கத்தரின் தலைநகரான தோஹாவில், இன்று (02-12-2016) வெள்ளி மாலை இந்திய கத்தர் இஸ்லாமியப் பேரவை (IQIC) ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி மதினா கலீஃபா சவூதி மர்கஸில் நடைபெற்றது. (சத்தியமார்க்கம்.காம்)
இதில் “தியாகம்” என்ற தலைப்பில் தமுமுகவின் மாநில துணைத் தலைவர் குனங்குடி ஹனீபா அவர்களும், “இந்திய முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்னைகள்” என்ற தலைப்பில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் பேராசிரியர் M.H. ஜவாஹிருல்லாஹ் அவர்களும் உரையாற்றினர். கத்தரில் வாழும் பொதுமக்கள் இந்நிகழ்ச்சியில் திரளாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் பேச்சிலிருந்து சில முக்கியக் குறிப்புகள்:
பொது சிவில் சட்டம் அல்ல… பொது குடும்பச் சட்டம்!
இந்தியாவில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள குற்றவியல் சட்டம் (Criminal Law) 99.5 % அனைத்து மதத்தினருக்கும் பொதுவானது. இதனை எந்த முஸ்லிமும் எதிர்ப்ப்பதில்லை. குடும்பவியலில் ஒரு சில மதங்களுக்கு தரப்பட்ட தனிச்சலுகைகளை அரசு பறிக்க நினைத்து அதற்கு Uniform civil code என்று மத்திய அரசு பெயர் வைத்திருப்பதே ஒரு திசை திருப்பலாகும். இதனை UNIFORM FAMILY LAW என்று தான் அழைக்க இயலும்.
வரலாற்றை இருட்டடிப்பு செய்யும் பாஜக!
– ஒரே மதம் ஒரே மொழி என்ற முழக்கத்துடன் இந்தியாவை சுடுகாடாக்கும் பாசிச பாஜக அரசு, வீர சிவாஜி மற்றும் அசோகர் ஆகியோரை தனது கூற்றுக்கு முன்மாதிரி-யாக வைக்கிறது. ஆனால் வீர சிவாஜி இந்து மதத்திலிருந்து மனம் மாறி சமண அதாவது ஜைன மதத்தைத் தழுவியர் என்பதையும் அசோகர் இந்து மதத்திலிருந்து பவுத்த சமயத்திற்கு மாறியதையும் மக்களுக்கு இருட்டடிப்பு செய்து விட்டனர். அதே போல், அவுரங்கசீப்பின் படையில் அங்கம் வகித்து வந்த இந்து சிப்பாய்களையும் இந்து தளபதிகள் பற்றிய உண்மையையும் மறைத்து அவுரங்கசீப் இந்துக்களின் எதிரி போன்று சித்தரித்து இனக்கலவரம் உண்டாக்க நினைக்கின்றனர். (சத்தியமார்க்கம்.காம்)
இந்துக்களுக்கு எதிரான இந்துத்துவா பாசிஸம்!
பாஜக-விற்கு எதிரிகள் சிறுபான்மையினர் மட்டுமல்ல.. இந்துத்துவா கொள்கையை எதிர்க்கும் இந்துக்களும் கூட… பாஜகவின் இந்துத்துவ வெறியை வெளிச்சம் போட்டுக் காட்டிய சமூக ஆர்வலர்கள் கோவிந்த் பன்சாரா, நரேந்திர தபோல்கர், கல்புர்க்கி ஆகிய இந்துக்கள் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். இந்தியாவில் நடக்கும் அனைத்து குண்டுவெடிப்புகளையும் நடத்துவது இந்த்துவா அமைப்புகளே!” என்பதைக் கண்டறிந்து ஆய்வினை சமர்ப்பித்த சில நாட்களில், மும்பைத் தீவிரவாதத் தடுப்புத்துறை(ATS)த் தலைவர் ஹேமந்த் கார்கரே படுகொலை செய்யப்பட்டார். (வாசிக்க: தோட்டாக்கள் துளைக்க முடியாத உண்மைகள்!) முஸ்லிம்கள் பக்க நியாயத்தை எழுதுவதால் குஷ்வந்த் சிங் போன்ற பல எழுத்தாளர்கள் மிரட்டலுக்கு உள்ளாகினர்.
இவர்களைப் போன்ற பல நேர்மையான இந்து அதிகாரிகள் இன்னும் உள்ளதாலேயே பாஜக, தான் நினைத்தவாறு இந்தியாவை கலவர பூமியாக்க முடியவில்லை.
