உடலை இறுகப் பிடிக்கும் அரைகுறை ஆடைகள், அரைநிர்வாண கோலங்கள் ஏதுமில்லாத ஓர் உடற்பயிற்சி மையத்தை அதுவும் முஸ்லிம் பெண்களால் முஸ்லிம் பெண்களுக்காக நடத்தப்படும் ஓர் உடற்பயிற்சி மையத்தைக் கற்பனை செய்ய முடியுமா?
ஆம்! இது நிகழ்ந்திருப்பது வளைகுடா நாடுகளில் அல்ல. ஜெர்மனியின் கலோன் மாவட்டத்தின் எஹ்ரென்ஃபெல்டு நகரம் இதற்கு ஓர் முன்னுதாரணமாய் திகழ்கிறது. அந்நகரிலுள்ள முஸ்லிம் பெண்களின் கோரிக்கையினை மனதிற்கொண்டு ஓராண்டுக்கு முன் துவங்கப்பட்ட இந்த உடற்பயிற்சி மையம் தனது ஓராண்டை இப்போது நிறைவு செய்துள்ள நிலையில் இதனை முன்மாதிரியாகக் கொண்டு ஆங்காங்கே துவங்கும் பிற உடற்பயிற்சி நிலையங்கள் ஜெர்மனியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நவீன கருவிகளையும் சர்வதேச தரத்தினையும் கொண்ட, முழுக்க முஸ்லிம் பெண் பயிற்சியாளர்களையும் இஸ்லாமிய அடிப்படையிலான கண்ணிய உடைக்கட்டுப்பாடுகளை அடிப்படை விதிமுறைகளாகவும் கொண்டு இயங்கும் இம்மையத்தினுள் நேரம் தவறாமல் தொழ பள்ளிவாயிலும் உண்டு.
{mosimage}"ஹயாத்" (வாழ்க்கை) என்ற பெயர் கொண்ட இப்பயிற்சி நிறுவனத்தின் உரிமையாளர் சகோதரி எமின் ஐடமிர் பேசுகையில் கடந்த ஏப்ரல் 2007 இல் துவங்கப்பட்ட இந்த முஸ்லிம் பெண்களுக்கான உடற்பயிற்சி மையம், அப்பகுதி முஸ்லிம் பெண்களின் கோரிக்கையினை முன்வைத்து ஆரம்பத்தில் சிறு அளவில் துவங்கப்பட்டதாகக் கூறுகிறார்.
"முகம், கை, கால்களைத் தவிர மற்ற பகுதிகளை மறைக்க வலியுறுத்தும் இஸ்லாத்தில் – ஒரு பெண் மற்ற பெண்ணைக் கூட அரைகுறை நிர்வாணக்கோலத்தில் பார்ப்பதற்கு அனுமதி இல்லை எனும் போது, ஆண்கள் பெண்கள் கலந்து உடற்பயிற்சி மையம் என்ற பெயரில் நடக்கும் ஆபாச, அநாச்சாரங்களில் இருந்து விடுபடவே இது போன்ற முழுக்க முழுக்க பெண்களுக்கான மையம் துவங்கும் எண்ணம் தோன்றியது" என்கிறார்.
350 பெண் வாடிக்கையாளர்களைக் கொண்டு பரபரப்பாக இயங்கி வரும் இந்த மையத்தின் பெரும்பான்மையான பெண்கள் குடும்பத் தலைவிகளே. தங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பிவிட்டு கிடைக்கும் ஓய்வு நேரங்களில் உபயோகமாய் செலவிடுவோர் இதில் அதிகம். தவிர சிறு குழந்தைகளுக்கான விளையாட்டு அறை வசதியும் அதில் காப்பாளர் கண்காணிப்பும் இருப்பதால் சிறுவயது குழந்தைகளைக் கொண்ட முஸ்லிம் பெண்களும் இதில் ஆர்வமுடன் இணைந்து வருகின்றனர். தங்கள் மனைவிகளை மையத்திற்குக் கொண்டு வந்து விட்டுச் செல்லும் கணவன்மார்களுக்குக்கூட இம்மையத்தினுள் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
உடலை உறுதியாகவும் கட்டுக்கோப்பாகவும் வைத்திருக்க வலியுறுத்தும் இஸ்லாத்தில் பெண்களுக்கு முழு சுதந்திரம் வழங்கியுள்ளதாகவும், அதன் அடிப்படையில் இஸ்லாம் விதித்துள்ள வரம்புகளை மீறாத வகையில் விதிமுறைகளை வகுத்துள்ள சகோதரி ஐடமிர், பெண்களுக்கான உடற்பயிற்சி மையம் என்ற பெயரில் அநாகரீக ஆபாச உடையணிந்து ஆண்/பெண் பயிற்சியாளர்களைக் கொண்டு நடக்கும் ஜெர்மனியின் மற்ற பயிற்சி மையங்களைக் கடுமையாகச் சாடவும் செய்கிறார்.
