தலையை முழுவதுமாக மறைக்கும் விதத்தில் ஹிஜாப் அணிந்து வகுப்பிற்கு வருவதற்கு தடை ஏற்படுத்திய ஸ்பெயின் பள்ளிக்கூட நிர்வாகத்திற்கு எதிராக போராடிய பள்ளி மாணவிக்கு வெற்றி கிடைத்துள்ளது. எட்டு வயதுடைய ஷைமா ஸைதானிகா என்ற பள்ளி மாணவி உடலை முழுவதுமாக மறைத்து தலையில் ஹிஜாப் அணிந்தபடி வகுப்புக்கு வந்ததன் பேரில் கிரோனா நகரத்தில் உள்ள ஜாண் ப்விக்பர்ட் அனெக்ஸ் ஜூனியர் பள்ளி நிர்வாகத்தினர் வகுப்பில் நுழைவதற்குத் தடை விதித்திருந்தனர்.
சிறுமி ஹிஜாப் அணிவதற்கு எதிராக பள்ளி நிர்வாகத்தினர் தாய், தந்தையர்க்கு அறிவித்ததற்கு, "சுய விருப்பப்படி தான் ஷைமா பர்தா அணிவதாக" சிறுமியின் தாயார் நுஆனா அல் ஹரமி தெளிவுபடுத்தினார். பின்னர் சிறுமியின் தாயார் அளித்த புகாரைத் தொடர்ந்து, கட்டலோனியா மாநில அரசின் கல்வித்துறை இப்பிரச்சினையில் தலையிட்டு சிறுமியை பள்ளியில் நுழைய அனுமதிக்க வேண்டும் என்றும், சிறுமி தலையில் ஹிஜாப் அணிவதைத் தடை செய்யப் பள்ளி நிர்வாகத்திற்கு உரிமையில்லை எனவும் உத்தரவிட்டது.
ஸ்பெயின் அனைத்து மதங்களையும் மதிக்கின்றது எனவும் அரசு தெளிவுபடுத்தியது. மாணவிகளுக்கிடையில் வேற்றுமை பாராட்டுவதை அனுமதிப்பதற்கு இயலாததால் தான் ஹிஜாப் அணியத் தாங்கள் தடை விதிப்பதாகப் பள்ளி நிர்வாகத்தினர் கூறிய விளக்கத்திற்கு, "ஹிஜாப் அணிவதற்குத் தடை விதிப்பது தான் வேற்றுமையை ஏற்படுத்தும்" என அரசு பதிலளித்தது.
நான்கு கோடி மக்கள் தொகை கொண்ட ஸ்பெயினில் தற்பொழுது 8 லட்சம் முஸ்லிம்கள் வசிக்கின்றனர். "பர்தா அணிந்து பள்ளி செல்ல அரசும் அனுமதிக்காமல் இருந்திருந்தால் நாங்கள் பிறந்த நாடான மொரோக்கோவிற்கு திரும்ப செல்லும் விதத்தில் அனைத்து ஏற்பாடுகளுடன் தயாராகவே இருந்தோம்" என ஷைமாவின் தாயார் கூறினார்.
உலகம் முழுக்க இஸ்லாத்தைக் களங்கப்படுத்தும் எண்ணத்தில் இஸ்லாம் பெண்களுக்கு விதித்திருக்கும் உடையான பர்தாவிற்கு எதிராக போலிப் பெண்ணியவாதிகளின் போர்வையில் இஸ்லாமிய எதிரிகள் களமிறங்கியுள்ள சூழலில் சிறுமி ஷைமாவிற்கு கிடைத்த இவ்வெற்றி இஸ்லாத்தின் வெற்றியாகக் கருதப்படுகின்றது.