மறுமைக்காக வாழ்வோம்!

இம்மை எனும் இவ்வுலக வாழ்க்கையின் முடிவு, மரணமே (இதை மறுப்பவர் எவரும் இலர்). மரணம் எனும் சத்தியத்தை சந்தித்த பின்னர் மனிதர்கள் அனைவரும் தன்னை படைத்தவனிடம் மீள வேண்டும். இதனையே திருமறைக் குர்ஆன், “ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைக்கக் கூடியதேயாகும்; பின்னர் நீங்கள் நம்மிடமே மீள்விக்கப்படுவீர்கள்.” (29:57) உணர்த்தி நிற்கின்றது. இம்மையில் மனிதன் தான் செய்யும் செயல்களுக்கு ஏற்ப வெகுமதியோ, தண்டனையோ பெற்று முடிவற்ற நிலையான வாழ்க்கை வாழ வேண்டும் என்று இறைவன் விதித்த வாழ்க்கையே “மறுமை” வாழ்க்கை.

இவ்வுலகில் பிறந்த மனிதன் தான் நிச்சயமாக சந்திக்கப் போகும் மரணத்தை சுகிப்பது வரை மரணத்தை மறந்தவனாக இவ்வுலக சுகங்களில் தன்னை மறந்து மூழ்கிப் போயுள்ளான். இவ்வுலக வாழ்வு அற்பமானது என்றும், நிலையற்றது என்றும் பல்வேறு திருமறை வசனங்களும், திருநபி மொழிகளும் பறை சாற்றிக் கொண்டு நிற்கின்றன. ஆனால் இவற்றை படித்து மனிதன் உணர்வு பெறுகின்றவனாக இல்லை.

அறிந்து கொள்ளுங்கள்: நிச்சயமாக இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வேடிக்கையும், அலங்காரமுமேயாகும், மேலும் (அது) உங்களிடையே பெருமையடித்துக் கொள்வதும், பொருள்களையும், சந்ததிகளையும் பெருக்குவதுமேயாகும், (இது) மழையின் உதாரணத்துக்கு ஒப்பாகும், (அதாவது) அது முளைப்பிக்கும் பயிர் விவசாயிகளை ஆனந்தப்படுத்துகிறது, ஆனால், சீக்கரமே அது உலர்ந்து மஞ்சள் நிறம் ஆவதை நீர் காண்கிறீர்; பின்னர் அது கூளமாகி விடுகிறது, (உலக வாழ்வும் இத்தகையதே, எனவே உலக வாழ்வில் மயங்கியோருக்கு) மறுமையில் கடுமையான வேதனையுண்டு; (முஃமின்களுக்கு) அல்லாஹ்வின் மன்னிப்பும், அவன் பொருத்தமும் உண்டு – ஆகவே, இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றும் சொற்ப சுகமே தவிர (வேறு) இல்லை.(அல் குர்ஆன் 57:20)

இவ்வுலக வாழ்க்கை வீணானதும் வேடிக்கையானதும் தான் என்பதை அவ்வப்போது ஏற்படும் இயற்கை அழிவுகள் மனிதர்களுக்கு போதித்துக் கொண்டு தான் உள்ளன. எனினும் அலங்காரங்களில் தன்னை மறந்து லயிக்கும் மனிதன் சில கால இடைவெளிகளிலேயே இதனை மறந்து விடுகின்றான்.

இத்தகைய லட்சக்கணக்கான உயிர்களை கொள்ளை கொண்டு போகும் அழிவுகள் நடைபெறும் பொழுது கோடீஸ்வரனாக இருந்தவர் கண் இமைக்கும் நேரத்தில் பிச்சைக்காரனாகப் போகிறான். அதுவரை இவ்வுலகினையும் அதனைப் படைத்தவனையும் மறந்து உல்லாசமாக வாழ்ந்துக் கொண்டிருந்தவன் இது தான் வாழ்க்கை என சொந்தங்களிலும் சுகங்களிலும் மூழ்கிப் போயிருந்தவன் நிமிட நேரத்திலேயே என்ன நடந்தது என ஒன்றும் புரியாமல் திக்கற்றவனாக சித்த பிரமைப் பிடித்தவனாக மாறி விடுகின்றான்.

