பிபிசியின் நிஜ முகம்

Share this:

கடந்த 27 டிஸம்பர் முதல் கஸ்ஸா மீது இஸ்ரேல் கட்டவிழ்த்துவிட்ட 22 நாள் பயங்கரவாதத்தின்போது ஆயிரக்கணக்கான அப்பாவிப் பொதுமக்கள் உயிர், உடைமை இழந்ததோடு, பல்லாயிரக்கணக்கானோர் பெரும் காயமடைந்து வீடுகளையும் இழந்து கடும் அவதிக்குள்ளாயினர். அவர்களுக்கு உதவி கோரி சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கம், ஆக்ஸ்ஃபாம் போன்ற பல்வேறு தொண்டு நிறுவனங்கள் உலகெங்கும் நிதி திரட்டி வருகின்றன.

இவற்றுள் ஒன்றான பேரிடர் அவசர உதவிக் குழு (Disaster Emergency Committee – DEC) என்ற நிறுவனம் கஸ்ஸா மக்கள் மறுவாழ்வுக்கென நிதியுதவி கோரி குறும்படம் ஒன்றைத் தயாரித்து, அதை ஒளிபரப்புவதற்கும் விளம்பரம் செய்வதற்கும் பிபிசி உள்பட பல்வேறு ஊடக நிறுவனங்களைக் கேட்டுக் கொண்டது.  ஆனால் இக்குறும்பட விளம்பரத்தை ஒளிபரப்ப பிபிசி மறுத்துவிட்டது. இதை ஒளிபரப்புவது பிபிசி பேணிவரும் நடுநிலையைப் பாதிக்கும் எனக் கருதியதால் ஒளிபரப்ப மறுத்ததாக பிபிசியின் தலைவர் மார்க் தாம்ஸன் கூறியுள்ளார்.

பிபிசியின் இந்த முடிவை பிரிட்டிஷ் பிரதமர் கார்டன் பிரவுன் உள்பட பல்வேறு தரப்பினர் குறை கூறி விமர்சித்துள்ளனர்.

“நடந்திருக்கும் கொடுமையின் அளவைப் பார்த்தபின், மனித நேயத்திற்கான ஆதரவுக்கும் நடுநிலை பேணுவதற்காக அக்கொடுமைக்கான உதவியை மறைப்பதற்கும் உள்ள வேறுபாட்டைப் பிரித்தறியும் அளவுக்கு பிரிட்டிஷ் மக்கள் பகுத்தறிவு உடையவர்கள்” என்று பிரிட்டனின் பன்னாட்டு வளர்ச்சிக்கான அமைச்சர் டக்ளஸ் அலெக்சாண்டர் காட்டமாக விமர்சித்துள்ளார். “மக்கள் பணத்தில் உதவி பெறும் பிபிசி, தன் கடமையை ஒழுங்காகச் செய்ய வேண்டும்” என்றும் அவர் கூறினார்.

பிரிட்டனின் முஸ்லிம் குழுமத்தின் (Muslim Council of Britain)  செயலர் முஹம்மது அப்துல் பாரி, “இதனை ஒளிபரப்ப மறுத்ததன் மூலம் பிபிசி தன் கடமையை நிறைவேற்றத் தவறிவிட்டது; சரிசெய்ய இயலா அளவுக்கு அதன் பிம்பம் சிதையும் முன் பிபிசி தன் தவறைத் திருத்திக் கொள்ள முன்வர வேண்டும்” எனக் கூறினார்.

பிரிட்டன் முழுவதும் பிபிசி அலுவலகங்கள் முன்பு முஸ்லிம் அமைப்புகள் உள்படப் பல்வேறு தொண்டு நிறுவனங்களும் பொதுமக்களும் ஆர்ப்பாட்டம் நடத்தி “பிபிசியே, உன் மீது இழிவே” என்று கோஷங்கள் இட்டனர்.

பிபிசி ஒளிபரப்ப மறுத்த இக்குறும்படத்தை அதன் போட்டி நிறுவனங்களான ITV, சேனல் ஃபோர் ஆகியன ஒளிபரப்ப முன்வந்துள்ளன.

https://www.youtube.com/watch?v=QvWAvBNiNxg
பிபிசி ஒளிபரப்ப மறுத்த வீடியோ

இதற்கு முன் 2006-ல் அரசு நியமித்த உண்மை அறியும் குழு ஒன்று “இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்னையில் பிபிசி நடுநிலை தவறியதாகக் கருதாவிட்டாலும், பிபிசி தவறான ஒரு செய்தி பரவ வழிவகுக்கும் வகையில் தனது செய்தித் தொகுப்புகளை அளிக்கிறது” என்றும், “அடக்குமுறைக்கு ஆளாகும் பாலஸ்தீனர்களின் நிலையையும் அடக்குமுறையைக் கையாளும் இஸ்ரேலிய அரசின் நிலையையும் மனித நேயமுள்ள எவரும் நடுநிலை என்ற போர்வையில் ஒரே மாதிரியாகக் காணமாட்டார்கள்” என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.