மீண்டும் இஸ்ரேல் மிருகத்தனம்: நிறைமாத சிசு படுகொலை!

{mosimage}காஸாவின் நப்லூஸ் பகுதியில் உள்ள ஃபலஸ்தீன் அகதிகள் முகாமினுள் அத்துமீறி நுழைந்து, இஸ்ரேல் இராணுவம் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் மஹா அல் கத்தூமி என்ற 30 வயது ஃபலஸ்தீன் கர்ப்பிணிப்பெண் பலத்த காயமடைந்து உயிருக்குப் போராடி வருகிறார். அவர் வயிற்றினுள் துளைத்து ஏறிய துப்பாக்கிக் குண்டால் வயிற்றிலிருந்த 8 மாத சிசு அநியாயமாக கொல்லப்பட்டது. 

இஸ்ரேலின் ஆக்ரமிப்பால் இருப்பிடம் இழந்த ஃபலஸ்தீனியர்கள் தங்க வைக்கப்பட்டிருந்த அல் எய்ன்பெய் அல்மா என்ற அகதிகள் முகாமினுள் நுழைந்து சியோனிஸவாதிகள் இக்கொடூர சம்பவத்தை நடத்தியுள்ளனர். அதிகாலை வேளையில் ஃபலஸ்தீன் சுதந்திரப் போராளிகளை தேடுவதாக காரணம் கூறிக் கொண்டு, அங்கு நுழைந்த இஸ்ரேலிய பட்டாளம் நிமிட நேரத்திற்குள் துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட ஆரம்பித்தது. துப்பாக்கி சப்தம் கேட்ட மாஹ பக்கத்து அறையில் தூங்கிக் கொண்டிருந்த தனது குழந்தைகளை துப்பாக்கி குண்டுகளிலிருந்து பாதுகாக்க முயற்சிக்கும் பொழுது அவர் வயிற்றின் மீது இஸ்ரேலிய குண்டுகள் துளைத்து ஏறின. 
 
கர்ப்ப சிசு எட்டு மாதம் முடிந்து முழு வளர்ச்சியை பெற்றிருந்ததாக மாஹாவை அவசர சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட அப்பிரதேச மருத்துவமனையின் மருத்துவர்கள் கூறினர். துப்பாக்கி ரவைகள் வயிற்றில் பாய்ந்தபோது ஏற்பட்ட அதிர்வில்  மாஹ கழிவறையினுள்  தூக்கி வீசப்பட்டதாக அவர் கணவர் கூறினார். இத்துப்பாக்கி சூட்டில் மற்றொரு குழந்தையும் மிக மோசமாக காயமடைந்தது. அதே சமயம் இச்சம்பவத்தைக் குறித்து விசாரித்து வருவதாக இஸ்ரேலிய இராணுவத்தின் தலைமையதிகாரி தெரிவித்துள்ளார். இஸ்ரேலிய இராணுவத்திற்கெதிராக போராளிகள் வெடிகுண்டை வீசியதால்தான் இந்தத் தாக்குதல் தொடுக்கப்பட்டதாகவும் அவர் காரணம் கூறியுள்ளார்.