மீண்டும் அம்பலமாகும் “தீவிரவாதிகள் கைது” நாடகங்கள்!

{mosimage}நிரபராதிகளைப் பிடித்து பொய்வழக்குகள் சுமத்தி, தீவிரவாத – பயங்கரவாத முத்திரை குத்துவதிலும், பொய் என்கவுண்டர்களுக்கும் பெயர் பெற்ற டில்லி காவல்துறையின் பிரத்தியேக சிறைச்சாலை(Special Cell)யில் இரண்டு முஸ்லிம் இளைஞர்களை தீவிரவாதிகள் எனக்கூறி பொய் வழக்கு தொடுத்து அடைத்த மற்றொரு சம்பவத்தின் அதிர்ச்சிப் பின்னணியும் வெளியாகியுள்ளது.

 

கடந்த டிசம்பர் 2005 ல் டில்லி காவல்துறையினரால் அல்பத்ர் தீவிரவாதிகள் என்ற பெயரில், அனாயாசமாக சுற்றி வளைத்து கைது செய்யப்பட்டு பிரத்தியேக சிறைச்சாலையில்  அடைக்கப்பட்டிருந்த முஹம்மத் முஅரிப் கமர் மற்றும் இர்ஷாத் அலி ஆகியோர் நிரபராதிகள் என சி.பி.ஐ டில்லி உயர்நீதி மன்றத்தில் சமர்ப்பித்த முதல் தகவல் அறிக்கை(F.I.R) கூறுகின்றது.

காவல்துறையின் இன்ஃபார்மர்களாக வேலை செய்திருந்த இவ்விருவரும், தொடர்ந்து காவல்துறைக்கு செய்திகளை அறிவித்துக் கொடுக்க தயாராகாததைத் தொடர்ந்து காவல்துறை இவர்களை தீவிரவாதிகள் எனக்கூறி பொய் வழக்கில் சிக்க வைத்தது என சிபிஐ அறிக்கை கூறுகின்றது. சிபிஐயின் சமர்ப்பித்த் இவ்வறிக்கையினை அலசிய உயர்நீதிமன்றம், இச்சம்பவத்தைக் குறித்து விரிவான விசாரணை நடத்த சிபிஐக்கு உத்தரவிட்டுள்ளது.

கமரின் சகோதரர் காஸிப் அலி டெல்லி உயர்நீதி மன்றத்தில் சமர்ப்பித்த புகார் மனுவின் அடிப்படையில் நீதிமன்றம் இந்த மேல்விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2006 வருடம் டிசம்பரில் இவர்கள் இருவரும் அல்பத்ர் தீவிரவாதிகள் எனக் கூறி காவல்துறை கைது செய்தது. ஆனால் வழக்கு பதிவு செய்ததோ பிப்ரவரி 9, 2007 அன்று. இக்கால இடைவெளியில் இவ்விருவரையும் காவல்துறை சட்டத்திற்குப்  புறம்பாக  பாதுகாப்புப் பொறுப்பில் வைத்திருந்தது எனவும்  சிபிஐ கண்டறிந்து  தாக்கல் செய்த அறிக்கை கூறுகிறது. வடக்கு டில்லியிலுள்ள முகாபரா சௌக் என்ற இடத்திலிருந்து ஆர்.டி.எக்ஸ் உட்பட பயங்கர ஆயுதங்களுடன் இவர்களைக் கைது செய்ததாக காவல்துறை தனது முதல் தகவல் அறிக்கை(F.I.R)யில் குறிப்பிட்டிருந்தது. அதன் பின்னர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த குற்றப்பத்திரிக்கையில், காஷ்மீரிலிருந்து இவர்களுக்கு ஆர்.டி.எக்ஸ் போன்ற பயங்கர ஆயுதங்கள் கிடைத்தன என காவல்துறை கூறியிருந்தது.

 

ஆனால், சிபிஐயின் முதல் தகவல் அறிக்கையில் காவல்துறை கூறும் இக்கதைகள் அனைத்தும் நம்பத்தகுந்தவை அல்ல எனவும், அனைத்துமே காவல்துறையினரால் புனையப்பட்டவை எனவும் கூறுகின்றது.

 

சம்பவத்தைக் குறித்து சிபிஐ கூறுவது பின்வருமாறு:

 

இருவரிடமிருந்தும் ஆர்.டி.எக்ஸும், பயங்கர ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன எனக் கூறும் காவல்துறை, இவைகள் அவ்விருவருக்கும் காஷ்மீர் சென்ற பொழுது கிடைத்தன என்று மட்டுமே கூறுகின்றதே தவிர, துல்லியமாக அவை எங்கு வைத்து யாரிடமிருந்து அவர்களுக்கு கிடைத்தன என்பதைக் குறித்து எதுவுமே கூறவில்லை.

