கைதியின் கதை – PDP தலைவர் மதானி பற்றிய குறும்படம்!

{mosimage}கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் அரசியல் அதிகாரத்தில் தனி இடஒதுக்கீடு கேட்டு முஸ்லிம் சமூகம் போராடிக் கொண்டிருக்கிறது. மறுபுறம் இருண்ட சிறையறைகளில் முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை இந்திய தேசம் தந்து கொண்டிருக்கிறது.

இந்திய முஸ்லிம்களின் சமூக பொருளாதார கல்வி நிலை குறித்து ஆய்வு செய்துள்ள நீதிபதி ராஜிந்தர் சச்சார் தலைமையிலான குழுவின் அறிக்கைப்படி 10.6 சதவிகித முஸ்லிம் மக்கள் தொகையைக் கொண்ட மஹாராஸ்ட்டிராவில் சிறையில் வாடும் முஸ்லிம்களின் எண்ணிக்கை 40.6 சதவிகிதமாகும்.

குஜராத்தில் 10 சதவிகிதத்திற்கும் குறைவாகவே முஸ்லிம்கள் உள்ளனர் ஆனால் சிறைக்கைதிகளின் எண்ணிக்கையோ 25 சதவிகிதத்திற்கும் மேல். காஷ்மிருக்கு அடுத்ததாக முஸ்லிம் மக்கள் தொகையை அதிகமாக கொண்ட அஸ்ஸாமிலும் இதே நிலைதான். தமிழகத்தில் சறைச்சாலைகளில் உள்ள கைதிகளில் 9.6 சதவிகிதம் முஸ்லிம்களாக உள்ளனர். அதிர்ச்சிகரமான இந்த ஆய்வு முடிவைப் பார்க்கும் போது முஸ்லிம்களின் மக்கள் தொகையை விட அவர்களுக்கு அதிக பங்கு அளிக்கப்பட்டுள்ள ஒரே இடம் சிறைச்சாலை மட்டுமே.

கோவை குண்டு வெடிப்பு மற்றும் அதற்கு முந்தைய பல்வேறு வழக்குகள் காரணமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள 200க்கும் அதிகமான முஸ்லிம் சிறைவாசிகளுக்கு இழைக்கப்பட்டு வரும் கொடுமை இந்திய ஜனநாயகத்தின் உயாந்த கோட்பாடுகளை கேள்விக்குறியாக்கி வருகின்றது. 

{mosimage}கேரளாவின் மக்கள் ஜனநாயகக் கட்சி தலைவர் அப்துன் நாஸர் மதானி உட்பட 200 க்கும் மேற்ப்பட்ட முஸ்லிம்கள் வெறும் விசாரனைக் கைதிகளாகவே கடந்த 9 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர். குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்படாத, இனி ஒருபோதும் சிறு குற்றம் கூட செய்யத் திராணியற்ற, மனபலமும், உடல் வலிமையும் குன்றிய மதானி உள்ளிட்ட இந்தியக் குடிமகன்கள் விடை தெரியாமல் சிறையில் வாடி வருகின்றனர். இந்தியா முழுவதும் தேடி அலைந்தாலும் இது போன்ற ஒரு விசித்திர வழக்கை காண இயலாது. 

கேரள மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மதானி பற்றி தமிழ்ச் சமூகத்தில் ஒரு தவறான புரிதல் படிந்துள்ளது. அதைக் களையும் வகையில் இந்த ஆவணப்படம் சில உண்மைகளைப் பதிவு செய்துள்ளது. மக்கள் ஜனநாயகக்  கட்சி கேரளாவில் மக்கள் செல்வாக்குடன் செயல்படும், தேர்தலில் பங்கேற்கும் கட்சியாகும். அது வன்முறையை நோக்கமாக கொண்ட கட்சியல்ல, மேலும் மதானி இது நாள் வரையில் எந்த வழக்கிலும் தன்டனைக்குள்ளானவர் அல்ல என்பதும் குறிப்பிடத் தக்கது. சமுதாயத் தலைவராகவும் அரசியல் வல்லுநராகவும் மக்கள் வெள்ளத்தில் மிதந்து வந்த மதானி, இன்று வாழ்வுக்கும் மரணத்துக்கும் இடையேயான இறுதிப் போராட்டத்தில் தன்னை இழந்து கொண்டிருக்கிறார். 

அரசியல் பின்புலம் கொண்ட மதானிக்கே இந்த நிலை என்றால், தமிழகத்து கொடுஞ்சிறைகளில் குற்றம் நிரூபிக்கப்படாமல் நெடுங்காலமாக வாடிக் கொண்டிருக்கும் அப்பாவி முஸ்லிம்களின் நிலையை என்னவென்பது?

மனித நேயம் மற்றும் சமூக நீதியின் தொட்டிலான தமிழகத்தில் இத்தகைய கொடுமைகள் அரங்கேறுவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. மனித உரிமைத் தத்துவத்தை தீயிலிட்டுப் பொசுக்குகின்ற இத்தகைய வன் செயல்களுக்கு முடிவு வேண்டும். 

கண்ணீரில் கரையும் முஸ்லிம் சிறைவாசிகளின் அவல வாழ்க்கைக்கு விடிவு வேண்டும்.

அத்தகைய விடிவை நோக்கிய களப்போராட்டத்தின் கருத்தியல் கருவியாக இந்த ஆவணப்படம் இணைந்து கொள்கின்றது.

இந்த ஆவணப்படத்தை தமிழ்முஸ்லிம்மீடியா தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

நன்றி: முகவைத்தமிழன்