ஈராக் ஆக்ரமிப்பு தீவிரவாதம் வலுப்பெறவே உதவியது-US உளவறிக்கை

{mosimage}வாஷிங்டன்: ஈராக் ஆக்ரமிப்பிற்குப் பிறகே அங்கிருக்கும் தீவிரவாதம் அதிக வலுவடைந்ததாக நேற்று வெளியிடப்பட்ட அமெரிக்க உளவு அறிக்கை ஒன்று கூறுகிறது. இது தொடர்பான செய்தி ஒன்றை நேற்று நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் வெளியிட்டது. உலக அளவில் அல்காயிதா இயக்கத்திலிருந்து கொள்கைகளைப் பின்பற்றிப் புதிய தீவிரவாத இயக்கங்கள் உலகின் பல பாகங்களிலும் உருவாகிக் கொண்டிருக்கின்றன என்றும் அத்தகவல் அறிக்கை கூறுகிறது.

இது 2003 ஈராக் ஆக்ரமிப்பிற்குப் பின்னர் சர்வதேச அளவில் அமெரிக்கா நடத்தும் இஸ்லாமிய போராளிகளைக் குறித்த முதல் தகவல் அறிக்கையாகும். ஈராக் யுத்தத்தைக் குறித்த ஜார்ஜ் புஷ்ஷின் தவறான வாதங்கள் அடங்கிய சவப்பெட்டியின் கடைசி ஆணி தான் இந்த ஆவண அறிக்கை என செனட் உறுப்பினர் ஒருவர் கருத்து தெரிவித்தார். இந்த ஆவண அறிக்கையில் ஜிஹாத் குறித்த கொள்கை விளக்கங்களை பிரச்சாரம் செய்ய இணையம் எவ்வாறு உபயோகிக்கப்படுகிறது என்ற விஷயத்தைக் குறித்தும் ஆராயப்பட்டிருந்தது.

ஈராக்கை ஆக்ரமிப்பதற்கு அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் கூறிய, "சதாம் பேரழிவு ஆயுதம் உருவாக்கி பத்திரப்படுத்தியுள்ளார்" என்ற காரணம் ஈராக்கிலிருந்து அமெரிக்க கூட்டுப்படையால் ஈராக் ஆக்ரமிப்பு நடந்து 3 வருடங்கள் கடந்த பின்பும் இதுவரை ஒரு பேரழிவு ஆயுதமோ அல்லது அதனை உருவாக்கும் ஆலையோ கண்டுபிடிக்கப்படாததைத் தொடர்ந்து பொய்த்துப் போனது. அதனைத் தொடர்ந்து ஜார்ஜ் புஷ் கூறிய புதிய காரணம் சதாமிற்கு அல்காயிதாவுடன் தொடர்பு உண்டு என்பதாகும்.

கடந்த சில நாட்களுக்கு முன் அமெரிக்க உளவுத்துறை சமர்ப்பித்த அறிக்கையில் இதுவும் அப்பட்டமான முழுப்பொய் என ஆதாரத்துடன் குறிப்பிட்டிருந்தது. அல்காயிதாவுடன் சதாமுக்கு ஈராக் ஆக்ரமிப்பிற்கு முன் எவ்வித தொடர்பும் இருந்திருக்கவில்லை எனவும், அரசுக்குத் தெரியாமல் சில இடங்களில் மறைமுகமாக அல்காயிதா செயல்பட்டிருக்க மட்டுமே சாத்தியமிருப்பதாகவும் ஆனால் அதே நேரம் ஈராக் ஆக்ரமிப்பிற்குப் பின் அல்காயிதா ஈராக்கில் தனக்கென ஒரு நிரந்தர இடத்தைப் பிடித்துள்ளதாகவும் அதன் பின்னரே அல்காயிதாவின் செயல்பாடு ஈராக்கில் வலுவடைந்ததாகவும் அவ்வறிக்கை கூறியிருந்தது.

எந்த உளவுத்துறையின் அறிக்கையைக் கொண்டு தான் தீவிரவாதத்திற்கு எதிராக களமிறங்கியதாக அறிவித்துக் கொண்டு ஜார்ஜ் புஷ் களமிறங்கினாரோ அதே உளவுத் துறையால் தற்போது அவை அனைத்தும் முழுக்கப்பொய் என நிரூபிக்கப்பட்டு சர்வதேச சமூகத்தின் முன் குற்றவாளியாக முகமிழந்து நிற்கிறார்.

இந்த அறிக்கை அமெரிக்காவில் புஷ்ஷுக்கு மட்டுமல்லாது அவரது அத்துமீறிய ஆக்கிரமிப்புகளுக்குத் துணை புரிந்த பிரித்தானியப் பிரதமர் டோனி பிளேய்ருக்கும், ஆஸ்திரேலியப் பிரதமர் ஹோவர்ட்டுக்கும் பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. தங்களின் அமெரிக்க ஆதரவு சரிதான் என நிருபிக்க அவர்கள் மேலும் பல சாரமில்லாத அறிக்கைகளை விடுத்து வருகின்றனர்.

ஆஸ்திரேலிய எதிர்க்கட்சித் தலைவர் திரு பீஸ்லி, ஹோவர்ட் தவறுக்கு மேல் தவறு செய்து ஆஸ்திரேலிய மக்கள் அனைவரையும் முட்டாளாக்கியதோடு, அவர்களைத் தீவிரவாத இலக்காக்கி வருகிறார் என்று கடுமையாகக் குறைகூறினார்.