{mosimage}தெஹ்ரான்: ஈரான் உள்ளிட்ட காஸ்பியன் நாடுகளுக்கு எதிராக இராணுவத் தாக்குதல் தொடுக்க எவரையும் அனுமதிக்க மாட்டோம் என ரஷ்ய அதிபர் விளாதிமிர் புட்டின் கூறினார். ஈரானுக்கெதிராக அமெரிக்கா இராணுவ நடவடிக்கைகளுக்குத் தயாராகின்றது என்ற செய்திகளுக்கிடையில் புட்டின் தனது நிலைபாட்டைக் கூறியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது. ஈரான் தலைநகரான தெஹ்ரானில் நடக்கின்ற காஸ்பியன் நாடுகளின் உச்சி மாநாட்டில் பேசும் பொழுது புட்டின் இவ்வாறு தெரிவித்தார்.
சில நாட்களுக்கு முன் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கோண்டலீசா ரைஸ் மாஸ்கோவில் ரஷ்ய அதிபர் புட்டினுடன் பேச்சு வார்த்தை நடத்தியதும் அது தோல்வியுற்றதும் நினைவுகூரத் தக்கது.
தங்களின் நாட்டில் தளம் அமைத்து ஈரான் மீது தாக்குதல் நடத்த எந்த ஒரு அந்நிய நாட்டையும் காஸ்பியன் நாடுகள் அனுமதிக்கா. இப்பிரதேசத்தில் எவராவது போர் தொடுக்க எண்ணினால் அதற்கு வழி ஏற்படுத்துவதைக் குறித்து சிந்திப்பதற்குக் கூட இடமில்லை என புட்டின் ஆணித்தரமாகக் கூறினார்.
ஈரானை ஆக்ரமிக்கத் தளம் அமைப்பது தொடர்பாக அஸர்பைஜானுடன் அமெரிக்கா இரகசிய ஆலோசனை நடத்துகின்றது என கடந்த சில தினங்களில் செய்தி வெளியாகியுள்ள சூழ்நிலையில், புட்டினின் இந்த அறிவிப்பு மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றது. ஆனால் அதே சமயம் அமெரிக்காவுடனான இரகசிய ஆலோசனைச் செய்தியை அஸர்பைஜான் முற்றிலுமாக நிராகரித்தது.
புட்டினின் அறிவிப்பு, "ஈரான் நாட்டின் மீதான அமெரிக்க இராணுவ ஆக்ரமிப்பை அனுமதிக்கமாட்டோம்; அணுசக்தி மூலம் மின் உற்பத்தி செய்ய ஈரானுக்கு எல்லா உரிமைகளும் உள; அவற்றை எவரும் மறுக்க இயலாது" என்ற பலமான அமெரிக்காவிற்கெதிரான முன்னறிவிப்பாகும். தங்களின் நாடுகளில் ஈரானை ஆக்ரமிக்க இடம் கொடுக்க மாட்டோம் என காஸ்பியன் நாடுகள் அனைத்தும் ஒருங்கிணைந்து உறுதிமொழி எடுத்துக் கொண்டன. மாநாட்டிற்குப் பின் ஈரான் அதிபர் மஹ்மூத் அஹ்மதி நஜாத் மற்றும் இரான் ஆன்மீகத் தலைவர் ஆயத்துல்லா அலி காம்னயி போன்றோருடன் புட்டின் ஆலோசனை நடத்த உள்ளார். ஈரானின் அணு ஆயுத விஷயம் இச்சந்திப்பின் முக்கிய விவாத விஷயமாகும்.
புட்டின், 1943 ல் சோவியத் யூனியனின் அதிபராக இருந்த ஜோஸஃப் ஸ்டாலினிற்குப் பின் ஈரானிற்கு வருகை தரும் முதல் ரஷ்ய அதிபர் ஆவார். புட்டினின் தற்போதைய இந்த ஈரான் பயணம் மத்திய ஆசியாவின் குழப்பமான சூழலில் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றது.