இறைவனை ஒரு சமூகம் மறந்து கர்வம் கொண்டவர்களாக, அநியாயம் இழைப்பவர்களாக வாழும் பொழுது இவ்வாறு நிகழும் என்பதை அருள்மறை இதற்கு முன் பல சமூகங்களுக்கு நடந்த சம்பவங்களை விவரித்துத் தருவதன் மூலம் மனிதர்களை எச்சரித்துக் கொண்டு தான் இருக்கின்றது.

எனினும் மனிதனைப் பொறுத்தவரை எதையும் கண்ணால் காண்பது வரை அதனை நம்பாமல் ஏளனம் பேசித் திரிபவனாக இருக்கிறான். இவ்வாறு நடந்து விட்டாலோ பிரமை பிடித்தவனாக மாறிப் போகின்றான்.

னால், இஸ்லாத்தை முழுமையாக விளங்கி மறுமையை மட்டுமே கண் முன் கண்டு வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு உண்மையான முஸ்லிமை பொறுத்தவரை இத்தகைய பேரிழப்புகள் இறைவன் ஒருவன் இருக்கின்றான் என்பதையும் மறுமை என்றொரு நாள் இருக்கின்றது என்பதையும் உறுதிப்படுத்துவனவாகவே இருக்கின்றன. இதனால் அவனின் இறையச்சம் மேன்மேலும் உறுதியாகவே செய்கின்றன.

இத்தகைய பேரிழப்புகளின் போது மனிதன் தன்னை காத்துக் கொள்ள அங்குமிங்கும் அலைபாய்வதை அவன் பார்க்கும் பொழுது அவனுக்கு திருமறைக் குர்ஆன் விவரித்துக் கொடுக்கும் மறுமை நாள் நிகழ்ச்சிகள் கண்முன்னே விரிகின்றன.

அந்த நாளில் மனிதன் விரண்டு ஓடுவான் – தன் சகோதரனை விட்டும் தன் தாயை விட்டும், தன் தந்தையை விட்டும், தன் மனைவியை விட்டும், தன் மக்களை விட்டும்- அன்று ஒவ்வொரு மனிதனுக்கும் அவனவன் (அவல) நிலையே போதுமானதாகயிருக்கும். (அல் குர்ஆன் 80:34-37)

இத்தகைய நிலையற்ற வாழ்க்கையில் நிச்சயித்த மரணம் நெருங்கும் பொழுது, தான் மிகவும் நேசிக்கும் தன் மனைவி, பிள்ளைகள், சம்பாதித்து வைத்த செல்வங்களால் எவ்வித உதவியும் பெற முடியாத கையாலாகாத நிலையில் தான் மனிதன் இருக்கின்றான். இதனை எண்ணிப் பார்க்கும் தருணமே இவ்வுலக வாழ்க்கையின் நிச்சயமற்ற தன்மை புலப்படும். இத்தகைய நிலையற்ற இவ்வுலக வாழ்க்கையில், மனிதன் ஒரு சாதாரண பயணி போன்று எண்ணி வாழ வேண்டும் என நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறியது மட்டுமின்றி தாமே வாழ்ந்து காட்டியும் சென்றுள்ளார்கள்.

ஓர் மிகப்பெரிய சாம்ராஜ்யத்திற்கு அதிபதியாக இருந்த நபி(ஸல்) அவர்கள் மரணிக்கும் பொழுது தனது போர்கவசத்தை ஓர் யூதனிடம் அடமானம் வைத்தவராக அதனை மீட்பதற்கு கூட வசதியில்லாத எளிய வாழ்க்கை வாழ்ந்த நிலையில் மரணித்தார்கள்.

