ஆக்ரமிப்பிற்கு வயது நான்கு: ஈராக்கில் வலுக்கும் அமெரிக்க எதிர்ப்பு!

மெரிக்கப் படைகள் ஈராக்கை ஆக்ரமித்து நான்கு ஆண்டுகள் ஓடி விட்டன. கடந்த 2003 ஆம் ஆண்டு ஏப்ரல் 9 ஆம் தேதி பாக்தாத் தெருக்களில் அமெரிக்க டாங்குகள் புகுந்து சதாமின் சிலையைத் தகர்த்தன. ஈராக்கினுள் அமெரிக்கா நுழைந்து நான்கு ஆண்டுகள் நிறைவாகும் நாளான நேற்று (09-04-2007) ஈராக் முழுவதும் அமெரிக்காவுக்கு எதிராக ஈராக் மக்கள் தெருக்களில் அணிவகுத்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஈராக் தெருக்களில் இன, வர்க்க பேதமில்லாமல் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து அமெரிக்காவிற்கு எதிராக கோஷம் எழுப்பியும், அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய கொடிகளைத் தரையிலிட்டு மிதித்தும், தீயிட்டும் ஆக்கரமிப்பாளர்களுக்கு எதிரான தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தினர்.


மெஹ்தி படை அமைப்பின் ஷியா தலைவர் முக்ததா அல் ஸத்ரின் அழைப்பைத் தொடர்ந்து நஜஃப் மற்றும் கூஃபாவில் 10 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் ஆக்ரமிப்பிற்கு எதிர்ப்பை தெரிவிக்கும் முகமாக ஒன்று கூடினர். அசம்பாவிதங்கள் நிகழாமல் இருக்க பாக்தாத் மற்றும் பல முக்கிய நகரங்களில் நேற்று (ஏப்ரல் 9) இரண்டுக்கு மேற்பட்டவர்கள் ஒன்று சேர்ந்து நடக்கக்கூட 24 மணிநேர தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனை மீறி இலட்சக்கணக்கான மக்கள் ஆக்ரமிப்புப்படைகள் ஈராக்கை விட்டு வெளியேற வேண்டும் எனக் கோரி நஜஃப் மற்றும் கூஃபாவை நோக்கி மடை திறந்த வெள்ளம் போன்று பாய்ந்தனர்.

ஈராக் கொடிகளை தங்கள் உடல்களில் சுற்றிக் கொண்டு பெண்களும், குழந்தைகளும் கூட எதிர்ப்புப் பேரணியில் அணி வகுத்தனர். நஜஃபில் மட்டும் 10 லட்சம் பேர் பேரணியில் பங்கு பெற்றனர்.

“அமெரிக்காவே வெளியேறு! சுதந்திரமே வா!” – போன்ற கோஷங்களையும் அமெரிக்கா நாசமாகட்டும்; புஷ் தொலையட்டும் போன்ற கடும் சொற்களையும் கொண்ட பேனர்களை ஏந்தியபடி எதிர்ப்புப் பேரணியில் மக்கள் கலந்து கொண்டனர். தவிர ஈராக்கில் தினந்தோறும் நடக்கும் இரத்தக்களறியை முடிவுக்குக் கொண்டு வர அந்நாட்டு அரசாங்கத்தை நிர்பந்திக்க வேண்டி, அமெரிக்க மற்றும் பிரிட்டன் நாட்டு மக்களுக்கு அழைப்பு கொடுக்கும் பொருட்டும் வாசகங்கள் அமைந்திருந்தன.

ஆக்ரமிப்பாளர்களுக்கு எதிராக ஏப்ரல் 9 அன்று பேரணி நடத்த அதற்கு முந்தைய நாளான ஞாயிறன்று அல் ஸத்ர் அழைப்பு விடுத்தார். ஆக்ரமிப்பை முடிவுக்குக் கொண்டு வர அனைத்து மக்களும் தெருவில் இறங்க வேண்டும். ஆக்ரமிப்பு சக்திகள் உங்களின் மிகப்பெரிய எதிரிகள் ஆவர் என்று ஸத்ர் தனது பேரணிக்கான அழைப்பில் கூறினார். ஈராக்கின் மக்கள் தங்களுக்கிடையில் அடித்துக் கொள்வதை நிறுத்த வேண்டும் என்றும், அமெரிக்க படைகளுக்கெதிராக ஒன்றிணைந்து போராட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

