வாஷிங்டன்: தன்னை ஆளுயரக் கண்ணாடியின் முன் நின்று அழகுபார்த்துத் தன்னைச் சீர்படுத்திக் கொள்வது மனிதர்களுக்கு மட்டுமே சொந்தமா என்ன? சில ‘பெரும்’புள்ளிகளும் இந்தப் பட்டியலில் தற்போது இணைந்துள்ளனர். யார் அந்தப் பெரும்புள்ளிகள் என வியக்கிறீர்களா? வேறு யாருமில்லை, ஜம்போ என்று செல்லமாக அழைக்கப்படும் யானைகள் தான்.
வாஷிங்டனில் நடத்திய ஆய்வொன்றில் மனிதர்களைப் போலவே யானைகளும் கண்ணாடி முன் நின்று தங்களை யாரென்று உணர்ந்துகொள்ளும் அறிவுடையவை என்பது தெரிய வந்துள்ளது.
இந்த ஆய்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட யானைகள் அவற்றின் உயரத்திற்கு ஒத்துவரும் அளவுக்கு வைக்கப்பட்ட எட்டடி உயரமும் எட்டடி நீளமும் கொண்ட கண்ணாடிகள் முன் நிறுத்தப்பட்டு அவற்றின் நடவடிக்கைகள் கண்காணிக்கப் பட்டன. பெரும்பலான யானைகள் தங்களைத் தாங்கள் தான் என அடையாளம் கண்டு கொண்டன.
ஹேப்பி என்று பெயரிடப்பட்ட பெண்யானை ஒன்று தன் முகத்தில் இடப்பட்டிருந்த X என்னும் குறியைச் சரியாகக் கண்டு கொண்டதுடன் கண்ணாடியில் தெரியும் தன் பிம்பத்தின் உதவியால் அதனைத் துதிக்கையால் தொட்டும் காண்பித்தது. இந்த X குறியைக் கண்ணாடி உதவியின்றி அறிந்து கொள்ள முடியாது.
தோலில் ஏற்பட்ட உறுத்தலாலேயே ஹேப்பி இதனைக் கண்டு கொண்டிருக்கும் என்ற ஐயத்தைப் போக்க இரண்டு இடங்களில் X குறிகள் இடப்பட்டன. ஒன்று வெள்ளை நிறத்திலும் மற்றொன்று நிறமின்றியும் ஒரே வேதிப் பொருளால் ஆன நிறமி மூலம் இடப்பட்டன. எனினும் ஹேப்பி வெள்ளை நிற X-குறியை மட்டுமே கண்டு கொண்டது.
நாய்கள் இதேபோன்று சோதனைகளில் ஈடுபடுத்தப் பட்ட போது அவை இன்னொரு நாய் தன் முன் இருப்பதாக நினைத்து குரைத்தன என்றும் இந்த ஆய்வில் ஈடுபட்ட ஆராய்ச்சியாளர் தெரித்தார்.
கண்ணாடியைப் பார்த்தே தன் காதுகளைச் சரிசெய்யவும் ஹேப்பி கற்றுக் கொண்டது. தன்னையும் பிறரையும் சரியாக அறிந்துகொள்ளும் இந்தத் திறனால் தான் யானைகளால் காடுகளில் ஒரு சமூகக் கட்டமைப்பில் வாழமுடிகிறது என்று இந்த ஆராய்ச்சி முடிவில் கருத்துத் தெரிவிக்கப்பட்டது.
வல்ல இறைவனின் படைப்புகளில்தான் எத்தனை அற்புதங்கள்! புகழ் அனைத்தும் இறைவனுக்கே!