பொது சிவில் சட்டம்: இந்திய முஸ்லிம்களின் கடமை என்ன?
“தம் கணவர் ஒரே நேரத்தில் தலாக்-தலாக்-தலாக் என்று கூறி முத்தலாக் விவாகரத்து செய்து விட்டார்!” என்று ஒரு சில முஸ்லிம் பெண்கள் நீதிமன்றத்தில் முறையிட்டதை காரணம் காட்டி “தற்போது இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளை அவர்கள் பயன்படுத்துவதில்லை என்பதால் பொது சிவில் சட்டம் தேவை!” என்ற முழக்கத்தை பாஜக முன் வைக்கிறது. முஸ்லிம்களின் சமூகத்தின் ஆழம் வரை இஸ்லாமிய நெறிமுறைகள் இன்னும் சரிவர சென்று சேரவில்லை என்பதையே இது சுட்டிக் காட்டுகிறது.
மலேசியாவில் இன்றளவும் திருமணம் நடத்தி வைக்கும் முறை எப்படி என்று தெரியுமா? அங்கே இஸ்லாமிய அறிஞர் (கத்தீப்) மலேசிய மணமகனுக்கு முதலில் இஸ்லாமிய திருமணம் பற்றியும், ஆண் பெண் இருவருக்கும் இஸ்லாம் வழங்கியுள்ள திருமண உரிமைச் சட்டங்கள் பற்றியும் பாடம் எடுப்பார். பின்பு அதனை ஒட்டி பரீட்சை நடக்கும். அதில், மணமக்கள் வெற்றி பெற்றால் மட்டுமே அத் திருமணம் செல்லும். (சத்தியமார்க்கம்.காம்)
மலேசியாவில் கடைபிடிக்கப் படுவது போன்ற அறிவுறுத்தல்கள் இந்தியாவில் முஸ்லிம் திருமணங்களில் நடைமுறைபடுத்தப்பட்டால் ஒரே நேரத்தில் சொல்லப்படும் “முத்தலாக்” பழக்கம் ஒழியும். பாஜக போன்ற நீலிக்கண்ணீர் வடிக்க வேண்டிய அவசியம் இருக்காது.
பாஜகவின் திசை திருப்பல்கள்!
மத்திய அரசில் பாஜக ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்த பிறகு, அரசின் கையாளாகா தனம், பெருகிவரும் ஊழல்கள், வேலை வாய்ப்பின்மை, வறுமை, பண மதிப்பு, பதினைந்து லட்சம் வாக்குறுதி தவறியது போன்ற பல்வேறு விஷயங்களை மக்கள் பார்வையில் இருந்து மறைக்க லவ் ஜிஹாத், கர் வாப்ஸி, தலித் இந்துக்கள் படுகொலைகள், இந்திய விமானப்படை வீரரின் தந்தை முஹம்மத் அஹ்லாக் படுகொலை, இந்தியர்கள் எதை உண்ண வேண்டும் எதை உண்ணக் கூடாது என நிர்ணையிக்கும் சர்வாதிகாரம் போன்ற பலவேறு திசை திருப்பல்களைக் கையில் எடுத்து மக்களை மடையர்களாக்கி வருகிறது. வாரா வாரம் இந்தியர்கள் பதட்டத்தோடு வாழ்க்கையை நகர்த்தினால் கேள்வி கேட்கும் திறனை இழந்து விடுவார்கள் என்பது இவர்களின் திட்டம்.
வெறுப்பை உமிழ்வது டாக்டர் ஜாகிர் நாயக்கா? பாஜக-வா?
இந்தியாவின் பிரபல இஸ்லாமிய அறிஞர் டாக்டர் ஜாகிர் நாயக்கின் IRF அமைப்பு (Islamic Research Foundation) தடை செய்யப் பட்டுள்ளது. வெறுப்பைத் தூண்டும் பேச்சுக்களை டாக்டர் ஜாகிர் நாயக் பேசியதாக தடைக்குக் காரணம் சொல்லப்பட்டது. அதனை முழுமையாக்க பரிசீலிக்க UAPA – Unlawful Activities Prevention Act ஒரு குழுவினை நியமித்து ஆராய்ந்து அதன் முடிவில், டாக்டர் ஜாகிர் நாயக்கின் எந்த ஒரு உரையில் அவ்வாறான வெறுப்பைத் தூண்டும் பேச்சுக்கள் இல்லை என்ற முடிவினை அறிவித்தது. இந்த அறிவிப்பினை வழங்கிய பின் வெகுண்டு எழுந்த பாஜக அரசு, ஆராய்ச்சி முடிவை வழங்கிய அதிகாரிகளை இடைக்கால பதவி நீக்கம் செய்து தண்டித்துள்ளது. அதன் பின் நேரடியாக மத்திய அரசின் உத்தரவின் பேரில் டாக்டர் ஜாகிர் நாயக்கின் IRF தடை செய்யப்பட்டுள்ளது.
