ட பின்னர், தான் ஈரான் சென்று தற்போதைய ஈரான் தலைமையுடன் பேசியபோது அமெரிக்காவின் இத்திட்டங்கள் பற்றிய இவ்விஷயங்கள் அனைத்தும் அவர்கள் ஏற்கனவே அறிந்து வைத்திருந்தனர் என்றும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடைய அனைத்து நடவடிக்கைகளையும் செயல்பாடுகளையும் அவர்கள் மிகுந்த உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர் என்றும் இவர் தெரிவித்துள்ளார்.

 

இஸ்ரேலின் உளவுத்துறை முன்பு போல் சக்தி வாய்ந்ததாக தற்போது இல்லை என்றும் அவை வெறும் ஊகங்களையும் சந்தேகங்களையும் மட்டுமே அரசுகளுக்கு நல்கிக் கொண்டிருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். அவர்கள் கொடுக்கும் விவரங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்படும் தீர்மானங்கள் அமெரிக்காவிற்கும் இஸ்ரேலிற்கும் இறுதியில் மிகுந்த நஷ்டத்தையும் பாதிப்புகளையும் மட்டுமே கொடுக்கும் எனவும் அவர் முன்னெச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

மத்திய ஆசியாவின் பகுதிகளில் அமெரிக்கப் படைகளின் இருப்பை இன்னும் அதிக சக்திப்படுத்துவதற்கான ஓர் முயற்சியாக புதிய விமானம் தாங்கிக் கப்பல் கடந்த வாரம் அரபிக்கடல் பகுதியில் வந்தடைந்தது நினைவு கூரத்தக்கது. இதற்கு முன் கடந்த அக்டோபர் மாதம் மற்றொரு விமானம் தாங்கிக் கப்பல் இப்பகுதிக்கு வந்திருந்தது. மூன்று மாதத்திற்குள் இப்பகுதியில் மீண்டும் ஒன்று கொண்டு வந்து நிறுத்த வேண்டிய அவசியம் என்ன என்பது கவனிக்கப்பட வேண்டியதாகும்.

 

தற்போது ஈரானின் மீது ஐக்கிய நாடுகள் சபையில் தடை தீர்மானம் நிறைவேறிய பிறகு ஐநாவின் அமெரிக்க பிரதிநிதி நிக்கோலஸ் பேண் வெளியிட்டுள்ள அறிக்கை அமெரிக்காவின் இலட்சியத்தை தெளிவாக அறிவிப்பது குறிப்பிடத்தக்கது.