இஸ்ரேல் கடந்த மூன்று நாட்களாக காஸாவினர் மீது மிருகத்தனமான கொலைவெறித் தாக்குதல் நடத்தி வருகிறது. இன்று மட்டும் ஏறத்தாழ 30 காஸாவினரை இஸ்ரேலிய இராணுவம் கொன்றுள்ளது. இதனால் இதுவரை இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை 100 ஆகியுள்ளது. அதோடு காஸாவின் மீது மேலும் கொடும் தாக்குதலைத் தொடுத்து இன அழிப்பு நடத்தப்போவதாக இஸ்ரேல் நேற்று மிரட்டியிருந்தது.
ஒருபுறம் பாலஸ்தீனர்களுடன் அமைதியை விரும்புவதாகக் கூறிக் கொள்ளும் இஸ்ரேல் இப்போது பொதுமக்கள் வாழும் இடங்களைக் குறிவைத்து சிறார்கள், பெண்கள் உள்பட பொதுமக்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் இஸ்ரேலுடனான அனைத்து அமைதிப் பேச்சுவார்த்தைகளையும் முறித்துக் கொள்வதாக பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் தெரிவித்துள்ளார்.
பெரும் அளவில் உயிர்ச்சேதம் இருப்பதால் காஸாவில் இருக்கும் மருத்துவமனைகள் இடப் பற்றாக்குறையால் திணறுகின்றன. இதனால் காஸாவுடனான தனது ரஃபஹ் எல்லை சோதனைச் சாவடியைத் திறந்து படுகாயமுற்று உயிருக்குப் போராடும் மக்கள் மருத்துவ சிகிச்சை பெறுவதற்கு எகிப்து வசதி செய்துள்ளது.
காஸாவின் மீதான இஸ்ரேலின் தாக்குதல் மேலும் மூர்க்கத்துடன் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் யஹூத் உல்மர்ட்டும், பாதுகாப்பு அமைச்சர் யஹூத் பராக்கும் அறிவித்துள்ளனர்.
"இஸ்ரேலின் இந்த நடவடிக்கை மூலம் காஸாவின் ஆட்சிப் பொறுப்பிலிருக்கும் ஹமாஸ் பலவீனம் அடையும் என இஸ்ரேல் எண்ணுகிறது. ஆனால் அந்த எண்ணத்திற்கு மாறாக காஸா பாலஸ்தீனர்கள் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை மேலும் வீரியத்துடன் எதிர்த்து வருகின்றனர். ஹமாஸுடன் பேச்சு நடத்துவது மட்டுமே இஸ்ரேலின் நிம்மதிக்கு வழிவகுக்கும்" எனப் இஸ்ரேலைச் சேர்ந்த இராணுவ உத்திகள் நோக்கர் (Military Analyst) ஒருவர் தெரிவித்துள்ளார்