இராக்கிலிருந்து படைகளை விலக்குகிறது பிரிட்டன்

ஒருபுறம் இராக்கிலிருக்கும் தனது படையினரின் எண்ணிக்கையை அதிகரிக்கும் US-ன் முயற்சிகளுக்கிடையே இராக் ஆக்கிரமிப்பில் அதன் நெருங்கிய கூட்டாளியான பிரிட்டன் தனது படையினரைச் சிறிது சிறிதாகக் குறைத்து இறுதியில் முற்றிலுமாக விலக்கிக் கொள்ள எண்ணி இருக்கிறது. பிரிட்டனின் இந்த முடிவோடு டென்மார்க்கும் இயைந்து அந்நாடும் தனது படைகளை விலக்கப் போவதாய் அறிவித்திருக்கிறது.

இனிவரும் சில மாதங்களுக்குள் பிரிட்டிஷ் துருப்புகளின் எண்ணிக்கையை 7100-லிருந்து 5500 ஆகக் குறைக்கவிருப்பதாகவும், ஆண்டு இறுதிக்குள் மிகக் கணிசமான அளவு இந்தக்குறைப்பு இருக்கும் எனவும் பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேய்ர் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து டென்மார்க், இராக்கிலிருக்கும் தனது 430 படைவீரர்கள் அனைவரும் ஆகஸ்டு மாதத்திற்குள் விலக்கிக் கொள்ளப்படுவார்கள் என்று அறிவித்துள்ளது. லுத்துவேனியாவும் தனது 50 படைவீரர்களும் திரும்ப அழைத்துக் கொள்ளப்படுவார்கள் எனவும் அறிவித்துள்ளது.

இது குறித்த அறிவிப்பை வெளியிடும்போது மிகக் கவனமாக வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து பிளேய்ர் பேசியுள்ளார். இராக்கின் பஸ்ரா நகரின் சட்ட ஒழுங்கை இராக்கியப் படையினர் கையாளும் அளவுக்குத் தேர்ச்சி பெற்றுவிட்டார்கள் என்றும் இனி பிரிட்டிஷ் துருப்புகளின் பங்கு இராக்கியப் படையினருக்குப் பயிற்சி அளிப்பது மட்டுமே என்றும் கூறியுள்ள அவர், பிரிட்டனில் அவருக்கு மிக வேகமாகச் சரிந்து வரும் அரசியல் நிலைபாட்டைச் சற்று தூக்கி நிறுத்தவே இந்நடவடிக்கை என்ற கூற்றை மறுத்துள்ளார்.

இதுகுறித்து செய்தி வெளியிட்டுள்ள US-ன் வெளியுறவு அமைச்சர் கோண்டலீசா ரைஸ், இதனால் இராக்கிய கொள்கை நிலைப்பாடுகளில் அமெரிக்க-பிரிட்டிஷ் உறவுகள் விரிசல் அடையவில்லை என்றும் இராக்கை இராக்கியர்களிடமே ஒப்படைக்கும் திட்டத்தின் ஒரு பகுதி தான் இது என்றும் கூறினார்.

இதற்கு முன் பிரிட்டிஷ் படைவீரர் ஜேசன் செல்ஸீ இராக்கில் ராணுவப் பணியை ஏற்க மறுத்து மன உளைச்சலால் தற்கொலை செய்துகொண்டது இங்கு நினைவுகூரத் தக்கது.

தகவல்: இப்னு ஹமீது.