{mosimage}புனித ஹஜ் பயணத்தை முடித்துவிட்டுக் கடந்த ஒருவார காலமாக எகிப்தில் இருந்து காஸாவுக்குத் திரும்ப இயலாமல் முதலில் கப்பலிலும், பின்னர் எகிப்தினுள் அல்-அரீஷ் முகாம்களிலும் தவித்த ஹாஜிகள் அனைவரும் நேற்று (2/1/2008) எகிப்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் ரஃபா எல்லை வழியே தமது தாயகம் திரும்பினர். இது குறித்து அவர்கள் அனைவரும் பெரும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
இந்த ஹாஜிகள் அனைவரும் இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் கர்ம் ஸாலேம் என்ற இடம் வழியே தான் காஸாவுக்குத் திரும்ப வேண்டும் என எகிப்திடம் நிபந்தனை விதித்திருந்தது. எகிப்திய அரசும் அதற்கு ஒப்புக் கொண்டு ஹாஜிகளை கர்ம் ஸாலேம் வழியாகச் செல்லுமாறு கோரியது. ஆனால் இந்த நிபந்தனைகளை காஸா ஹாஜிகள் எவருமே ஏற்கவில்லை; மாறாக ரஃபா வழியா மட்டுமே தாங்கள் காஸா திரும்ப விரும்புவதாகக் கூறினர். இதனைத் தொடர்ந்து எகிப்திய அதிபர் ஹுஸ்னி முபாரக் இந்தச் சிக்கலை விரைவில் தீர்ப்பதாக உறுதி அளித்தார்.
பின்னர் காஸா ஹாஜிகள் ரஃபா வழியாக காஸா திரும்ப எகிப்து அனுமதித்தது. எகிப்தின் இந்த முடிவு குறித்து இஸ்ரேல் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது. இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சகச் செய்தித் தொடர்பாளர் எகிப்தின் இந்த முடிவு இஸ்ரேலுக்குத் தெரிவிக்கப்படவில்லை என்றும் இச்செயல் எகிப்து-இஸ்ரேல் உறவுகளுக்கு வலு சேர்ப்பதாக அமையாது என்றும் கடுமையாக விமர்சித்தார்.
ரஃபா எல்லைக்கு ஹாஜிகளை வரவேற்கச் சென்ற ஹமாஸின் செய்தித் தொடர்பாளர் எகிப்தின் மனிதாபிமான அடிப்படையிலான இச்செயல் மிகவும் பாராட்டத் தக்கது என்றும், எகிப்திய அரசுக்குத் தமது நன்றிகளைத் தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.