ஷியா-சுன்னாஹ் பிளவுகளை வளர்த்து ஈரானைத் தாக்க US திட்டம்-செய்மூர் ஹெர்ஷ்

{mosimage}இராக்கைத் தற்போது ஆக்கிரமித்து அதன் முடிவற்ற இரத்தக்களரிக்கு காரணமாகி அங்குள்ள அப்பாவிப் பொதுமக்களின் வாழ்வில் நிரந்தர அச்ச உணர்வை ஏற்படுத்தி அங்கு இருக்கும் பொம்மை அரசை நடத்தி வரும் US அங்கு ஏற்பட்ட இந்தக் குளறுபடிகளுக்குக் காரணம் தனது அராஜகம் என்பதை மறுத்து வருகிறது. அதேவேளை இந்தக் குழப்பங்களுக்குக் காரணம் சிரியாவும் ஈரானும் தான் எனத் தற்போது US அதிபர் புஷ் கூறிவருகிறார்.

இராக்கில் இருக்கும் ஷியா-சுன்னாஹ் இரு பிரிவினரிடத்திலும் இருக்கும் சில சமூக விரோதக் குழுக்களை வளர்த்து அவற்றிற்குத் தேவையான பண மற்றும் ஆயுத பலத்தை மறைமுகமாக அளித்து அவர்களை நிரந்தர எதிரிகளாகவே வைத்திருப்பது தான் US-ன் நோக்கம். இதேபோல ஈரானில் இருக்கும் சில சுன்னாஹ் போராட்டக் குழுக்களுக்குப் பணமும் ஆயுதமும் அளித்து அவர்களை அங்கிருக்கும் ஷியா ஆட்சியாளர்களுக்கு எதிராகத் தூண்டி வருவதாக அதிர்ச்சித் தகவல்களைத் தம்மிடம் US உயர் அதிகாரி கூறியதாக பிரபல பத்திரிக்கையாளரும் புலிட்சர் விருது பெற்றவருமான செய்மூர் ஹெர்ஷ் கூறியுள்ளார்.

இதன்மூலம் ஈரான் எப்படியாவது சிறு எதிர்வினையாவது ஆற்றும் என்றும் அதற்காகவே US நிர்வாகம் காத்திருப்பதாகவும் அதனைக் காரணமாகக் கொண்டு ஈரானைத் தாக்க இருப்பதாகவும் புஷ் திட்டமிட்டுள்ளதாகத் அந்த அதிகாரி தெரிவித்துள்ளதாக ஹெர்ஷ் கூறியுள்ளார். எனினும் இது மிகவும் ஆபத்தான ஒரு முயற்சி என்று அவர் ஒப்புக் கொண்டிருப்பதாகவும் ஹெர்ஷ் தெரிவித்துள்ளார்.

தற்போது ஆஸ்திரேலியப் பயணம் மேற்கொண்டுள்ள US துணை அதிபர் டிக் செனி ஈரானுக்கு மிரட்டல் விடுவதும் இதன் ஒரு பகுதியே என்றும். இந்த அதிர்ச்சி தரும் US-ன் திட்டத்திற்கு வளைகுடா பகுதியில் இருக்கும் சில அரபுநாடுகளும் துணை என்றும் அவர் கூறியுள்ளார்.

இது தவிர மேலும் அதிர்ச்சி தரும் தகவல்களை அவர் தி நியூயார்க்கர் இதழில் எழுதியுள்ள தனது கட்டுரையில் கூறியுள்ளார்.

தகவல்: இப்னு ஹமீது.