கடந்த மார்ச் 10, 2019அன்று 149 பயணியருடனும் 8 பணியாளர்களுடனும் எத்தியோப்பியத் தலைநகர் அடிஸ் அபாபா நகரிலிருந்து கென்யாவின் தலைநகர் நைரோபிக்கு எத்தியோப்பிய ஏர்லைன்ஸ் விமானம் உள்ளூர் நேரம் காலை 8:38க்குப் பறக்கத் துவங்கியது.
சரியாக 6 நிமிடங்கள் கழித்து 8:42க்கு அடிஸ் அபாபா விமானக் கட்டுப்பாட்டு அறை ரடாரில் இருந்து அந்த விமானம் மாயமானது. மாயமான அந்த விமானம் போயிங் 737 – 8 மேக்ஸ் வகையைச் சேர்ந்தது. பறந்த அந்த 6 நிமிடங்களுக்குள் 50+ கிமீ மட்டுமே தாண்டிச் சென்றிருக்கும்.
4-வது நிமிடத்தில் அந்த விமானத்தின் தலைமை விமானி ‘யாரித்’ விமான இயக்கத்தில் சற்று சிரமம் இருப்பதாகக் கூறியுள்ளார். அடுத்த இரு நிமிடங்களில் ரேடாரில் இருந்த ET 302 புள்ளி மறைந்தே போய்விட்டது.
அடுத்த சில மணிநேரத்தில் அந்தப் புத்தம் புதிய (4 மாதங்களே ஆன) போயிங் 737 – 8 மேக்ஸ் விழுந்த கரடுமுரடான இடம் சிதிலங்களுடன் சடலங்கள் கலந்து மயான பூமி ஆன விபரம் தெரிய வந்தது.
சரி, சோகமான நிகழ்வு தான். என்று கடந்து செல்லக்கூடிய ஒரு நேர்ச்சியன்று இது. மனித உயிர்கள் விலைமதிப்பில்லாதவை என்று நாம் நினைத்திருக்க, அவை மதிப்பே இல்லாதவை என்ற கார்ப்பரேட் மதிப்பீடு தெரிய வரும்போது சற்று அதிர்ச்சியாகத் தான் இருக்கிறது!
ஆறுமாதங்களுக்கு முன் இந்தோனேசியாவின் லயன் ஏர் 610 அக்டோபர் 29, 2018அன்று ஜகர்த்தாவிலிருந்து பங்கள் பினாங் நோக்கிச் சென்ற (தயாரித்து 6 மாதங்களே ஆன புத்தம் புதிய) 737 மேக்ஸ் 8 விமானம் கிளம்பிய 12 நிமிடங்களில் இதே போல திடீரென ஜாவா கடலில் விழுந்து 189 பேரைக் காவு வாங்கியது.
மேற்சொன்ன இரு நிகழ்வுகளுக்கும் பொதுவான இழை விமானம் தான்.
உலகின் பயணியர் விமானச் சந்தை இரு பெரும் நிறுவனங்களால் கட்டுப்படுத்தப்படுகிறது. அவை அமெரிக்காவின் போயிங், ஐரோப்பாவின் ஏர்பஸ். இவை இரண்டுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. சிறிய ரக விமானங்களில் போயிங் 737 வகை விமானங்களுக்கும் ஏர்பஸ் A320 வகை விமானங்களுக்கும் தான் கடும் போட்டி. போயிங் இதில் சற்றே முன்னிலை வகிக்கிறது.
இந்த வரிசையில் தற்போது பிரச்சினைக்கு உள்ளாகி இருக்கும் 737 மேக்ஸ் 8 விமானத்தைப் பொருத்தவரை, அதை அதிகமாக விற்றே ஆகவேண்டிய வெறியில் போயிங் சில பல சமரசங்களை மேற்கொண்டது என்பது தெரிய வந்துள்ளது.
விமானம் தரையை விடுத்து, வானில் பறக்கத் தொடங்கும் வேளையில் அது எதிர்கொள்ளும் காற்றின் உராய்வு விசையை மீறி மேலெழும்ப அதற்கு உரிய ஆற்றலை அளிக்கும் இன்ஜின்கள்தாம் விமானங்களின் உயிர்நாடி.
போயிங் 737 மேக்ஸ் 8 விமானங்களில் பயன்படுத்தும் அதிக ஆற்றல் தரும் CFM -LEAD என்ற நவீன இன்ஜின் சற்றே கூடுதல் பளுவானதாகும். இதனை, சிறிய ரக 737 மேக்ஸ் 8இல் பொருத்துதல் மரபை மீறிய உத்தியாகும். இதனால் இறக்கைகளின் கீழ்ப்புறம் இருக்கும் குறுகிய சவாலான இடைவெளியில் இதைப் பொருத்தி, போயிங் சோதனை செய்து விற்கவும் ஆரம்பித்துவிட்டது.