ஒருமுறை நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கலீபாவாக இருந்த சமயம் அவரைப் பார்க்க அவர் அறைக்குள் உமர்(ரலி) அவர்கள் நுழைந்தார்கள். அங்கு உமர்(ரலி) கண்ட காட்சி அவர் கண்களை குளமாக்கியது. நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் ஓர் கயிற்றுக் கட்டிலில் படுத்திருந்தார்கள். அவர்களின் முதுகில் ஈச்சங்கயிறின் தடங்கள் வரிவரியாக விழுந்திருந்தன. இதனைக் கண்ட உமர்(ரலி) அவர்கள் மிகுந்த வருத்தத்துடன் “யா ரசூலுல்லாஹ் தாங்கள் தற்போது இந்த அரபு சாம்ராஜ்யத்தின் கலீபாவாக இருக்கிறீர்கள். நீங்கள் சற்று வசதியான படுக்கையை பயன்படுத்திக் கொள்ளக் கூடாதா? எனக் கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் உமரே! இறைவன் எனக்கு மறுமையில் தருவதை இங்கேயே நான் அனுபவிக்க எண்ணுகிறீரா? இம்மைக்காக மறுமையை இழக்க நான் தயாராக இல்லை என பதிலளித்து இம்மையில் சுகபோகத்துடன் இருப்பதை நிராகரித்தார்கள்.

மறுமையை நினைத்து இவ்வுலகில் எவ்விதம் வாழ வேண்டும் என்பதற்கு இத்தகைய சிறந்த முன் மாதிரியை கொண்ட முஸ்லிம் சமூகத்தில் ஒரு பகுதி இன்று அதனை மறந்தவர்களாக சுகபோகங்களில் மூழ்கி இவ்வுலகிலேயே அனைத்தையும் அனுபவித்து விட வேண்டும் என்ற ஆவலில் பல வீணான செயல்களில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர்.

தர்கா, கந்தூரி, மௌலிது, சூதாட்டம், மது, மாது, வட்டி போன்ற கொடிய பெரும்பாவங்களில் இருந்து தம்மை பாதுகாத்து கொண்ட முஸ்லிம் சமூகத்தின் மற்றொரு பெரும் பகுதியோ, சினிமா, இசை மற்றும் ஆபாசம் மலிந்து கிடக்கும் வீணான பாடல்கள், காமடி என்ற பெயரில் ஆபாச வசனங்கள், குடும்பங்களில் பகைமையையும், வெறுப்பையும், குழப்பத்தையும் வளர்க்கும் தொலைக்காட்சி தொடர் நிகழ்ச்சிகளிலும் பொழுது போக்கு எனும் பெயரில் மூழ்கிப் போய் தங்களது பொன்னான பொழுதையும் ஈமானையும் போக்கும் நிலை பரவலாக காண காணப்படுகிறது.

இது போன்ற கற்பனையான, கலாச்சார சீரழிவுகளை உருவாக்குவது இறையச்சம் மற்றும் மறுமை நம்பிக்கை அற்ற நபர்கள் என்பதனை ஏனோ இவர்கள் சிந்தித்துப் பார்ப்பதில்லை. இதனால் சமுதாயத்தில் பல விதமான அனாச்சாரங்களும் ஒழுக்கக்கேடுகளும், நோய்களும் மலிந்துள்ளதும் இவைகள் பல குடும்பங்களை சீர்குலைத்து வருகிறது என்பதும், மிகவும் கசப்பான உண்மைகளாகும்.

இவற்றையெல்லாம் அழகாக்கி பலரை வழிகெடுக்க இறைவனிடம் ஏற்கெனவே ஷைத்தான் செய்துள்ள சபதத்திற்க (குர்ஆன் 15:36-44) இவர்களும் தங்களை அறியாமல் பலியாகின்றனர்.

