லண்டன் விமான நிலையத்தின் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஜூலை 2ம் தேதி பிரிஸ்பேன் விமான நிலையத்தில் வைத்து தீவிரவாதத் தாக்குதலுடன் தொடர்புடையதாகக் கூறி கைது செய்யப்பட்ட இந்திய டாக்டர் ஹனீஃப்பை நினைவிருக்கலாம். உலக இஸ்லாமிய மருத்துவர்கள் அனைவர் மீதும் ஒட்டுமொத்தமாக களங்கம் சுமத்தப்பட்ட அச்சம்பவத்தில், டாக்டர் ஹனீஃப் 3 வாரங்கள் ஆஸ்திரேலியச் சிறையில் அடைக்கப்பட்டார்.
எவ்வித ஆதாரமும் இன்றி சந்தேகத்தின் பேரில் தீவிரவாத முத்திரை குத்தப்பட்ட டாக்டர் ஹனீஃபினிற்கு எதிராக ஒரு குற்றச்சாட்டைக் கூட ஆஸ்திரேலிய காவல்துறையால் நிரூபிக்க முடியவில்லை இதையடுத்து டாக்டர் ஹனீப்ஃபை விடுவிக்க ஆஸ்திரேலிய அரசுக்கு பெரும் நெருக்கடி எழுந்தது. ஆஸ்திரேலியாவின் கண்மூடித்தனமான ஆதாரமற்ற நடவடிக்கைக்கு எதிராக உலகளாவிய அளவில் கண்டனங்களும் குவிந்தன.
இதைத் தொடர்ந்து டாக்டர் ஹனீஃப் விடுவிக்கப்பட்டார் ஆனால், அப்போதைய ஆஸ்திரேலிய அரசு அவரின் ஆஸ்திரேலிய குடியுரிமையை இரத்து செய்தது. இதனைத் தொடர்ந்து அவர் இந்தியா திரும்பினார். இருப்பினும் அவர் மீதான வழக்கு விசாரணையை ஆஸ்திரேலிய காவல்துறை கைவிடாமல் தொடர்ந்து வந்தது.
இந்த நிலையில், தற்பொழுது டாக்டர் ஹனீஃப் மீதான வழக்கை முழுமையாக கைவிடுவதாக ஆஸ்திரேலிய காவல்துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஆஸ்திரேலிய காவல்துறை விடுத்துள்ள அறிக்கையில், “தற்போதைய சூழ்நிலையில், டாக்டர் ஹனீஃப் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு எந்தவிதமான ஆதாரமும் எங்களிடம் இல்லை. இதன் காரணமாக இதற்கு மேலும் விசாரணையைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே டாக்டர் ஹனீஃப் மீதான விசாரணையை முடிவுக்குக் கொண்டு வருகிறோம்” என்று கூறப்பட்டுள்ளது.
ஹனீஃப் மீதான வழக்கு கைவிடப்பட்டது குறித்த தகவலை அவரது வழக்கறிஞர் ஹாட்சன், டாக்டர் ஹனீஃப்-க்குத் தொலைபேசி மூலம் தெரிவித்தார். இதைக் கேட்டு டாக்டர் ஹனீஃப் மகிழ்ச்சி தெரிவித்ததாக ஹாட்சன் தெரிவித்தார்.
டாக்டர் ஹனீஃபைக் தீவிரவாதி என கைது செய்யும் பொழுதும் அதனைத் தொடர்ந்த சம்பவங்களின் பொழுதும் இஸ்லாமிய எதிர்ப்புப் பாஸிஸ சக்திகளுடன்
ஒரு அணியில் நின்று கொண்டு முஸ்லிம் சமுதாயத்தின் மீது சேறுவாரி இறைத்த பெரும்பாலான பத்திரிக்கை ஊடகங்கள், டாக்டர் ஹனீஃப் நிரபராதி என விடுதலை செய்யப்பட்டப் பொழுதும் இப்பொழுது அவரின் மீது சுமத்தப்பட்ட வழக்குகள் அனைத்துமே ஆதாரமற்றவை என ஆஸ்திரேலிய காவல்துறையாலேயே கைவிடப்பட்டப் பொழுதும் அதனைக் குறித்து வாயைத் திறக்க வழியின்றி ஓடி ஒளிந்துக் கொள்வதைப் பரவலாகக் காண முடிகிறது.
உலக அளவில், அரசுகளாலும் பாஸிஸ அமைப்புகளாலும் திட்டமிட்டும் சந்தர்ப்பவசத்தாலும் முஸ்லிம் சமுதாயம் தொடர்ந்து தீவிரவாத முத்திரை குத்தப்படுவதும் சமூகத்தில் உயர் அந்தஸ்தில் இருப்பவர்கள் முதல் பாமரன் வரை எவ்வித பாரபட்சமும் இன்றி தீவிரவாதிகள் என முத்திரை குத்தி சிறையில் அடைக்கப்பட்டுக் கொடுமைப் படுத்தப்படுவதும் தொடர்ந்து நடந்துக் கொண்டே தான் இருக்கின்றன.
நேற்று ஒரு அப்துல் நாசர் மதஅனி 10 வருட சிறைவாசத்திற்குப் பின் நிரபராதி என தமிழக அரசால் விடுவிக்கப்பட்டார் இன்று ஒரு டாக்டர் ஹனீஃப் ஆஸ்திரேலிய அரசால் நிரபராதி என விடுவிக்கப்பட்டுள்ளார்.
இன்னும் எத்தனையோ ஹனீஃப்களும், ஆஃபியாக்களும், மதஅனிகளும், ஸாமி அல்ஹாஜிகளும் ஏகாதிபத்திய அரச பயங்கரவாதிகளால் சிறை கொட்டடிகளில் சித்திரவதைக்குள்ளாகப் பட்டுக் கொண்டிருக்கின்றனர். நாளை ஒருநாள் அவர்களும் அவர்களின் முழு வாழ்க்கையும் தொலைந்தப் பின் நிரபராதிகள் என விடுவிக்கப்படலாம். அப்பொழுதும் இன்று ஒரே குரலில் தீவிரவாதம் இசை மீட்டும் பாஸிஸ கைக்கூலி ஊடகங்கள் முதுகெலும்பின்றி ஓடி ஒளிந்துக் கொள்ளவே செய்யும். இத்தகைய ஊடகங்களின் கண்மூடித்தனமான இஸ்லாமிய எதிர்ப்பு நிலைபாட்டை மாற்றி ஊடகதர்மத்தின் படி நடுநிலையாகச் செயல்பட வைக்க வேண்டும் எனில், சமூக அக்கறை கொண்ட முஸ்லிம்கள் பெருவாரியாக ஊடகத்துறையில் கால்பதித்தே ஆக வேண்டும்.