திருமறை, சீறா அறிய டச்சுக் காவலர்கள் ஊக்குவிப்பு!

{mosimage}நெதர்லாந்து காவல்துறையினர் இஸ்லாம் பற்றிய சரியான விளக்கங்களைப் பெறவேண்டி முஸ்லிம்களின் இறைவேதமான குர்ஆனின் பிரதிகளை வாங்கினால் அதன் விலையில் பாதியை நெதர்லாந்து காவல்துறையே வழங்கும் என அதன் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
 
குர்ஆனின் டச்சு மொழிபெயர்ப்புகளையும் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்று நூல்களையும் படிக்கும்படி நெதர்லாந்து காவல்துறை அலுவலர்கள் ஆர்வமூட்டப் படுவதாகவும் அவர் சொன்னார். "இவ்விரு நூல்களும் இஸ்லாத்தைப் பற்றியும் இறைத்தூதரின் வாழ்வு பற்றியும் நல்லதொரு புரிந்துணர்வையும் அறிதலையும் கொடுக்கும்" எனவும் அவர் தெரிவித்தார்.

குர்ஆனின் புதிய டச்சு மொழிபெயர்ப்புப் பிரதி ஒன்றும், ஈரானில் பிறந்து நெதர்லாந்தில் குடியேறிய எழுத்தாளர் காதர் அப்துல்லாஹ் எழுதிய "The Message" என்ற தலைப்பிலான இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்று நூலும் சென்ற மாதம் நெதர்லாந்தில் வெளியிடப் பட்டபோது, பொதுமக்களிடையே அவை பெரும் வரவேற்பைப் பெற்றன. காதர் அப்துல்லாஹ் 1997-ஆம் ஆண்டுக்கான சிறந்த எழுத்தாளர் விருதைப் பெற்றவர் ஆவார். 

இஸ்லாத்தின் மீதான தமது காழ்ப்புணர்வுகளை இறைத்தூதர் (ஸல்) அவர்களைப் பற்றிய கேலிச்சித்திரங்கள், இஸ்லாத்தைத் தவறான முறையில் சித்தரிக்கும் விவரணப் படம் போன்றவற்றின் மூலம் ஒரு சிலர் வெளிப்படுத்தும் நெதர்லாந்தில் இஸ்லாம் பற்றி முறையாக அறிந்து கொள்ளும் ஆர்வ வேட்கை மிகுந்து வருவது குறிப்பிடத் தக்கது.

 

நெதர்லாந்துக் குடிமக்களில் ஆறேகால் விழுக்காட்டினர் முஸ்லிம்கள் என்பது தனித் தகவல்.