இஸ்லாமிய மார்க்கத்தில் நபி வழிக்கு மாற்றமான மௌலிது, பாத்திஹாக்கள் போன்ற பித்-அத்தான அமல்கள், ஷிர்க்கான காரியங்கள் மற்றும் தர்கா வழிபாடு, வட்டி, சூதாட்டம், மது, மாது போன்ற தீயச் செயல்கள் உருவாக காரணமான இதே ஷைத்தான் தான் மேற்கண்ட அனாச்சாரங்களையும், வீணான செயல்களையும் முஃமின்களுக்கு அழகாக்கி காண்பித்து அவர்களை வழிகெடுத்து நரகத்தின் பால் அழைக்கின்றான் என்பதை இந்த முஸ்லிம் சமூகம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

மறுமையில் கிடைக்கும் தண்டனைகளும் பரிசுகளும்:

இவ்வுலகில் ஒருவருக்கக் கிடைத்ததும், கிடைக்காததும் மறுமைக்கான சோதனையே என்பதை உணர்ந்த, மனோ இச்சையை கட்டுப்படுத்தி வாழாமல் இறைக்கட்டளை மற்றும் நபி வழிக்கு மாற்றமாக சுகமாக மனம் போன போக்கில் வாழ்ந்தால் அவர்கள் நரக நெருப்பினால் தண்டிக்கப்படுவார்கள். மேலும் சிலர் அதில் நிரந்தரமாக தங்கி விடுவார்கள்.

இவ்வுலகில் கிடைத்ததைக்கொண்டு திருப்தியடைந்தவர்களாக தம்மைக் கட்டுப்படுத்தி இறைவழியில் வாழ்ந்தோர் மறுமையில் சுவர்க்கத்தில் நிரந்தரமாக தங்குவார்கள். அங்கு அவர்களுக்கு அவர்கள் விரும்பியது எல்லாம் கிடக்கும் என்று அல்லாஹ் தனது திருமறையில் வாக்களிக்கின்றான்.

மறுமைக்கு தயாராவது எப்படி? :

அல்லாஹ்வின் மீதும் மறுமை வாழ்க்கையின் மீதும் உறுதியான நம்பிக்கை கொண்டு தங்களது வாழ்க்கையை தூய்மையான முறைப்படி பேணி நபி வழியில் வாழ்ந்து வர வேண்டும்.

3:102 .நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சுங்கள்; மேலும், (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லிம்களாக அன்றி நீங்கள் மரணிக்காதீர்கள்.

மறுமையின் மீது நம்பிக்கைக் கொண்ட முஸ்லிம், தான் எங்கு வேண்டுமெனினும், எந்நேரத்திலும், எப்படி வேண்டுமானாலும் மரணிக்கலாம் என்ற உண்மையை முறையாக உணர்ந்து தமது வாழ்க்கையை எப்போதும் தூய்மையான குர்ஆன் மற்றும் நபி வழியின் அடிப்படையில் கலப்பற்ற முழுமையான இஸ்லாமிய வாழ்க்கையாக வாழ்ந்து வர வேண்டும்.

உண்மை முஸ்லிம்களாக வாழ்ந்து, உண்மை முஸ்லிம்களாக மரணித்து மறுமையில் தான் வெற்றி பெறக்கூடிய விதத்தில் இம்மை வாழ்க்கையை வாழ்ந்து வர இறைவனிடம் இருகரம் ஏந்தி இரு விழிகளிலும் நீர் மல்க இறைஞ்ச வேண்டும். இதுவே நிலையான மறுமை வெற்றிக்கும் ஈடேற்றத்திற்கும் உரிய ஒரே வழியாகும்.

அல்லாஹ் மறுமையில் அத்தகைய பாக்கியசாலிகளாக நம் எல்லோரையும் ஆக்கி அருள் புரிவானாக! ஆமீன்.

உலக வாழ்க்கை (வெறும்) வீணும் விளையாட்டுமேயன்றி வேறில்லை. பயபக்தியுடையவர்களுக்கு நிச்சயமாக மறுமை வீடே மிகவும் மேலானதாகும்; நீங்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டாமா? (அல்குர்ஆன் 6:32)

கட்டுரை ஆக்கம்: இப்னுஹனீஃபா