இஸ்ரேலிய ஆக்ரமிப்புகளே மத்திய கிழக்குப் பிரச்சனைகளுக்கு மூல காரணம் – ஐநா அறிக்கை!

ஐநா: மத்திய கிழக்குப் பகுதிகளில் நிகழும் மோதல்களுக்கு இஸ்ரேலிய ஆக்ரமிப்புகளின் “தீர்க்க முடியாத விளைவுகளே” அடிப்படைக் காரணம் என ஐக்கிய நாடுகள் சபையின் புதிய அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது. இருப்பினும், இஸ்ரேல் ஐநா-வின் இந்த அறிக்கையினை ஏற்றுக் கொள்ளாமல் புறக்கணித்தது.

“பாலஸ்தீனியப் போராட்டங்கள் துன்பம் விளைவிப்பவைகளாக இருந்த போதிலும் அவை, இஸ்ரேலின் காலனியாதிக்கச் செயல்பாடுகளும், அதன் விவேகமற்ற நடவடிக்கைகளும், இஸ்ரேல் நடத்தும் ஆக்ரமிப்புகளும் எளிதில் தீர்க்க இயலாதப் பின்விளைவுகளே அடிப்படைக் காரணம் என்பதை இஸ்ரேலியர் புரிந்துக் கொள்ள வேண்டும்” என ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் குழு தனது வலைதளத்தில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. “ஆக்ரமிப்பு எங்கு நடைபெறுகின்றதோ அங்கு தீவிரவாதமும் தலைதூக்குகின்றது” என இந்த அறிக்கை தயார் செய்த தென் ஆப்பிரிக்க வழக்கறிஞர் ஜான் துகார்ட் கூறினார்.
 
 இஸ்ரேல் நடத்தும் ஆக்ரமிப்புகளை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என கூறும் அறிக்கை, பாலஸ்தீனியர்களின் போக்குவரத்துச் சுதந்திரத்தைத் தடுக்கும் விதத்தில் இஸ்ரேல் ஏற்படுத்தியச் சாலை தடைகளும், சோதனைச் சாவடிகளும் உடனடியாக நீக்கப்பட வேண்டும் எனவும் கூறுகிறது. அதே போன்று பாலஸ்தீனியர்களின் வீடுகளைத் தகர்ப்பதையும் ஜெரூசலேமில் நடத்தும் யூதக் குடியேற்றத்தையும் இஸ்ரேல் நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அறிக்கை கடுமையாக எச்சரிக்கிறது.
 
 இஸ்ரேலின் ஆக்ரமிப்புகள் முடிவுக்குக் கொண்டு வரப்படும் வரை மத்திய கிழக்குப் பிரதேசங்களில் அமைதி ஏற்படும் என்று எதிர்பார்க்க இயலாது என அறிக்கை உறுதிபடக் கூறுகிறது. மத்திய கிழக்குப் பிரதேசங்களின் அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் இஸ்ரேலின் அட்டூழியங்களைக் குறித்து விசாரிப்பதற்காக 2001 ல் ஐநா துகார்டை நியமித்தது. கடந்த ஏழு ஆண்டுகளாக அவர் நடத்திய விசாரணை குறித்தான 25 பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கை, அடுத்த மாதம் கூட இருக்கும் ஐநா கவுன்ஸிலில் 47 அங்க நாடுகளுக்கும் வினியோகிக்கப்பட இருக்கின்றது.
 
எனினும் விசாரணை அறிக்கை ஒருதலைப்பட்சமானது எனக் கூறி அமெரிக்காவும் இஸ்ரேலும் இவ்வறிக்கையினை புறக்கணிக்கும் வாய்ப்புகள் இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

தனக்கு எதிரான இவ்வறிக்கையினை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை என்பது எதிர்பார்க்கக் கூடியதே என்றாலும் உலகில் அட்டூழியத்திற்கும் அராஜகங்களுக்கும் எதிரான தீவிரவாத யுத்தத்தில் உலக நாடுகளைத் தன் பக்கம் நிறுத்த முயலும் அமெரிக்கா, மத்திய கிழக்குப் பிரதேசங்களில் அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் அக்கிரமங்கள், அராஜகங்கள், அட்டூழியங்கள், சுரண்டல், ஆக்ரமிப்பு இன்னபிற அனைத்து மனித விரோதச் செயல்பாடுகளின் மூலமும் பாலஸ்தீனியர்களின் நிலத்தினை ஆக்ரமித்து உருவாக்கப்பட்ட இஸ்ரேலின் அனைத்து அமைதிக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு உற்றத் துணையாக இருப்பது மட்டுமன்றி இப்பிரதேசத்தில் அமைதியைக் குலைக்க உதவும் விதத்தில் அதிபயங்கர ஆயுதங்களையும் இஸ்ரேலுக்கு வாரிவழங்கி வளர்த்துக் கொண்டு வருவது அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாட்டிற்குச் சரியான எடுத்துக்காட்டாகும்.
 
 இதற்கு முன்னரும் இஸ்ரேலுக்கு எதிராகக் கடுமையான கண்டனத்தீர்மானங்கள் ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்டப் போதிலும் தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி அமெரிக்கா அத்தீர்மானங்கள் அனைத்தையும் செயல் இழக்க வைத்ததும் குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல் ஐக்கிய நாடுகள் சபை இஸ்ரேலுக்குக் கொடுத்த எந்த ஒரு கண்டனத்தையும் இதுவரை இஸ்ரேல் கண்டுகொள்ளவில்லை என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
 
 இதற்கிடையில் நேற்று காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்திய விமானத்தாக்குதலில் 6 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இத்தாக்குதலில் புரைஜ் பகுதியில் உள்ள பாலஸ்தீன அகதிகள் முகாமைக் குறி வைத்து இஸ்ரேல் ஏவுகணைகளை அனுப்பியுள்ளது. சர்வதேசச் சட்டங்களையும் ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களையும் ஒரே நேரத்தில் புறக்கணித்து மத்திய கிழக்கில் அராஜகம் புரிந்து வரும் இஸ்ரேலை ஒடுக்கினால் மட்டுமே மத்திய கிழக்கு மட்டுமல்ல உலகிற்கே அமைதி வரும்.