கடந்த ஆகஸ்ட் 3, 2007 ம் தேதி (நேற்று) அமெரிக்காவின் சியாட்டல் நகரத்தில் உள்ள பள்ளிவாசல் ஒன்றின் முகப்பில் அமெரிக்கப் பாதிரியார் ஒருவர், தனது உதவியாளர்கள் துணையுடன் வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகைக்காக கூடியிருந்த முஸ்லிம்களிடம் வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்ய முயற்சி செய்தது அமெரிக்காவில் கடும் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.
கலிஃபோர்னியாவின் கிறிஸ்தவ பாதிரியாரான ஜார்ஜ் ஸேக் என்பவர் அமெரிக்காவின் சியாட்டல் மற்றும் ஏனைய அமெரிக்க நகரங்களில் முஸ்லிம்களுக்கெதிரான இத்தகைய பிரச்சாரத்தை தூண்டி விட்டுள்ளார் என்பது தெரியவருகிறது. பள்ளிவாசலில் தொழ வரும் முஸ்லிம்களை வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்வதற்கான கடுமையான முயற்சிகளில் ஈடுபட்டுவரும் இவரும் இவரது உதவியாளர்களும், இதனை ஏற்க மறுக்கும் முஸ்லிம்களை தாக்கி காயப்படுத்தியும் உள்ளதாக செய்திக்குறிப்புகள் தெரிவிக்கின்றன. இக்கிறிஸ்துவ பாதிரியாரின் தாக்குதலுக்கு உள்ளானவர்களில் முஸ்லிம் பெண்களும் அடங்குவர் என்று தி சியாட்டல் டைம்ஸ் பத்திரிக்கை கூறுகிறது. பெண்களைத் தாக்கியதற்கு அவர்கள் அணிந்திருந்த ஹிஜாபே காரணமாய் இருந்தது என்றும் அவ்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.
தி சியாட்டல் டைம்ஸ் பத்திரிக்கையாளர்களிடம் முறையிட்டுள்ள இஸ்லாமிய தலைவரான ஜெஃப் சித்திக்கீ அவர்கள் “இப்பாதிரியார் முஸ்லிம்களிடயே பொய்யாகப் பிரச்சாரம் செய்துவருவது போல இஸ்லாம் ஒரு பயங்கர மதமாகவோ, கிறித்துவம் ஒரு நல்ல மதமாகவோ இருந்திருந்தால் இவர் எங்களை இவ்வாறு கடுமையான முறையில் அச்சுறுத்தியும் தாக்கியும் கிறித்துவத்திற்கு ஏன் மாற்றம் செய்ய முயல வேண்டும்?” என்று கேள்வி தொடுத்துள்ளார்.
இச்செயலை வன்மையாக எதிர்க்கும் உள்ளூர் முஸ்லிம் ஜமாஅத் தலைவர்கள், பள்ளிக்கு தொழவரும் தொழுகையாளிகள் இக்கிறிஸ்துவ பாதிரியாரின் செயல்களை அலட்சியம் செய்யுமாறும், அவர்களுடன் எக்காரணம் கொண்டு வாக்குவாதம் மற்றும் மோதலில் ஈடுபட்டுவிட வேண்டாம் என்றும் முஸ்லிம்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.
ஆனால் இத்தகைய அறிவுறுத்தல்களை தனக்கு சாதகமாக எடுத்துக்கொண்ட பாதிரியார் ஜார்ஜ் ஸேக்கோ, முஸ்லிம்கள் பெருமளவில் கூடும் பொதுவிடங்களில் தனது பிரச்சாரத்தை பெருமளவில் முடுக்கி விட்டுள்ளார் என்றும், முஸ்லிம்களை கிறித்துவத்திற்கு கட்டாய மதமாற்றம் செய்வது எப்படி என்ற வகுப்பை கலந்தாய்வுக்கூட்டம் என்ற பெயரில் கிறித்துவர்களுக்காக அடுத்த வாரம் முதல் ஆங்காங்கே நடத்தவும் திட்டமிட்டுள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.