இந்தோனேஷியாவில் மீண்டும் பூகம்பம்!

இந்தோனேஷியாவில் மீண்டும் பூகம்பம்!

ந்தோனேஷியாவில் உள்ள ஜாவாவின் மேற்குக் கடற்கரை பகுதியில் இருந்து 240 கி.மீ. தூரத்தில் கடலுக்கடியில் நேற்று(17-06-2006) திங்கள்கிழமை மதியம் பயங்கரமான பூகம்பம் ஏற்பட்டது. இதன் விளைவால் இரண்டு மீட்டர் உயரத்துக்கு உருவான ராட்சத சுனாமி பேரலைகள் ஜாவா கடற்கரையைத் தாக்கின. B.B.C யின் செய்திப்படி 7.7 ரிக்டர் அளவில் பதிவாகியிருந்த இந்த பூகம்பத்தின் தாக்கத்தினால் ஏற்பட்ட சுனாமி அலைகள் ஜாவா தீவில் மிகுந்த உயிர் சேதத்தையும் பொருள்களில் நாச நஷ்டத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

மக்கள் நெருக்கடி வாய்ந்த இந்த கடலோர நகரங்களில் சுனாமி தாக்கிய நேரத்தில் பயத்தின் காரணமாக உயர்ந்த பகுதிகளை நோக்கி மக்கள் பாதுகாப்பு தேடி ஓடினர். பெரும்பாலான மக்கள் பள்ளிவாசல்களில் புகுந்து பிரார்த்தனைகளில் ஈடுபடலாயினர். ஏற்கெனவே ஒருமுறை மிகப்பெரும் அழிவினை இச்சுனாமியினால் சந்தித்த இம்மக்களின் செய்கைகள் காண்பதற்கு பரிதாபத்தை வரவழைப்பதாக இருந்தது.

இச்சுனாமி அலைகளால் ஜாவாவில் உள்ள பான்கன்தரன் கடற்கரை நகரம் உட்பட சில கடற்கரை நகரங்கள் பாதிக்கப்பட்டு கடலோரம் இருந்த வீடுகள், படகுகள், சிறு உணவு விடுதிகள் முழுவதுமாக அடித்துச் செல்லப்பட்டன. இறுதியாகக் கிடைத்துள்ள தகவல்களின்படி 300க்கும் அதிகமானவர்கள் உயிரழந்துள்ளனர். மேலும் உடல்கள் கரைகளில் ஒதுங்கியவண்ணம் உள்ளதால் உயிரழந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகும் எனத் தெரிகிறது. அதிகமானவர்களை காணவில்லை. காயமடைந்தவர்களின் எண்ணிக்கை முழுமையாக இதுவரை அறியப்படவில்லை.

முதலில் பூகம்பம் ஏற்பட்டதாகவும் அதனைத் தொடர்ந்து சுனாமி அலைகள் கடற்கரையை தாக்கியதாகவும் இந்தோனேஷிய ஜனாதிபதி சுஷிலோ ராம்பாங் கூறினார். கடந்த 2004 டிசம்பர் 26 – ல் உலகை உலுக்கிய சுனாமியில் அதிகப் பேரழிவை சந்தித்தது இந்தோனேஷியாவாகும். இதன் கடல்பிரதேசங்களில் மட்டும் 1,70,000 பேர் உயிரிழந்தனர். இந்த சுனாமியில் இலங்கை, இந்தியா, தாய்லாந்து போன்ற நாடுகளும் அதிக அளவில் பாதிக்கப்பட்டன.

இந்தோனிஷியாவில் ஏற்பட்ட சுனாமி காரணமாக இந்தியாவிலும் சுனாமி தாக்கக்கூடும் என செய்தி பரவியதால் அந்தோமான் நிகோபார், மேற்கு வங்காளம் மற்றும் தமிழகத்தின் கடற்கரை நகரங்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளன. ஆனாலும் கடலில் நீர்மட்டம் பயப்படும் அளவில் உயராததன் காரணமாக அதிகாரப்பூர்வ சுனாமி எச்சரிக்கை எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.

இந்தோனேஷியாவின் தலைநகரமான ஜகர்த்தாவிலும் பூகம்பத்தின் அதிர்வுகள் ஏற்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த சுனாமியால் பாதித்த ஜாவா கடற்கரை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகம் புழங்கும் பகுதியாகும். இதனால் மக்களை கடற்கரை பகுதிகளிலிருந்து பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லுமாறு ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உலக மக்கள் தொகையில் நான்காம் இடத்தில் உள்ள இந்தோனேஷியாவில் அடிக்கடி பூகம்பங்கள் நிகழ்வதுண்டு. கடந்த மே மாதம் மத்திய ஜாவா நகரத்தின் யோக்யகர்த்தாவிற்கு அருகில் ஏற்பட்ட பூகம்பத்தினால் 5,700 க்கும் அதிகமானோர் உயிரிழந்திருந்தனர்.

இந்தியாவின் மேற்கு வங்காள கடற்கரை பகுதியிலுள்ள எல்லா காவல்நிலையங்களுக்கும் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தியிருப்பதாக ஐ.ஜி ராஜ் கனோஜிய் கூறினார். இதுவரை இந்திய கடலோரப்பகுதிகளில் எவ்வித அசம்பாவிதமும் நடைபெறவில்லையெனினும் கடலோர காவல் படையினர் மிகுந்த எச்சரிக்கையுடன் கண்காணித்து வருகின்றனர்.

தகவல்: இப்னுஇலியாஸ் & இப்னுஜமால்