உடற்பயிற்சி செய்ய விரும்பும் முஸ்லிம் பெண்கள் இது போன்ற மற்ற உடற்பயிற்சி நிலையங்களில் ஏற்படும் உடைகள்/ ஆண் பயிற்சியாளர் போன்ற தர்ம சங்கடங்கள் மூலம் உடற்பயிற்சிகளையே தவிர்த்து விடுவதையும் சுட்டிக்காட்டினார்.
பெண் விடுதலை பற்றிப் பேசும் பெண்கள் தம் அரைகுறை உடைகளினால் ஏற்படும் விபரீதங்களைத் தம் இயல்பு வாழ்க்கையில் இன்னல்களாக சந்திக்கும் போது மட்டுமே உணர்கின்றனர். ஆடையில் சுதந்திரம் வேண்டும் எனும் பெண்களின் கோஷத்திற்கு உதவிக்குரல் கொடுக்கும் ஆணினத்திற்கு அவர்களின் சபலமே அடிப்படைக் காரணம் என்பதையும் மிகத் தாமதமாகப் புரிந்து கொள்கின்றனர். அந்த ரீதியில் ஜெர்மனி துவங்கி அனைத்து மேலை நாடுகளிலும் பத்திரிகைகள், தொலைக்காட்சி மற்றும் இணையதள ஊடகங்களில் பற்றி எரியும் தலையங்கமாக இன்று இச்செய்திகள் வலம் வருகின்றன.
மேற்கத்திய நாடுகளின் இந்தக் கடும் வயிற்றுப் போக்கிற்குக் காரணம் இல்லாமல் இல்லை. ஜெர்மனியின் உடற்பயிற்சி மையங்களுக்கு அதிகாரப்பூர்வமான அனுமதி வழங்கும் அரசு சார் DSSV எனும் ஏற்புடைமை மற்றும் ஆரோக்கியம் (fitness and spa-industry) தொடர்பான நிறுவனத்தின் அதிகாரியான ரெஃபிட் காம்பெரோவிக் பேசுகையில், 'ஹயாத்' உடற்பயிற்சி மையத்தின் வெற்றியினைத் தொடர்ந்து எட்டு கோடியே இருபது இலட்சம் பேர் கொண்ட ஜெர்மனியின் பல நகரங்களில் இத்தகைய முஸ்லிம் பெண்களுக்கான உடற்பயிற்சி நிறுவனங்கள் துவங்குவதற்கான அறிகுறிகள் தென்பட ஆரம்பித்துள்ளது" எனக் கூறுகிறார்.
{mosimage}ஹயாத் உடற்பயிற்சி நிறுவனத்தின் வெற்றியைத் தொடர்ந்து பாஸ்டனின் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தின் வளாகத்தினுள் அமைந்த மாணவர்களுக்கான உடற்பயிற்சி மையம் கடந்த பிப்ரவரி-4, 2008 முதல் முஸ்லிம் மாணவிகளுக்கான தனி நேரத்தினை ஒதுக்கியுள்ளது(MSNBC செய்தி). பல்கலைக்கழகத்தில் பயிலும் முஸ்லிம் மாணவிகளின் ஒருமித்த வேண்டுகோளுக்குச் செவி சாய்த்திருக்கும் இச்செய்தி பலரை மலைக்க வைத்துள்ளது. காழ்ப்புணர்ச்சியை முதலீடாகக் கொண்டு இயங்கும் சில செய்தி நிறுவனங்கள், "தங்கள் பத்திரிகையாளர் செய்தி சேகரிக்கச் செல்கையில் உடற்பயிற்சி நிறுவனத்தில் யாரும் இல்லை" என்று எழுதி தங்கள் அடிமன வெறுப்பைக் காட்டிக்கொண்டன.
நெறிமுறையற்ற வாழ்வினால் தறிகெட்டு ஓடி குடும்பப் பிணைப்பு சீர் குலைந்தபின் சிந்திக்க ஆரம்பிக்கும் மேற்கத்தியர்களிடையே இஸ்லாத்தின் தாக்கமும், அதன் சீரிய வாழ்க்கைமுறையும் பெரும் வரவேற்பைப் பெற்று வரும் இக்கால கட்டத்தில், இத்தகைய மையங்கள் துவங்குவது மேற்கத்தியக் கலாச்சாரத்தினை மாற்றிமைக்கும் என்பதால் அரசு துவங்கி பல்வேறு அமைப்புகளிடையே இப்பயிற்சி மையங்களுக்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. அத்தகைய அனைத்து எதிர்ப்புகளையும் மீறி "ஹயாத்" போன்ற இஸ்லாமிய அடிப்படையில் அமைந்த மையங்கள் பரவுவது தெளிவாக தெரியும் சூழலில் இது போன்ற இஸ்லாமிய உடற்பயிற்சி மையங்கள் அமைப்பது பற்றி தமிழக முஸ்லிம்களும் சிந்திக்கத் துவங்குவது நலம்.
– அபூ ஸாலிஹா