இஸ்லாமிய ஷரியா சட்டதிட்டங்களில் டாக்டர் ஜாகிர் நாயக்குடன் ஒரு சில கருத்து வேற்றுமை இருப்பினும் தாருல் உலூம், தேவ் பந்த் போன்ற பல்வேறு அமைப்புகள் இந்த தடையை எதிர்த்து போராட்டம் நடத்துவது குறிப்பிடத் தக்கது.
வெறுப்பை உமிழும் பேச்சுக்களால் (Hate speech) ஒரு இயக்கம் அல்லது அரசியல் கட்சி இந்தியாவில் தடை செய்யப்பட வேண்டும் எனில் பாஜகவும் ஆர்.எஸ்.எஸும் உடனடியாக தடை செய்யப்பட வேண்டும் என்பதற்கு நாளொரு வெறுப்பும் பொழுதொரு காழ்ப்ப்புணர்ச்சியும் உமிழும் அசோக் சிங்கால், தொகாடியா போன்ற பல்வேறு இயக்க தலைவர்களே சாட்சியாக உள்ளனர்.
அவுட்லுக் நாளேடு மோடி மற்றும் அவரது சகாக்களின் வெறுப்பு உமிழும் பேச்சுகளைத் தனியே தொகுத்து வெளியிட்டுள்ளது குறிப்பிடத் தக்கது. அவற்றிலிருந்து ஒரு சில பிரபல Hate Speeches இங்கே:
* ஏழை முஸ்லிம்கள் முகாம்களில் குழந்தை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் (Relief camps are actually child-making factories)…
* முஸ்லிம்கள் கொல்லப்படுவதைப் பற்றிய கேள்விக்கு கார் சக்கரத்தில் அடிபட்ட நாய்குட்டிகள் என்று திமிராக பதில் அளித்தது…
* முஸ்லிம்கள் குஜராத்தில் கொல்லப்பட காரணம், ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை இருக்கும் என்று நியூட்டனின் விதி பற்றி பேசிய மோடி…
* “எதிர்வரும் 2021 க்குள் இந்தியாவில் முஸ்லிம்கள் மற்றும் கிறித்துவர்களை ஒழித்துக் கட்டுவோம்!” என்று பொதுவில் அனைத்து ஊடகங்களுக்கு முன்னே முழங்குபவர் ராஜேஷ்வர் சிங். இவர் உ.பியில் கர் வாப்ஸி மற்றும் பசுவின் பெயரால் நடக்கும் அனைத்து கலவரங்களையும் முன் நின்று நடத்துபவர்.
சர்வாதிகார அரசை எதிர்த்து, இந்தியர்கள் ஒன்றிணைந்து போராட வேண்டியதன் அவசியம்:
ஒற்றைக் கலாச்சாரம் என்ற வெறி தலைக்கேறி ஆட்சி நடத்தும் பாஜக-வின் திசை திருப்பல்களை மக்கள் கண்டுகொள்ளா விட்டால் என்ன ஆகும்? Uniform civil code போன்று விரைவில் UNIFORM WORSHIP CODE என்று அறிவிக்கும். பல்வேறு வழிபாட்டு தளங்களுக்கு இன்றிரவு முதல் தடை, நாளை முதல் ஒரே கடவுள், ஒரே வழிபாடு என அறிவிக்கும். இந்த இழிநிலைக்கு முன் இந்திய சிறுபான்மையினர், பெரும்பான்மையான எண்ணிக்கையில் உள்ள நடுநிலை இந்து சகோதரர்களுடன் கைகோர்த்து பாசிச சக்திகளை வேறோடு சாய்ப்போம்!
இவ்வாறாக அமைந்த பேரா. ஜவாஹில்லாஹ்வின் உரை, இரவு 10 மணியளவில் நிறைவுற்றது.
செய்தித் தொகுப்பு: அபூ ஸாலிஹா