 

கமரும், அலியும் காவல்துறையினருக்கு மிகத்துல்லியமான தகவல்களை தந்து கொண்டிருந்த திறமையான இன்ஃபார்மர்கள் என்பதை, விசாரணையின் பொழுது பிரத்தியேக சிறைச்சாலையின் அதிகாரிகளான லளித் மோகன் நேகியும் ஹரித்வாய் பூஷணும் சிபிஐயிடம் சம்மதித்துள்ளனர். மேலும், இவ்விருவரும் அல்பத்ர் இயக்கத்தின் உறுப்பினர்கள் என்பதற்கு ஆதாரமாக காவல்துறையின் கையில் எவ்வித ஆவணங்களும் இல்லை என்றும் சிபிஐயிடம் தெரிவித்துள்ளனர்.

 

காவல்துறையின் கூற்றுபடி962006 அன்று மாலை 7.30 க்கு பொது இடத்தில் வைத்து இவர்களை கைது செய்த பின்னரும், அந்நேரம் இவர்களிடமிருந்து ஆர்.டி.எக்ஸ் அடங்கிய பயங்கர ஆயுதங்களை கைப்பற்றியதற்கான ஒரு சாட்சி கூட இல்லை. மேலும் இவர்களைக்  செய்து செய்ததாக  கூறப்படும்பொழுது இவர்கள் பயணம் செய்து கொண்டிருந்ததாகக் காவல்துறை  கூறும் பேருந்தின் நடத்துனர் மற்றும் ஓட்டுனரிடம் கூட காவல்துறை விசாரணை நடத்தவில்லை.

 

மட்டுமல்ல இவர்களின் வசிப்பிடத்திலோ, வேலை செய்யும் இடத்திலோ காவல்துறை சோதனை நடத்தவில்லை. இவர்களுக்கு காஷ்மீரில் வைத்து ஆயுதம் வழங்கியவர்களைக் குறித்து எவ்வித விசாரணையும் நடத்தப்படவில்லை. இவர்களுக்கு உதவியதாக  கூறப்படும் காஷ்மீரில் உள்ளவர்களை கண்டறிய எவ்வித முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை.

 

இவர்களை கைது செய்ததாக வழக்கு பதிவு செய்திருக்கும் பிப்ரவரியிலிருந்து நான்கு மாதங்களுக்குப் பின்னரே, ஒரு சடங்கிற்காக விசாரணை என்ற  பெயரில் ஒருவரை மட்டும் காஷ்மீருக்கு காவல்துறை அனுப்பியிருக்கின்றது.  

 

குற்றவாளிகளையும், பயங்கரவாதச்  செயல்களில் ஈடுபடுபவர்களையும் குறித்து காவல்துறைக்கு துல்லியமான விவரங்கள்  கொடுத்துக் கொண்டிருந்த இவர்கள், தொடர்ந்து அவ்வேலையை  செய்வது தம் உயிருக்கு ஆபத்தானது என்பதை உணர்ந்து அதிலிருந்து பின் வாங்கியதாலேயே  காவல்துறை அவர்கள் மீது   தீவிரவாதிகள் என்ற பெயரில்  பொய்  வழக்கு பதிவு செய்தது என சிபிஐ ஆதாரங்களுடன் விவரிக்கின்றது.

 

காவல்துறைக்கு விவரங்கள் தருவதற்காக மாதம்தோறும் கமருக்கு 5000  ரூபாய் வரை காவல்துறை சம்பளம் கொடுத்திருந்தது என அவரின் மனைவி  ஷபானா சிபிஐக்குக் கொடுத்த வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

 

2005 டிசம்பர் 22 அன்று காலை 11 மணிக்கு சகோதரன் காஸிபின் பஜன்புரா சூட்கேஸ் தொழிற்சாலைக்கு கமர் சென்றுள்ளார். அதன் பின்னர் அவரை காணவில்லை என்று கூறி 6 நாட்களுக்குப் பின் 28 டிசம்பர் 2005 அன்று சகோதரன் காஸிப் காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளார். பிப்ரவரியில் "அல்பத்ர் தீவிரவாதிகள் ஆர்.டி.எக்ஸ் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் கைது" என பத்திரிக்கையில் செய்தி வந்த பின்னரே அவர் காவல்துறை கஸ்டடியில் உள்ள விவரத்தை வீட்டினர் அறிந்துள்ளனர்.

 

ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தைக் குறிவைத்துத் தொடரும் இத்தகைய போலி என்கவுண்டர்கள், பொய் வழக்குகள் ஆகியவற்றையும் தொடர்ச்சியாக ஆங்காங்கே அம்பலமாகும் இத்தகைய கயமைத்தனத்தையும் கண்டு இந்திய மக்கள் நீண்ட நாளைக்கு பொறுத்துக் கொண்டிருக்கமாட்டார்கள் என்பது மட்டும் நிச்சயம்.