சில சமயங்களில் CFM – LEAD இன்ஜின்கள் தரும் அளவுக்கு அதிகமான அல்லது குறைவான ஆற்றல் விமானத்தின் நிலைத்தன்மையைக் குலைக்க வல்லது. எத்தனையோ விமானங்கள் செய்த போயிங்குக்கு இது தெரியாதா? தெரியும் 737 மேக்ஸ் 8 இலகுவான பொருட்களால் (காம்போசிட்) வடிவமைக்கப்பட்டது. CFM-LEAD இன்ஜினைத் தாங்குவதற்காகக் கொஞ்சம் போல போயிங் சமரசம் செய்தது என்று பார்த்தோமே, அது என்னவென்றால் பெரிய இன்ஜினைத் தாங்கியிருக்கும் இறக்கையை மாற்றி வடிவைக்காமல் அதைச் சற்றே இப்படி-அப்படி நகர்த்தி வைத்தது. இதனால் விமானத்தின் புவியீர்ப்பு மையப் புள்ளி மாற வாய்ப்புள்ளது.
Production lineக்கு வந்த பின்னர் இந்த மாற்றங்கள் செய்தால் பெரும் செலவு, சந்தையில் இருக்கும் முன்னிலை போய்விடும் என்று அஞ்சிய போயிங், இந்தச் சின்ன விஷயத்தை மென்பொருள் மூலம் சரிசெய்துவிடலாம் என்று எண்ணியது. எப்படி? விமானத்தின் மூக்குப் பகுதியில் ஓர் உணர்வியைப் பொருத்தி அதை MCAS (Maneuvering Characteristics Augmentation System) என்ற செயலியின் மூலம் வால் பகுதியில் இருக்கும் நிலைநிறுத்திகளையும் (Stabilizer) கட்டுப் படுத்தினால் தீர்ந்தது பிரச்னை என நினைத்தது.
‘அட, அது தான் பிரச்னை தீர்ந்ததே’ என நீங்கள் நினைக்கலாம். இந்தக் குறுக்குவழியை போயிங் சரியாக ஆவணப்படுத்தவும் இல்லை; விமானிகளின் பயிற்சிக் கையேட்டில் குறிப்பிடவும் இல்லை. இங்குதான் கார்ப்பரேட்களின் கயமைத்தனம் ஒளிந்திருக்கிறது. என்று குறிப்பிடவேண்டும், ஏனெனில் இது மரபை மீறிய செயல் என்கிறோமே அதனால் தான்.
எடுத்துக்காட்டுக்கு நீங்கள் ஒரு தேர்ந்த ஓட்டுநர் என்றால் பெரும்பாலும் எல்லாக் கார்களிலும் ஒரே மாதிரிதான் கியர்கள் இருக்கும் என்று நினைத்து காரை இயக்குவீர்கள். ஒரு நிறுவனம் அந்த ஒரே மாதிரி உங்களுக்குத் தெரியும் அமைப்பில் மாற்றங்கள் செய்கிறது என்றால் அதனை முறையா அறிவிப்பது தானே அறம் ?
அவசர கோலமாகப் பொருத்திய உணர்வியால் தவறான தகவல் அளிக்கப்பட்டு, வால் பகுதியில் இருக்கும் நிலைநிறுத்திகளால் MCAS மூலம் விமானியின் கட்டளையை மீறி விமானம் தவறாக செலுத்தப்பட்டு பல உயிர்கள் இழந்துள்ளோம்.
இதனால் தான் எத்தியோப்பிய விமான விபத்தைக் கேள்விப்பட்ட உடன் கனடாவும் பிரிட்டனும் அனைத்து 737 மேக்ஸ் 8 விமானங்களையும் பறக்கத் தடை விதித்ததோடு தங்கள் வான் பரப்பிலும் அவ்வகை விமானிகளுக்கு அனுமதி மறுத்துள்ளன. கிட்டத்தட்ட பிற நாடுகளும் இதே முறையைப் பின்பற்றின. அமெரிக்காவும் இந்தியாவும் தொடக்கத்தில் தயக்கம் காட்டின.
(சம்பந்தம் இல்லாத உள்குறிப்பு: போயிங் அமெரிக்க நிறுவனம், ஸ்பைஸ் ஜெட் பெரும்பாலான விமானிகள் 737 மேக்ஸ் 8)
இந்தியாவின் ஸ்பைஸ் ஜெட் தலைவர் ஆளும்கட்சிக்கு நெருக்கமானவர் என்பதாலேயே DGCA தடைவிதிக்கத் தயங்கியதோடு முட்டாள்தனமான பிதற்றல்களையும் செய்தது. “1000 மணிநேரம் அனுபவம் உள்ள விமானிகள் மட்டுமே 737 மேக்ஸ் 8 விமானத்தை இயக்கவேண்டும்” என்பதே அது.
தகவல்: லயன் ஏர் JT 610 செலுத்திய விமானி 5000+ மணிநேர அனுபவமும் எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் ET 302 செலுத்திய விமானி 8000+ மணிநேர அனுபவமும் கொண்டிருந்தனர். |
விமானிகள் சங்க அழுத்தத்துக்குப் பணிந்து இந்தியாவும் வேறு வழியே இல்லாததால் அமெரிக்காவும் தற்போது தடை விதித்துள்ளன.
இதற்குத் தீர்வு என்ன?
பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்!