முஸ்லிம்களிடம் மன்னிப்புக் கேட்ட தாய்லாந்து பிரதமர்

{mosimage}தாய்லாந்தின் இடைக்கால பிரதமராக பொறுப்பேற்றிருக்கும் ஜெனரல் சுராயுத் சுலானோன் 2004 -ம் ஆண்டு ரமளான் மாதத்தில் 84 முஸ்லிம்கள் மரணமடைய நேரிட்ட துயர சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டிருக்கிறார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரமளான் மாதத்தில் ஒரு நாள் (அக்டோபர் 25, 2004) ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் தென் தாய்லாந்தின் காவல் நிலையம் ஒன்றின் அருகில் கூடினர். அவர்களில் பெரும்பாலோர் ஆர்வமிகுதியால் வேடிக்கை மட்டுமே பார்க்க வந்தவர்கள்.

தகுந்த ஆதாரமின்றி கைது செய்யப்பட்டிருந்த ஆறு பேரை விடுவிக்கக் கோரி அந்தக் கூட்டத்தினரில் சிலர் கோஷம் எழுப்பினர். கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக வரவழைக்கப்பட்ட ராணுவம் திடீரென அந்த முஸ்லிம்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் கலவரம் மூண்டது. ராணுவத்தினர், ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் மட்டுமல்லாது அங்கு கூடியிருந்த அப்பாவி மக்களையும் சேர்த்து ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர். அவர்கள் மேற்சட்டை கழற்றப் பட்டவர்களாக கைகள் பின்புறம் பிணைக்கப்பட்ட நிலையில் சாலைகளில் கிடத்தி வைக்கப் பட்டிருந்தனர்.

அதன் பிறகு நடந்ததுதான் மிகக் கொடூரம். கைது செய்யப்பட்டவர்களை ராணுவம் சிறு சிறு ராணுவ வண்டிகளில் புளி மூட்டைகளை திணிப்பது போல திணித்து, சுமார் 5 மணி நேர பயண தூரத்திலிருந்த ராணுவ முகாம் ஒன்றிற்கு அனுப்பியது. ஒருவர் மேல் ஒருவராக மூன்று அல்லது நான்கு அடுக்குகளில் கைது செய்யப்பட்டவர்கள் அடுக்கப் பட்டிருந்தனர். இவ்வாறு உயிருடன் அனுப்பப்பட்ட பலர் அந்த ராணுவ முகாமை அடைந்தபோது பிணமாகி இருந்தனர். ஆம். அவர்களில் 78 பேர் மூச்சுத் திணறியே மரணமடைந்து விட்டனர்.

அப்போதைய தாய்லாந்து பிரதமராக இருந்த தக்சின் ஷினவட்ரா ராணுவத்தினரின் செய்கையை தற்காத்து பேசியதோடு, அவர்களின் மனிதாபிமானமற்ற செய்கையை நியாயப்படுத்தும் விதமாக ‘முஸ்லிம்கள் நோன்பு இருந்ததனால், ‘வீக்’காக இருந்திருப்பார்கள். அதனால்தான் மரணமடைந்திருப்பார்கள்’ என்று பொறுப்பற்ற முறையில் கருத்து தெரிவித்தார். இவரது பேச்சு ஏற்கனவே வெந்து போயிருந்த முஸ்லிம்களின் மனதில் ஈட்டியைப் பாய்ச்சியது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் தாய்லாந்தில் அரசியல் சூழ்நிலை மாறி விட்டது. பிரதமர் தக்சின் மீது தேர்தல் முறைகேடுகள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அவர் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டங்களை நடத்தின. இறுதியில், இரண்டு ஆண்டுகளுக்கு பின் அதே ரமளான் மாதத்தில் தக்சின் வெளிநாடு சென்றிருந்த சமயத்தில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. தாய்லாந்தில் காலடி எடுத்து வைத்தால் ஊழல் வழக்குகளை சந்திக்க நேரிடும் என்பதால் தக்சின் வெளிநாடுகளிலேயே சுற்றிக் கொண்டிருக்கிறார்.

ராணுவத்தின் ஆதரவுடன் தற்காலிக பிரதமராக பதவி ஏற்றிருக்கும் ஜெனரல் சுராயுத் சுலானோன் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் தெற்கு தாய்லாந்தின் பிரச்னைகளுக்கு சுமுகமான தீர்வு காண்பதில் முக்கிய கவனம் செலுத்தப் போவதாக அறிவித்திருக்கிறார். பிரதமரின் இந்த நல்லிணக்க முயற்சியால் தென் தாய்லாந்தில் அமைதி திரும்பும் சாத்தியம் தோன்றியிருக்கிறது.

கட்டுரை ஆக்கம்: இப்னு பஷீர்