லபனான் யுத்ததோல்வி: இஸ்ரேலிய இராணுவ கமாண்டர் இராஜினாமா!

டெல் அவீவ் – லபனான் மீதான யுத்தத்தில் ஹிஸ்புல்லாவிடம் அடைந்த தோல்விக்கு பொறுப்பேற்றுக்கொண்டு யுத்தத்தை வழிநடத்திய இஸ்ரேலிய மேஜர் ஜெனரல் இராஜினாமா செய்துள்ளார். வடக்கு கமாண்டின் தலைவர் உதி ஆதம் இஸ்ரேலிய இராணுவ தலைவர் டான் ஹாலுட்ஸிடம் நேற்று தனது இராஜினாமா கடிதத்தை ஒப்படைத்தார். அவருடைய இராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டதாக டான் ஹாலுட்ஸின் அறிவித்தார்.

 

ஹிஸ்புல்லாவின் எதிர்தாக்குதலை தடுப்பதில் ஏற்பட்ட பின்னடைவை தொடர்ந்து யுத்த வேளையில் உதி ஆதம் தலைவர் பதிவியிலிருந்து நீக்கப்பட்டிருந்தார். அவருக்குப் பகரமாக Deputy Chief Of Staff மொஸே கப்லின்ஸ்கி யுத்தத்திற்கான தலைமை பதவிக்கு மாற்றாக அமர்த்தப்பட்டார். ஹிஸ்புல்லாவின் எதிர்தாக்குதலை சமாளிப்பதற்கும் அவர்களின் தாக்குதலை தடுப்பதற்கும் வடக்கு கமாண்டை தயாராக்குவதில் தன்னால் இயன்ற அனைத்தையும் தான் செய்திருந்ததாக ஆதம் கூறினார். யுத்த தலைமையிலிருந்து மாற்றியதைத் தொடர்ந்து இவருக்கும் படைத்தளபதி ஹாலுட்ஸிற்கும் இடையில் அபிப்பிராய வித்தியாசம் உருவாகியிருந்தது.

ஆதமின் ராஜினாமாவைத் தொடர்ந்து அவரை நேரில் சந்தித்துப் பேச இராணுவ அமைச்சர் ஆமிர் ஃபெரெட்ஸ் அவருக்கு அழைப்பு விடுத்துள்ளார். இஸ்ரேல் ஆதத்திற்கு மிகவும் கடமைப்பட்டுள்ளதாகவும் அவர் ராஜினாமா செய்வதற்கு காரணமான சூழ்நிலையைக் குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் அவர் இஸ்ரேல் வானொலியில் அறிவித்தார். விமானப்படையும் பீரங்கியுடன் கூடிய தரைப்படைகளையும் அதிகமாக உபயோகப்படுத்தி, நடந்த யுத்தத்தில் ஒரு டாங்க் அதிகாரியாக இருந்த ஆதமை தலைவர் பொறுப்பில் நியமித்ததை சிலர் எதிர்த்திருந்தினர்.

ஆதம் வடக்கு கமாண்டின் தலைவராக இருக்கும் பொழுதுதான் லபனான் எல்லையை கடந்து உள்நுழைந்த இஸ்ரேலிய படையினர் மீது ஹிஸ்புல்லா தாக்கியதில் எட்டு இஸ்ரேலிய படையினர் கொல்லப்பட்டு இருவர் கைதிகளாக்கப்பட்டிருந்தனர். அதற்குப் பிறகு அவ்விரு இஸ்ரேலிய படையினரை மீட்பதற்காக நடந்த யுத்தத்தில் இஸ்ரேலிய விமான மற்றும் பீரங்கிப்படையை அனாயாசமாக எதிர்த்து நின்ற ஹிஸ்புல்லா, 34 நாட்கள் நீண்ட யுத்தத்தில் சுமார் 4000 ஏவுகணைகளை(Rockets) இஸ்ரேல் மீது ஏவியது.  இஸ்ரேலின் விமான மற்றும் பீரங்கித் தாக்குதலை, ஒரு விமானம் கூட கையில் இல்லாத ஹிஸ்புல்லா தாக்குபிடித்துக்கொண்டு, எதிர்த்து நின்றதை தொடர்ந்து இஸ்ரேலின் இராணுவ பலத்தைக் குறித்து சந்தேகங்கள் எழுந்திருந்தன. உதி ஆதம் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து Defence Chief Of Staff டான் ஹாலுட்ஸ் தன் பதவியை விட்டு விலக வேண்டும் என அமைச்சர் பெஞ்சமின் பென் எலீஸர் போன்ற பலர் கோரினர்.

"ஆதமின் தீர்மானத்தை நான் ஆதரிக்கிறேன். உத்தரவாதம் ஏற்றெடுப்பதற்குரிய தைரியத்தை ஹாலுட்ஸும் காண்பிப்பார் என்பதுதான் என் எதிர்பார்ப்பு" – என அமைச்சர் பெஞ்சமின் பென் எலீஸர் கூறினார்.

யுத்தத்தில் ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து பிரதமர் யஹூத் ஒல்மர்டும் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வலுவடைந்திருந்தது. தற்சமயம், நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிட்டுக் கொண்டு பிரதமர், தனது பதவியை தக்க வைத்துக் கொண்டுள்ளார்.