தாலிபான்கள் எதிர்பார்த்ததை விடக் கடும் போராளிகள் – பிரித்தானிய இராணுவ அமைச்சர்

{mosimage}லண்டன்: ஆப்கானிஸ்தானில் தாலிபான் போராளிகளின் மனஉறுதியைக் குறித்த தங்களின் கணிப்பில் பிரித்தானியத் தரப்பில் தவறு நிகழ்ந்திருப்பதாக பிரித்தானிய இராணுவ அமைச்சர் டெஸ் பிரவுன் கூறினார்.

NATO இராணுவத்தினருக்கெதிராக தாலிபான்களின் போராட்டம் தாங்கள் எதிர்பார்த்ததை விடக் கடுமையானதாக இருந்தது எனவும் அவர் கூறினார். 19 பிரித்தானிய இராணுவத்தினரும் 4 கனடிய இராணுவத்தினரும் இம்மாதத் தொடக்கத்தில் தாலிபான் போராளிகளால் கொல்லப்பட்டிருந்தனர். கடுமையான இழப்புகள் மற்றும்  சோதனைகளுக்கிடையிலும் தாலிபான் போராளிகளின் எதிர்ப்புப் போராட்டம் அபாரமானது. இந்த யதார்த்தத்தை நாம் அங்கீகரிக்க வேண்டி உள்ளது என அவர் மேலும் கூறினார்.

2001 ல் அமெரிக்கத் தலைமையிலான கூட்டுப்படை தாக்குதலைத் தொடர்ந்து பதவியிழந்த தாலிபான்கள் சமீப காலத்தில் மிகவும் கடுமையான போராட்டத்துடன் திரும்பவும் களமிறங்கியுள்ளனர். NATO படையினரின் அங்கமாக 7000 பிரித்தானிய இராணுவத்தினர் உள்ளனர். இவர்களில் 4000 பேர் போராட்டம் கடுமையாக நடக்கும் ஹெல்மந்த் பிரதேசத்தில் உள்ளனர். இப்பகுதியின் சில இடங்கள் கடந்த தினங்களில் தாலிபான்களின் கட்டுப்பாட்டில் வந்தது. ஆப்கானிஸ்தானின் வடக்குப் பகுதியிலிருந்து கடந்த ஆகஸ்டில் தென் பகுதிக்கு பிரித்தானியப் படையினர் வந்த பொழுது தாலிபான்களிடமிருந்து இவ்வளவு கடுமையான ஒரு போராட்டத்தை தாங்கள் எதிர்பார்க்கவில்லை எனவும் பிரவுன் கூறினார்.

தலைமுறைகளாகப் போராடிப் பழக்கமுள்ளவர்கள் தாலிபான்கள் என பிரௌன் தாலிபான்களைப் புகழவும் செய்தார். பரம்பரை பரம்பரையாகப் போராடியவர்களை வெற்றி கொள்ள அவர்கள் அளவுக்குத் திறமையும் வலிமையும் நுணுக்கமான திட்டமிடலும் ஒரு முறை மட்டும் செய்தால் போதாது; அதனைத் தொடர்ந்து செய்து அனுகூலத்தைத் தக்க வைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்றும் தாலிபான்களின் போர் உத்தி குறித்து அவர் தெரிவித்தார்

தாலிபான்களின் போராட்டம் வீரியமடைந்ததைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானிற்கு படைகளை அனுப்பும் வாக்குறுதியிலிருந்து NATO அங்கத்துவ நாடுகள் பின்வாங்கியிருந்தன. ஆப்கானிஸ்தானில் படைகளை அனுப்ப NATO தீர்மானித்ததால் அதனால் ஏற்படும் விளைவுகளை எதிர்கொள்ள NATO வின் அங்கத்துவத்தில் உள்ள எல்லா நாடுகளும் தயாராக வேண்டும் எனவும் இராணுவ அமைச்சர் அழைப்பு விடுத்தார்.