கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில்…

நெதர்லாந்து நாட்டில் பதிவு செய்யப்பட்டிருக்கும் அரபு முஸ்லிம்களின் அமைப்பு ஒன்றின் மீது யூதர்களின் மனம்புண்படும்படியாக கேலிச்சித்திரம் ஒன்றை வெளியிட்டதாக அந்நாட்டின் அரசு வழக்குத் தொடுத்துள்ளது.

அரபு ஐரோப்பிய லீக் என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டிருக்கும் அவ்வமைப்பு ஹோலோகாஸ்ட் என்று நம்பப்படும் யூதப்படுகொலைகளைக் கிண்டல் செய்யும் தொனியில் கேலிச் சித்திரம் ஒன்றைத் தனது தளத்தில் வெளியிட்டிருந்தது.

 

இதில் எலும்புக் குவியல்களுக்கு அருகே நிற்கும் இருவர் பேசிக் கொள்வது யூதப் படுகொலையைக் கிண்டல் செய்யும் தொனியில் இருப்பதாக நெதர்லாந்து அரசு கருதி அவ்வமைப்பின் மீது வெறுப்பைப் பரப்புவதாகக் குற்றம் சுமத்தப்பட்டு வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.

இக்கேலிச் சித்திரத்தில் ஒருவர் “எப்படியாவது ஆறு மில்லியன் எலும்புகளைத் தேற்றவேண்டும்” என்கிறார். இன்னொருவர். “அவர்களெல்லாம் யூதர்கள் போலத் தெரியவில்லையே” என்கிறார்.

இது யூதர்களின் மனத்தைப் புண்படுத்துகிறது என நெதர்லாந்து அரசு கருதியதால் அவ்வமைப்பையும் தளத்தையும் தடை செய்ய நீதிமன்றம் அனுமதி அளிக்கக் கோரி உள்ளது.

இதற்குப் பதிலளித்த அரபு ஐரோப்பிய லீகின் தலைவர் அப்து முத்தலிப் புசர்தா, “எங்கள் உயிரினும் மேலான இறைத்தூதர் அவர்களைக் கிண்டல் செய்து வெளியிட்ட கேலிச்சித்திரத்தைக் குறித்து இன்றுவரைஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் எங்களின் இறைமறையை வன்முறையைத் தூண்டும் நூல் எனப் படம் வெளியிட்ட கியர்ட் வில்டர்ஸ் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை; நாங்கள் ஒரு கேலிச்சித்திரம் வெளியிட்டதற்கே எங்கள் மீது வழக்கா?” என்று கேட்டார்.

“யூதர்களின் மனதைப் புண்படுத்துவது எங்கள் நோக்கம் இல்லை நாங்கள் இத்தனை ஆண்டுகள் அனுபவித்த மனவலியை உணர வைக்கவே இப்படி ஒரு கேலிச்சித்திரம் வெளியிட்டோம். இதனால் கருத்துச் சுதந்திரத்தை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்று காட்டவே இது” என்று கூறினார்.