ஹிஜாப் குறித்த ஸ்ட்ரா கூற்றுக்கு கண்டனம் வலுக்கிறது

{mosimage}ஜாக் ஸ்ட்ரா என்ற முன்னாள் பிரிட்டிஷ் அமைச்சர், பிரிட்டிஷ் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிவதைத் தவிர்க்க வேண்டும் எனக் கூறிய கருத்துக்கு பல்வேறு தரப்பினரிடையே எதிர்ப்பு வலுத்து வருகிறது. சென்ற மாதம் திரு ஸ்ட்ரா இந்தக் கருத்தைக் கூறியபின்னர், கடந்த அக்டோபர் 6 அன்று லிவர்பூல் என்ற பகுதியில் ஹிஜாப் அணிந்த ஒரு முஸ்லிம் பெண்ணை சில சமூகவிரோதிகள் தாக்கி அவரது ஹிஜாபைக் கிழித்தனர்.

இந்தத் தாக்குதலுக்கான முழுப்பொறுப்பும் திரு ஸ்ட்ரா தான் ஏற்க வேண்டும் என பிரிட்டிஷ் முஸ்லிம் குழுவினர் (Muslim Council of Britain) கூறியுள்ளனர். தாக்குதலில் ஈடுபட்டவன் முஸ்லிம்களுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினான் என்பதும் பதிவு செய்யப் பட்டுள்ளது.

இது குறித்து பிரிட்டிஷ் முஸ்லிம் குழுவின் பொதுச் செயலாளர் திரு. அப்துல் பாரி அவர்கள் குறிப்பிடும் போது, "அரசில் பங்கு வகிக்கும் பொறுப்புள்ள உயர் அமைச்சர் ஒருவரின் இந்தக் கூற்று நிச்சயம் சமூக விரோதிகள் முஸ்லிம்களுக்கெதிரான தங்களின் வன் செயல்களை அதிகரிக்கவே உதவும், பிரிட்டனில் தற்போது நிலவும் இஸ்லாமிய எதிர்ப்புணர்வை இது போன்ற பொறுப்பற்ற பேச்சுக்கள் மேலும் வளர்க்கவே செய்யும்" என்று கூறினார்.

தனிமனித உரிமைகளைக் கேலிக்கூத்தாக்கும் பேச்சுகளை ஸ்ட்ரா போன்றவர்கள் பேசக்கூடாது. இதுபற்றி அரசு ஏதும் நடவடிக்கை எடுக்காவிட்டால், ஐரோப்பிய மனித உரிமைக் குழுவிடம் இது குறித்துப் புகார் செய்யப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆளும் தொழிலாளர் கட்சியிலிருந்து ஈராக் போர் குறித்து கடுமையாக விமர்சித்ததால் விலக்கப்பட்டு ரெஸ்பெக்ட் என்ற புதிய கட்சியைத் தோற்றுவித்துள்ள திரு ஜார்ஜ் கேலோவே இது குறித்துக் குறிப்பிடும் போது, "திரு.ஸ்ட்ரா அரசியல் இலாபங்களுக்காக இது போன்ற பொறுப்பற்ற பேச்சுகளைப் பேசி வருகிறார். டோனி பிளேய்ருக்குப் பின் கட்சித் தலைவராகும் வாய்ப்பைப் பிரகாசப் படுத்த முழுக்க சுயநலமிக்க பேச்சு இது" என்று அவர் கூறினார்.

ஸ்ட்ராவின் பேச்சை மேலும் பல பிரிட்டிஷ் முஸ்லிம்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் கண்டித்துள்ளனர்.