அமெரிக்க அதிபர் வேட்பாளர்: மக்கா மற்றும் மதீனாவை அழிக்கவேண்டும்

Share this:

அமெரிக்கா மீதான தாக்குதலை வெற்றிகரமாக முறியடிக்க வேண்டுமெனில் இஸ்லாமியப் புனிதத் தலங்களான மக்கா, மதீனா இரு நகரங்களையும் குண்டு போட்டுச் சுவடின்றி அழிக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் பதவிக்குப் போட்டியிடும் குடியரசுக் கட்சியின் பிரமுகர் டாம் டான்க்ரெடோ என்பவர் கூறியுள்ளார்.

அமெரிக்க செனட்டில் கொலரோடா மாநிலப் பிரதிநிதியாக இருக்கும் இவர் நேற்று (3/8/2007) AFP நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். இவர் அமெரிக்கா மீதான தாக்குதல்களைத் தொடுப்பவர்கள் முஸ்லிம்களாக இருப்பதால் அவர்களின் புனிதத் தலங்களான மக்கா, மதீனா இரு நகரங்களையும் குண்டுமழை பொழிந்து அழிப்பது தான் தமக்குச் சரியாகத் தோன்றுவதாகக் குறிப்பிட்டார்.

இவ்வாறு இவர் கூறியுள்ளது உலக முஸ்லிம்களிடையேயும் அமெரிக்க அரசின் உயர் அலுவலர்களிடையேயும் பலத்த எதிர்ப்பைக் கிளப்பியுள்ளது. டாம் டான்க்ரடோவின் இந்தப் பேட்டி வெளியாகிய சில மணிநேரங்களிலேயே அமெரிக்க வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளர் அமெரிக்க அரசின் கொள்கைகளுக்கும் டான்க்ரெடோவின் இந்தப் பேச்சுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை எனத் தெரிவித்தார். அவர் இவ்வாறு கூறியுள்ளது கண்டிக்கத் தக்கது என்றும் பைத்தியக்காரத்தனமான உளறல் (reprehensible and absolutely crazy) என்றும் கூறியுள்ளார்.

பயங்கரவாதத்திற்கெதிரான அமெரிக்காவின் போரில் மிகச் சிறந்த ஒத்துழைப்பை நல்கி வரும் மத்தியகிழக்கு நாடுகளையும் பல முஸ்லிம் நாடுகளையும் அமெரிக்கா ஒருபோதும் பகைத்துக் கொள்ளவிரும்பாது என்றும் அவர் தெரிவித்தார்.

அமெரிக்க இஸ்லாமியக் குழுமத்தின் (Council for American Islamic Relations) செய்தித் தொடர்பாளர் இப்ராஹிம் ஹூப்பர், இப்படிப்பட்ட பொறுப்பற்ற ரவுடித்தனமான பேச்சுகள் பொது வாழ்வில் போட்டியிட விரும்பும் எவருக்கும் பொருந்தாதவை என்று தெரிவித்தார். இது குறித்து முறையான புகார்கள் தரப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். பயங்கராவாதத்திற்கெதிரான போர் என்ற பெயரில் அமெரிக்கா நடத்தும் தாக்குதல்களுக்கு இனி முஸ்லிம் நாடுகள் வழங்கி வரும் ஒத்துழைப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.