“ஈராக் ஒரு சுதந்திரமடைந்த நாடு, ஆனால் உண்மையில் எங்களுக்கு எங்கே இருக்கிறது சுதந்திரம்? இங்கே நடப்பதோ நாசம் ஏற்படுத்தும் அழிவுகள் தான். நமது மக்களை அவர்கள் கொன்றொழித்தனர். பெண்களை விதவைகளாக்கினர். ஈராக் முழுவதும் மரணமும், நாசமும் மட்டுமே நிலைநிற்கின்றன. இது தான் அவர்கள் கூறும் சுதந்திரம். ஈராக்கில் அமெரிக்கா உட்புகுந்து இங்கு நிலைகொண்டு அதன் மூலம் எங்களுக்கு சுதந்திரம் கிடைக்கும் என்பதில் நம்பிக்கையில்லை. அதனை நாங்கள் விரும்பவுமில்லை. எங்களது பூமியிலிருந்து உடனடியாக வெளியேறுங்கள் என்பதே நாங்கள் அவர்களுக்கு தெரிவிக்கும் செய்தி”. என்று எதிர்ப்புப் பேரணியில் கலந்து கொள்ள பஸ்ராவில் இருந்து வந்து சேர்ந்த ஷியா தலைவர் அஹ்மத் அல் மாயாஹை கூறினார்.

கடந்த 2003 மார்ச்-19 நள்ளிரவில் ஈராக் மீது அமெரிக்க படைகள் தாக்குதல் தொடுக்க ஆரம்பித்தது. தொடர்ந்து ஈராக்கின் தலைநகரமான பாக்தாதை ஏப்ரல் 9 அன்று கைப்பற்றினர். அன்று முதல் ஈராக்கை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டதாகவும், ஈராக் மக்களுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்து விட்டதாகவும் அறிவித்துக் கொண்ட அமெரிக்க படைகளுக்கு எதிராக, கடும் பாதுகாப்புகளுக்கு இடையிலும் இன்று வரை தாக்குதல்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த தாக்குதலில் மட்டும் 6 அமெரிக்க படையினர் கொல்லப்பட்டனர். இதோடு ஈராக் ஆக்ரமிப்பிற்குப் பின் ஈராக்கில் கொல்லப்பட்ட அமெரிக்க படையினரின் எண்ணிக்கை 3,275 ஆனது. இது 11 செப். ல் அமெரிக்க வணிக வளாகத்தில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை விட அதிகமாகும்.

சுன்னாஹ் குழுக்களும் பேரணியில் இணைந்தன:

பலம் பொருந்திய சுன்னாஹ் மக்களின் அரசியல் கட்சியான ஈராக்கிய இஸ்லாமிய கட்சியின் முக்கிய பொறுப்பில் உள்ள அப்துல் காதிர் அல் தைம், “எங்கள் நாட்டின் பொதுப்பிரச்னைக்காக சிறு வேறுபாடுகளை மறந்து ஈராக்கிய மக்கள் ஓரணியில் திரண்டு நடத்தும் இந்தப் பேரணி அமெரிக்காவின் அநியாயமான ஆக்கிரமிப்புக்கு முடிவு கட்டுவதற்காகவே” என்றார்.

அமெரிக்க ராணுவ பிரதிநிதியான மார்க் ஃபாக்ஸ் பேரணி பற்றிக் கருத்துத் தெரிவிக்கையில், “வளர்ந்துவரும் ஈராக்கிய குடியரசின் ஓர் அறிகுறியாகவே இப்பேரணி தென்படுவதாகவும், அதே சமயம் அமெரிக்கக் கொடிகள் எரிபடுவதையும் மிதிபடுவதையும் தான் ஒரு பொருட்டாக எண்ணவில்லை” என்றும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் அக்கிரம ஆக்கிரமிப்பை எதிர்த்து தன் இரத்தம் சிந்திய போராட்டங்களை இரு முறை நடத்திய அமெரிக்க எதிர்ப்புக் குழுவான அல் சதர், தற்போது ஷியா ஆளும் அரசாங்கத்தின் கீழ் ஆறு அமைச்சர்களையும் 32 வழக்குரைஞர்களையும் கொண்டதோர் சக்திமிக்க அரசாக உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.